அவன் யார்? சொல்லுங்க...!
சித்ரகலா செந்தில்குமார்
1. தூங்கவும் வைப்பான் தூக்கியும் வீசுவான். அவன் யார்?
2. தீவட்டி சுமந்தவன் அவன். விடிய விடிய அவனுக்குத் தூக்கமில்லை. அவன் யார்?
3. அடி வாங்கி அலறுவான். ஆனால், கேட்பவனை ஆட வைப்பான். அவன் யார்?
4. திட்டி திட்டி தீயில் போட்டாலும் அள்ளி அள்ளி அனலில் போட்டாலும் வாரி வாரி வாசம் தருவான். மனம் குளிர நறுமணம் தருவான். அவன் யார்?
5. ஒரு கால் மனிதனுக்கு உடலெல்லாம் கைகள். அவன் யார்?
6. இளமையில் உயரமாகவும், முதுமையில் குள்ளமாகவும் மாறுபவன். அவன் யார்?
7. எல்லோரும் ஓய்வெடுத்தாலும், அவன் ஓய்வெடுக்க மாட்டான். அவன் யார்?
8. தண்ணீரிலிருந்து பிறக்கும் இவன், தண்ணீரிலேயே அழிந்தும் போவான். அவன் யார்?
9. மழைக்காலம் வந்துவிட்டால், இவன் கச்சேரிதான். அவன் யார்?
10. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
விடைகள்:
1. காற்று
2. மெழுகுவர்த்தி
3. பறை
4. சாம்பிராணி
5. மரம்
6. மெழுகுவர்த்தி
7. கடிகாரம்
8. உப்பு
9. தவளை
10. கடல் அலை
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.