தெரிகிறதா...? தெரிகிறதா...?
சித்ரகலா செந்தில்குமார்

1. மேல் வீட்டில் மத்தளமாம்;
கீழ்வீட்டில் நாட்டியமாம்...! - எவைகளென்று தெரிகிறதா?
2. ஆடச் சொல்லிச் சட்டை போடுவார்;
ஆடும் முன்பே கழற்றி விடுவார். - யாரென்று தெரிகிறதா?
3. அப்பா வீட்டுக் குதிரை,
அற்புதமான குதிரை.
காதைப் பிடித்தால்,
வாயால் கடிக்கும். - எதுவென்று தெரிகிறதா?
4. கழனியிலே கதிர் விளையும்;
கையால் பறிக்க மாட்டேன்;
கத்தரியால் வெட்டிடுவேன். - என்னவென்று தெரிகிறதா?
5. பாட்டுப் பாடி வருவார்;
‘பட்’டென்று அடித்தால் சாவார். - யாரென்று தெரிகிறதா?
6. வெள்ளை வீட்டுக்கு இரண்டு கூரை.
கதவும் இல்லை; காவலும் இல்லை. - என்னவென்று தெரிகிறதா?
7. ஆயிரம் பேர் அணிவகுப்பர்;
ஆனாலும் துளசி கிளம்பாது. - எவையென்று தெரிகிறதா?
8. ஒரு மரத்திற்குப் பன்னிரண்டு கிளை.
ஒரு கிளைக்கு நாலு கூடு.
ஒரு கூட்டுக்கு ஏழு முட்டை.
ஏழு முட்டையில் ஒரு முட்டை பொன் முட்டை. - எவைகளென்று தெரிகிறதா?
9. மலையிலிருந்து விழுகிறவனுக்கு வாயில்லை;
கதறுவான். காலில்லை;
ஓடுவான். - யாரென்று தெரிகிறதா?
10. வீடு வாசல் காப்பவன்;
விசுவாசமாய் இருப்பவன்;
கடிக்க மாட்டான்;
குலைக்க மாட்டான்;
கதவை ஒட்டிக் கிடப்பவன். - யாரென்று தெரிகிறதா?
விடைகள்:
1. இடி, மழை
2. பம்பரம்
3. கத்தரிக்கோல்
4. தலைமயிர்
5. கொசு
6. முட்டை
7. எறும்புக் கூட்டம்
8. வருஷம், மாதம், வாரம், கிழமை, விடுமுறை நாளான ஞாயிறு
9. அருவி
10. பூட்டு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.