ஏய் அச்சு ....இங்க பார் !
எவ்வளவு அழகான மஞ்சள் இலைகள் என்றாள் ரோசி.
இதை விட அழகான ஒன்று என்னிடம் உண்டே... என்றவாறு நீலக்கண் நோவா ரோசியை ஏளனமாகப் பார்த்தான்.
நோவாவின் கண்கள் நீல நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும். இதனால் சக மாணவர்கள் நோவாவை நீலக்கண் நோவா என்று செல்லமாகவே அழைத்தனர். பள்ளியில் நீலக்கண் நோவா ஒரு ஹீரோவாக இருந்தான். இதனால் சற்று திமிர்த்தனமும் இவனுக்குண்டு.
என்னது ?என்னது? என்றபடி கைகளில் இருந்த இலைகள் காற்றில் பறக்க நீலக்கண் நோவாவை நோக்கி ஓடினாள் அச்சு.
"அச்சு உனக்கு மட்டுந்தான் சொல்வேன்!" என்றான் நீலக்கண் நோவா ரோசியை முறைத்தவாறு.
“ஏன் ? ரோசிக்கும் சொல் !” என்றாள் அச்சு.
“இல்லை ...மாட்டன்...அவள் உன்னோட தோழி. எனக்கில்லை” என்றான் கோவத்துடன் நோவா.
அப்போது பள்ளி ஆரம்பிப்பதற்கான மணியொலி கேட்டது.
ஐயோ மணி அடிச்சாச்சு... இடைவேளையில் சொல்கிறேன்... என்றவாறு நீலக்கண் நோவா தனது வகுப்பறைக்குள் ஓடினான்.
தனியாகச் சோகத்துடன் நின்ற ரோசியின் கைகளைப் பிடித்தவாறு வகுப்புக்குள் ஓடினாள் அச்சு.
என்ன கூறினான் நோவா ? என மெல்லிய குரலில் சோகத்துடன் கேட்டாள் ரோசி.
அவனும் நீயும் பிரண்ட் இல்லையா?
இல்லை... என்றாள் வருத்தத்துடன் ரோசி.
ஏன்?
அவன் எனது நத்தை ஓட்டை பள்ளி இடைவேளையில் வேண்டி உடைத்து விட்டான்.
நத்தை ஓடா?
ஆமாம்.
நானும் அப்பாவும் தோட்டத்தில் வேலை செய்கையில் அழகான ஒரு நத்தை ஓட்டைக் கண்டெடுத்தோம். இலை உதிர்காலத்தில் மழையும், குளிரும் வந்ததால்... பாவம் ஒரு நத்தையொன்று இறந்துவிட்டது போல...
அதன் முதுகில் உள்ள இந்த ஓடு மட்டுமே மண்ணுள் மறைந்து கிடந்தது. அதனை நீரில் கழுவி அப்பா கொடுத்தார். அதனை இந்த நோவா உடைத்து விட்டான்.
ஐயோ...
ரொம்ப தப்பாச்சே...
பிறரின் பொருளை மிகக் கவனமாக அல்லவா பார்க்கவேண்டும்.? என்றாள் அச்சு.
ம்...
நீ திட்டினீயா... அவனை...?
இல்லை. ஆனால் அவன் அதற்காக ஒரு மன்னிப்பு கூட சொல்லவேயில்லை...
சாரி சொல் ! என்றேன்.
சொல்லமாட்டன் என்றான்.
அதுதான் பேசுவதில்லை என்றாள் வருத்தத்துடன் ரோசி.
அப்படியா? ஆச்சரியமும் வருத்தமும் கலந்த குரலில் கேட்டாள் அச்சு.
சரி.
பாடம் ஆரம்பித்துவிட்டது. அப்புறமாகப் பேசுவோம் என்றாள் ரோசி.
இடைவேளையில் நோவாவிடம் மிக வேகமாக ஓடினாள் அச்சு.
அவன் கண்கள் ரோசியைத் தேடின.
ரோசி எங்கே?என்றான் நோவா.
அவளை உன் தோழி இல்லையென்று சொன்னாயே...? குறும்புடன் கேட்டவாறே
அச்சுவின் சிறிய கண்கள் நீலக்கண் நோவாவின் கையை ஆர்வத்துடன் உற்று நோக்கியது.
உந்தன் கையில் இருப்பது என்ன? என்று ஆவலுடன் கேட்டாள்.
ஓ... அதுவா... அது... என்று அசட்டுத்தனமாகச் சிரித்தவாறே, மீண்டும் ரோசி எங்கே என்றான் நீலக்கண் நோவா.
அதோ... அந்த மரத்தின் கீழே!
இலை உதிர்காலத்தில் விழுந்து இறைந்து கிடக்கும் அழகான மஞ்சள், சிவப்பு இலைகளைச் சேகரிக்கிறாள்.
ஏன்? என்றான் நீலக்கண் நோவா.
ஓ... அதுவா?
இன்னும் இரு மாதங்களில் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அழகான பரிசுகளை இந்த இலைகளை வைத்தே வடிவமைத்து எல்லோருக்கும் கொடுத்துவிடுவாள் ரோசி. உனக்குத்தான் தெரியுமே...! பள்ளியில் ரோசிதான் கைவேலையில் சிறந்தவள் என்று.
வா ! நாமும் அங்கு போவோமென்று கூறியவாறே அச்சுவின் பதிலை எதிர்பாராது கையை இறுகப்பற்றி இழுத்துச் சென்றான் நீலக்கண் நோவா.
தனது அருகில் நின்ற இருவரையும் கண்களை விரித்துப் பார்த்தாள் ரோசி.
நீலக்கண் நோவாவின் கையில் அழகான வேலைப்பாட்டுடன் சிவப்பு பெட்டியொன்று மின்னியது.
ரோசியின் குண்டுக் கண்கள் அந்த வேலைப்பாடுடைய அழகான பெட்டியை மட்டுமே பார்த்தது.
நோவா மிக மெதுவாக அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே அழகாக நிறந்தீட்டப்பெற்ற இரண்டு நத்தை ஓடுகளைக் கையில் எடுத்தவன் ரோசியிடம் ஒன்றைக் கொடுத்து மன்னிச்சுக்கோ! என்றான்.
மகிழ்ச்சியோடு சிரித்த ரோசி...
நோவாவை இறுகக் கட்டிக்கொண்டே... எங்கே கண்டெடுத்தாய்?
அம்மாவுடன் விளையாட்டுத் திடலுக்குச் சென்றேன். அங்கு ஒரு புறமாக நின்ற ஆப்பிள் மரத்தின் கீழே கிடந்தது.
உடனடியாக நான் செய்த பிழை ஞாபகம் வந்தது. ஓடிச்சென்று இரண்டு நத்தை ஓடுகளையும் எடுத்தேன். அம்மாவிடம் நான் செய்த தப்பையும் கூறினேன்.
அம்மாதான் எனக்கொரு யோசனை சொன்னார்.
அவ யோசனைப்படியே இந்த நத்தை ஓடுகளுக்கு அழகான நிறங்களைத் தீட்டிப் பரிசாகக் கொடுத்தேன் என்றான் நீலக்கண் நோவா மகிழ்ச்சியுடன்.
அதுமட்டுமல்ல ரோசி, அம்மா நிறைய அறிவுரைகளும் கூறினார்!
"நாம் என்றும் பிறருடைய பொருட்களைப் பாதுகாப்பாக கையாள வேண்டுமாம். அத்தோடு பிழை செய்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்கக் கூடாதாம்"
வேறு ஒன்றும் அம்மா சொன்னாங்க... ம்... ஆ... ஞாபகம் வருது "மகிழ்ச்சியை எப்போதும் பகிர்ந்து கொடுக்க வேண்டுமாம்! "என்றான் நோவா சிரித்தபடியே...
அச்சுவும், ரோசியும், நோவாவும் பகிர்ந்த மகிழ்ச்சி கலகல என்று ஒலித்தது.