கிழவி கத்தரின் கொட்டிச் சென்ற ஆப்பிள் மற்றும் சலாட் இலைகளைth தின்ன மனமிற்றி செம்மறியாடு சிம்போ ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றது.
சிம்போவின் தோழர்களான கும்பி, சிங்கி, கங்கி யாவரும் மே..,மே... என்று கிழவி கத்தரினுக்கு நன்றி சொல்லிக் கொண்டே அங்கும் இங்குமாக துள்ளித் துள்ளி புற்களையும், ஆப்பிள் காய்களையும், பழங்களையும், சலாட் இலைகளையும் தின்று கொண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தன.
செம்மறியாடு சிம்போ தனது தோழர்களை ஏக்கமாகப் பார்த்து மிகவும் சோகமாக ‘மே.. மே...’ என்று கத்தியது.
‘இந்தக் கிழவி நம்மை எதற்காக வளர்க்கிறாள்? என்று தெரியவில்லையே இவர்களுக்கு. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்களே...” என்று கவலைப்பட்டது செம்மறியாடு சிம்போ.
நேற்று இரவு தூக்கம் வராது விழித்த போது, தாகத்துக்காக தண்ணீர் கூட வைக்காது கிழவி கத்தரின் தூங்கிவிட்டாளோ என்று பட்டியை விட்டு அவளது வீட்டு வாசலுக்கு போன போதுதானே எனக்குப் புரிந்தது கிழவியின் நோக்கம்.
கிழவி யாரோ இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
நான்குதான் இப்போது பெரிதாக இருக்கிறது. ஒவ்வொன்றும் பத்து கிலோ வரும். மற்றவை சின்னக்குட்டிகள். நாளைக்கு வாருங்கள் அல்பட்டின் இறைச்சிக்கடையில் கொடுத்து வெட்டி பக்கட் செய்து வைக்கிறேன் என்றாள்.
ஐயோ... இந்தக்கிழவி அன்பாகக் கதைப்பதும், தடவிக் கொடுப்பதும் எல்லாம் உண்மையான அன்பென்று நினைத்து கும்பி, சிங்கி, கங்கி எல்லோரும் எப்படி மகிழ்ந்திருந்தோம். கிழவிக்குத் தொல்லை கொடுக்காது எப்படியெல்லாம் இருந்தோம்.
பால் கொடுத்தோமே, மயிர்கொடுத்தோமே... கும்பி, சிங்கி அழகான குட்டிகள் நான்கையும் கொடுத்தார்களே... நன்றிகெட்ட கிழவி எங்களைக் கொல்வதற்கு துணிந்து விட்டதே என்று மனசுக்குள் வருந்தியது செம்மறியாடு சிம்போ.
செம்மறியாடு கங்கி ஓரக்கண்ணால் செம்மறியாடு சிம்போவை பார்த்தது.
“என்னாச்சு இவனுக்கு? உற்சாகமேயில்லையே...” என்று யோசித்தவாறு செம்மறியாடு சிம்போ அருகில் வந்தது.
“என்ன நண்பா? சோகமாய் இருக்கிறாய்” என்றது அன்போடு...
தாடை அசையக் கண்கலங்கக் கங்கியைப் பார்த்த செம்மறியாடு சிம்போ கிழவி பேசியதையெல்லாம் வருத்தமாகச் சொல்லி முடித்தது.
இருவரது சத்தத்தையும் காணவில்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்த கும்பியும், சிங்கியும் ஏதோ பிரச்சனையென உணர்ந்து கொண்டன.
துள்ளிக்குதித்து வந்தவை கங்கி, சிம்போ முகத்தை பார்த்து என்னாச்சு என்று கேட்டன? விளக்கமாகவும், வருத்தமாகவும் இரண்டுமே சொல்லி முடித்தன.
செம்மறியாடு கங்கி தொண்டையை ’மே...’ என்று செருமிக்கொண்டே பேசத் தொடங்கியது.
கிழவி நல்லவள் தான். இவ்வளவு நாளும் நன்றாகத்தானே பார்த்தாள். எங்களுடைய வாழ்க்கை இத்தனை காலந்தான் என்று நாம் தான் மறந்துவிட்டோம்.
“மனிதனை மனிதன் கொல்கிற போது, நம்மைக் கொன்று உணவாக புசிக்கும் மனிதர்கள் விடுவார்களா? கிழவியின் தேவைக்கே நம்மை வளர்த்தாள். அதனால் நம்மை வெட்டப்போகிறாள். என்றுமே எமது தகுதிக்கு மீறி கனவு காணக்கூடாது நண்பர்களே! இன்றைய இந்த நிமிடம் மகிழ்ச்சியாக இருப்போம்...” என்றது செம்மறியாடு கங்கி.
உண்மையை உணர்ந்த மூன்றும் ‘மே..மே..’ என்று உரத்த குரலில் கத்தின.
திரும்பிப் பார்த்த கிழவி கத்தரின், "நன்றாக கத்துங்கள்” என்றாள் வருத்தமாக.