அம்மா ,அம்மா இன்று விடுமுறைதானே குமாரும், கத்தரினும் என்னைச் சைக்கிள் ஓட்டக் கூப்பிடுகிறார்கள் போகட்டுமா?என்றான் முகிலன்.
"முகிலா! முதலில் நீ விளையாடிய விளையாட்டுப் பொருட்களை உரிய இடத்தில் வைத்துவிட்டுப் போ!" என்றாள் அம்மா.
முகிலன் மகிழ்ச்சியுடன் வீட்டின் முன்னேயுள்ள விளையாட்டுத் திடலில் சைக்கிளில் அங்கும் இங்குமாக வேகமாகப் பறந்தான். ஆனால் திடீரென சைக்கிளில் கிரீச், கிரீச் என்ற சத்தம்.
“என்ன சத்தமிது?” என்று சைக்கிள் ஓட்டியவாறே தனது நண்பர்களைக் கேட்டான்.
“முகிலா... உனது சைக்கிள் பழையதாகவிட்டது” என்றனர் கோரசாக...
“இல்லையே... எனது ஐந்தாவது பிறந்த நாளுக்கு அப்பா வாங்கித் தந்தது” என்றான் முகிலன்.
“அப்படியா?” என்றாள் கத்தரின்.
அப்படியெல்லாம் தெரியவில்லை என்றவள், “ஒரு போட்டி வைப்போமா?” என்றாள்.
எல்லோரும் “சூப்பர்” என்று கத்தினார்கள்.
எல்லோரும் இந்தத் தண்ணீர் தொட்டியிலிருந்து அதோ தெரிகிறதே மாடுகள் வரை ஓட வேண்டும். யார் முதலில் வருகிறோம் என்று பார்ப்போமென்றான் குமார்.
எல்லோரும் வேகமாகச் சைக்கிளை மிதித்து மிதித்து ஓட்டினார்கள்.
முகிலனால் மட்டும் ஓட்டவே முடியவில்லை...
“கிரீச் கிரீச்” என்று பலத்த சத்தம் போட்டது சைக்கிள்.
“சீ...” என்றவன் கோவத்துடன் சைக்கிளை விட்டிறங்கி தடாரென கீழே போட்டான்.
“ஏன் கோவப்படுகிறாய் முகிலா...’ என்றது சைக்கிள்.
“ஆ... சைக்கிள் பேசுதே ...”
“நான் உன்தோழன், அதனால் நான் பேசுவது உனக்குக் கேட்கும்” என்றது சைக்கிள்.
“அப்படியா?” என்ற முகிலன் “ஏன் கிரீச் கிரீச் என்று சத்தம் போடுகிறாய்?” என்றான்.
“என் உடல் வலிக்கிறது முகிலா... உனது பாரத்தை என்னால் தாங்க முடியவில்லை...”
“என்ன சொல்கிறாய்?” என்றான் முகிலன் புரியாமல்.
“ஆமாம்.! இப்போது நீ குண்டாகி விட்டாய். அதனால் உன் பாரத்தை என்னால் சுமக்க முடியவில்லை. அந்த வேதனையில் நான் கிரீச் கிரீச் என்று கத்துகிறேன்”
“ஆ...” என்று விளித்தான் முகிலன்.
“நீ பள்ளி செல்லும் போது நிறைய இனிப்புகளை உண்கிறாய், விளையாடும் போதும் இனிப்பு, பிஸ்கட், சிப்ஸ் என்று கொண்டு வந்து உண்கிறாய். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு உண்டு குண்டாகி விட்டாய். என்னால் உன் பாரத்தைச் சுமக்கவே முடியவில்லை” என்று சொல்லி வருத்தப்பட்டது சைக்கிள்.
முகிலன் ஒன்றுமே பேசாது வருத்தத்துடன் நின்றான்.
அப்போது அருகில் வந்த நண்பர்கள், “ஏன் நீ வரவில்லை? ஓ...உனது சைக்கிள் சத்தம் போடுது அதனால் ஓட்ட முடியவில்லையா?” என்றனர்.
“உம்” என்றவன் வீட்டுக்குப் புறப்பட்டான்.
கதவின் மணியை அழுத்தியவனை ஆச்சரித்துடன் பார்த்த அம்மா...
“என்ன முகிலா? நான்கு மணியாகவில்லையே வந்துவிட்டாய்” என்றாள்.
“ஒன்றுமில்லை... அம்மா” என்றவன் அறைக்குள் சென்று சுவரில் உள்ள கண்ணாடியில் தன்னைப் பார்த்தான்.
அவனது உருண்டை முகமும், குட்டிப்பானை போன்ற வயிறும் தெரிந்தது.
“சைக்கிள் சொன்னது போல நான் குண்டுதான். அம்மா தரும் பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணாமல் சாக்லட், பிஸ்கட், சிப்ஸ் போன்ற உணவுகளை உண்டதால் குண்டாகி விட்டேன். ஆசிரியை மரியாவும் சொன்னார்களே, ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும், விளையாட வேண்டும், அப்போதுதான் கல்வி கற்க உற்சாகம் கிடைக்கும் என்று... ம்...” என்று வருத்தப்பட்டான் முகிலன்.
“முகிலா... முகிலா... உனக்குப் பிடித்த சாக்லேட், கேக் வேண்டி வந்துள்ளேன். வா... சாப்பிடு” என்றார் அப்பா.
“இல்லையப்பா... எனக்கு வேண்டாம். நான் குண்டாகி விட்டேன். இனிமேல் அம்மாவும், மரியாவும் சொன்னது போலவே ஆரோக்கியமான உணவுகளை உண்பேன்” என்றான் மகிழ்ச்சியுடன்.
“யார் சொன்னது நீ குண்டுப்பையன் என்று?” அப்பா கவலையுடன் கேட்டார்.
“எனது சைக்கிள்... அப்பா”
“சைக்கிளா?” என்றார் அப்பா சிரிப்புடனே...
“ம் ” என்றவனை கட்டியணைத்து அப்பா, "சைக்கிள் பேசாது முகிலா. நீ நேற்றுப் பார்த்த படத்தில் கரடியின் சைக்கிள் சொன்னது உனக்கு ஞாபகம் வந்துள்ளது அவ்வளவுதான்” என்றார் அப்பா.
“ஆமாம் அப்பா!” என்றான் கல கல என்று சிரித்துக் கொண்டே...
“ஆனாலும் நான் இனி ஆரோக்கியமான உணவுகளையே உண்பேன்” என்றவன், சைக்கிளில் யாவரையும் முத்திக்கொண்டு ஓட்டும் தன்னைக் கற்பனை செய்தான் முகிலன்.