விளையாட்டுப் பள்ளி இடைவேளையில் சிறார்கள் யாவரும் துள்ளிக்குத்து விளையாடிக் கொண்டிருந்தனர். பனிக்காலம் முடிவடைந்து இலை துளிர் காலம் வந்துவிட்டதால் சூரிய ஒளியும், மரங்களின் இளம் பச்சை நிற இலைகளும் சிறார்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
விளையாட்டுப் பள்ளி ஆசிரியை மோனிக்கா சிறார்கள் விளையாடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
அலெக்சும் மைக்கலும் கற்களைப் பொறுக்கி வீடு கட்டினர்.
ஹீவனும், மார்க்கும், தாரிக்கும் சறுக்கு மரத்தில் ஏறி சறுக்கி மகிழ்ந்தனர்.
கயானாவும், கமலியும் சிரித்து, சிரித்து ஊஞ்சலாடினர்.
ஆனால் ரோன் மட்டும் ஒரு ஓரமாக இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.
“ரோன் மட்டும் தனியாக இருந்து என்ன செய்கிறான்?” என்று யோசித்துக் கொண்டே மோனிக்கா ரோனை நோக்கிச் சென்றாள்.
அவன் ஒரு குச்சியொன்றை வைத்து மண்புழுவொன்றைக் குத்திக்குத்தி ஊர்ந்து செல்ல விடாது தடுத்தி நிறுத்தி விளையாட்டுக் காட்டினான்.
“ரோன் என்ன செய்கிறாய்?” என்றாள் மோனிக்கா.
“இந்தப்புழுவுடன் விளையாடுகிறேன்” என்றான் ரோன்.
அப்போது அருகில் வந்த மாதுமை, “மண்புழுவோடு என்ன விளையாட்டு?” என்றாள் புரியாமல்.
“ஓ... அதுவா? இந்த மண்புழுவை நகரவிடாது தடுத்து நிறுத்துவது. இந்தக் குச்சியால் இப்படிக் குத்தினால் அதன் உருளை வடிவான உடலை குறுக்கிக் கொள்ளும். பார்க்க வேடிக்கையாகவும் இருக்கும்” என்றான் ரோன்.
“ஐயோ பாவம்...! அதற்கு வலிக்குமே...!” என்றாள் மாதுமை.
“அதற்கு வலிக்காது. அது மண்புழு” என்றான் ரோன்.
இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மோனிக்கா...
“ரோன், இந்த மண்புழு நம்மைப் போல மனிதர்கள் இல்லை. ஆனாலும் அதற்கும் உடல் , உறுப்புகள் எல்லாம் உண்டு. நாம் நடந்து செல்லும் போது யாரும் தடுத்தால் அது நல்ல செயலா?”
இல்லை! என்றனர் இருவரும் தலையைப் பக்கவாட்டில் அசைத்து.
“எமது உடலில் யாராவது குச்சியால் குத்தினால் வலிக்குமா? இல்லையா?”
“வலிக்கும், வலிக்கும்” என்றாள் மாதுமை சத்தமாக...
ரோன் தலைகுனிந்து பதிலேதும் சொல்லாது நின்றான்.
“ரோன் வலிக்குமா?” கேட்டாள் மோனிக்கா.
முகம் சிவக்க நின்ற ரோன், “ஸாரி, மோனிக்கா” என்றான் பதிலாக.
அப்போது மாதுமை, "இதற்குக் கூட நம்மைப் போல அப்பா, அம்மா, தங்கை எல்லாம் இருக்குந்தானே? இந்த மண்புழு இரத்தம் வடிய வீட்டிற்குச் சென்றால் இதன் அப்பா, அம்மா எல்லாம் கவலைப்படுவார்கள் தானே?”
“பாவம்... நாம் அதைத் துன்புறுத்தக் கூடாது” என்றாள் மாதுமை மண்புழுவை உற்று நோக்கியவாறு.
“ம்... ம்... நிச்சயமாக மாதுமை”
“பாட்டி சொன்னார்கள், பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாதென இப்போது புரிகிறது” என்றான் ரோன்.
“ரோன், மாதுமை இந்த மண்புழு நமக்கு நல்லது செய்யும் ஓர் உயிரினம். நமக்கு நன்மை செய்தவர்ளை முக்கியமாக நாம் துன்புறுத்தவேக் கூடாது” என்றாள் மோனிக்கா.
“நன்மையா? நமக்கா? என்னது மோனிக்கா?” என்றனர் இருவரும் ஒருங்கே...
“இப்போது இலைதுளிர் காலம் அல்லவா? நமது வீட்டில் உள்ள தோட்டங்களில் பூச்செடிகள், காய்கறிகள், எல்லாம் பயிரிடுவோம் அல்லவா?”
“ஆமாம்” என்றனர் இருவரும்.
“தோட்டத்து மண்ணை வளப்படுத்த உதவுகிறது”
“எப்படி என்றான் ரோன்?”
“அதாவது செடிகள் வளர இயற்கையான உரம் இடுவோம் அல்லவா?”
“உரம்?” என்றாள் மாதுமை கண்களை விரித்து.
“அதாவது, மாட்டின் காய்ந்த சாணம், முட்டைக்கோது, கரட், ஆரஞ்சுத் தோல்கள்... இப்படி...” என்றாள் மோனிக்கா.
“தெரியும்! தெரியும்!” என்றாள் மாதுமை.
“அம்மா ரோயாச்செடிக்கு முட்டைக்கோது சுற்றி போடுவார்” என்றாள்.
“ஆமாம், அந்த உரங்களை உண்டு, கழிவுளாகச் சிறுசிறு உருண்டைகளை மலம் கழிப்பது போல வெளியேற்றும். இவை மண்ணோடு சேர்ந்து செடிகள் செழிப்பாக வளர உதவும்” என்றாள் மோனிக்கா.
இருவரும் கண்களை விரித்து உருளை வடிவான மண்புழுவை உற்று நோக்கினர்.
சின்னதான மண்புழு எவ்வளவு நல்லது செய்கிறது.
“ஸாரி மண்புழு” என்றான் ரோன்.
இருவரும் தமது சிறிய விரல்களால் குறுகியிருந்த மண்புழுவைத் தடவிக் கொடுத்தனர்.
அந்த மண்புழுவும் உடலை நீண்டி மகிழ்ச்சியுடன் ஊர்ந்து செல்லத் தொடங்கியது.
இந்தக் காட்சியைப் பார்த்த ரோன் தனது கைவிரலால் மண்புழுவைப் போல நிலத்தில் நெளித்து நெளித்து அழகு காட்டினான். மோனிக்காவும், மாதுமையும் சிரித்துக் கொண்டே ரோனைப் போல செய்ய முயன்றனர்.