அதிகாலைச் சூரியனின் ஒளி பள்ளியின் சன்னல் கண்ணாடிகளில் பட்டுத்தெறித்து வகுப்பறையில் குட்டி மாநாடு நடத்திய ஆதவனின் முகத்தில் குடிகொண்டது. எதையுமே கண்டு கொள்ளாது நண்பர்களுடன் கண்களை உருட்டி உருட்டிக் கதை பேசினான் ஆதவன்.
‘எத்தனை மீன்கள்?’ என்றான் அல்பட்.
’ஒன்றே ஒன்று’ என்றான் ஆதவன்.
‘என்ன நிறம்?’ என்றான் ஐடீன்
‘அது வந்து... ம்... ஒரு ஆரஞ்சு நிறம் போல... இல்ல இல்ல இந்த சூரியன் நிறம் போல’ என்று கண்ணாடிகளில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கதிர்களை நோக்கிக் கண்களைச் சுருக்கியவாறே கைவிரலை நீட்டிக் காண்பித்தான் ஆதவன்.
‘ஓ... கோல்ட் நிறமா?’ என்றாள் ஜஸ்மின்.
‘ம்...ம்...’ என்று மேலும் கீழுமாகத் தலையசைத்தான் ஆதவன்.
‘எங்கு வாங்கினாய்?’ என்றாள் ஜஸ்மின்.
‘ஹா... ஹா...’ என்று சிரித்துக் கொண்டே ஆதவன் சொன்னான், 'நானும் அப்பாவும் மாலைப்பொழுதில் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது ஓடையில் வாத்துக்கள், அன்னங்கள், மீன்கள் யாவற்றையும் பார்த்தோம்’
அப்போது ஒரு தாத்தா தூண்டிலால் மீனைப் பிடித்துப் பிடித்து மீண்டும் தண்ணீரிலேயே விட்டுக் கொண்டிருந்தார்.
‘ஏன் மீனைப்பிடித்து தண்ணீரிலேயே விடுகின்றீர்கள்?’ என்றேன்.
ஒன்றுமே சொல்லவேயில்லை அந்த தாத்தா.
எனக்கும் மீன் பிடிக்க வேண்டுமென்ற ஆசை வந்தது.
அடுத்த நாள்...
அப்பாவும், நானும் தூண்டிலை எடுத்துச் சென்று மீனைப் பிடித்தோம். ஒரு மணிநேரம் தூண்டில் போட்டுப்போட்டுக் கடைசியாக ஒரு அழகனான குட்டி மீனைப் பிடித்தோம்.
‘ஓ... அது தான் உன் வீட்டில் உள்ள மீமோவா...’ என்றான் ஐடின்.
‘ஆமான்டா ! உனக்கு எல்லாமே ரொம்ப லேட்டாகத்தான் புரியும்’ என்றாள் பெரிய மனுசிபோல ஜஸ்மின்.
கடைக்குப் போய் சின்னதாக ஒரு கண்ணாடித் தொட்டி பிறகு அதற்கு உணவு எல்லாம் வாங்கி வந்தோம்.
‘இரண்டு நாளாக அந்த தொட்டிக்குள் மேல, கீழ என்று நீந்தி நீந்தி ரொம்ப அழகு காட்டுது மீமோ...’ என்றான் மகிழ்ச்சியுடன் ஆதவன்.
பாரதி மட்டும் பதிலேதும் சொல்லாது கண்களில் சோகத்துடன் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘ஆதவா, எங்களுக்கு உன் மீமோவை எப்போது காட்டுவாய்?’ என்றான் ஆசையுடன் அல்பட்.
நாளை புதன் கிழமை.
‘பிற்பகல் விடுமுறைதானே? உங்கள் அம்மாவிடம் கேட்டுவிட்டு வீட்டுக்கு வாருங்கள்!’ என்றான் ஆதவன்.
‘நான் வாருகிறேன்’ என்றாள் ஆள்காட்டி விரலை உயர்த்தி ஜஸ்மின்.
‘நானும்’ என்றான் ஐடின்
‘நானும்’ என்றான் அல்பட்
‘பாரதி நீ...?’ என்றாள் ஜஸ்மின்.
‘நான் வரவில்லை’ என்றாள் பாரதி வெடுக்கென.
இப்போது யாவரும் அவளைச் சுற்றிக் கொண்டனர்.
‘ஏன் என்றான் ஆதவன்?’
‘உங்கள் வீட்டில் விடமாட்டார்களா?’ என்றான் கவலையுடன்.
‘இல்லை... எனக்குத்தான் பிடிக்கவில்லை’ என்றாள் பாரதி.
‘ஏன்?’ என்றனர் யாவரும் கோரசாக...
‘அதுவா?’
‘அந்தக் குட்டி மீன் பாவம் இல்லையா?அதற்கு அப்பா, அம்மா எல்லோரும் இருந்திருப்பாங்க. நம்மைப்போல பிரன்ட்ஸ் கூட இருந்திருப்பாங்க... இப்போது உங்கள் வீட்டில தனியாக இருக்கிறது. பாவமாக இருக்கு’ என்றாள் பாரதி கண்களில் நீருடன்.
மூக்கை இழுத்துக் கொண்டே தொடர்ந்து பேசிய பாரதி...
‘அந்த மீமோட வீடு பெரியது... உன் வீட்டில் குட்டி கண்ணாடித் தொட்டியில் எப்படி நீந்த முடியும்? அதற்கு நம்மைப்போல பேசவும் தெரியாது... அதுதான் மேலேயும் கீழேயுமாக நீந்திநீந்திக் கஷ்டப்படுது’ என்றாள் பாரதி.
ஆதவன் முகம் சிவந்தது.
‘ஜஸ்மின், அல்பட், ஐடின் யாவரும் பாரதியின் அருகில் நின்று கொண்டு ஆதவனைக் கோவமாகப் பார்த்தனர்.
‘பாரதி சொல்வது சரிதானே’ என்றாள் ஜஸ்மின்.
‘நம்மை யாராவது பிடித்துக் கொண்டு குட்டி அறையில் அடைத்து வைத்துச் சாப்பாடு தந்தாலும் நம் வீடு போல் வருமா? நம் அப்பா, அம்மா, தம்பி, பாட்டி எல்லோரும் எவ்வளவு கவலையோட தேடுவாங்க... அழுவாங்க... குட்டி மீனையும் அப்படித்தானே தேடுவாங்க, அழுவாங்க...’ என்றாள் ஜஸ்மின்.
‘ஓ... அதுதான் தாத்தா மீனைப் பிடித்துப் பிடித்துத் தண்ணீரில் விட்டாரோ’ என்று யோசித்தான் ஆதவன்.
‘என்ன ஆதவா?’ என்று தோளைக் குலுக்கினான் அல்பட்.
‘உண்மைதான் பாரதி!’
மீமோ தொட்டிக்குள் போட்ட உணவு எல்லாமே ஓர் மூலையில் ஒதுங்கிக் கிடந்தது.
அப்பாவிடம் கேட்டேன்.
‘அதற்கு இந்த உணவு தின்று பழக்கமில்லை, கொஞ்ச நாளில் பழகிவிடும்’ என்றார்.
அம்மா மட்டும் திட்டினார்.
‘ஏன்?’ என்றாள் பாரதி.
ஓடையில வாழ்கிற மீனைத் தொட்டியில் அடைத்து வைத்து வளர்ப்பது நல்லதல்ல என்றும், இதெல்லாம் நல்ல பொழுதுபோக்கு இல்லையென்றும் சொன்னார்.
‘ஓ... உங்க அம்மா நல்லவங்க’ என்றாள் பாரதி.
‘எங்க அப்பாவும் நல்லவர்தான்... நான் தான் அடம்பிடித்து மீமோவை வீட்டுக்குக் கொண்டு வந்தேன். என் மேல் வைத்த அன்பில் அப்பா ஒத்துக்கொண்டார்’ என்றான் ஆதவன் வருத்தத்துடன்.
‘சரி இப்போது என்ன செய்யலாம்?’ என்றாள் ஜஸ்மின்.
எல்லோருடைய காதுக்குள் இரகசியம் பேசினான் ஆதவன். ஆனால், பாரதியிடம் மட்டும் எதுவுமே சொல்லவேயில்லை.
ஆதவனின் செயலால் கோவப்பட்ட பாரதி "விர்" என தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்த ஆதவன் பாரதியின் வருகைக்காகக் காத்திருந்தான்.
வகுப்புக்குள் நுழைந்த பாரதி ஆதவனைப் பாரத்துக் குட்மோனிங் என்று சொல்லியவாறே தனது இருக்கையை நோக்கிச் சென்றாள்.
பாரதியிடம் சென்ற ஆதவன், ‘இப்போது குட்டி மீன் எங்கே?’ என்று சொல் பார்க்கலாம் என்றான்.
அதே சமயம் அல்பட், ஐடின், ஜஸ்மின் யாவரும் இவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர்.
யாவரும் ஒருமித்த குரலில், ‘சொல் பார்க்கலாம்!’ என்றனர் கண்களை விரித்து.
பாரதி... சற்று மிரண்டுதான் போனாள்...
‘ஆ... தெரியல்ல ஆனால் உன் வீட்டில் இல்லை’ என்றாள் புத்திசாலி பாரதி.
‘ஆமாம், என் வீட்டில் இல்லை. இப்போது மீமோ அவங்க வீட்டில்...’ என்ற ஆதவன் கல கல என்று சிரித்தான்.
‘ஆ... உண்மையாகவா? நன்றி ஆதவா...!’ என்ற பாரதி மகிழ்ச்சியுடன் ஆதவனை அணைத்துக் கொண்டாள்.
‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றாள் சுற்றி நின்றவர்களைப் பார்த்து.
‘நாங்கள் நேற்று மாலை ஆதவன் வீட்டுக்குப் போனோம். குட்டிப் போத்தலில் மீமோவை எடுத்துக் கொண்டு போய் ஓடையில் விட்டோம். ஆதவனின் அம்மாவும் எங்களுடன் வந்தார்’ என்றான் அல்பட்.
‘ஓ...இதைத்தான் இரகசியமாக பேசினீர்களா? திருடர்களே...’ என்றாள் சிரித்துக் கொண்டே பாரதி.
பாரதி, ‘மீமோ ஓடையில் குதித்து மகிழ்ச்சியுடன் சென்றது... பார்க்கவே அழகாக இருந்தது’ என்றாள் ஜஸ்மி.
‘மீமோ நன்றி கூட சொல்லிச்சு தெரியுமா?’ என்றான் அல்பட்.
‘எப்படி?’ என்றனர் மற்றைய யாவரும்.
முதுகை வளைத்துத் தனது இடுப்பைப் பக்கவாட்டில் ஆட்டி ஆட்டி ‘இப்படித்தான்’ என்றான் அல்பட்.
வாலை அசைத்து அசைத்து நீந்திச் சென்றதைச் சொல்கிறான் என்ற ஜஸ்மின்
நாங்களும் பாரதிக்கு ‘மீமோ போல நன்றி சொல்வோமா?’ என்றாள்.
‘ஓ...’ என யாவரும் தமது முதுகை வளைத்து இடுப்பை அசைத்து அசைத்துச் சிரித்தனர்.