பிள்ளைகளே ! இப்போது காலை உணவு இடைவேளை... எல்லோரும் உங்களது உணவுப்பையை எடுத்துக் கொண்டு அமருங்கள் என்றார் ஆசிரியை சந்திரா.
மதுரா, குமரன், டிலா, ஆமினா யாவரும் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிச் சென்று மாட்டியிருந்த உணவுப்பைகளைத் தூக்கிக் கொண்டு வந்தனர்.
விளையாட்டுப்பள்ளியின் பன்னிரண்டு பேரும் அமர்வதற்காகப் பாம்பு போன்ற நீள் வடிவத்தில் சிறிய சிறிய வண்ணக்கதிரைகளையும் பெரிய பெட்டி போன்ற மேசைகளையும் அடுக்கி வைத்திருந்தார் ஆசிரியரை சந்திரிகா...
கலகலவென்று சிரித்துக் கொண்டே யாவரும் அமர்ந்து பைகளைத் திறந்தனர்.
மதுராவின் சாப்பாட்டுப் பெட்டிக்குள் சிவப்பு நிற ஆப்பிள் பழத்துண்டுகள் இருந்தன.
ஆமினாவின் பெட்டிக்குள் தோல் சீவிய காரட் இருந்தது. ஆமினா காரட்டை தனது மூக்கின் மேல் வைத்து அழகு காட்டினாள்.
எல்லோரும் கல,கல என்று சிரித்தனர்...
டிலாவின் பெட்டியுள் சிறிய வாழைப்பழங்கள் இரண்டு இருந்தன. அவள் ஒன்றை எடுத்துக் காதில் பொருத்தித் தொலைபேசியில் பேசுவது போலப் பேசினாள்.
மீண்டும் சிரிப்பொலி...
குமரன் பெட்டியைத் திறந்தான் அதனுள் ஒரு சிறிய மாம்பழம்...
கண்களை விரித்தவன்... நேற்று வீட்டில் நடந்ததை நினைவுபடுத்திப் பார்த்தான்.
அப்பா வீட்டுப் பொருட்களை வாங்கக் கடைக்குச் சென்றார். குமரன் தனக்கு மிகவும் பிடித்த மாம்பழத்தை வாங்கி வருமாறு அப்பாவிடம் சொல்லியிருந்தான். அந்த மாம்பழம் இப்போது முழுமையாக உணவுப் பெட்டியில் இருந்தது.
குமரன் மஞ்சள் நிற மாம்பழத்தை மூக்கின் அருகில் எடுத்துச் சென்று வாசம் பிடித்தான். மற்றையவர்களும் மாம்பழம் அருகில் வந்து ம்... ம்... எவ்வளவு வாசம் என்று கண்களை மூடி மூக்கை இழுத்தனர்.
அருகில் வந்த ஆசிரியை சந்திரா...
ஓ... மாம்பழமா? என்றவாறு வெட்டுவதற்குக் கத்தியை எடுத்து வந்தார்.
தோல் சீவி மாம்பழத்தைத் துண்டுகளாக வெட்டிக் குமரனின் உணவுப் பெட்டியுள் போட்டார்.
ஆ... பெரிய மாம்பழக் கொட்டை என்று கண்களை விரித்தாள் ஆமினா...
ஆமாம்... பெரிய கொட்டை என்றனர் யாவரும்.
ஆசிரியை சந்திரா சிறிய கண்ணாடிக் குவளையின் மேல் கரண்டியால் டிங் டிங், டிங் டிங் என்று தட்டினார்.
சிறார்கள் யாவரும் அமைதியாக ஆசிரியைச் சந்திராவைக் கவனித்தனர்.
பிள்ளைகளே!
நாம் விளையாட்டுப்பள்ளியில் ஆரோக்கியமான உணவுகளையே உண்ணுகின்றோம். இன்று குமரன் மாம்பழம் கொண்டு வந்தான்.
இந்த மாம்பழம் யார் யாருக்கெல்லாம் பிடிக்கும் என்றார்?
லூக்காவைத் தவிர யாவரும் பிடிக்குமென்று ஆட்காட்டி விரலைத் தூக்கிக் காண்பித்தனர்.
லூக்கா உனக்கேன் பிடிக்காது என்றார் ஆசிரியை சந்திரா?
அதன் மணம் பிடிக்காது என்றான் லூக்கா.
ஓ... அப்படியா? சரி.
பிள்ளைகளே இதன் கொட்டையைப் பார்த்தீர்களா?
எத்தனை பெரியது...?
இதனை நாம் முளைக்க வைப்போமா? என்றார் ஆசிரியை சந்திரா.
முளைக்க வைப்பதா? என்றான் அல்பட்.
ஆமாம் !
இதனை நாம் மண்ணில் புதைத்துச் சிறிதளவு தண்ணீர் விட்டுச் சூரிய ஒளி படுமிடத்தில் வைத்தால், சில நாட்களில் மாம்பழக்கன்று முளைக்கும் என்றார்.
ஆ... என்று யாவருமே புரியாது விளித்தனர்.
சரி பிள்ளைகள் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மாம்பழக் கொட்டையை முளைக்க வைக்கலாமென்று சொன்னார் ஆசிரியை.
இடைவேளை முடிந்த பிற்பாடு சிறார்கள் மீண்டும் தமது உணவுப்பையை உரிய இடத்தில் மாட்டினர். அவர்களை அழைத்த ஆசிரியை சந்திரா,
ஒரு பெரிய மேசையின் மீது பழைய கண்ணாடிப் போத்தல், மண், தண்ணீர், மாங்கொட்டை யாவற்றையும் தயாராக வைத்திருந்தார்.
பிள்ளைகள் யாவரும் மேசையைச் சுற்றி நின்று பொருட்களின் பெயர்களைச் சொல்லிச் சொல்லிப் பார்த்தனர்.
பிள்ளைகளே இந்தப் பொருள் என்ன என்று தெரியுதா?
ஆம் என்றனர் கோரசாக...
மகிழ்ச்சி ...
முதலில் போத்தலில் மண்ணை இடவேண்டும்...
யார் மண்ணை போத்தலுள் நிரப்புகிறீர்கள்? என்றார் ஆசிரியை.
டொமினிக் முன்னே வந்தான்...
ஓ... டொமினிக் இந்தப் போத்தலுள் மண்ணை அள்ளி அள்ளிப் போடு என்றார் ஆசிரியை.
மிகவும் கவனமாக மண்ணைக்கிள்ளிக் கிள்ளிப் போத்தலுள் போட்டான் டொமினிக்...
யார் சிறிதளவு தண்ணீர் விடுகிறீர்கள்? என்று ஆசிரியை கேட்ட போது...
டிலா "நான்" என்றாள்.
சிறிய குவளையால் குளிர்ந்த தண்ணீரை மண்மீது மெல்ல மெல்ல விட்டாள்.
இப்போது பார்த்தீர்களா?
இந்தக் காய்ந்த மண் தண்ணீர் பட்டு ஈரமாக மாறிவிட்டது என்றார் ஆசிரியை.
எல்லோரும் போத்தலுள் தமது சிறிய விரல்களில் ஒன்றைவிட்டுத் தொட்டுத்தொட்டுப் பார்த்தனர்.
ம் ம் ஈரமான மண் என்றனர்.
இப்போது குமரன் தனது மாம்பழத்தின் கொட்டையை இந்த மண்ணுள் புதைக்கப் போகிறான் என்றார் ஆசிரியை சந்திரா.
குமரன் தனது சிறிய மாம்பழத்தின் கொட்டையை மூன்று விரல்களால் எடுத்து ஈரமான மண்ணுள் புதைத்தான்.
யாவரும் மிகவும் சுவாரசியமாக மண்ணையும், மாங்கொட்டையையும் கண் விரித்துப் பாரத்துக் கொண்டிருந்தனர்.
மாங்கொட்டையை இப்போது காணவில்லை...
பார்த்தீர்களா?என்றார் ஆசிரியை சந்திரா சிரித்துக் கொண்டே.
யாவரும் ஆ... என்று சந்தமிட்டவாறே கலகலவென்று சிரித்தனர்.
ஆசிரியை சிறிதளவு மண்ணை மேலும் போத்தலுள் இட்டு மதுரா கொஞ்சம் தண்ணீர் விடு என்றார்.
மதுரா சிறிதளவு தண்ணீரை விட்டாள்...
இப்போது மாங்கொட்டையை மண்ணுள் புதைத்து தண்ணீரும் ஊற்றியுள்ளோம். இதனை நமது பள்ளியறையில் யன்னலோரம் சூரிய ஒளி படுமாறு வைப்போம்... என்று ஆசிரியை முடிக்கும் முன்...
ஏன் சூரிய ஒளி என்றான்? குமரன்
ஒரு செடி வளர மண், தண்ணீர், சூரிய ஒளி அவசியம் குமரா.
நாம் உயிர் வாழத் தண்ணீர், உணவு, வீடு தேவை போல... என்றார் ஆசிரியை சந்திரா.
சிறார்களுக்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது என்பதை அவர்களது அகல விரித்த கண்களும், அமைதியும் சுட்டிக்காட்டியது.
சரி பிள்ளைகள்!
நம்மோடு விளையாட்டுப்பள்ளியில் இருப்பதற்குப் பிடித்தால் மாங்கன்று முளைக்குமென்றார் ஆசிரியை சந்திரா.
நாட்கள் கடந்தன...
ஒவ்வொரு நாளும் மாங்கன்று முளைத்து விட்டதா?என குமரன் பார்ப்பதற்குத் தவறுவதில்லை.
அன்று வாரவிடுமுறை...
சனியும், ஞாயிறும் மாங்கன்றைப்பற்றியே குமரன் யோசித்துக் கொண்டேயிருந்தான்.
திங்கள் காலை அவசர அவசரமாக "வாங்க விளையாட்டுப்பள்ளிக்குப் போவோமென்று" தாயை நச்சரித்துக் கொண்டேயிருந்தான்.
தாயும் பொறு குமாரா!
ஒன்பது மணிக்கே பள்ளி...
இப்போதுதான் எட்டு மணி என்றார்.
பொறுமையின்றி தவித்த குமரன் ஒருவாறு விளையாட்டுப்பள்ளிக்கு வந்து சேர்ந்த போது மதுரா, லூக்கா இருவரும் வாசலுக்கு ஓடிவந்து எங்களோடு விளையாட்டுப்பள்ளியில் விளையாட மங்கோ மரத்துக்கும் விருப்பம் என்று கூறி கலகல என்று மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.
குமரன் துள்ளிக்குதித்து வகுப்புக்குள் ஓடினான் குட்டியான மாங்கன்று குமரனைப் பார்த்தது!
மாமரம், மாமரம் என்று மேலும் கீழும் குதித்தான் குமரன்...
வகுப்பறைக்குள் வந்து நுழைந்த மற்றைய நண்பர்களும் மாமரம், மாமரம் என்று சத்தமிட்டவாறு மேலும் கீழும் குதித்தனர்.