தமிழினி, லெவின், அச்சு, முகிலன், மெலனி யாவரும் மிக மகிழ்ச்சியாக காணப்பட்டனர். இலை துளிர் காலத்தின் மகிழ்ச்சியில் குரல் எழுப்பும் பறவைகளைப் போலவே அவர்களது உற்சாக குரல் விளையாட்டுத் திடல் எங்கும் எதிரொலித்தது.
பள்ளி முடிடைந்த பிற்பாடு யாவரும் பந்தடித்து விளையாடுவதற்காகத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள திடலில் கூடுவர். கடந்த மூன்று மாதமாகக் கொட்டும் வெள்ளைப்பனி இவர்களது விளையாட்டைத் தடுத்தி நிறுத்தியிருந்தது. கடந்த இரண்டு வாரமாகத்தான் புல்வெளியில் விளையாடி மகிழ்கின்றனர்.
தமிழினி அங்கே பார்... அழகான ஒரு பறவையென லெவின் கைவிரல் நீட்டிக் காண்பித்தான்.
அவன் கைகாட்டிய திசையில் நீல நிற உடலும், மஞ்சள் நிற இறக்கையும், சிறிய பழுப்பு நிறக் கண்களுமாக ஒரு பறவை மரத்தின் கிளையில் இருந்தது.
ஆ... எவ்வளவு அழகான பறவை என்ற அச்சு... முகிலன், மெலனி யாவரையும் அழைத்தாள். யாவருமே அந்தப் பறவையினைக் கண்வெட்டாது பார்த்தனர்.
“இதன் பெயர் என்னவாக இருக்கும்?” என்றாள் அச்சு.
“தெரியவில்லையே...” என்றான் முகிலன்.
யாவருமே தெரியாதென உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினர்.
“பனிக்காலத்தில் சூடான நாட்டுக்குச் சென்ற நம்ம நாட்டுப் பறவைகள் புதிய பறவைகளை நண்பராகக் கூட்டிட்டு வந்திருக்கு” என்றான் முகிலன்.
அழகான பிரண்ட்டைக் கூட்டிட்டு வந்திருக்கு என்ற மெலனி, “இதுவெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்?” என்றாள்.
என் அப்பா ஞாயிறு விடுமுறையில் இப்படியான கதைகள் நிறையச்சொல்லுவார்...
“ஓ...” என்ற யாவரும் “ஏன், பனிக்காலத்தில் சூடான நாட்டுக்கு நம் பறவைகள் செல்கின்றன?” என்றனர்.
முகிலன் நிலத்தில் கிடந்த பந்தை அணைத்தபடி புற்றரையில் இருந்தான். அவனைச் சுற்றி யாவரும் அமர்ந்தனர்.
“ஏனென்றால் பறவைகளால் இந்தக் குளிரைத் தாங்க முடியாதே... நம்மைப் போல அவங்களுக்கு பனிகால உடைகள் இல்லையே...” என்றாள் அச்சு.
“ஆமாம்” என்றான் முகிலன்.
“பறவைகளுக்கு மரங்களில் இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் தான் விருப்பம். சூரியனைக் கண்டாலே கூக்கூ கூக்கூ... என்று பாட்டெல்லாம் பாடும். பனிக் காலத்தில் நம் நாட்டில் மரங்களில் இலைகள் இருக்காதே...” என்றான் முகிலன்.
“மொட்டையாக இருக்கும்” என்றாள் அச்சு.
"மொட்டையாக" என்றால் என்னது? என்று கேட்டான் லெவின்.
“தலையில் முடியே இல்லாதவர்களை மொட்டைத்தலை என்றுதானே சொல்வோம்”
“பனிக்காலத்தில் மரத்தில் இலைகள், பூக்கள் ஒன்றுமே இல்லையா?அதனால் அதுவும் மொட்டைதானே” என்று விளக்கமளித்த அச்சு “கலகல” என்று சிரித்தாள்.
மொட்டைத்தலை மரம், மொட்டைத்தலை மரம் என்று சொல்லிச்சொல்லிக் கலகலத்தனர் யாவரும்.
பெரு விரலையும், ஆட்காட்டி விரலையும் ஒன்றாகச் சேர்த்து கண்களையும், மூக்கையும் சுருக்கிய முகிலன் மரத்தில் சின்னச் சின்ன இலைகள் எல்லாம் முளைக்க நமது இடத்துக்குத் திரும்பி வந்துவிடும் என்று அழகாக விளக்கினான்.
“அத்தோடு நாங்கள் திரும்பி வந்துவிட்டோம், வந்துவிட்டோம் என்று அதிகாலையில் கீச், கீச் என்று சத்தமெல்லாம் எழுப்பிக் காட்டும்” என்றான் முகிலன் சிரித்துக் கொண்டே...
“நானும் கேட்டிருக்கிறேன்... இன்று காலையில் எங்கள் வீட்டு ஆப்பிள் மரத்தில் இருந்து கொண்டு ஒரே சத்தம் போட்டு கதைக்கின்றன” என்றான் லெவின்.
“மாலையிலும் ஒரே பாட்டுத்தான்” என்றாள் மெலனி சிரித்துக் கொண்டே.
“பார்த்தீர்களா? தாங்கள் பறந்து செல்லும் நாட்டிலுள்ள நண்பர்களையும் அழைத்து வந்து நமக்கு காட்டுகின்றன” என்றான் முகிலன்.
யாவரும் “ம்...ம்...” என்று ஆமோதித்தனர்.
“இந்தப் பறவைக்குப் பெயர் என்னவாக இருக்கும்?” என்றாள் மெலனி.
“எனக்குத் தெரியாது! ஆனால் அப்பாவிடம் கேட்டால் சொல்லுவார்” என்றான் முகிலன்.
“ம்... ... இப்போது நாம் ஒரு பெயர் வைப்போம்” என்ற முகிலன்.
“என்ன பெயர் வைக்கலாம்? என்று யாவரும் பறவை மேல் கண் வைத்தவாறே யோசித்தனர்.
அப்போது அந்தச் சின்னப் பறவை தனது குட்டித்தலையைத் இவர்கள் பக்கம் திருப்பியது.
“ஷ்...” என்று ஆட்காட்டி விரலை வாயில் வைத்து "சத்தம் போடாதீர்கள்!" என்று உடல் மொழி பேசிய முகிலனைத் தொடர்ந்து யாவரும் அந்த வண்ணப் பறவையை மேலும் உற்று நோக்கினர்.
சில நிமிடங்கள் இவர்களைப் பார்த்த பறவை "ஹிக்கி" , "ஹிக்கி " என்று அடித் தொண்டையால் கத்தியபடியே பறந்து சென்றது.
இறக்கைகளை உந்தி உந்தி பறக்கும் நீலப்பறவையை பார்த்துக்கொண்டிருந்தனர் யாவரும்...
அப்போது தமிழினி சொன்னாள் “பறவையின் பெயர் கண்டுபிடித்து விட்டேன், நான் கண்டு பிடித்துவிட்டேன் "
“என்ன பெயர்?” என்றனர் பறவையிலிருந்து தமிழினி நோக்கிக் கழுத்தை திருப்பிய யாவரும்...
"நீல ஹிக்கி" என்றாள் தமிழினி.
நல்ல பெயர் தான் என்றான் லெவின்.
அப்பாவிடம் போய் "நீல ஹிக்கி " பற்றி கேட்டு வந்து சொல்கிறேன் என்ற முகிலன் “பிரண்ட்ஸ் கூட புதிய நாட்டுக்கு வரும் பறவைகள் யாவும் மகிழ்ச்சியாக இருப்பதில்லையென்று அப்பா சொன்னார்” என்றான்.
“ஏன்?” என்றாள் தமிழினி.
“அதுக்கு இந்த சூடு, குளிர், தண்ணீர், சாப்பாடு எல்லாமே ஒத்து வராதாம்... இதனால் சிலதுக்கு நோய் வருமாம், சிலது இறந்தும் விடுமாம்”
“ஐயையோ...” என்றாள் மெலனி.
“ம்... பிரண்ட்ஸ் கூட பறந்து வரும் வழியில கூட சிலதுகள் இறந்து விடுமாம்...”
“அதுபோல குளிர் வரும் போது சூடான நாட்டுக்குச் செல்லும் நம்ம பறவைகள் சிலதுகளும் இறந்துவிடுமாம்...”
“எவ்வளவு பாவம்?” என்றாள் அச்சு.
“ஆமாம்” என்றனர் யாவரும்.
“எஞ்சிய பறவைகள் மீண்டும் வந்து கூடு கட்டி குஞ்சு பொரித்து மகிழ்ச்சியாக பாட்டுப்பாடி வாழ்கிறது” என்று அப்பா சொன்னார்.
“முகிலா... உங்கள் அப்பாவுக்கு எப்படி இந்தக் கதையெல்லாம் தெரியும்?: என்று கேட்டான் லெவின்.
அப்பா நிறைய புத்தகங்கள் வாசிப்பார்.
“எங்கள் வீட்டில் ஒரு குட்டி நூலகம் உண்டு. ஞாயிற்றுக்கிழமை என்றால் மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் நானும் அப்பாவும் நூலகத்தில் இருப்போம். ஒவ்வொரு முறையும் தான் வாசித்த ஏதாவது ஒன்றை சூப்பராகக் கதையாய்ச் சொல்வார்” என்றான் முகிலன் .
“இன்னும் என்ன என்ன கதை உனக்குத் தெரியுமென்றாள்?” தமிழினி.
“நிறைய” என்று கண்களை விரித்துப் பெரியவன் தோரணையில் பேசினான் முகிலன்.
“நாங்களும் உங்கள் அப்பாவிடம் கதை கேட்கலாமா?” என்றாள் மெலனி.
“ஆமாம்... இந்த வாரம் "வானவில் " கதை சொல்வார் என்றான் முகிலன்.
“வானவில் கதையா?” என்றான் லெவின்.
“ம்” என்ற முகிலன் தரையில் கைகளினால் கற்களை நீக்கி மணலில் வளைவான ஏழு கோடுகளை வரைந்து இது பற்றி என்றான்.
“எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்” என்றனர் யாவரும்...
லெவினும் எனக்கும் தெரியுமே...
“ஏழு கலர்ல வானத்தில் ஜோராக இருக்கும்” என்றவன், “நானும் கதைகேட்க வருகிறேன்!” என்றான்.
முகிலன் துள்ளியெழுந்து பந்தை தரையில் எறிந்த படியே எல்லோரும் வாங்க "நீல ஹிக்கி " பற்றியும் கேட்போம்! என்றவாறே ஹிக்கி, ஹிக்கி என்றான் வானத்தை நோக்கி....
மற்றையவர்களும் கலகலத்தபடி ஹிக்கி, ஹிக்கி என்றவாறே பந்தின் பின் ஓடினர்.