மரங்களில் இளம் பச்சை நிறத்தில் இலைகள் துளிர்க்கத் தொடங்கி விட்டன. இளம் சூரியனின் ஒளி மரங்களில் பட்டுத்தெறித்து இலை துளிர் காலத்தை அழகுபடுத்தியது. மென்மையான காற்று உடலைத் தழுவி உற்சாகப்படுத்தியது. இதையெல்லாம் இரசித்துக் கொண்டே விலங்குகள் பூங்காவைச் சுற்றி வந்தார்கள் மாறனும், மறவனும்.
“அப்பா அங்கே பாருங்கள் கங்காரு!” என்றான் மாறன்.
நான் ஆண்டு இரண்டு படிக்கும் போது தமிழ் புத்தகத்தில் இந்த கங்காருவைப் பற்றி படித்திருக்கிறேன். வயிற்றில் ஒரு பை இருக்குமே எனச் சொல்லியவாறு கங்காரு அடைக்கப்பட்ட வேலியின் அருகில் சென்றவன், ‘... ஆ... பை பை’ என்றான் தன்னை மறந்து.
மாறனை ஆச்சரியத்துடன் பார்த்த மறவன், "அண்ணா என்ன பை?" என்றான் புரியாது.
தம்பி நீ இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் போது கங்காருவைப் பற்றிப் படிப்பாய். கங்காருவின் வயிற்றின் முன்னுள்ள பகுதியில் ஒரு பை போன்ற பகுதி இருக்கிறது பார்...! ஆ... அங்கே பார் ! கங்காருவின் குட்டி எப்படி சமத்தாக பைக்குள் இருக்கிறதென்று?” என்று சொல்லியவாறே குறிப்பிட்ட ஒரு கங்காருவை ஆள்காட்டிவிரலால் சுட்டிக்காட்டினான் மாறன்.
”ஆமாம் அண்ணா!”
“ம் ம்...” இதுதான் நான் சொன்ன பை என்றவாறே விளையாட்டுத் திடலை நோக்கிக் கண் பதித்தான் மறவன்.
"ரப்பர் ஸ்வில் விலங்குகள் பூங்காவில்" பறவைகள், விலங்குகள், பாம்புகள், மீன்கள், பூச்செடிகள், மரங்கள், உணவு விடுதி, விளையாட்டுத்திடல் யாவுமே பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சுற்றிவர உயரமான மரங்களும் காட்சியளித்தன.
பனிக்காலம் முடிவடைந்த பின் தொடங்கிய இலை துளிர் காலத்தை வரவேற்கும் பறவைகளைப் போல மகிழ்ச்சிக் குரலெழுப்பி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். இதனால் இரும்புக் கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கொடிய மிருகங்களும் இயல்பை மறந்து மகிழ்ச்சியுடன் சாதுவாகக் காட்சிஅளித்தன.
பெரியவர்கள் பலரும் சிறுவர்களை இயல்பில் விட்டுவிட்டு தம்மை மறந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“அப்பா நாங்கள் விளையாடப்போகிறோம்..!” என்றவர்கள் தந்தையின் நேரான தலையசைவில் தம்மை மறந்து சிட்டுக்குருவியாகப் பறந்து சென்றனர் விளையாட்டுத் திடலுக்கு.
விளையாட்டுத்திடலில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஊஞ்சல் ஆடினர். சிலர் சறுக்குப் பலகையில் "சர் " என்று சறுக்கி விழுந்தனர். இன்னும் சிலர் மணலில் மாளிகை கட்டி ராஜா ராணி விளையாட்டு விளையாடினர்.
மாறனும், மறவனும் ராஜா ராணி விளையாட்டில் இணைந்து கொண்டனர். சிறிது நேரத்தில் கலகலத்த ஒலியை நோக்கி இவர்களது பார்வை திரும்பியது.
அடைக்கப்பட்ட வேலிக்குள் அழகான தாடிவைத்த கொம்பு ஆடுகள், கறுப்பும் வெள்ளையுமாக வாயை அங்கும் இங்கும் அசைத்தபடி நின்றன. சிறுவர்கள் பக்கத்திலிருக்கும் புற்களைக் கைகளினால் பிடுங்கி ஆடுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆடு வாயைத் திறந்து புல்லை இழுத்துத் தின்னும் அழகைப் பார்த்து ‘மே..மே..’ என்று சத்தமிட்டு சிரித்து மகிழ்ந்தனர்.
மாறனும், மறவனும் ஒரு நொடிப்பொழுதில் ஆடுகள் அடைக்கப்பட்ட வேலியின் அருகில் நின்றனர். இவர்களது அருகில் நின்ற பையன் ஒருவன் ஆடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கையில் சிறிது புல்லைக் கொடுத்த ஒரு பெரியவர் "டேவிட் பயப்படாது கொடு ஆடு கடிக்காது. அது வீட்டில் வளர்க்கும் மிருகமென்று சொன்னார்"
டேவிட்டோ இல்லை தாத்தா... கையைக் கடித்தால் என்று சொல்லிப் பயந்தான்.
இதைப்பார்த்த மறவன் கலுக்கென்று சிரித்தான்...
இதனால் கோவமடைந்த டேவிட் மாறனைப் பார்த்து முறைத்துக் கொண்டே வெடுக்கென ஆட்டை நோக்கிப் புல்லை எறிந்தான்.
டேவிட் எறிந்த புல்லை நோக்கி அழகான கறுத்த ஆடொன்று மே...மே..என்று கத்தியவாறு ஓடிவந்தது. மாறனும், மறவனும் அந்த ஆட்டை ஆசையுடன் பார்த்தனர்.
இதைக் கவனித்த டேவிட் நீங்கள் தான் இந்த கறுத்த ஆடு...
நான் அந்த வெள்ள ஆடு என்று சுட்டிக்காட்டியதோடு, "கறுத்த ஆடு, கறுத்த ஆடு” என்று கேலி செய்தான்.
“மாறனும் மறவனும் ஏன் நாங்கள் கறுத்த ஆடு?” என்றனர் புரியாமல்.
டேவிட் உடனே கேலியாகச் சிரித்தபடியே, “உன் கையைப் பார்... இந்த நிறந்தான் அந்த ஆடு, என்னைப் போல வெள்ளை நிறம் இந்த ஆடு” என்றான்.
மீண்டும் புற்களைப் பிடுங்கிக் கொண்டு இவர்கள் அருகில் வந்த டேவிட்டின் தாத்தா மூவருக்கும் புல்லைப் பகிர்ந்து கொடுத்தார்.
புன்னகையுடன் நன்றி சொல்லி மாறனும், மறவனும் வாங்கிக் கொண்டனர்.
டேவிட்டோ "தாத்தா, எதற்காக அவர்களுக்குக் கொடுத்தாய்?, கறுப்பு ஆட்டுக்கு நான் புல் கொடுக்க மாட்டேன். கறுப்பர்களுக்கும் கொடுக்க மாட்டேன்” எனக்கூறிக்கொண்டே மாறன் கைகளில் உள்ள புல்லை படாரெனத் தட்டிவிட்டான்.
இதை எதிர்பாராத டேவிட்டின் தாத்தா ஆடிப் போய்விட்டார்.
மாறனும், மறவனும் முகம் சிவந்து தலைகுனிந்து நின்றனர்.
“டேவிட் நல்ல பையன் ஆயிற்றே... ஏன் இப்படி நடந்துகொண்டான்” என்று குழம்பிய தாத்தா மூவரையும் நோக்கிச் சற்று இங்கு வாருங்கள் என அழைத்தார்.
பதிலேதும் சொல்லாது தாத்தாவின் அருகில் சென்றனர் மூவரும்.
தமது இரு மகன்மாரையும் கவனித்துக் கொண்டிருந்த மாறனின் அப்பா ஏதோ பிரச்சனை என உணர்ந்து விரைவாக அவ்விடத்துக்கு வந்தார்.
டேவிட்டின் தாத்தா ரகுவைப் பார்த்து, “இவர்களுடன் ஐந்து நிமிடம் பேசலாமா?” என்றார் புன்னகையுடன்.
மாறனின் அப்பா ரகுவும் ஆம் என தலையசைத்தார்.
“பிள்ளைகளே இவை என்ன?” என்று கேட்டுக் கொண்டே ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்தை சுட்டிக் காட்டினார் தாத்தா.
தாத்தாவை மூவரும் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே “ஆ...டு..கள்” என்று இழுத்துச் சொன்னார்கள்.
“என்ன இது? புரியவில்லை...” என்றார் தாத்தா!
“ஆ...” என மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே “ஆடுகள்” என்றனர் உரத்த குரலில்.
“ம்..”
“நாங்கள் யாவரும் யார்?” என்றார் தாத்தா.
மாறன் உடனே “மனிதர்கள்” என்றான்.
டேவிட்டும், மறவனும் “ஆமாம் மனிதர்கள்” என்றனர்.
சிரித்துக் கொண்டே தாத்தா சொன்னார், “பிள்ளைகளே அவை ஆடுகள். நாம் தான் அதனைக் கறுப்பு, வெள்ளை என்றெல்லாம் பிரிக்கிறோம். அதற்குத் தெரியாது யார் கறுப்பு ? யார் வெள்ளையென? நாம் மனிதர்கள் பிறகு நமக்கு பெயர்கள் உண்டு. ஆனால் யாருமே கறுப்பு மனிதன், வெள்ளை மனிதன் என்று அழைப்பதில்லை. மிருகம்,பறவை,மனிதன் எல்லாம் இனம். பிறகு நாம் அவற்றுக்கு பெயர் இட்டு அழைக்கிறோம். டேவிட் அந்த ஆட்டைப்போல வெள்ளையுமில்லை, நீங்கள் இந்த ஆட்டைப்போல கறுப்புமில்லை. ஆனால் மனிதர்கள்” என்றார் தாத்தா.
“இப்போது யார் கறுப்பு ஆடு? யார் வெள்ளை ஆடு? யார் மனிதன்?” என்றார் தாத்தா.
மூவருமே தலைகுனிந்து கொண்டு தமது பெயர்களைச் சொன்னார்கள்.
“ஓ... இப்போது புரிகிறதா? அது சரி டேவிட் ஏன் இப்படி நடந்து கொண்டாய்” என்றார் தாத்தா வருத்தத்துடன்.
உடனே மாறன் டேவிட்டின் கைகளைப் பிடித்து சிரித்ததுக்கு “ஸாரி” என்றான்.
தாத்தாக்கு ஏதோ புரிந்தது.
மூவரும் ஓடிச்சென்று புல்லை இரு கைகளினாலும் இழுத்துப் பிடித்து பிடுங்கினர்.
மாறனின் தந்தை புன்னகையுடன் தாத்தாவைப் பார்த்தார்.
அப்போது “மே..மே...” என ஆடுகள் மூவரையும் அன்பாக அழைத்தன.