நான் பார்த்திருக்கிறேன் பெரிய யானை பக்கத்தில ஒரு குட்டியானை என்றான் நோவேல்.
எங்கள் பாட்டி தாத்தாவுடன் போன போது இவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்தேன் என்று இயன்றளவு தனது கைகளை நீண்டி காண்பித்தான் ஜீவன்...
இவர்களது உரையாடல்களை மாறிமாறிக் கண்களை உருட்டி உருட்டி கேட்டுக் கொண்டிந்தார்கள் ஏனைய பத்துச் சிறார்களும்.
தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சில பெரியவர்களும் புன்னகையோடு இவர்களை இரசிக்கத் தவறவில்லை.
தலையில் தொப்பியும், கண்களில் கறுப்பு நிறக்கண்ணாடியும், கழுத்தில் நூலில் கட்டிய ஒரு விசிலும்,தோளில் பையுமாக இவர்கள் அருகில் வந்தார் ஆசிரியை பாரதி.
கழுத்தில் தொங்கிய விசிலைத் தனது உதடுகளில் பொருத்தி அழுத்தி ஊதிய போது வெளிவந்த ஒலியில் தமது உரையாடல்களை நிறுத்திய யாவருமே ஆசிரியரை உற்று நோக்கினர்.
பிள்ளைகளே இப்போது நாம் "சூரிச்" என்ற நகரத்தில் உள்ள விலங்குகள் பூங்காவுக்குச் செல்லவிருக்கின்றோம். இது குறித்த தகவல் பள்ளியில் உங்களுக்கும் பெற்றோருக்கும் அறிவிக்கபட்டுவிட்டது. இதற்காக சூரிச் என்ற நகரை நோக்கிப் பயணிக்கும் தொடருந்தில் ஏறி அரைமணி நேரம் பயணம் செய்யப் போகின்றோம்.
எல்லோரும் உங்கள் தலையில் அணிந்துள்ள தொப்பி, கண்ணாடி, பை என்பவற்றைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
இருவராக சோடி சேருங்கள் என்றாள் ஆசிரியை...
இந்த ஒழுங்குவிதிகளுக்கு பழக்கப்பட்ட ஆண்டு ஒன்று மாணவர்கள் கண்மூடித் திறப்பதற்குள் இருவராகக் கைகோர்த்து ஒருவர் பின் ஒருவராக ஒழுங்கில் நின்றனர்.
பல கண்கள் ஆசியயையும், மாணவர்களையும் பெருமையுடன் நோக்கின...
நீண்ட இரும்புத் தண்டவாளங்களின் ஓரத்தில் நடப்பட்ட தூணில் பொருத்தப்பட்டிருந்த சிவப்புநிற விளக்கு எரியத் தொடங்கியது. தொடருந்து நிலையத்தில் நின்ற பயணிகள் தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கும் தொடருந்தை நோக்கியவாறு பயணத்துக்கு தயாராகினர்.
பாம்பு போல நீளமான தொடருந்து என்றாள் கவிதா. யாவரும் சிரித்துக் கொண்டே ஆசிரியை பாரதியின் அருகில் நின்றனர்.
ஓபர்கிளாட் தரிப்பிடத்தில் "கிரிச்" என்ற சத்தத்துடன் வந்து நின்றது பாம்பு போன்ற நீளமான தொடருந்து.
வண்டியில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்காக வழிவிட்டு பொறுமையாக காத்திருந்தனர் ஏற இருக்கின்ற பயணிகள்.
இறங்க வேண்டியவர்கள் இறங்கிய பின்னர் மிக ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக பயணிகள் வண்டியின் உள்ளே ஏறினர்.
ஆசிரியை பாரதி முதலில் வண்டியுனுள் ஏறினார்...
பின்னர் ஒவ்வொருவராக வண்டியுனுள் ஏறச் சொன்னார். ஏறிவரும் மாணவர்களைக் கவனித்தவாறே இருக்கைகளைச் சுட்டிக்காட்டி அமரச் சொன்னார்.
தொடருந்து மீண்டும் வேகமாக "சர்" என்று ஓடத்தொடங்கியது.
யாவரும் மகிழ்ச்சியுடன் கலகலக்கத் தொடங்கினர்.
ராதிகாவும், அமிரும் யன்னல் வழியாக ஓடிமறையும் மரங்களையும்,கட்டடங்களையும் இரசித்தனர்.
எவளினும், பீற்றரும் சிங்கம், கரடி குறித்துப் பேசினர்... நேரம் கடந்ததை மறந்திருந்தனர் யாவரும்.
அப்போது வண்டியுனுள் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் "இன்னும் சில நிமிடங்களில் வண்டி சூரிச் புகைவண்டி நிலையத் தரிப்பிடத்தினை நெருங்கிவிடுமென அறிவிக்கப்பட்டது.
ஆசிரியை பாரதி ஏனைய பயணிகளுக்குத் தொந்தரவு செய்யாதவாறு மீண்டும் கழுத்தில் தொங்கிய விசிலை மெல்ல ஊதினாள்...
பிள்ளைகளே !
உங்கள் பொருட்களை சரி பாருங்கள்....
இன்னும் சில நிமிடங்களில் இறங்கப் போகின்றோம். நான் முதலில் இறங்குவேன்...
பின்னர் ஒவ்வொருவராக இறங்கி வரவேண்டும்...
மீண்டும் இருவராகக் கைகளை கோர்த்து வரிசையாக நிற்கவேண்டும் என்றாள்.
யாவரும் புரிந்து கொண்டதன் அடையாளமாக வலது கையை மேலே உயர்த்தினர்.
இது இவர்களது வகுப்பறையில் கற்றுக் கொடுக்கப்பட்ட உடல்மொழி.
பொது இடங்களில் கோசம் இடாதவாறு தங்களது பதிலை இவ்வாறே அறிவிக்க வேண்டும்.
புரியாது விட்டால் ஆட்காட்டி விரலை உயர்த்திக் காண்பிக்க வேண்டும்.
மகிழ்ச்சியுடன் ஆசிரியை பாரதியும் வலது கையை மேலே உயர்த்தினார்.
பயணிகள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு அமைதியாக ஆசிரியை பாரதி இறங்கினார்.
படிப்படியாக மாணவர்களும் இறங்கி ஒரு ஓரமாக ஒழுங்காக நின்றனர்.
யாவரும் மிகச்சிறப்பாக நடந்து கொண்டீர்கள் "சூப்பர் " என மாணவர்களை உற்சாகப்படுத்திய ஆசிரியை "நன்றி " என்றார்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் உற்சாகமானார்கள்...
இங்கிருந்து ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும்...
இருவராகக் கைகோர்த்தவாறு நடைபாதையில் வலது புறமாக ஒருவர் பின் ஒருவராக நடக்க வேண்டும் என்றவர் நடுவே நடந்து செல்லும் மாணவர்களுடன் இணைந்து கொண்டார் ஆசிரியை பாரதி.
ஆ... அங்கே பார் விலங்குகள் பூங்கா என உற்சாகமானார்கள் மாணவர்கள்...
எல்லோரும் தம்மையறியாது வேகமாகவே நடந்தனர்.
விலங்குகள் பூங்கா வாயிலில் சிங்கம், புலி, யானை, மயில், குருவி, தென்னைமரம் பூச்செடிகள் என்பன அழகான வண்ண நிறத்தில் வரையப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.
பெரிய கதவின் அருகில் ஒரு அறிவிப்பு பலகை நாட்டப்பட்டிருந்தது.
அதனருகில் சிறிய ஒரு அறை ...
அங்கு ஒரு பெண் மேசையில் பொருத்தப்பட்டிருந்த கணினியுடன் காத்திருந்தார்.
வரிசையாகப் பெரியவர்களும் சிறியவர்களும் காத்திருந்தனர்.
ஆசிரியை பாரதியும் மாணவர்களுடன் வரிசையில் காத்திருந்தார்.
காலை பத்து மணி .
சூரியன் மெல்ல மெல்ல உச்சி வானை நோக்கி வந்து கொண்டிருந்தான். சிலர் தமது பையில் உள்ள தொப்பியை எடுத்து தலையில் அணிந்தனர். இன்னும் சிலர் சூரியக் கதிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பசைகளை எடுத்துக் கை, முகம் போன்றவற்றில் பூசினார்கள்.
மெல்ல மெல்லக் கூட்டம் நகரத்தொடங்கியது. இப்போது ஆசிரியை பாரதி அந்தப் பெண்னை நெருங்கிவிட்டார்.
மேசையின் ஓரத்தில் வெள்ளைநிற உலோகத்தகட்டில் எழுதப்பட்டிருந்த திருமதி.அலேக்ஸ் என்ற பெயரை கண்களால் கவனித்தவர்...
நாங்கள் ஓபர்கிளாட் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறியவாறே, தமது ஆசிரியை அடையாள அட்டையைக் காண்பித்தார்.
இருக்கையில் இருந்தவாறே உடலைச் சரித்து ஆசிரியையின் பின்னேயுள்ள மாணவர்களைப் பார்த்த திருமதி. அலேக்ஸ் புன்னகைத்தவாறே அடையாள அட்டையை வாங்கி கணினியில் ஏதோ பதிவு செய்தார்.
பின்பு விலங்குகள் பூங்கா குறித்த வழிகாட்டி வரைபடத்தைக் கைகளில் எடுத்தவர், “எத்தனை மாணவர்கள்?” என்றார் வரிசையில் உள்ளவர்களைக் கண்களால் நோட்டமிட்டவாறு...
பன்னிரண்டு மாணவர்கள்... மொத்தமாக பதின்மூன்று வரைபடங்களைத் தாருங்கள்... என்றார் ஆசிரியை.
வரைபடங்களைக் கொடுத்தபடியே "இன்றைய பொழுது மகிழ்ச்சியாக அமையட்டுமென வாழ்த்தியவாறு கைகளை அசைத்தாள் திருமதி. அலேக்ஸ்"
யாவரும் கைகளை அசைத்தவாறே, "உங்களுக்கும் மகிழ்ச்சியான பொழுதாக அமையட்டும்" என்றவாறு வரிசையை விட்டு நகர்ந்தனர்.
ஆசிரியை பாரதி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு மரத்தின் கீழே அமர்ந்தார். எல்லோரும் சற்று ஓய்வெடுங்கள் என்றவர் தனது பையில் உள்ள தண்ணீர்ப் போத்தலை எடுத்து கட கட என்று குடித்தார்.
மாணவர்களும் தமது பையிலுள்ள தண்ணீர் போத்தல்களை எடுத்துக் குடித்தனர்.
எல்லோருக்கும் ஒவ்வொரு வரைபடத்தைக் கொடுத்தவர் தனது வரைபடத்தை உற்று நோக்கினார்.
ஆசிரியை போலவே மாணவர்களும் உற்று நோக்கத் தொடங்கினர்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது அந்தச்சூழல்...
மீண்டும் விசிலை ஊதிய ஆசிரியை, மாணவர்களை நோக்கிப் பேசத்தொடங்கினார்.
இந்த வரைபடத்தில் அம்புக்குறி காட்டும் வழியே நாம் நுழைவாயினுள் செல்ல வேண்டும்.
முதலில் வலது புறமாக உள்ள ஆசிய நாட்டு மிருகங்களை பார்க்கப் போகிறோம்..
இங்கு யானை, சிங்கம், புலி, கரடி, மான், குரங்கு, பாம்பு... எல்லாமே உள்ளது.
ஆசிரியரின் விரல் தொட்ட இடத்தையும், தமது வரைபடத்தையும் மாறி மாறி யாவரும் பார்த்தனர்.
பின்பு கங்காரு...,அதன் பின் பாம்புகள்... என்றார் ஆசிரியை.
ஆ... மீன்கள் என்றான் குமார்.
ஆமாம்! என்றாள் ஆசிரியை.
பிறகு பறவைகள் என்றாள் லேனா...
பிறகு குதிரை, வரிக்குதிரை, கழுதை... என்றான் ஜீவன்.
ம்... ம்... ஆ... ஆடு, மாடு, கோழி... என்றாள் சமிரா.
மாணவர்களுக்கு வரைபடக்குறிப்பு புரிந்துவிட்டதென மகிழ்ந்தாள் ஆசிரியை.
பிறகு இடது புறமாக திரும்பி நடக்க வேண்டும் பிள்ளைகள்.
இங்கு சூடான நாட்டில் வளரும் மிருகங்கள், பறவைகள், மரங்கள் என்பவற்றைப் பார்க்கலாம்.
சூடான நாடு... என்று இழுத்தான் ஜோன்.
ஆமாம் ஜோன்.. இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா... போன்ற சூடான நாடுகளில் வளரும் தென்னைமரம், வாழைமரம், பூச்செடிகள், வண்ணக்கிளிகள் என்பன... என்றாள் ஆசிரியை.
இதன் பின்பு ஓய்வு எடுப்போம்.
மதிய உணவு உண்ட பின் நீரில் வாழும் உயிரினங்களை பார்ப்போம்..
பிறகு குளிர்களி (ஐஸ்கிறிம்) என்றான் லெவின்.
யாவரும் ஐஸ்கிறிம், ஐஸ்கிறிம் என்றனர் உற்சாகத்தோடு...
ஆசிரியை பாரதி சிரித்துக் கொண்டே வலது கையை மேலே உயர்த்தினார்.
ஆசிரியை தமது வேண்டுகோளை ஏற்றுவிட்டாரென மகிழ்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தமது வலது கைகையை உயர்த்தித் துள்ளினர்.
சிரித்துக் கொண்டே ஆசிரியை பாரதி முன்னே நடக்க, சிங்கம் போன்ற வீறுநடையுடன் மாணவர்கள் பின்தொடர்ந்தனர்.