இலைதுளிர் காலத்தின் இளஞ்சூரியன் போல குழவிப்பூங்காவில் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள் சிறார்கள். அரசபள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் உடல் உளநலம் கருதி நடாத்தப்படும் பள்ளிக்காப்பகமே இந்தக்குழவிப்பூங்கா.
இச்சிறார்களைப் பொறுத்தவரையில் கத்தரினா, பாரதி, அலெக்ஸ், கார்மன், டனியேலா எல்லோரும் அம்மாவைப் போன்று அன்புடைய ஆசிரியர்களே...
அதிகாலை ஏழுமணி முதல் மாலை ஏழுமணிவரை உணவு வழங்குவது, பள்ளிக்கு அனுப்புவது, வீட்டுப்பாடங்களுக்கு உதவி செய்வது, விளையாடுவது, நீந்தச்செல்வது, விளையாட்டுத்திடலுக்கு அழைத்துச் செல்வது என்று, நாளும் இவ்வாசிரியர்கள் கூடவே இருப்பார்கள். இதனால் தனிமையை உணராத குழவிகள் (பிள்ளைகள்) எப்போதுமே வட்டச்சூரியனாக மகிழ்ச்சியுடன் ஒளி வீசினார்கள்.
“பிள்ளைகளே..! இடைவேளை உணவை உண்டு முடித்தபின் யாவரும் மழைக்கான உடையை உடுத்துங்கள். நாங்கள் வெளியில் விளையாடப் போகிறோம்“ என்றாள் ஆண்டு மூன்று வகுப்பு மாணவர்களுக்கு பொறுப்பான ஆசிரியை பாரதி.
ஹையா... மழையில் நனையலாம் என்று யாவரும் ஒருமித்த குரலில் ஒலி எழுப்பினர். ஆனால் அல்பட் மட்டும் மகிழ்ச்சியின்றி இருண்ட வானம் போலச் சோகமாக இருந்தான்.
அவனருகிலிருந்த ஜஸ்மின் தட்டிலிருந்த ஆப்பிள் துண்டைக் கடித்தபடியே “உனக்கு மழையில் விளையாடப் பிடிக்காதா?” என்றாள்.
“இல்லை”யெனத் தலையைப் பக்கவாட்டில் அங்கும் இங்குமாக வேகமாக அசைத்தான் அல்பட்.
“ஏன்”” என்றாள் ஜஸ்மின்.
எனக்குப் பயமென்றான் அல்பட்....
“பயமா?” என்றவள் கலகல என்று சிரித்தாள்.
அவளது சிரிப்பைப் பார்த்த அல்பட் முகம் மேலும் வாடியது. கண்களுக்குள் குளமாக கண்ணீர் நிறைந்தது.
இதனைச் சட்டென பார்த்த ஜஸ்மின் அல்பட்டின் கைகளைப்பிடித்து “ஸாரி”என்றாள்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அல்பட் உதட்டை இழுத்து மெல்லச் சிரித்தான்.
“ஜஸ்மின்...” என்றான் அன்பாக அல்பட்...
அவன் பக்கம் முகத்தை திருப்பிய ஜஸ்மின் ”ம்” என்றாள்.
“எதுக்கு பயமென்று தெரியுமா?”
“ஐயோ...நான் கேட்கல்ல அல்பட். பிறகு நீ “உர்” என்று இருப்பாய்” எனத் தனது கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டி முகத்தை உர் என்று வைத்து அழகு காட்டிச் சிரித்தாள் ஜஸ்மின்.
அவளது நடிப்பைப் பார்த்த அல்பட் கலகல என்று வாய்விட்டேச் சிரித்தான்.
“டமார்,டமார் என்று வானத்தில் இடி இடிக்குமா?”
“ஆமாம்” என்றாள் ஜஸ்மின்.
“அப்போது பளிச் பளிச் என்று மின்னல் மின்னுமா?”
“ஆ...மா...ம்” என்றாள் பொறுமை இழந்த ஜஸ்மின்.
அதைப் பார்த்துப் பயமென்றான் அல்பட்.
“ஓ....என் தங்கை ரீட்டாக்கும் பயம். ஆனால் அவளுக்கு மூன்று வயது. உனக்கு எட்டு வயது. நீ பெரியவன்” எனத் தனது தலைக்குமேல் கையுயர்த்திக் காட்டினாள் ஜஸ்மின்.
“ம்ம்...எனக்கும் தெரியும்” என்று முறைத்துக் கொண்டே பதில் சொன்ன அல்பட்.
“என் பாட்டி எப்போதுமே தூங்கப்போகுமுன் கதை சொல்லுவார். ஒரு நாள் “சிங்கமும் மானும் “என்ற கதையொன்று சொன்னார். அந்தக் கதையை கேட்ட நாளிருந்தே எனக்கு மழையென்றால்பயம்” என்றான் அல்பட்.
சிங்கமும் மானும் கதையா என்றாள் ஆர்வத்துடன் ஜஸ்மின்.
“ம்...” என்ற அலப்ட்
“ஒருநாள் மழை சோ ... என்று பெய்துகொண்டிருந்தது. அவ்வப்போது இடி முழக்கம் காதைப்பிளந்தது. மின்னல் ஒளி கண்ணை மூடவைத்தது. காட்டுவிலங்குகள் எல்லாம் பயத்தில் அங்கும் இங்கும் பதுங்கி இருந்தன. ஆனால், ஒரு குகையிலிருந்த சிங்கத்துக்குப் பயங்கரப்பசி. மெல்லக் குகையை விட்டு வெளியே வந்தது. அங்குமிங்கும் பார்த்தது. தூரத்தில் ஒரு மானைக்கண்டது, மழையைப்பற்றிக் கவலையே படாது தனக்கு உணவு கிடைத்துவிட்டதென்ற மகிழ்ச்சியில் அந்த மான் மீது கண்வைத்துக் கொண்டே தொடர்ந்து மெல்லமெல்லச் சென்றது. அப்போது பெரிய அரக்கனைப்போலச் சத்தமிட்டுக் கொண்டு வானத்திலிருந்து வந்த இடி கண்மூடித் திறப்பதுக்குள் சிங்கத்தின் தலையில் டமார் என்று விழுந்ததாம். சிங்கம் அந்த இடத்திலேயே மலை போல சரிந்து விழுந்ததாம்”
அந்தக் கதையைக் கேட்ட நாளிருந்து எனக்கு இடியென்றால் பயமென்றான் அப்பாவியாக அல்பட்.
“நல்ல கதை... ஆனால் சிங்கம் பாவம்” என்றவள் சிறுவயதில் அம்மாவே தூங்க முன் கதைசொல்வார். இப்போது நானே கதை நூல்களை வாசிக்கிறேன் என்றாள் பெரியவளாக ஜஸ்மின்.
“நீ மழைபெய்யும் போது ஒருநாளும் வெளியில் சென்றதில்லையா?” என்றாள் ஜஸ்மின்.
“செல்வேன்... ஆனால் ரொம்ப ரொம்பப் பயமாக இருக்கும்” எனக் கண்களை உருட்டிப் பயம் காட்டினான் அல்பட்.
அப்போது இவர்கள் அருகில் வந்த ஆசிரியை பாரதி, “இருவரும் சாப்பிட்டு முடிக்காமல் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் குரல் உயர்த்தி.
ஆசிரியை திரும்பிப்பார்த்த ஜஸ்மின் அல்பட்டுக்கு மழைக்குப் பயமாம் என்றாள்.
“ஓ...அப்படியா?சின்ன வயதில் எனக்கும் பயம்” என்ற ஆசிரியை பாரதி “இப்போது இல்லை” என்றாள்.
“ஆ...” என வாயைப் பிளந்த அல்பட், “எதனால் இப்போது பயமில்லை?” என்றான்.
சிரித்துக் கொண்டே ஆசிரியை பாரதி வெளியில் போய்ப்பேசுவோம்...
இனி அல்பட்டுக்கும் மழைக்கு பயமே வராது என்றாள் வலது கையின் பெருவிரலை நிமிர்த்துக்காட்டி.
அல்பட்டுக்குள் ஏதோவொரு உற்சாகம். ஆசிரியை பாரதியும் என்னைப்போல சின்னவயதில் பயந்தாங்கோழிதான் என்று நினைத்தவன் மனதுக்குள் மகிழ்ந்தான்.
நானும் வளர்ந்து விட்டேனே இனிப் பயம் வராது என்று நினைத்துக்கொண்டு மழைக்கான உடை, தொப்பி, சப்பாத்து என்பவற்றை அணிவதற்கு ஓடினான்.
“பிள்ளைகளே...! யாவரும் தயாரா?” என்ற ஆசிரியை பாரதி, அமைதியாக வெளியே செல்லுங்களென்று கதவைத் திறந்துவிட்டாள். இறுதியாக வெளியே வந்தவள் யாவரையும் தனது அருகில்அழைத்து பேசத்தொடங்கினாள்.
பிள்ளைகளே வானத்தைப்பாருங்கள் !
“பாத்திரம் ஒன்றைக் கவிழ்த்து விட்டது போல இருக்கிறதல்லவா?”
யாவரும் தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தனர்.
“முகில்கள் எல்லாம் என்ன நிறத்தில்இருக்கிறது?” என்றாள்.
“கருமை நிறம்” என்றனர் ஒருமித்த குரலில்...
“ஆமாம் முகிலுக்குக் கூட சூரியனைத்தான் பிடிக்கும். மழைவந்தால் அதன் முகம் கருமையாக வாடிவிடும்” என்றாள் இளநகையுடன்.
“அதுபோலவே மழைவரப்போவதை சில உயிரினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடும் சக்தியும் வாய்ந்தவை” என்றாள்.
“எந்த உயிரினம்? என்று கேட்டான் லோறன்ஸ்.
“பல உயிரினங்கள் உள்ளன. அதில் ஆண்மயில் தோகை விரித்தாடுமாம். எருமை வானத்தைப் பார்த்து முக்காரமிடுமாம். நமது வீட்டிலுள்ள பூனை அடுப்பங்கரையில் பதுங்கி இருக்குமாம். பறவைகள் எல்லாம் வானத்தில் தாழ்வாகவே பறக்குமாம்” என்றாள் ஆசிரியை பாரதி.
மழையை யாருக்கெல்லாம் பிடிக்குமென்றாள்.
யாவருமே கைகளைத் தூக்கினர். ஆனால் அல்பட்டின் கைகள் மட்டும் உயரவேயில்லை.
சிரித்துக்கொண்டே தொடர்ந்தவள், “இந்த மரங்களைப் பாருங்கள்... பூச்செடிகளைப்பாருங்கள்... எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன, நன்றாகக் குளித்துப் பவுடர் பூசியது போல...”
“ஆமாம் ஆமாம்” என்றனர் மகிழ்ச்சியுடன்..
“இந்தப் பூமியுள்ள செடிகள் புல்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றவள், “அங்கே பாருங்கள்... தனது வீட்டைத் தூக்கிக்கொண்டு நத்தைகள் மெல்ல மெல்ல ஊர்வதை...”
“ஓ...!” என்றவர்கள் நத்தையை நோக்கி ஓடினார்கள்.
அவர்களுடன் கூடவேச் சென்றவள் ஊர்ந்து செல்லும் நத்தையினை உற்று நோக்கி மகிழும் சிறுவர்களை உற்று நோக்கினாள்.
அப்போது” டமார் “என்ற இடிமுழக்கம்... உடனே அல்பட் காதுகளைப்பொத்தி கண்களை மூடினான்.
மெல்ல அவன் தோளில் கைவைத்த ஆசிரியை பாரதி.
“அல்பட் இங்கு மரங்கள் இருக்கு... செடிகள் இருக்கு, உன் நண்பர்கள் நிற்கிறார்கள், குட்டி நத்தை கூட ஊர்ந்து செல்கிறது... இவர்கள் யாருமே பயப்படவில்லை... நீ பெரியவன்... ஏன் பயப்பிடுகிறாய்? என்றாள்.
“தலையில் விழுந்துவிடும்” என்றான் பயந்த குரலில்.
“அப்படி எதுவுமே நடக்காது அல்பட், எப்போதும் நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். அப்போது மனதில் உறுதி வரும். பயம் இடிபோல ஓடி மறைந்து விடும்” என்றாள்.
பெரியவனாகத் தலையை நிமிர்த்திய அல்பட், “நான் இனி நல்லதை மட்டுமே நினைப்பேன்” என்றான்.
அவனது தோள்களைத் தட்டிய ஆசிரியை பாரதி “குட்போய்” என்றாள்.
“ஆ.... அழகான மழைப்புழுவொன்று...” என்று கீச்சுட்டு கத்தினாள் ஸ்ரெலா..
கபி, குமார், லோறன்ஸ், சப்ரினா யாவரும் ஸ்ரெலா இருந்த திசையை நோக்கி ஓடினார்கள்.
அல்பட்டும் ஜஸ்மினும் மரத்தின் கிளைகளில் இருந்து வடியும் தண்ணீர்த்துளிகளை தமது கைகளில் ஏந்தி விளையாடினார்கள்.
மாறனும் சயனும் தண்ணீரினால் நிறைந்திருந்த சிறிய குட்டைகளில் கல்லெறிந்தும், குதித்தும் மகிழ்ந்தனர்.
மாணவர்களின் விளையாட்டினை உற்றுப்பார்த்து மகிழ்ந்தாள் ஆசிரியை பாரதி.
நேரம்போனதே தெரியாது. சிறார்கள் விளையாட்டில் ஒன்றித்து விட்டனர். அப்போது வானத்தில் இளநகையுடன் மாலைச்சூரியன் கருமேகங்களை துரத்திக்கொண்டு எட்டிப்பார்த்தான்.
அல்பட், “சூரியன்... சூரியன்” என்றான் உற்சாகமாக.
லோறன்ஸ் “சூரியனே வா வா... சூரியனே வா வா...” என்று பாட்டுப் பாடினான்.
அவன் குரலைக்கேட்ட யாவரும் தமது விளையாட்டுகளை விட்டுவிட்டு “சூரியனே வாவா” என்று ஒன்றாகக் குரல் எழுப்பிப் பாடினர். அவர்களது பாடலை இரசித்தபடியே வானத்தை நோக்கிய ஆசிரியை பாரதி “வானவில்” என்றாள்.
எல்லோரும் வாவ் என்று வானவில்லைக் கண்விரித்துப் பார்த்தனர்.
மீண்டும் லோறன்ஸ் ...
“ஏழுநிற வானவில்லே ஏழுகடல்தாண்டிவா... ஏழுநிறத்தில் எனக்கொரு சண்டை கொண்டுவா...” என்று உரக்கப் பாடினான்.
லோறன்ஸின் வார்த்தையை உற்று நோக்கிய நண்பர்கள் கூட்டாக சேர்ந்து மீண்டும் மீண்டும் பாடத்தொடங்கினர்.
“ஏழுநிற வானவில்லே ஏழுகடல் தாண்டிவா...
ஏழுநிறத்தில் எனக்கொரு சட்டை கொண்டுவா...”
சிரிந்துக்கொண்டே ஆசிரியை பாரதியும் சேர்ந்து பாடத் தொடங்கினாள்.
குழவிப்பூங்கா சிறுவர்களின் சிரிப்பினால் அதிர்ந்தது...