முகுந்தன் என்ற ஏழை விவசாயி இருந்தான். அவன் பிறந்ததிலிருந்தே பணக்கஷ்டத்தைத்தான் பார்த்து இருக்கிறான். அதனால் எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் கவனமாக சிக்கனத்துடன் வேலை செய்வான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கை மிக அதிகம்.
ஒவ்வொரு முறையும் சந்தைக்கு செல்லும் போது, அவன் ஊரில் உள்ள அரசமரத்துப் பிள்ளையாரிடம் தன் கஷ்டத்தைச் சொல்லிவிட்டுத்தான் செல்வான்.
இப்படியே பல நாட்கள் கடந்த நிலையில் ஒரு நாள் மனம் வெறுத்து அரசமரத்துப் பிள்ளையாரிடம் வந்து சத்தம் போட்டுக் கத்தினான்.
"ஏ கடவுளே எனக்கு விடியவே விடியாதா?. உன்னிடம் எத்தனை நாட்களாகப் புலம்பிக் கொண்டு இருக்கிறேன். உன் காதில் நான் சொல்வது எதுவும் விழவில்லையா?"
இதைக் கேட்ட பிள்ளையார் தீடீரென்று அவன் முன் தோன்றி உன் கஷ்டத்தைப் போக்க வந்துள்ளேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.
எனக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்பொழுதெல்லாம் நீங்கள் பணம் தரவேண்டும் என்று கேட்டான். உடனே பிள்ளையாரும் அப்படியே ஆகட்டும் என்றார்.
உடனே அவன் "எனக்கு இப்பொழுது ஒரு ஐயாயிரம் தேவை. தாருங்கள்" என்றான். உடனே அவரும் கொடுத்தார்.
அவனுக்குப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு வாரமாக தூக்கம் வரவில்லை.
அந்த ஊரில் ஆனந்தன் என்ற அயோக்யனும் உள்ளான். அவன் மக்களுக்கு நன்மை செய்வதைக் காட்டிலும் நிறைய தீமைகள் அதிகமாக செய்து கொண்டு இருந்தான்.
முகுந்தனுக்கு வரத்தினால் பணம் கிடைத்த விஷயம் ஆனந்தன் என்ற கெட்டவனுக்கும் தெரிந்து விட்டது.
அவனும் அரசமரத்துப் பிள்ளையாரிடம் வந்து மனமுருகி பிரார்த்தனை செய்தான். "எனக்கும் ஏதாவது வரம் கொடுங்கள்." என்று வேண்டினான்.
உடனேப் பிள்ளையாரும் அவன் முன்னே வந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்றார்.
அவனும் "எனக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்பொழுதெல்லாம் நீங்கள் பணம் தர வேண்டும்" என்று முகுந்தனைப் போலவே கேட்டான். பிள்ளையாரும் "சரி" என்றார்.
"எனக்கு இப்பொழுது ஒரு பத்தாயிரம் ரூபாய் தேவை தாருங்கள்" என்றான் அவன். உடனே அவரும் கொடுத்தார்.
ஆன்ந்தன் அந்தப் பணத்தைத் தாராளமாக செலவு செய்தான். ஒரு கட்டத்தில் இவன் கேட்க கேட்கப் பிள்ளையாரும் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இந்த விஷயம் முகுந்தனுக்கு தெரிந்து விட்டது. அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இது நாம் இவ்வளவு நல்லவனாக இருக்கிறோம். நமக்கு கடவுள் வெறும் ஐயாயிரத்தை கொடுத்துட்டு பேசாம இருந்துட்டாரு. ஆனா ஆனந்தனுக்கு மட்டும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறாரு. இதை இப்படியே விட்டா நமக்கு ஒரு பணமும் இனிமே கிடைக்காது. உடனே பிள்ளையாரைப் பார்த்து ஒரு பிடி பிடிக்கணும் என்று சொல்லி அரசமரத்தடிக்குப் போனான்.
சத்தம் போட்டுக் கடவுளைக் கூப்பிட்டான். அவன் முன் பிள்ளையார் தோன்றினார்.
"ஏ கடவுளே நீ செய்யறது நியாயமா? ஆனந்தன் எவ்வளவு கெட்டவன். ஆனால் அவனுக்கு வாரிவாரிப் பணத்தைக் கொடுக்கிறாய். நான் எவ்வளவு நல்லவன். எனக்கு ஒரு நாள் கொடுத்ததோட சரி. அதுக்கப்புறம் நீ கொடுக்கவே இல்லை." என்றான்.
அதற்குப் பிள்ளையார், "ஏ முட்டாளே! முதலில் கொடுத்த பணத்தையே உனக்கு சரியானபடி செலவு செய்ய தெரியவில்லை. உனக்கு எப்படி மேற்கொண்டு கொடுக்கிறது?. ஆனா அவன் கெட்டவனா இருந்தாலும் அவன் கேட்கக்கேட்க நான் கொடுத்ததால் அவன் மனம் மாறி இப்போது மக்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிச்சுட்டான்."
முகுந்தன் பேசாமல் இருந்தான்.
பிள்ளையாரும் "இப்பவாவது புரிஞ்சுக்கோ. வாழ்க்கையில் கெட்டவனாகி விட்டவன் அப்படியே கெட்டவனாக இருப்பதில்லை. எப்படி கிணத்தில தண்ணீர் எடுக்க எடுக்க ஊருவது போல் பணத்தைப் பெறுகிறோமோ அதை நல்வழியில் செலவு செய்ய வேண்டும். நமக்குக் கிடைத்தது போதும் என்று உன்னைப் போல் அதைப் பயன்படுத்தாமல் இருக்கவும் கூடாது." என்றார்.
கதையின் நீதி:
பணம் அதிகமாகச் சேர்த்தால் தேவைக்கு ஏற்ப நல்வழியில் செலவு செய்யனும். இல்லை என்றால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்கிற மனத்துடன் இருந்த மனநிம்மதியும் போய்விடும். அதே போல் பொருளை அளவுக்கு அதிகமாக சேர்த்தால் அதற்கு மதிப்பும் போய் குப்பையாகி விடும்.