சலசலவென்று ஒரே சத்தமாக இருந்தது. சில இடங்களில் இரகசிய வாக்குப் பதிவு போல இருந்தது. யாருடைய கருத்துக்குச் செவி சாய்ப்பது என்ற குழப்பத்தில் சலசலப்பு நீண்டது.
ஆமா நீங்க எல்லாம் என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க? உங்களிடம் கட்டுரை எழுதச் சொல்லி அரை மணி நேரம் ஆகுது. என்னப் பண்றீங்க.
எங்கும் மயான அமைதி.
அந்த அமைதியை விரும்பாத அரசி எழுந்தது. வணக்கம் அரசனே. நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வதென்று கட்டுரை எழுதச் சொன்னீர்கள். ஆனால் அப்படி நிகழ வாய்ப்புள்ளதா அரசனே?
ஏன் வாய்ப்பில்லை. காற்றில்லாத இடமாக மாற இந்த மக்களே போதும். உன்னையும் என்னையும் மறந்தவர்கள். நம் பகைவர்களை ஆரத்தழுவ நினைப்பவர்கள். பகைவரின் மூலம் தீமை நிகழ்வதை உணராதவர்கள். அப்படி இருக்கும் போது பற்றாக்குறை நிகழ ஏன் வாய்ப்பில்லை.
அதெல்லாம் சரி அரசனே. அப்படி பற்றாக்குறை நிகழ்ந்தால் நம்மைத் தேடி மக்கள் வருவார்கள்தானே?
நிச்சயம் வந்துதானே ஆக வேண்டும். அவர்கள் சந்தோசமாக இருக்க என்னெல்லாமோ கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டிபிடித்தவன் தம்மை இழக்கிறான் அல்லது அழிக்கிறான்.
அதோடு மட்டுமா அரசே! தற்கொலையும் செய்து கொள்கிறான். ஆமாம் அரசனே .இதெல்லாம் எப்படி சரி செய்வது என்று யோசித்து மக்களிடையே நேரடிக் கருத்துகணிப்பு நிகழ்த்தலாமா?
வேண்டாம் அரசியே. நாம் போவதை விட அவர்களே நம்மைத் தேடி வரவேண்டும்.
எப்படி சாத்தியம் அரசே?
கட்டுரை எழுதுவதை விட, நாமே நேரில் போய்ப் பார்க்கலாமா அரசே?
அதற்கு முன்பு நாம் ஒன்று செய்ய வேண்டும். எல்லோருக்கும் நான் அரசன் என்பதால் நம்மைச் சார்ந்த அனைவரையும் முதலில் சந்திப்போம். பாதிபேர் இங்கேதான் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
இதைக் கேட்ட மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அரை மணி நேரத்தில் அனைவரும் அரசன் அரசி முன்பு வந்து சேந்தார்கள்.
தாங்கள் அனைவருக்கும் சொல்லப்படுவது என்னவென்றால் இன்னும் அரை மணி நேரத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை நாம் ஏற்படுத்த வேண்டும். நானும் அரசியும் மட்டும் இந்த முடிவை எடுக்க முடியாது. தங்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்கே இந்தச் சந்திப்புக் கூட்டம். உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
அரசே தாங்கள் மேற்கொண்டுள்ளது நல்ல முடிவா? இதனால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? குழந்தைகள் நிலை என்னாவது? வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் எல்லோரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வருமே!
தெரிந்ததுதான் நண்பர்களே! ஆனால், அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்பமும் உச்ச நிலையைத் தொட்டு மக்கள் இன்பத்தை அனுபவிக்கிறேன் என்ற மாயையில் நம்மை மறந்துவிட்டார்கள். அதோடு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்மைப் பேணி வளர்க்கவும் தவறிவிட்டார்கள். அழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையை மக்களுக்குப் புரியவைக்க வேண்டியது நமது கடமை.
அரசனின் பேச்சில் உண்மை உள்ளதை மற்றவர்கள் புரிந்து கொண்டு தலையாட்டினார்கள்.
அரை மணி நேரம் ஆக்சிஜன் இல்லாத உலகமாக மாற்றப் போகிறோம். அதனால் நீங்கள் அனைவரும் மக்களையும், மற்ற உயிரினங்களையும் பார்வையிடுங்கள். நீங்கள் பார்வையிடுவது யாருக்கும் தெரியக் கூடாது. யார் தாங்க முடியாமல் திணறுகிறார்களோ தங்களைக் காப்பாற்ற வேண்டுமென நம்மைத் தேடுகிறார்களோ அவர்களை இங்கே அனுப்பி வையுங்கள்.
சரிங்க அரசே.
அரசனும் அரசியும் தவிர மற்ற எல்லோரும் கிளம்ப ஆயத்தாமானார்கள்.
கிளம்பியவர்கள் கொஞ்ச நேரத்தில் காற்றின் செயல்பாட்டைக் குறைக்க ஆரம்பித்தார்கள்.
சில நொடிகளில் ஒரு வீடு, இரண்டு வீடு, மூன்று வீடு, நான்கு, பத்து, நூறு, ஆயிரம்… கோடி என்று இப்படியேக் காற்றின் பற்றாக்குறையினால் மக்கள் ஸ்தம்பித்தனர்.
என்ன காற்று குறைகிறது. ஜன்னல் இருந்த வீடுகளில் ஜன்னல் திறக்கப்பட்டது. சில வீடுகளில் வெளியே வந்தார்கள். மொட்டை மாடிக்குப் போனார்கள். இந்த நிலையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள் . வயதானவர்கள் மயங்க ஆரம்பித்தார்கள்.
காற்றில்லாமல் சுவாசிக்கச் சிரமப்பட்டார்கள். தொடர்ந்து மரங்களைத் தேடி ஓடினார்கள். ஆனால் அவர்கள் கண்ணில் பட்டது எல்லாமே பகைவர்கள்தான். அதனால் எந்தப் பயனும் இல்லை. உலகத்தின் கருவை அழித்துவிடும் போலிருக்கே!
கருவேலம் சிரித்தது. மக்கள் அழுதனர். அட முட்டாள்களே என்னையும் அழிக்கமாட்டீர்கள். மழை தரும் மரங்களையும் வளர்க்கவும் மாட்டீர்கள்.
மரம், செடி, கொடிகள் அசைவில்லை. என்ன செய்வது? பலர் மயங்கும் நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் அப்போதுதான் இயற்கையை நினைத்தார்கள்.
இயற்கை அன்னையே எங்கள் விழி மூடியே இருந்துவிட்டது. இயற்கையை மறந்துவிட்டோம். நாங்கள் மரணத்தின் பிடியில் நிற்கிறோம். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். மூச்சுத்திணறல்கள், ஏக்கங்கள் போன்றவைகள் நிகழ, அப்போது அரசனின் உறவினர்கள், நீங்கள் அனைவரும் அரசன் அரசியிடம் செல்லுங்கள். உங்களின் உயிர் மூச்சு அங்கேதான் உள்ளது என்று கூறினார்கள்.
மக்கள் கூட்டம் கூட்டமாக உயிர் மூச்சின் நாதத்தை நோக்கி ஓடினார்கள்.
அரசனும் அரசியும் தம் முன் வந்த மக்களை நோக்கி ,சொல்லுங்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு? என்று கேட்டனர்.
அரசனே நாங்கள் சுவாசிக்கப் போதுமான அளவு காற்றில்லாமல் சாவின் தருவாயில் நிற்கிறோம். எங்களுக்குக் காற்று உடனடியாக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.
எழுநூறு கோடி மக்கள் இருக்கிறீர்கள் . பிற உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் எங்களைப் பன்மடங்கு அழித்துவிட்டீர்கள். அதோடு இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வருகிறீர்கள். உங்களில் ஐம்பது விழுக்காட்டினருக்கு மட்டும்தான் இப்போது உயிர் மூச்சாகிய காற்று கிடைக்கும். மற்றவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.
எந்தப் பகுதியினருக்கு உயிர் மூச்சு வேண்டும் என்பதை முடிவு பண்ணுங்க. ஆனா அவங்க பகைவர்களை அழித்தவர்களாகவும், எங்களை அதிகம் வளர்த்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசன் அரசியின் முழுப் பயனைப் பிறருக்குக் கூறியவர்களாகவும் இருக்க வேண்டும்.
நான் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜனைக் கொடுப்பேன். யாருக்கும் தீங்கு செய்யமாட்டேன். அதிகப் பயன்களைத் தருவேன். மனித உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பேன். முக்கியமா மன அமைதியைத் தருவேன். புத்தர் ஞானம் பெற்றது கூட என்னால்தான். அதிகமாக மழையைத் தரும் உயர்ந்த மரமாக விளங்கும் அரசமரத்தை அரசனாக பாவிப்பதுப் பற்றி கூறி இருக்க வேண்டும்.
இப்படியே அரசி வேம்புவும் தன்னைப் பற்றியும் தன் பயன்களைப் பற்றியும் கூறியது. தொடர்ந்து மற்ற மரங்களும் பேசின.
அங்கிருந்தவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் கேடு விளைவித்தவர்களாக இருந்தார்கள்.
அரசனிடம் இனி எங்க உயிர் மூச்சாக இருக்கும் உங்களைப் புறக்கணிக்க மாட்டோம். இந்த முறை மட்டும் எங்களுக்கு ஆக்சிஜனைக் கொடுங்கள். அனைவரும் மன்றாடிக் கேட்டார்கள்.
உங்களுக்கு உடனடியாகச் சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகிறோம். ஆனால், ஒவ்வொரு வருடமும் உங்களை இது போலத்தான் பரிசோதிப்போம். இனி எங்களைப் பாதுகாப்பவரே வாழ்வார்கள். தவறியவர்களுக்கு ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சொன்னது.
அரசனும் அரசியும் அவர்களது பிள்ளைகளும் செயல்பட ஆரம்பித்தார்கள்.
ஜனனி தான் கண்ட கனவிலிருந்து விழித்து எழுந்தாள்.
தான் கண்ட கனவு, மரங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் வர வேண்டும். அதன் பிறகாவது, அவர்கள் அனைவரும் திருந்த வேண்டும்... என்று நினைத்துக் கொண்டாள்.