எத்தனை தடவை சொல்லுறது மண்ணைக் கொழச்சி முட்டு மாதிரி வைக்காதேன்னு. உன்னையச் சொல்லி குத்தம் இல்லை என்று புலம்பிக் கொண்டு மண்ணை சரி செய்து கொண்டிருந்தான் கந்தசாமி,
பொங்கலுக்குத்தான் வியபாரம் ஓடும் . மத்த நாள்ல ஒன்னுரெண்டு விக்கிறதே செரமம். நம்மளைப் போல உள்ள சனங்களுக்கு மண்ணுதானே சோறு போடுது.
கந்தசாமியின் புலம்பல்கள் நியாயமானதாகப்பட்டாலும், இந்த வேலைகளைச் செய்வது குறித்து வருத்தப்பட்டான் சேகர்.
என்னடா யோசனைல இருக்க? பொங்கலுக்குக் கொஞ்ச நாள் தான் இருக்கு. கொற சொன்னத நெனச்சிகிட்டு வேலைல கவனம் இல்லாம இருந்தா நாலு காச பாக்க முடியாது. இருக்குறப் பானைகளை எடுத்துட்டுப் போறேன். மண்ணைப் பதமாக் கொழச்சி வையி. சொன்னவன் பானைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
கந்தசாமி கிளம்பியதும் வீட்டுக்குள் வந்த சேகர் சட்டியில் சோத்தைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தான். எத்தனைப் பானைகள் செஞ்சாலும் வீட்டுக்குன்னு சோறு, கொளம்பு ஆக்க ரெண்டு மூணு சட்டிகளைத் தவிர எதுவும் இல்லை.
படிக்க வைக்க செலவாகுது. இதுல செய்யுற எல்லாத்தையும் வீட்டுக்கு வச்சுகிட்டா நல்லாவா இருக்குமுனு வாய அடைச்சிப்புடுவாரு. வீடான வீட்டுல மண்சட்டியைத் தவிர எதுவுமில்லை.
யோசனையில் இருந்து மீண்டவன் அப்பா வருவதற்குள் மண்ணைக் குழைக்கச் சென்றான்.
அய்யா ரெண்டு ரூபாய் சேர்த்துக் கொடுங்கையா. இதுல எங்களுக்கு எந்த லாபமும் இல்லங்கைய்யா.
பதினைஞ்சு ரூபாயே அதிகம் பெரியவரே. ஏதோ கலாச்சாரம் பாரம்பரியமுனு சொல்லுறாங்க. அதான் வாங்க வந்தேன். பட்டுனு கீழ விழுந்தா எந்தப் பலனும் இல்லை.
அய்யா மண்சட்டி நம்ம உசிருங்கய்யா. நம்ம புள்ளயப் பார்த்துக்குறது போல பார்த்துக்கிட்டா எத்தன வருசமுனாலும் தாங்குங்கய்யா.
நல்லாப் பேசுறீங்க பெரியவரே. இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் வாங்குறா? ஏதோ நாளு கிழமைன்னாதான் தேவைப்படுது. அப்புறமா இதை யாருக்காவது கொடுக்க வேண்டியதுதான்.
என்னைய்யா இப்படிச் சொல்றீங்க! மண் பானை, மண்சட்டியில சோறாக்கலாம்; கொழம்பு வக்கலாம் குடிக்க தண்ணி வச்சுக்கலாம். இதனால எந்தக் கெடுதலும் உடம்புக்கு வராது. பொங்கலுக்குப் பெறகும் இது பயன்படும். இதை யாருக்காவது கொடுத்துடுவேன்னு சொல்றீங்களே?
ரெண்டு ரூவா சேர்த்துகூட வேணாங்கய்யா. இதை நீங்க எடுத்துட்டுப் போங்க. ஆனா தினமும் பொலக்கத்துல வச்சுக்கங்க என்று பானையை எடுத்துக் கொடுத்தான்.
மனுசன் இன்னைக்கு இருந்தா நாளைக்கு இல்லை. இதுல இந்த மண்பானையைத் துச்சமா பேசுறோம் என்று யோசித்தபடி பக்கத்தில் இருந்த கம்பங்கூழ் வண்டியை நோக்கிச் சென்றான் கந்தசாமி.
ஒரு சொம்பு கொடுங்க என்று கூழை வாங்கிக் குடித்ததும், வயிற்றுக்குள் சென்ற கூழ் குளுமையைக் கொடுத்தது.
கூழைக் குடித்தவன் நடந்து வந்துகொண்டிருந்தான். பாதையில் கூட்டமாக இருந்ததைக் கண்டு கூட்டத்திற்குள் சென்றான். கீழே ஒருவன் விழுந்து கிடந்ததைப் பார்த்துச் சுற்றியிருந்தவர்கள் பரிதாபப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கந்தசாமிக்கு அடையாளம் தெரிந்தது.
அய்யோ! கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நம்மகிட்டப் பானை வாங்கினாரே. இவரு இப்பதான் என்னோட வியாபாரம் பண்ணாரு. யாராவது குடிக்கத் தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வாங்க என்று சொன்னான்.
இவரு மயக்கம் போட்டு விழுந்தவுடன் தண்ணி கொண்டு வர ஒருத்தர் போனாருன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதேத் தண்ணி வந்தது.
முகம் முழுக்கத் தண்ணியைத் தெளித்து, வாயில் கொஞ்சம் ஊற்றவும் மயக்கம் போட்டவர் எழுந்து உட்காந்தார்.
மயக்கம் போட்டவர் கண்களைத் திறக்கவும், அவருக்கு முன்பாக இருந்த கந்தசாமியும், அவனிடம் வாங்கியப் பானையும் அவருக்கு உயிர் தந்த தெய்வமாகத் தெரிந்தது