காலை பத்து மணிக்கே ஆபீஸ் பரபரப்பாக இருந்தது. உள்ளே நுழைந்த ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்றும் இல்லாமல் என்னய்யா ஒரே பதட்டம் பியூனிடம் கேட்டான் ராகவன்.
சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா? நம்ம ஆபீசுக்கு இன்னையிலிருந்து புது மேனேஜர் வருகிறாராம்.
என்னையா சொல்ற!
ஆமா சார்,
நேத்து வர எந்தத் தகவலும் வரலை. இன்னைக்கு எப்படித் தெரிஞ்சுது? காலையில் தான் சார் போன் வந்துச்சு. சொல்லிவிட்டுப் போய்விட்டான் பியூன் மணி.
என் போதாக்காலம் நான் எந்த பைலையும் இன்னும் சரியா முடிச்சு வைக்கல. என்ன பண்றது. வர மேனேஜர் எப்படின்னு தெரியலையே. கடவுளே இது என்னப்பா புது சோதனை என்று ராகவன் மனதிற்குள் புலம்பினான். இவனைப் போலவேப் பலரும் பயத்தில்தான் இருந்தார்கள்.
எல்லாரும் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கமலன், இதுவரைக்கும் ஓ.பி. அடிச்சோம்.இனிமேல் அப்படி இருக்க முடியாது.
மாதச் சம்பளம் வாங்குறதுல மட்டும் கரக்டா இருந்தோம். இனிமேல் அப்படி இருக்க முடியுமா? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ரவி.
அந்த அலுவலகத்தில் நேர்மையானவனாக ஜீவன் இருந்தான். ஆபீஸ் வேலையைச் சரிவர செய்து முடிப்பவன். தன்னுடைய வேலைகளில் கவனமாக இருப்பான். இதைப் பிடிக்காதவர்கள் சிலர் உண்டு. ஆனால் இவனுடைய நேர்மை, உழைப்பு ராகவனுக்குப் பிடிக்கும். ஜீவனைப் போலவே தானும் ஒரு நேர்மையாளனாகவும், உழைப்பாளானாகாவும் இருக்க வேண்டும் என்று பல நேரம் நினைத்தாலும் முடிவதில்லை அவனுக்கு.
முன்னாடி இருந்த மேனேஜருக்கு ஜீவனைத் தவிர மற்ற எல்லோரையும் பிடிக்கும். அடிக்கடி அவனைத் திட்டியிருக்கிறார். ஏன்யா இப்படி இருக்க? உனக்கும் குடும்பம் பிள்ளைங்கன்னு இருக்காங்க. அவங்க உன் நினைவுல வர மாட்டாங்களா? எல்லாரும் எப்படி இருக்காங்க பாரு. நீ மட்டும் எப்பப் பார்த்தாலும் பைலு, ஒர்க்குன்னு இருக்க. யாராவது லஞ்சம் கொடுத்தாலும் வாங்க மாட்டேங்குற! என்னமோ போய்யா நீ இப்படியே இருந்தா உன் பொண்டாட்டி பிள்ளைங்கள எப்படிக் கரையேத்தப் போற. இப்படிப் பல நாள் திட்டித் தீர்த்திருக்கார்.
இதுக்கெல்லாம் நான் சளைக்க மாட்டேன் என்று மனதில் நினைத்துக் கொள்வான் ஜீவன். ஆனால் வெளிக்காட்டியது இல்லை.
ஆபீசுல இருந்தாலும் தன்னுடைய வீட்டில் இருந்தது போலவே எல்லாரும் இருந்தார்கள். மேனேஜர் திடீர் என்று மாற்றப்படுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. அவரவர் இருக்கையில் அமராமல் கூடிக்கூடிப் பேசியபடியே இருந்தனர்.
ராகவன் தன்னுடைய இடத்தை விட்டு எழுந்து வந்தான். என்ன ஜீவன் சார் ஆபீசே கலங்கி நிக்குது. நீங்க என்னடான்னா வழக்கம் போல உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க.
என்ன சார் பண்றது? எது எப்படி இருந்தாலும் என் வேலையை நான் மட்டும்தான் பார்க்கமுடியும் என்று சொல்லியவனை, டீ சாப்பிடக் கூப்பிட்டான்.
வேண்டாம் சார், இன்னும் கொஞ்ச நேரத்துல புது மேனேஜர் வந்துடுவாரு. அவரு வர நேரத்துல நாம இல்லாம இருந்தா நல்லா இருக்காது என்றான்.
சரி,சரி ஜீவன், இருங்க நான் பியூனைக் கூப்பிடுறேன் என்றவன் டெலிபோன் மணிஅடிக்க அருகில் நின்றவன் அதை எடுத்தான். ஹலோ சொன்னவனுக்கு எதிர் முனையில், ஹலோ இன்னும் அரைமணி நேரத்தில் ஆபீசுக்கு மேனேஜர் வந்திடுவார் என்றவன் தன்னைப் பற்றிச் சொல்லாமலே போனை வைத்தான்.
எல்லாரும் கவனிங்க இன்னும் அரைமணி நேரத்தில் மேனேஜர் வராராம் என்றான் ராகவன்.
எல்லா இடமும் சுத்தமாக இருக்கான்னு பியூன் பார்த்தான். சார் எல்லாரும் கேட்டுக்கங்க,வர்றவரு எப்படின்னு தெரியாது. அதனால எல்லோர் இடத்தையும் க்ளீனா வச்சுக்கங்க. எல்லாம் சரியா இல்லைன்னாலும் என்னன்ன பைல் எந்தெந்த டேபிளுக்குரியதுன்னு நினைவு வச்சுக்கங்க என்றான்.
இதுவரை புது மேனேஜர் பற்றிப் பேசின அனைவருக்கும் பியூன் சொன்னவுடன்தான் ஞாபகம் வந்தது. எதெது தனக்குரிய பைல் என்று பார்க்க முற்பட்டனர்.
வெளியில் ஹாரன் சத்தம் கேட்டது. அனைவரும் வாசலுக்கு வந்தார்கள் . காரில் இருந்து இறங்கிய மேனேஜருக்கு எல்லோரும் வணக்கம் சொன்னார்கள்.
சார், நீங்க திடீருனு வந்ததனால எந்த ஏற்பாடும் எங்களாலத் தடபுடலாப் பண்ணமுடியல என்று சீனியரான ஒருவர் பேசினார். அனைவரும் கை கொடுத்தார்கள். ஜீவன், ராகவன் உள்பட அனைவரும் கொடுத்தார்கள்.
எல்லார் மனசிலும் அப்பாடா கைக்கொடுத்தாச்சு. உள்ள போய் சீட்ல உட்கார்ந்துடுவார்னு நினைத்தனர். ஆனால் நடக்கப் போவதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
எல்லாருக்கும் இன்னும் அரைமணி நேரத்தில் மீட்டிங் இருக்கு. உங்களை அறிமுகம் செய்து, பிறகுஉங்களின் வொர்க் பற்றிப் பேசணும், அதனால அரைமணி நேரம் கழித்து எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வந்திடுங்க என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் நுழைந்தார்.
இறைவனை வணங்கினார். தன் மேஜை மீது இருந்த எல்லாப் பைல்களையும் பார்த்தார். மணியை அழுத்தினார்.
பியூன் மணி வந்து நின்றான்.
மிஸ்டர் ரவியைக் கூப்பிடுங்க என்றார்.
பியூன் வெளியில் வந்து ரவி சார் உங்களை மேனேஜர் சார் கூப்பிடுகிறார்.
அனைவருக்கும் பயம், என்னடா வந்ததும் வராததுமா ரவியைக் கூப்பிடுறார். இவன் ஏதாவது உளறப் போறான் என்று எண்ணினார்கள்.
மேனேஜர் ரூமுக்குள் எக்ஸ்கியூஸ்மி சார் என்று கேட்டுவிட்டு ரவி உள்ளே போனான்.
குட்மார்னிங் சார் என்றவனுக்கு மார்னிங் மார்னிங் வாங்க ரவி சார் என்று வரவேற்பு பலமாக இருந்தது.
என்ன சார் எல்லாரும் ரொம்ப சின்சியரா இருக்கீங்க போல,டேபிள் மேல பைல் எல்லாம் சரியா இருந்ததா, தலைகீழா அடுக்கி இருக்கீங்க. இனி வேலை செய்யணும் என்ற பதட்டமா? சரி போங்க இனிமேலாவது எல்லாரும் சரியா இருக்க முயற்சி பண்ணுங்க,போங்க சார்.
ரவி தன் மனசிற்குள் இனிமேல் இதுபோல் தவறாக வைப்பதைத் தவிர்க்கணும் என்று எண்ணினான். மேனேஜர் என்னப் பேசினார் என்பதை வெளியில் வந்த ரவி, யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. மண்டைக் குடைச்சலாக இருந்தது அனைவருக்கும்.
அடுத்த மணியைஅழுத்தினார். வந்த பியூனிடம் அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச் சொல்லுங்க நான் பத்து நிமிசத்தில் வந்திடுவேன் என்றார்.
வெளியில் வந்து எல்லாரிடமும் செய்தியைச் சொன்ன பியூன், மீட்டிங் ஹாலை பார்த்தான். தன்னால் முடிஞ்ச அளவு தூய்மைப்படுத்தினான்.
இருந்த அந்த பத்து நிமிஷத்திற்குள் எல்லாரும் அமர்ந்தார்கள். முன்பு இருந்த மேனேஜர் இந்த மீட்டிங் ஹாலில் அடிக்கடி மீட்டிங் போட்டதில்லை. ஆனால் இன்று வந்தவுடன் மீட்டிங்கா என்று எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.
தண்ணீர் அனைவருக்கும் வைக்கப்பட்டது. மைக் ரெடி பண்ணினான் பியூன். மீட்டிங் தயாரானதைச் சொல்லப் போன அட்டண்டர் பாதியிலே நின்றான். எதிரில் மேனேஜர் வந்தார்.
மீட்டிங் ஹாலுக்குள் உள்ளே நுழைந்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
மேனேஜர் அனைவருக்கும் வணக்கம் சொன்னார், பதிலுக்கு அனைவரும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தனர். அனைவரின் முகத்திலும் கலவரம். ஜீவனின் முகத்தைப் பார்த்தார். தெளிந்த நீரோடை போல அமைதியாக இருந்தது.
பியூனை அருகில் அழைத்தார்.
சொல்லுங்க சார்?
வெளியில் உள்ள காரில் ஸ்வீட், மாலை, பொன்னாடை இருக்கு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வாங்க .
சரிங்க சார் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்த பியூன் காரில் இருந்த அனைத்தையும் மீட்டிங் ஹாலுக்கு எடுத்து வந்தான். மேனேஜர் அருகில் வந்துஅனைத்தையும் கொடுத்தான்.
என்ன எல்லாரும் ஆச்சரியமாய்ப் பார்க்குறீங்க! என்னடா திடீர்னு மேனேஜர் மாற்றப்பட்டுவிட்டார் என்றுதானே பார்க்குறீங்க.
அது ஒன்னுமில்லை. தனியார் நிறுவனங்களுக்குச் சமமா நம்ம அரசாங்க நிறுவனமும் நடக்கணும்னு, திறனாய்வுக் குழுவால் அமைக்கப்பட்டிருக்கிற இருபது பேர் கொண்ட டீம் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற அரசாங்க அலுவலகங்களுக்குப் போய், திறமையாகவும், திறமையில்லாமலும் இருக்கிறவங்களைக் கண்டுபிடிச்சு அவர்களைக் கௌரவிக்கிற பணியை மேற்கொண்டு இருக்கு.
நேற்றுவரை உங்க அலுவலகத்தில் இருந்தமேனேஜர் மிஸ்டர் கிரி இப்ப வீட்ல இருக்கார்.
எல்லாருக்கும் ஒரேஅதிர்ச்சி. என்ன சார் சொல்றீங்க. என்று ராகவன் தைரியமாகக் கேட்டான்.
ஓ, ராகவனா என்றவர், உங்களைப் போன்ற பலரை நிர்வகிக்க அவரை நாங்க மேனேஜராக இங்க அனுப்பல. நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு அவருடைய பங்குஅதிகம் இருக்கணும். உங்களையும் வழி நடத்தி,வேலையைத் திறமையா வாங்கணும். அப்பதான் வாய்ப்புகள் அதிகமாகும். அரசாங்க வேலை எல்லோருக்கும் கிடைக்கணும்னு நினைக்கிற பலருடைய கனவும் நிறைவேறும் என்று சொன்னார்.
மேனேஜரை நம் அரசாங்கம் வேலையைவிட்டு அனுப்பல. இதுவரை நம் ஆபீசுல யாரும் புரமோசனுக்குப் போகல, கொடுத்த வேலைகள் எல்லாம்; பெண்டிங், இப்படி இருக்க அது எதனால் என்ற தீர்வை அவர் சொல்லிட்டார்னா திரும்ப அவர் ஒரு மாதத்துக்குள் வேலைக்கு வரலாம். அதுவும் மேனேஜராக இல்லை உங்களில் ஒருத்தராகத்தான் இருக்கமுடியும்.
இரண்டாவது நான் மேனேஜர் இல்ல. இருபது பேர் கொண்ட டீம்ல நானும் ஒருத்தன். உங்கள்ல ஒருத்தர் தான் இப்ப மேனேஜர் என்று சொன்னார். இது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது.
யாராக இருக்கும்? என்று ஒவ்வொருத்தரும் தன் மனசுக்குள் எண்ணினார்கள். ராகவனுக்குத் தெளிவாகப் புரிந்தது இதுவரை நம்ம ஆபீசில் கடினமாக உழைத்தது ஜீவன் ஒருத்தர் மட்டும்தான். கண்டிப்பா அவராகத்தான் இருக்க முடியும் என்று எண்ணினான்.
வந்திருந்த அந்தத் திறனாய்வுக்குழுவின் அதிகாரி வர்மா மேலும் பேசத் தொடங்கினார். இந்த ஆபீசின் வளர்ச்சிக்காக இதுவரை தனது கடமையைச் சரியாகச் செய்வோர் உங்களில் ஒருத்தர் இருக்கிறார். நேற்று வரையிலும் ஏன் இன்று வரையிலும் நான் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு கூடத் தனது வேலையைத் துல்லியமாகச் செய்து முடித்தவர்.
இதுபோல உண்மையான உழைப்பாளிகளைத்தான் எங்கள் குழு ஆராய்ந்து அரசாங்க மேலதிகாரிகளுக்கு அவர்கள் பற்றிய தகவலைக் கொடுக்கிறது. மேலதிகாரிகள் அவர்களை இந்த அலுவலகத்தின் எல்லாப் பொறுப்புகளுக்கும் தலைவராக்கி, மேலும் சிறப்பாகப் பணியாற்ற உத்தரவிடுகிறது. அதற்காகத்தான் நான் இன்று இங்கு வந்துள்ளேன்.
ராகவன், சார் எங்களுக்கு ஏன் முன்கூட்டியே அறிவிப்பு வரவில்லை என்று துணிச்சலாகக் கேட்டான்.
வெயிட் மிஸ்டர் ராகவன்! நாங்க இது போல உங்க ஆபீசுக்கு ஆய்வுக்கு வருகிறோம் என்று அறிவிப்புக் கொடுத்தாலோ அல்லது முன்கூட்டியே இது போல இருபது பேர் கொண்ட டீம் எப்போது வேண்டுமானாலும், எந்த அரசாங்க அலுவலகத்திற்கு வேண்டுமானாலும் வரலாம் என்று உத்தரவுக் கொடுத்தால், தப்ப மேலும் மேலும் மறைப்பீங்களேத் தவிர, யார் தப்பு செய்றாங்கிறதை எங்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான் இதுபோல ரகசியமாகச் செய்கிறோம் என்றார்.
சரி நான் விஷயத்திற்கு வருகிறேன், இப்ப உங்கள்ல ஒருத்தர்தான் அந்தப் புதிய மேனேஜர். அதைச் சொல்லும் நேரம் வந்தாச்சு. மிஸ்டர் ஜீவன் நீங்க எழுந்திரிச்சு இந்த இருக்கைக்கு வாங்க என்றவுடன் ஒன்றும் புரியவில்லை. அட வாங்க சார்! இனி நீங்கதான் இந்த ஆபீசுக்கு மேனேஜர். உங்க நேர்மையையும் உழைப்பையும் பாராட்டி அரசாங்கம் உங்களுக்குத் தரும் பரிசு இந்த மேனேஜர் பதவி.
அவர் சொல்லி முடித்ததும் எல்லோருடைய மனதிலும் புயல் அடித்தது. அடப்பாவி, ஊமை போல இருந்தானே, இப்படியா அதிர்ஷ்டம் வரணும் என்று நினைத்தார்கள்.
மற்றவர்கள் எப்படியோ,ஆனால் ராகவனுக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. நாம உழைப்பை உதாசீனப்படுத்தினோம். ஆனால் உழைப்பு, மதித்தவனைஉயர்த்தியது! என்று நினைத்தான்.
ஜீவனுக்குச் சந்தோசம். இருந்தாலும் ஓர் மேனேஜரின் வேலையை டீ ப்ரோமோட் செய்துவிட்டுத்தான் அந்த இடத்தில் அமரணுமா என்று நினைத்தான்.
இப்படி எண்ணிய அவனது நினைவைக் கலைத்தார் வர்மா. ஜீவனைக் கூப்பிட்டு மேனேஜர் இருக்கையில் அமர வைத்தார். வர்மா மற்ற எல்லோரையும் அழைத்தார். நீங்களே உங்கள் கையால் இந்த மாலையை ஜீவனுக்குப் போடணும் என்றார்.
எல்லாரும் எழுந்து ஜீவனின் கழுத்தில் மாலையை ஜீவன் இல்லாமல் போட்டார்கள். பொன்னாடையை அதிகாரி வர்மா அணிவித்தார். கைதட்டலினால் அரங்கம் நிறைந்தது.
கைதட்டலுக்குப் பிறகு பேச ஆரம்பித்தார் வர்மா. உழைப்பவன் அதிலும் நேர்மையாக உழைப்பவன் கட்டாயம் ஒருநாள் உயர்வான் என்பதை அனைவரும் நினையுங்கள் என்றார்.
ஜீவன் நீங்கள் இன்றிலிருந்து புது மேனேஜர், உங்களுக்கான ஜி.ஓ. இதைப் படிங்க என்று அதிகாரி கொடுத்தார். நீங்க உங்க மற்ற அலுவலர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேட்டார்.
மற்றவர்களைப் பார்த்த ஜீவன் ‘உழைப்புதான் ஒருவரை உன்னதமாக்கும். இதுவரை கடினமாக உழைத்த நான், இவர்களையும் கட்டாயம் உண்மையாகவும், கடினமாகவும் உழைக்க வைப்பேன். வேலை கிடைக்காத வரை வேலை இல்லை என்று புலம்புவது, அரசாங்க வேலை கிடைத்த பிறகு ஒரு மாதம் அல்லது ரெண்டு மாதத்திற்குள் அந்த ஆர்வம் குறைந்து விடுவது, இதுபோன்ற தவறான எண்ணங்களைக் களைய முற்படுவேன். ஊக்கமுடனும் உற்சாகத்துடனும் வேலையைச் செய்வதற்கு நான் பாடுபடுவேன். ஊழியர்களையும் மற்ற அலுவலகத்திற்கு மேலதிகாரி ஆகும் அளவிற்கு உயர்த்துவேன்” என்றுசொன்னான்.
இவன் இப்படிச் சொல்வதைக் கேட்டுஅனைவரும் நெகிழ்ந்தனர். தாங்கள் இதுவரை செய்த தவறையும் உணர்ந்தார்கள். ஜீவனுடன் சேர்ந்து சபதம் மேற்கொண்டார்கள்.
“நாங்கள் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வோம். புதுப்புது மாறுதல்களைக் கண்டுபிடிப்போம். வேலையற்றோருக்கு அது பயனளிக்கப் பாடுபடுவோம். அரசாங்க அலுவலர்களை இனி அவமதிக்க மாட்டோம்
எட்டு மணி நேரமானாலும் அயராது உழைப்போம்” என்று உறுதி பூண்டார்கள்.
தான் வந்த வேலை முடிந்ததால் அடுத்த மாவட்டத்திற்கு ஆயத்தமானார் வர்மா.