மீனா. துறுதுறுப் பெண், குறும்புக்காரி, எதையும் கற்றுக் கொண்டே இருக்கத் தூண்டும் அவளின் மூளை. பரபரப்போடு சுற்றிக் கொண்டிருக்கும் இதயம், பற்ற வைக்கும் முன்னே பற்றிக் கொள்ளவும், புள்ளி ஒன்று இடும்போதே அதற்கான எல்லைகளைக் கண் கொண்டே காற்றில் வரையவும் பயணிக்கும் அவளது கால்கள். அவள் நினைக்கும் இடத்தை நாசாவின் ராக்கெட்டுகளாலும் எட்டிவிட முடியாது. அத்தனை ஆசைகள், கனவுகள் என்று அடுக்கிக் கொண்டு, பார்ப்பவை யாவற்றையும் பகுத்தறிவின் பாதை கொண்டு ஆராய முற்படும் திண்டுக்கல்லின் சிற்றருவி என்று அவளைச் சொல்லலாம். கல்லூரியின் மகுடம் என்றும் சொல்லலாம்.
எல்லாப் போட்டிகளிலும் இவளின் பங்களிப்பு இருக்கும். வெற்றி பெறுவது முக்கியமில்லை. அந்தப் போட்டி குறித்த தனது பார்வை அல்லது கொடுக்கப்பட்ட அத்தனை தலைப்புகளிலும் தனது யோசனை என்ன என்று புரிந்து கொள்ளவே முயற்சிப்பாள். அத்தனைப் போட்டிகளிலும் அவள் பெயர்தான் முதல் பெயராய் இருக்கும்.
அவள் அப்பா பகுத்தறிவுச் சிந்தனைவாதி, தான் பெற்ற அத்தனை அனுபவங்களையும் தடைகளையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்துதான் வளர்த்தார். நிறைய தனது படிப்பு சாராத பல புத்தகங்களை வாசிக்கவும் ஊக்கமளித்தார்.
ஆனால், ஒருநாள் அவள் மீது ஒரு புகார் வந்தது. பள்ளியின் தாளாளர்தான் அழைத்தார்.
“அப்பா, நாளைக்கு உங்கள ஸ்கூல்ல வரச் சொல்லியிருக்காங்க”
“ஏன் என்ன காரணம்?” என்றார் அவர்.
“தெரியலப்பா, உங்ககிட்டதான் சொல்வாங்களாம்” என்றாள் தலையைக் கவிழ்ந்து கொண்டு,
மறுநாள் பள்ளி சென்றதும் மீனாவை அழைத்துக் கொண்டு, தாளாளர் அறைக்குச் சென்றார் மீனாவின் அப்பா.
“வாங்க சார், உட்காருங்க சார்”
“சொல்லுங்க சார், என்ன பிரச்சனை?”
“பிரச்சனை பெரிசா ஒன்றுமில்லை சார். இப்பொழுது, மீனா படிப்பது பத்தாம் வகுப்பு. மதிப்பெண் அதிகம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்…”
“ஆமாம் சார் கண்டிப்பாக…”
“ஆனால் உங்கள் பொண்ணு அப்படியில்ல, நேற்று சமூக அறிவியல் பாட வேளையில் புத்தகத்திற்குள்ளே வைரமுத்துவின் , ‘வடுகபட்டியிலிருந்து வால்கா வரை’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஆசிரியர் பார்த்ததும் மறைத்திருக்கிறாள். இப்படிச் செய்யலாமா நீங்களேச் சொல்லுங்க சார்” என்றார்.
உடனே ஈஸ்வரன் தாளாளரைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்துவிட்டு, நான் மீனாவுக்கு எது நல்லதுன்னு கண்டிப்பா எடுத்துச் சொல்றேன் சார். நீங்களும் சொல்லுங்க சார்” என்று சொல்லிவிட்டு மீனாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
அப்பா திட்டப் போகிறார் என்று பயத்தில் மீனாவின் கண்களில் நீர் தழும்பி நின்றது.
“ நீ உண்மையிலேயே அப்படிச் செய்தாயா மீனா?” என்றதும் அழுதே விட்டாள்.
“அழாதே மீனா, நீ செய்ததில் தவறொன்றும் இல்லை. பள்ளியில் படிப்பதைத் தவிர வேறு புத்தகங்களைப் படிப்பது மிகவும் நல்ல விசயம்தான். ஆனால் எங்கு, எந்த நேரத்தில் என்பதுதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது? நிறைய புத்தகங்களைப் படி, சந்தேகங்கள் இருந்தால் என்னிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கூட வகுப்பல்லாத நேரங்களில் கேட்கலாம். படிப்பதைக் தொடரு” என்று தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அது இப்பொழுது அவளது வேட்கைக்கு உணவாகி வேட்கையோடு சேர்ந்து அவளும் வளர்ந்து கொண்டே இருக்கிறாள். வருகிற மார்ச் 8 மகளிர் தினத்திற்கானப் பேச்சுப் போட்டிக்கு பெண்ணியம் சார்ந்த கருத்துகளைப் பேசத்தான் யோசித்துக் கொண்டு இருந்தாள் மீனா.
அந்தி வானம் சிவப்புச் சூரியனை விழுங்கக் காத்துக் கொண்டிருந்த மாலை அது. கொடியினில் காய்ந்து கொண்டிருந்த ஆடைகளுக்குள்ளாக அவள் சிந்தனை ஊடாடியது. அங்கு எத்தனை விதமான வண்ண வண்ண உடைகள் சிறியதும் பெரியதுமான உடைகள். பெண்கள், ஆண்கள் சிறார், சிறுமியர் ஆடைகள் என்று எத்தனை விதமான ஆடைகள், காற்று வரும்போதெல்லாம், நானும் இருக்கிறேன் என்று அவை அவளைப் பார்த்துத் தலையாட்டிக் கொண்டிருந்தது.
அவளின் சுடிதாரைப் பார்த்த போது, அதனை வாங்க எத்தனைப் பாடு என்று நினைத்த போது சிரிப்பு வந்தது. அது ஒரு சிலீவ்லஸ் சுடிதார். இந்தக் காரணத்திற்காகவே அது அம்மாவால் வாங்கக் கூடாது என நிராகரிக்கப்பட்டது.
அதற்கு அம்மா சொன்ன காரணம்,
“இப்படி டிரஸ் போட்டுத் தெருவில நடந்தா, எல்லாரும் என்ன நெனப்பாங்க.”
அதோடு விட்டுவிடவில்லை அம்மா,
“வீட்ல ஒழுங்கா வளர்த்திருக்காங்களா பார். பெத்தவளச் சொல்லணும்னு என்னதான் முதல்ல திட்டுவாங்க” என்றாள் மீனாவின் அம்மா சாந்தி.
இன்னொரு முறை மனதினுள் முள் தைத்ததைப் போன்று இருந்தது.
“இப்படி டிரஸ் பண்ணா தப்பான பொண்ணுன்னு நெனப்பாங்கடி.” என்று பல்லைக் கடித்ததில் எனக்குப் பயமே வந்துவிட்டது. கை தைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதன் பின்புதான் அந்த சுடிதார் வீடு வந்து சேர்ந்தது.
யோசனை செய்து கொண்டிருந்த மீனாவின் முன்னே ஒரு மின்னல் கீற்று உண்டானது. உண்மையில் இந்த உடை போடக்கூடாது என்பது என் அம்மாவின் எண்ணமா? அல்லது நான்கு பேர் தவறாக நினைப்பார்கள் என்பதாலா? அதையும் தாண்டி குழந்தைகளுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற பரிதவிப்பா?
குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதுதான் எல்லாப் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. அப்படியானால் இது மாதிரியான உடைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனரா? இல்லை பார்க்கப்படும் உடைகளில், பார்க்கும் பார்வையில் தான் பிழையா? இதற்குச் சரியான பதிலைச் சொன்னாலும், எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் யாருக்கும் புரிவதாக இல்லையே? ‘சேலை மேல் முள் தைத்தாலும், முள் மேல் சேலை விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான் என்று பழமொழிகள் வேறு’.. என்ன செய்ய?
திடீரென்று மீனா என்றோ படித்தது ஒன்று, அவள் மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. ஏதோ ஓர் இடத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்கள் உடுத்தியிருந்த ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதாம். அதில் எல்லாவிதமான ஆடைகளும் இருந்ததாம், பெண் அணியும் நர்ஸ் யூனிபார்மில் தொடங்கி, நம்மைக் காவல் காக்கும் ஒரு பெண் போலீஸின் உடை கூட இருந்ததாம். இவற்றினும் மேலாக ஒரு பெண் குழந்தையின் பேம்பர்ஸ் (குழந்தைகள் நாப்கின்) கூட இருந்ததாம். முன் இருந்த ஆடைகளை கவர்ச்சியென வாதாடும் கூட்டம், இதனை எந்த வரிசையில் வைக்கப் போகிறது?
அவர்கள் உடைகளையா கண்டிருக்கிறார்கள்? அவர்கள் பார்த்தது பெண் என்பவளின் உடலைத்தானே? பெண், அவள் வயது என்ன? எப்படிப்பட்டவள்? என்ன நிலைமையில் இருக்கிறாள்? என்பதைப் பற்றிக் கவலையில்லை. அவள், ஒரு பெண் உடல், ஆண் போகிக்கும் ஒரு உடல், உடைமை என்பதில்தான் இது தொடங்கியிருக்கிறது.
இவைதான் அடிமட்டத் தாய்க்கும் அஞ்சுறுத்தும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆடையற்றிருந்த ஆதித் தாய், பின் அங்கங்கே ஆடைகளால் மறைக்க வேண்டிய கட்டாயம் இப்படி ஒரு இக்கட்டால் ஏற்பட்டு இருக்கலாமோ? எனத் தோன்றுகிறது. பின் ஆடைகளின் நிறம்கூட பிரச்சனைதான், சரி எல்லோருக்கும் ஆடைகள் அணிய உரிமை இருந்ததா? என்றால் சில பெண்களின் தோள்களில் உடை ஏறவேப் பல வருடங்கள் உருண்டோடி விட்டது. பெண்களுள் ஒரு பிரிவினர் தங்களது மார்பை மறைத்துக் கொள்ள ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையைப் படித்தது அவள் மனதில் உதித்தது. அவர்களின் உடையால் அவர்கள் மார்பை மறைக்க அவர்களுக்கே உரிமை இல்லை என்பது எத்தனைக் கொடுமை.
எத்தனைச் சிக்கல்களைக் கடந்து, இன்று எல்லோரும் பல வண்ணங்களில் தாராளமாக உடை உடுத்துகிறோம். அது தனிப்பட்ட ஒவ்வொருத்தரின் விருப்பம் என்பதை உணர்த்தவே பல வருடங்கள் கடந்துவிட்டது. இன்றும் ஒவ்வொரு உடையைத் தேர்ந்தெடுக்கும்போது, தன் விருப்பம் என்பதைத் தாண்டி அடுத்தவர் என்ன நினைப்பர் என்பதை அந்தப் பெண் மட்டுமல்ல, அவளைச் சுற்றி இருக்கும் அனைவரும் யோசிப்பதை நினைக்கையில் வேடிக்கையாய் இருக்கிறது. என்று தன்னை அறியாமலே நினைவின் வழியில் சிரித்துக் கொண்டாள் மீனா. பெண் உடையைத் தேர்வு செய்யவே இத்தனைக் காலம் என்றால், பெண்ணை உடலாகப் பார்க்காதே ,என்பதை உணர்த்த எத்தனை யுகங்கள் தேவைப்படுமோ?
“இந்தக் கொடியில் காயும் அத்தனை உடைகளையும் எல்லோராலும் அணிய முடியுமா? என்றால் நம்மை அறியாமல் பலரும் முகம் சுளிக்கிறோமே ஏன்? பெண்கள், இன்று அத்தனை உடைகளையும் உடுத்திப்பார்ப்பது என்று துணிந்து விட்டனர். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இங்கு காயும் பெண்களின் உடைகளை அணிய எத்தனை ஆண்கள் முன்வருவர்? பெண்களே பலரும் இதற்கு போர்க்கொடி தூக்குவர் என்பது உறுதி. சரி ஏன் அணியக்கூடாது என்ற கேள்வியை முன் வைப்போம்.
அவமானம் என்று நீங்கள் கூறினால், ஏன் அவமானம். பெண் உடை தறிப்பது ஏன் அவமானம். கேள்வி தொடுப்பது பெண் என்றால் மற்றுமொரு கேள்வி அப்படியானால் பெண்ணாய் பிறப்பது அவமானம் என்று நீங்களே நினைக்கிறீர்களா? ஆண் என்றால் உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் தாயாய், சகோதரியாய், புனிதமாய், கௌரவமாய் மற்றும் பலவாறாய் நினைப்பதாய் சொல்கிறீர்களே, அது எந்த அளவுக்கு உண்மை?
சரி மற்றொரு கேள்வி என்னுள்ளே கனன்று கொண்டிருக்கிறது அதையும் கேட்டு விடுகிறேன். இது ஆண் உடை? இது பெண் உடை என்று தீர்மானித்தது யார்? பெண் உடையை ஆணால் போட இயலாதா? சரி, ஒரு வேளை இவை ஆணின் உடைகளாக ஏற்கனவே சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் எதை நீங்கள் உடுத்தியிருப்பீர்கள்? உங்களால் மாறிக் கொள்ள முடியுமென்றால் இப்பொழுது ஏன் உங்களால் தரக்குறைவாகக் கருதப்படுகிறது?
அப்படியானால் எது உங்களது உடை என்பதை யார் முடிவு செய்வது? இவை இப்படியானால் இன்னும் நம்மில் ஒரு பிரிவினரின் பிரச்சனைகள் இன்னும் கூடுதலாக இருக்கிறது. அவர்கள் உண்மையில் மனம் விரும்பும் ஆடைக்காக தன் உடலையே மாற்றிக் கொள்ளத் துணிந்தவர்கள். அவர்கள் அந்த சிறு விசயத்திற்கு ஆசைப்படும்போதே இச்சமூகம் அவர்களைக் கேலி செய்யத் தொடங்கி விடுகிறது. தான் பெண்ணாக உணருதலை முதலில் உடையிலும் நடையிலும்தான் உணர்கிறார்கள். அவர்கள் அதனை நோக்கிப் பயணிக்க எத்தனைத் தடைகள். ஏன் நமது பொதுப்புத்தியிலும் கூட அவர்களை வினோதமாகப் பார்ப்பது அன்றாடமாகிவிட்டதே.
உடல்களை மூடும் இந்த உடைகளால் தான் நாம் யாரென மற்றவர் கருதுகிறார் என்றால் சரிதானா?”
பல தெரிந்த கேள்விகளோடு விடை தெரியாக் கேள்விகளையும் எழுப்பி தன் உரை முடித்து அமர்ந்தாள் மீனா. மேடையில் சிலவற்றைப் பேசும் போது சிரித்தும், சில இடங்களில் ஆர்ப்பரித்தும் இருந்த கூட்டம், தற்போது ஆரவாரமற்று அவளின் கேள்விகளில் ஒடுங்கிக் கிடக்கிறது. இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களது கருத்துக்களை எழுத வேண்டிய வினாத்தாள்தான். நீங்கள் என்ன பதிலை எழுதப் போகிறீர்கள்?
இவளின் பேச்சைக் கூட சிலர் நிறுத்த வேண்டும் என முயற்சிக்கலாம், கேள்விகள் தழும்பும் அவள் இதயத்தை கேள்விகள் கேட்கவே கூடாது என்று பிற்காலங்களில் பல காரணங்களால் முடக்கி வைக்கப்படலாம். ஆனால் கேட்கப்பட வேண்டியது கேட்கப்பட்டாயிற்று. நம் ஒவ்வொருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டு விட்டது.
ஒவ்வொருவரின் விடைகள் தான் கிடைக்கப் பெற வேண்டும்…