வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது சுந்தரம்தான் ‘லூட்டி’ அடித்துக் கொண்ருந்தான். சாமிநாதன் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம்.
அவர் அழைப்பில் என்னதான் மந்திர சக்தி இருந்ததோ தெரியவில்லை சுந்தரம் விளையாட்டை நிறுத்தி விட்டு அப்பாவிடம் ஓடி வந்தான். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினான்.
அப்பாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது வாரி அணைத்து முத்தம் கொடுத்தார்.
இப்போது அப்பா எனக்கு இனிப்பு வாங்கி வந்திருப்பாரே!
சுந்தரம் நினைத்தது வீண் போகவில்லை மேசை மேல் வைத்த பைக்குள் ராமநாதனின் கைகள் ஜாங்கிரி, பெப்பர்மின்ட் சாக்லேட் என்று ஒவ்வொன்றாக வெளியே எடுத்து சுந்தரம் உனக்குத்தான் எல்லாமும்’ என்றார் சாமிநாதன்.
மனதில் ஆசைமேலிட இனிப்பு பண்டங்களை ஆசையுடன் வாங்கிக் கொண்டான் சுந்தரம்.
“நன்றி அப்பா”
சுந்தரம் சாமிநாதனின் செல்ல பையன் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிச்செல்லம் பாராட்டுகிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்ததை தன் பாக்கியமாக நினைத்து மகிழ்ச்சியில் திகைத்தான் அவன்.
சுந்தரம் ஒரு நாள், “அப்பா எனக்கு உல்லன் பாண்ட் வேணும்” என்பான்.
அடுத்த அரைமணி நேரத்தில் உயர்ந்த விலையில் கண்ணைப் பறிக்கிற நிறத்தில் ரெடிமேட் உல்லன் பாண்ட் அவன் உடம்பை அலங்கரிக்கும்.
இன்னொரு நாள் –
எனக்கு சைக்கிள் வேணும் என் நண்பர்கள் அனைவரும் வைத்து இருக்கிறார்கள் என்பான் -
அன்று மாலையே புதிய சைக்கிளுடன் வருவார் சாமிநாதன்.
சுந்தரம் சைக்கிளை ஜாக்கிரதையாக மெதுவாக ஓட்ட வேண்டும். தெருவில் ஓரமாக போக வேண்டும் என்று கூறினார் சாமிநாதன்.
‘என்னத்துக்கு அப்பா இவ்வளவு அவசரம் சைக்கிள் வாங்க! மெதுவாகவே வாங்கியிருக்கலாம்.
“அதென்னவோ உன் ஆசையை உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று நினைத்தேன் அதுதான். நாட்கள் மெதுவாக நகர்ந்தன சாமிநாதனுக்கு மகன் மீதிருந்த பாசம் அதிகமாயிற்று. வயது ஏற ஏற சுந்தரத்தின் ஆசைகளும் அளவு கடந்தன. நினைத்ததை சாதித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற பிடிவாதமும் அவனிடம் வளர்ந்தது.
சாதாரணமாக ஒரு தந்தை மகனிடம் செலுத்துகிற பாசத்தை விட எத்தனையோ மடங்கு உயர்ந்தது அல்லவா, சாமிநாதன் மகனிடம் கொண்டிருந்த பாசம். ஆனால் ‘கண் மூடித்தனமாக செல்லம் கொடுத்தார் அவனுக்கு ‘ஆனாலும் ஆண் குழந்தைக்கு நீங்க இவ்வளவு இடம் கொடுக்கக் கூடாது என்று அவர் மனைவியும் சுட்டிக் காட்டினாள், ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
அன்று மாலை சற்று சோகத்துடன் வீடு திரும்பினார் சாமிநாதன். வழக்கமாக கலகலப்பு அவர் முகத்தில் குடிகொண்டு இருக்கவில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, “குட் ஈவினிங் டாடி” என்றான் சுந்தரம்.
ஒரு தலையசைப்புடன் மகனின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட தந்தை அலுப்புடன் சோபாவில் சாய்ந்தார். தொழிலில் ஏதேதோ சிக்கல்கள் அவருக்கு மனமே சரியில்லை அதனால் ஆசை மகனின் நேசக்குரல் கூட அவருக்கு எட்டிக் காயாய்க் கசந்தது.
அப்பாவின் முகத்திலிருந்து அவர் வருத்தமாயிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான் சுந்தரம் வாயால் எதுவும் பேசாமல் செய்கை மூலம் அவரைச் சிரிக்க வைக்க திட்டமிட்டான் அதை உடனேயே நிறைவேற்றினான்.
சுந்தரம் கையில் கொடுத்த காகிதத்தை பிரித்துப்பார்த்தார் சாமிநாதன். அதில் கண்டிருந்த விஷயம் அவன் எதிர்பார்த்த மாதிரி அவருக்கு சிரிப்பு மூட்டவில்லை மாறாக கோபத்தைத்தான் தூண்டிவிட்டது.
‘அப்பா காலையில் குலாப்ஜாமுன் வாங்கி வரும்படி நான் கண்டித்துச் சொல்லியிருந்தும் நீங்கள் வாங்கி வரவில்லை என்று தெரிகிறது. நீங்கள் வாங்கி வராததை மறைக்க என்னிடம் பேசவும் பிடிக்காத மாதிரி சிடு மூஞ்சித்தனமாக இருக்கிறீர்கள்! என்பதே காகிதத்தில் எழுதப் பட்டிருந்த விஷயம்.
கோபத்தில் தேகம் படபடவென்று துடிக்க முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் காகிதத்தை சுக்கு நூறாக கிழித்தெறிந்தார் சாமிநாதன். எறிந்து விட்டு, ‘விறு விறு’ வென்று எழுந்து தம் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.
சுந்தரத்துக்கு உடம்பே ஆடியது அப்பாவின் செய்கையைக் கண்டு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை அவன் இதுவரை அனுபவித்ததில்லை என்றைக்கும் இல்லாதபடி அப்பாவுக்கு இன்று என்ன வந்தது? கோபமே கண்டறியாத அவர் முகம் அனலாய்க் காய்கிறதே!
“அப்பா” என்று அறைக் கதவைக் தட்டினான் சுந்தரம்.
“என் கஷ்டத்தை நஷ்டத்தை உணராமல் மன நிலையைக் கொஞ்சம்கூடப் புரிஞ்சிக்காமல் உன் ஆசையை பெரிசாய் நினைக்கிற நீ என்னை இனிமேல் அப்பா என்றே கூப்பிட வேண்டாம்! உன் முகத்தில் விழிக்கவும் எனக்கு இஷ்டமில்லை.
நான் இனிமேல் உனக்கு எதுவும் வாங்கித் தரவும் போவதில்லை! சாமிநாதனின் கோபாவேசம் சுந்தரத்தை மட்டுமல்ல அவன் அம்மாவையும் அதிர வைத்தது.
சுந்தரத்துக்கு நெஞ்சை அடைத்தது நான் அப்படி என்ன மன்னிக்கமுடியாத தவறு செய்து விட்டேன்!” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு சம்பவம் நேர்ந்ததேயில்லை. இதற்கு முன் எப்போதாவது அப்பா இப்படி நடந்து இருந்தால் அவன் எச்சரிக்கையாய் இருந்திருப்பான்.
அன்று இரவு அம்மா எத்தனை வற்புறுத்தியும் சுந்தரம் சாப்பிடவில்லை. அப்பாவும் அவனை சமாதானப்படுத்தாமல் விட்டுவிட்டார். சுந்தரம் விக்கி, விக்கி அழுதான் அப்படியே தூங்கிப் போனான் சாமிநாதன் இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தவித்தார். மெத்தென்றிருந்த படுக்கை முள் போல் உறுத்தியது, அவருக்கு. அதற்குக் காரணம் அவர் மனதில் வீசிய புயல்தான் அன்று மாலையிலிருந்து நடந்த சம்பவங்கள் அவர் மனத்திரையில் நிழலாயின.
சுந்தரம் எவ்வளவு வாஞ்சையுடன் எனக்கு குட் ஈவினிங் சொன்னான்! நான் திரும்பி, குட் ஈவினிங் சொல்லவில்லை. வெறுமனே தலையை ஆட்டினேன் என் கோபத்தைக் கண்டு பயந்து போய்த்தானே, பேசாமல் எழுதிக் காட்டினான் குழந்தை. எவ்வளவு அழகாக விஷயத்தை காகிதத்தில் புகுத்தி விட்டான். அதில் கொஞ்சம் கர்வமும் அகம்பாவமும் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் அவன் விருப்பத்தையெல்லாம் தட்டாமல் நிறைவேற்றி வைத்தது நான்தானே, அந்தக் கர்வத்தையும் அகம்பாவத்தையும் வளர்த்து விட்டேன் அவனைத் திருத்த நான் இப்படி ஒரு கொடிய முறையைக் கையாண்டது சரியா?
விடியற்காலையில் ஃபோன் ஒலித்தது ரிஸிவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டார் சாமிநாதன் அவரது பிஸீனஸில் ஒரு திருப்பம் நஷ்டம் பெரிய அளவு இல்லையாம் நல்ல சமாச்சாரம் தான் கேட்டது.
பொழுது விடிந்தது.
சீக்கிரமாக எழுந்துவிடும் சுந்தரம் குப்புற படுத்தபடி விசும்பிக் கொண்டிருந்தான், அவன் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.
சுந்தரம் ... இந்தக் குரலைத் தொடர்ந்து அவன் உடம்பிலே பட்ட அந்தக் கரங்கள் அப்பாவினுடையவை அல்லவா? அப்பா என்று கூப்பிட வேண்டாம் என்றவர் அவன் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்தவர் புலி மாதிரி சிலிர்த்தெழுந்தது ஆத்திரம். ஆனால் அவன் கன்னத்தில் வந்த விழுந்த சூடான கண்ணீர்ச் சொட்டுக்கள் எங்கிருந்து வந்தன?
சுந்தரம் நிமிர்ந்து பார்க்கிறான் அப்பாவா அழுகிறார், அப்பா...? ஆதரவுடன் அவர் கழுத்தை கட்டிக் கொண்டான் அவனது தீர்மானம் – திட முடிவு – சபதம் எல்லாம் காற்றில் பறந்தன!
என் கஷ்டத்தில் உன் மனதைப் புண்படுத்தி விட்டேண்டா சுந்தரம் – அப்பா கோபமாகப் பேசினதை மறந்திடுடா”
நான் சதா என்னைப்பத்தியே நெனச்சிக் கிட்டு இருந்தேன். உங்களுக்கு கஷ்டம் நஷ்டம் ஏற்படறதைக் தெரிஞ்சுக்கவில்லை. இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே ‘அதுவேணும் இது வேணும்னு கேட்க மாட்டேம்பா’ நீங்கள் கோபமாய்ப் பேசினதும் நல்லது தாம்பா!”
‘அப்பிடீன்னா உனக்கு என் மேலே இன்னும் கோபம் நீங்கலேன்னு தெரியுது அப்படித்தானே?’
“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா இத்தனை நாளா உங்க கஷ்டம் எதுவும் தெரியாதபடி, எனக்கு வேணும் என்கிறதை வாங்கி தந்து எவ்வளவு பிரியமா வெச்சிருந்திங்க அப்படிப்பட்ட நீங்க ஒரே ஒரு நாளில் என்னைக் கடிந்து பேசக் கூடாதா? நான் இதுக்காக வருத்தப்படவே மாட்டேம்பா”
“என்ன ராஜா சொல்றே?’
“ஆமாம்பா, நீங்க எப்பவுமே அன்பாதான் இருக்கீங்க எவ்வளவோ காலத்துக்கு அப்புறம், இன்னைக்கு வந்ததே அது மாதிரி அபூர்வமாத் தான் உங்களுக்கு சிடுசிடுப்பு வரும் அதுவும் வெயில் பட்ட பனி மாதிரி உடனே மறைந்து விடும்”
“இப்படியெல்லாம் பேச எங்கிருந்துடா கத்துக்கிட்டே நீ?”
எங்க டீச்சர்தாம்பா ‘ஆறுவது சினம்’ என்கிற ஆத்திச்சூடி வரியை சொன்னாங்க! “என் ராஜா விஷயத்தை எவ்வளவு அழகாப் புரிஞ்சுகிட்டே நீ அறிவாளிதான்!”
மகனை வாரி அணைத்துக் கொண்ட சாமிநாதனின் விழிகள் ஆனந்த மிகுதியில் கண்ணீர் சிந்தின.