"மிஸ் மிஸ் என்னோட லைட் எரியும் புது ஷூ ல ஒன்னக் ககாணோம் மிஸ்"
கன்னத்தில் கண்ணீராறு கிண்ணத்தில் ஏந்துமாறு பொலு பொலுத்தது பார்த்திபனுக்கு.
"நல்லாத் தேடிப்பாருப்பா அதுவா எங்கும் போயிருக்காது" என்ற மகிமிஸ் அவன் அழுகையின் கேவலில் வழிந்த நீரைத் தன் உள்ளங்கையால் துடைத்தவாறே "வா தேடுவோம்" என்றார்.
இடைவேளை முடிந்ததை அறிவிக்க மணியொலி சில்வண்டு போல் நீண்டொலித்தது.
வெண்பட்டாம் பூச்சிகள் சிறகடிப்பது போல் மாணவர்கள் வகுப்புக்குள் சிதறி நுழைந்தனர்.
பார்த்திபனது வகுப்பு பாலகரும் வந்து சேர்ந்தனர்.
தேடல் இப்போது அவர்களுடன் தொடர்கிறது. இங்கில்ல இங்கயும் இல்ல அங்கிருக்கா ம்ஹூம் அங்குமில்ல ஹ் ஹ என்ன ஆச்சரியமாருக்கு எங்கும் காணோமே பார்த்திபனின் ஒற்றை ஷூ வை...
"ஒண்ணு இருக்கு இன்னொண்ணு எங்கே... வகுப்பறைக்கு உள்ளும் புறமும் தேடியாகிற்று அந்த ஒன்று எங்கே போச்சு...?"
மகிமிஸ்ஸுக்கு மனதில் ஒரு ஓரத்தில் இருந்து சந்தேகக் கீறல் பளிச்சிட்டது
"பார்த்திபன் புதுப்பென்சில் வைத்திருந்த போது பார்க்கிறேனென்று பிடுங்கி உடைத்தது, புது நோட்டுக் கொண்டு வந்தபோது கிறுக்கிப் பார்த்தது, புதுச்சட்டை போட்டபோது மை தெளித்து விட்டது" என்று புகார் வந்த போதெல்லாம்
"தெரியாமல் நடந்திருச்சு மிஸ் வேணும்னு எல்லாம் செய்யல" என்று சிரித்தே சமாளித்த ரவிகுமார் மீதே அந்த சந்தேகம் கிளம்பிக் கொண்டது.
ஆனால் என்ன ஆதாரம்?, எப்படி அவனைக் கேட்பது? அவன் செய்யவில்லை என்றால் பிஞ்சு மனம் நொந்து போகுமே...
அப்போதுதான் நிலா வந்தாள்.
"மிஸ் ரவிக்குமாரு பார்த்திபனோட ஷூவ குறு குறுன்னே பார்த்துட்டிருந்தான் மிஸ் நான் பார்த்தேன்" என்றாள்.
மகிக்கு சந்தேகம் ஆணிவேராயிற்று.
"எல்லாரும் இடத்தில் உட்காருங்க என்றார்" மகிமிஸ்.
குட்டிச் சிட்டுகள் சட் சட்டென்றே இடத்தில் அமர்ந்தன.
"பார்த்திபனுடைய ஒற்றை ஷூவை யார் எடுத்து ஒளிச்சிருந்தாலும் நம் பள்ளியின் மறைவுக்கமெரா காட்டிக் கொடுத்திடும்"
அப்படி ஒரு காமெரா அங்கு இல்லைதான் சும்மா பயங்காட்டி உண்மையை வரவழைக்கத்தான் சொன்னார் மகிமிஸ்.
"நீங்களே உண்மையை ஒத்துக்கிட்டு ஷூவை மீண்டும் கொண்டு வந்து வைத்து விட்டால் தண்டனை எதுவுமில்லாமல் மன்னிச்சுடுவோம்" என்று கூறிவிட்டு ரவிக்குமார் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் மகிமிஸ்.
எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கள்ளமின்றிப் புன்னகைத்த போது, ரவிக்குமாரின் விழிகள் மட்டும் அகன்று விரிந்து ஏதோ சொல்ல... கைகளை நீட்டிப் படாரென்று துள்ளி எழுந்து நின்றான்.
அப்பாடா உண்மை ஒன்று, பொய் ஒன்றினால் வெடித்துவிடப்போகிறதென்று காதுகளை அடைக்காமல் தீட்டிய தருணம் அது...
எல்லாரும் ரவிக்குமாரையே எரிச்சலுடன் பார்க்க
"அங்க பாருங்க மிஸ்" என்று அவன் சுட்டிய திசையில்
பள்ளி ஆடுதிடலில் பார்த்திபனின் ஷுவை பாடசாலைக்குள் எப்படியோ நுழைந்த நாய் கடித்து விளையாடிக் கொண்டிருந்தது.