பரதநாட்டியத்தில் கை அசைவுகள் அல்லது முத்திரைகள் ஒரு முக்கியக் கூறாகும். பரத நாட்டியக் கை அசைவுகளை சமஸ்கிருதத்தில் ஹஸ்தம் என்கின்றனர். கை என்பதன் சமஸ்கிருதச் சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர். பரதநாட்டியத்தில் அடவு, அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும். கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர். பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக்கை [இணையாக் கை], இரட்டைக்கை [இணைந்த கை] என இரண்டாக வகைப்படுத்துகின்றனர். இவ்விரு வகையான முத்திரைகள் தவிர்த்து, சில அரிதான முத்திரைகளும் உண்டு.
ஒற்றைக்கை முத்திரைகள்
ஒரு கையால் செய்யப்படும் ஒற்றைக்கை முத்திரையினை சமஸ்கிருதத்தில் அசம்யுத ஹஸ்த என்கின்றனர். இவை இருபத்தெட்டு எனும் எண்ணிக்கையில் இருக்கிறது.
1. பதாகம் - கொடி - பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல்.
2. திரிப்பதாகம் - மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம் - பதாகத்தில் மோதிர விரலை மடித்தல்.
3. அர்த்தப்பதாகம் - அரைக்கொடி - திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.
4. கர்த்தரீமுகம் - கத்தரிக்கோல் - திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலைச் சேர்த்தல்.
5. மயூரம் - மயில் - திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.
6. அர்த்தச்சந்திரன் - அரைச்சந்திரன் - பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.
7. அராளம் - வளைந்தது - சுட்டு விரலுடன் பெருவிரலைச் சேர்த்துப் பிடித்தல்.
8. சுகதுண்டம் - கிளி மூக்கு - பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.
9. முட்டி (முஷ்டி) - முட்டிகை - அனைத்து விரல்களையும் பொத்துதல்.
10. சிகரம் - உச்சி - முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல்.
11. கபித்தம் - விளாம்பழம் - சிகரத்தின் பெருவிரலைச் சுட்டு விரலால் பொத்துதல்.
12. கடகாமுகம் - வளையின் வாய் - நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றைச் சேர்த்துப் பிடித்தல்.
13. சூசி - ஊசி - முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல்.
14. சந்திரகலா - பிறைச்சந்திரன் - சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல்.
15. பத்மகோசம் - தாமரை மொட்டு - கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல்.
16. சர்ப்பசீசம் - பாம்பின் படம் - பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல்.
17. மிருகசீசம் - மான் தலை - பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல்.
18. சிம்மமுகம் - சிங்கத்தின் முகம் - நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
19. காங்கூலம் - அங்குலத்தை விட குறைந்தது - மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
20. அலபத்மம் - மலர்ந்த தாமரை - சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிர விரலையும் சற்று மடித்தல்.
21. சதுரம் - சாதூர்யம் - மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
22. பிரமறம் - வண்டு - ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து, பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
23. கம்சாசியம் - அன்னத்தின் அலகு - பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல். மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
24. கம்சபக்சம் - அன்னத்தின் சிறகு - மிருகசீசத்தில் நீட்டியுள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாகச் சேர்த்தல்.
25. சம்தம்சம் - இடுக்கி - விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
26. முகுளம் - மொட்டு விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
27. தாம்ரசூடம் - சேவல் - மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டி விரலை அரைவாசி மடித்தல்.
28. திரிசூலம் - சூலம் - மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரலையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல்.
இரட்டைக்கை முத்திரைகள்
இரு கையாலும் செய்யப்படும் இரட்டைக்கை முத்திரையினை சமஸ்கிருதத்தில் சம்யுத ஹஸ்த என்கின்றனர். இவை இருபத்து நான்கு எனும் எண்ணிக்கையில் இருக்கிறது.
1. அஞ்சலி - வணங்குதல்
2. கபோதம் - புறா
3. கர்கடம் - நண்டு
4. சுவஸ்திகம் - குறுக்கிட்டது
5. டோலம் - ஊஞ்சல்
6. புஸ்பபுடம் - மலர்க்கூடை
7. உத்சங்கம் - அணைப்பு
8. சிவலிங்கம் - சிவலிங்கம்
9. கடகாவர்த்தனம் - கோர்வையின் வளர்ச்சி
10. கர்த்தரீ ஸ்வஸ்திகம் - குறுக்குக் கத்தரிக்கோல்
11. சகடம் - வண்டி
12. சங்கு - சங்கு
13. சக்கரம் - சக்ராயுதம்
14. சம்புடம் - பெட்டி
15. பாசம் - கயிறு
16. கீலகம் - பிணைப்பு
17. மத்சயம் - மீன்
18. கூர்மம் - ஆமை
19. வராகம் - பன்றி
20. கருடன் - கருடப்பறவை
21. நாகபந்தம் - பாம்பின் கட்டு
22. கட்வா - கட்டில்
23. பேருண்டம் - பேருண்டப் பறவை
24. அவகித்தம் - குறுக்கே மலர்ந்த தாமரை