* ஜூலியஸ் சீஸருக்குத் தன் கீழ் பணிபுரிந்து வந்த ஒவ்வொரு போர்வீரனின் பெயரும் தெரியுமாம்.
* ஆஸாக்ரே என்பவர் அமெரிக்கத் தாவர இயல் நிபுணர். சுமார் 25,000 வகையான தாவரங்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கும் திறமை வாய்ந்தவர் என்கின்றனர்.
* உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகமான கெய்ரோவில் உள்ள முகமதிய கல்லூரி மாணவர்கள் நுழைவுத் தேர்வின் போது குரான் முழுவதையும் ஒப்பிக்க வேண்டுமாம். அதற்கு மூன்று நாட்களாகும். ஆயினும் 20,000 மாணவர்கள் இந்த அரிய செயலைச் செய்த பிறகே அந்தக் கல்லூரியில் சேர்க்கை பெறுகின்றனர்.
* லார்ட் பைரன் ஓர் ஆங்கிலக் கவிஞர். அவர் இயற்றிய எல்லா கவிதைகளையும் அவரால் சொல்ல முடியும். மாறாக, சர்.வால்டர் ஸ்காட்டின் நினைவாற்றல் குறைவு. ஒரு சமயம் ஒரு கவிதை - அது லார்ட் பைரனால் இயற்றப்பட்டது என்று நினைத்து, தான் இயற்றிய கவிதையை மிகவும் புகழ்ந்து பேசிவிட்டார்.
* ஆபிரகாம் லிங்கன் தான் படிப்பது எதையாவது மனனம் செய்ய வேண்டுமென்றால் அதை உரக்கப் படித்துத் தனது நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்வார்.
* லார்ட் மெகாலே ஒரு போட்டியில் வெல்வதற்காக மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ என்ற கவிதைத் தொகுதியை ஒரே இரவில் மனப்பாடம் செய்தார்.
* தியோடர் ரூஸ்வெல்ட், தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயர் மற்றும் பல விஷயங்களை நினைவு கூறும் ஆற்றல் உள்ளவராக இருந்தார். ஒரு சமயம் ஒரு ஜப்பான் வங்கி ஊழியரை 15 ஆண்டுகள் கழித்துச் சந்தித்த போது, முதல் சந்திப்பில் எதைப் பேசி முடித்திருந்தாரோ, அதைவிட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பேச ஆரம்பித்து, அவரை அசத்தினார்.
* ஜார்ஜ் பீட்டர் என்ற ஓர் ஆங்கிலேய செல்வந்தர், அவருக்குப் பத்து வயதாக இருக்கும் போது 121 செகண்டுகளில் (அதாவது இரண்டு நிமிடங்களில்) 4444 பவுண்டுக்கு 4444 நாட்களுக்கு 4.5 வட்டி வீதம் எவ்வளவு வட்டி வரும் என்று கணக்கு போட்டுக் கூறிவிடுவார்.
* ‘ரெயில்ரோட் ஜாக்’ என்ற ஒருவரின் நினைவாற்றல் நம்ப முடியாதது. 20 ஆண்டுகள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று அங்குள்ள மாணவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு, உதாரணமாக, ‘திருமணமாகும் போது சாக்ரடீஸின் மனைவிக்கு வயது என்ன?’ போன்ற வேடிக்கையான கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தருவாராம். இவரது அசாதாரண திறமையைக் கண்டு ஹென்றி ஃபோர்ட் அவருக்கு ஒரு காரைப் பரிசளித்தார். ஆனால், அதை அவர் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். வழக்கம் போல அவர் தனது குதிரை வண்டியிலேயே பயணம் செய்து வந்தார். ‘சரித்திரம் பற்றி எல்லாம் அறிந்த மேதை ரெயில்ரோட் ஜாக்’ என போர்ட் எழுதி அந்த வண்டியில் வைத்திருப்பாராம்.
முயற்சி செய்தால் போதும், நாம் ஒவ்வொருவருமே நமது நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இவர்களெல்லாம் உதாரணம்.