சூத்திரம் என்பது, மிகப்பெரிய கருத்தையும் சில சொற்களில் சுருக்கமாக விளக்குவது சூத்திரம் என நன்னூல் விளக்கம் கூறுகின்றது. சிறிய கண்ணாடி, மிகப் பெரிய உருவத்தையும் தன்னுள் வாங்கித் தெளிவாக நமக்குக் காட்டுவது போல, சில எழுத்துகளால் மிகப்பெரிய கருத்துகளையும் தனக்குள் அடக்கி, பொருளை இனிமையாக விளக்கும் நுட்பமான வரிகளே சூத்திரங்கள் எனப்படும்.
சூத்திரம் என்ற சொல் 'சூத்ரா' (Sutra) என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தது என்றும் சொல்லப்படுகிறது. "சுருக்கமாகச் சொல்லப்பட்ட விதிமுறை" என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் இதை 'Formula' என்பார்கள். சமஸ்கிருத இலக்கண விதிகள், இலக்கிய இலட்சணங்கள், கணித விதிகள், யோக சாஸ்திர விதிகள் போன்றவை சூத்திரங்கள் மூலம் சொல்லப்பட்டன. தமிழ் இலக்கணத்திலும் தொல்காப்பியர், பவணந்தி முனிவர் போன்றோர் இலக்கண சூத்திரங்களை இயற்றியுள்ளனர். திருவள்ளுர் இயற்றிய 'திருக்குறள்' நாம் நல்வாழ்க்கை வாழ்வதற்கான சூத்திரம் என்பார்கள். இதேப் போல், கம்பரின் கவித்திறனை 'கம்பசூத்திரம்' என்று சொல்வதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
தமிழ் இலக்கணச் சூத்திரம், கணிதச் சூத்திரம் போன்று, மலர்ச் சூத்திரம் (Floral Formula) இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், மலர்களுக்கும் மலர்ச் சூத்திரம் இருக்கிறது. மலர்ச் சூத்திரம் என்பது எண்கள், எழுத்துகள், பல்வேறு குறியீடுகள் மற்றும் எழுத்துருக்களைப் பயன்படுத்தி ஒரு மலரின் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலர் பற்றிய கணிசமான தகவல்களை வழங்கும் ஒரு வழிமுறையாகும்.
இது பொதுவாக, மலர் உறுப்புகளை அதன் அமைவிடம், எண்ணிக்கை, தன்மை, பால், தொகுதி போன்றவற்றை வேறுபடுத்துகிறது. மேலும், அதன் குறியீடுகளைக் கொண்டு மலரின் இனத்தை அறிய இயலும். இது தாவரவியலறிஞர்களால் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலரின் கட்டமைப்பை விவரிக்கும் இரண்டு வழிகளில் ஒன்றாகும். மறறொரு முறை ’மலர் வரைபடம்’ மூலம் விளக்குவதாகும். பூச்சூத்திரங்களுக்கான வடிவம் தாவரவியலாளர், நாடு, மொழி ஆகியவற்றிற்கிடையே வேறுபடுகிறது. பழமையான முறையாக இருப்பினும், இன்னும் அவை அதேத் தகவலை வெளிப்படுத்த முனைகின்றன.
மலர்ச் சூத்திரத்திற்குக் கீழ்க்காணும் சில குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
Br - பூவடிச்செதில் (Bracteate)
K - புல்லிவட்டம் (Calyx)
Ca - அல்லிவட்டம் (Corolla)
P - இதழ்வட்டம் (Perianth)
A - மகரந்தத்தாள் வட்டம் (Androecium)
G - சூலக வட்டம் (Gynoecium)
G__ - மேல் மட்ட சூற்பை
Ĝ, G - கீழ் மட்ட சூற்பை
♂ - ஆண் மலர்
♀ - பெண் மலர்
எடுத்துக்காட்டாக,
K3+3 - ஆறு தனித்த புல்லி இதழ்களுடன், இரண்டு தனி சுருள்களாகவுள்ள அமைப்பு
A∞ - பல மகரந்தங்களைக் கொண்டது
P3-12 - மூன்று முதல் பன்னிரெண்டு இதழ் வட்டத்தைக் கொண்டது.