எண்ணமும் செயலும்
திட்டமிடுவானே மனிதன் – பல
திசைகள் வளைத்திட நினைப்பான்
எட்டும் வரையில் நுழைவான் – அதில்
இருக்கும் வசதிகள் பலவும் பிடிப்பான்
வட்டமிடுவான் எங்கும் – பல
வாய்ப்புகள் நாடி அலைவான் பங்கும்
கட்டாயம் இதுமட்டும் குறைவு – அவன்
கடின உழைப்பால் நிறைவேற்றல் உயர்வு
திட்டமிடலில் திறமைகள் இல்லை – அதைச்
செயலாக்க முயல்வதே மிகப்பெரும் தொல்லை
பட்டியல் திட்டங்கள் குறிப்பே – அவை
பயன்பட வேண்டும் முழுச்செயல் முடிப்பே
கட்டிடும் கோட்டைகள் கனவே – அதைக்
கண்முன் படைப்பதே செயல்திறன் நனவே.
எட்டிடும் புகழ் இதனால்தான் – நாம்
இதயம் ஒன்றுவோம் செயல் வடிவால்தான்.
எதிர்கொள்ள வேண்டும் துணிவு – அதில்
ஏற்றிடும் வெற்றி இதன்பின் பணிவு
நதி எதிர் நீச்சலும் காண்போம் – நம்
நல் இலக்கியங்கள் பிழைத்தன மாண்பாம்
எதிலும் இருவகை இருக்கும் – நாம்
இன்பம் மட்டுமே நினைத்தால் கசக்கும்
பதிலும் கேள்வியும் வேண்டும் – இதைப்
படிப்பினை யாக்கினால் இமயமும் வேண்டும்!
- கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ, நீர்முளை, திருக்குவளை வட்டம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.