இந்தியாவின் பொது நூல்

தினந்தோறும் திருக்குறளைக் கூறு- நம்மைத்
தேடிவரும் நன்மைகளைப் பாரு.
உனக்குள்ளே நம்பிக்கை தேட - ஓர்
ஒளிவட்டம் வழங்கிடுமே பாரு.
தனக்குள்ளே வெல்லுஞ்சொல் சேர -அதைத்
தனித்துவமாய் நிற்கவைக்கும் பாரு.
மனத்துக்கண் மாசிலனைச் சேரு. - பெரும்
மரியாதை கிடைக்கவைக்கும் பாரு.
*****
ஊரோடு சேர்ந்திருக்கப் பாரு - நல்
ஒழுக்கமதே விழுப்பமெனக் கூறு
யாரோடும் சினமின்றிச் சேரு - இந்த
வையகமே உன்குடைக்கீழ் பாரு
யார்வாய்ச்சொல் லானாலும் தேரு - மெய்
யானபொருள் அறிவெனவே கூறு
சேர்கின்ற இடமறிந்து சேரு - நட்பைத்
தேர்ந்தெடுத்து வாழுவகை பாரு.
*****
ஈரடியாம் திருக்குறளை ஓது - இங்கு
எப்போதும் வாராது தீது
சீரதுவாய் வாழ்கின்ற போது - நலந்
திகழவைக்கும் நிம்மதியெப் போதும்
தாரணியில் திருக்குறளே ஓது - மனந்
தளராது மதியுமயங் காது
பேரதுவோ தமிழ்மறையென் றோது - நாம்
பிழைக்குவழி காட்டிடுமிப் போது.
*****
முப்பாலாய் குறளுணர்த்தும் உண்மை - வாழ்வை
முழுவதுமாய் வழிநடத்தும் திண்மை
எப்போதும் குறள்மறையின் அண்மை - நமது
இருப்பினிலே செய்கின்ற நன்மை.
தப்பேதும் நிகழாத தன்மை - குறள்
தனிவழியே எந்நாளும் செம்மை
இப்போதே திருக்குறளை மனதால் - நம்
இந்தியாவின் பொதுநூலாய்ச் செய்வோம்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.