தென் திசை இமயம்

விருதுபட்டி மண்தந்த கருப்புத் தங்கம்
விழைவெதுவும் கொள்ளாத வெற்றிச் சிங்கம்
கருதுமுன்னம் காரியத்தை முடித்துக் காட்டும்
காமராஜர் பெருந்தலைவர் நாடே போற்றும்
கருணைமுகங் கொண்டமனம் எளிய மக்கள்
கல்விநலம் பெற்றுயரப் பள்ளி கணடார்
பொருத்தமிக்க தலைமைக்குப் புனிதங் கூட்டும்
பொற்கால ஆட்சியினைப் புரிந்தா ரன்றோ!
நெடிதுயர்ந்த உருவமுடன் நேர்மை நெஞ்சில்
நிலைகொண்ட பெரியவராம் கருப்புக் காந்தி
அடிமட்டத் தொண்டருடன் சொந்தங் கொண்டார்
அவருயர நாள்முழுதும் பாடு பட்டார்
கொடிபிடித்து நடைநடந்த கொள்கை முத்து
குறைவறவே தமிழகத்தை ஆண்ட சொத்து
துடித்தவளோ தாயெனினும் சலுகை செய்யாத்
தூயமனப் பெருந்தலைவர் இவரே யன்றோ!
அரசியலை வணிகமெனக் கொண்டி டாமல்
அதுதேச பக்தியென தினமு ழைத்தார்
உரமாக விவசாயம் நிலையாய்க் கொள்ள
உருவான நீர்த்தேக்கம் பலவு மன்றோ
வரமாகப் பகலுணவு தந்த வள்ளல்
வந்தபள்ளி மாணவரின் வாட்டம் நீக்கித்
தரமான கல்விபெறத் திட்டம் தீட்டித்
தமிழகத்தைத் தரணிபோற்றச் செய்தா ரன்றோ!
தென்திசையாம் தமிழகத்தின் இமயம் எங்கள்
தீந்தமிழர் காமராஜர் உழைப்பின் சின்னம்
முன்னேற்றம் என்பதிலே உறுதி கொண்ட
முனைப்போடு செயல்பட்ட வீரர் நாட்டு
மன்றத்தில் மறையாத தீரர் ஏழை
மக்களதன் நலமொன்றே நாடி என்றும்
தன்னலமே கொள்ளாமல் வாழ்ந்தார் தேசத்
தலைவர்களுள் இமயமென உயர்ந்தா ரன்றோ!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.