கல்விக்கண் திறந்தவர்

உழைப்பால் ஊருக்கு உழைத்த உத்தமர்
நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே!
தன்னை மறந்து பிறரை நினைத்து
தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்!
கம்பிக்குள் வாழ்ந்த கம்பீரமும் நீயே
குலக்கல்வி ஒழித்து நலக்கல்வி தந்தாய்
இலவசக்கல்விஅளித்து நல்லுணவை ஈந்தாய்
கல்வி ஒளிவிளக்கு உன்னாலே ஒளிர்ந்தது ...
பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்
அந்நீரைக் கொண்டு விவசாயம் காத்தவர்!
விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்!
பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும் என்பதால்
பசுமை செழிக்க பல திட்டங்கள் செய்தவர்
விவசாயத்திற்கு வித்திட்டவர் இவரே
இவர் பெயர் நிலைத்து நிற்கும்
தமிழகம் வாழும் வரை…
ஆற்றினிலே இமயமலை! அன்பினிலே மேருமலை!
எத்தனையோ ஆட்கள் உண்டு ஆனாலும்
இவரை போல தமிழகத்தில் யாருண்டு!
தனக்கென வாழாததால் பெருந்தலைவரானாய்
தர்மத்தின் தலைவனாக தரணியிலே வாழ்ந்தாய்
இவர் வாழ்ந்த காலமே காவியமாய்
இவர் வாழ்ந்த வருடங்கள் பொற்காலமாய்!
பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில் …
நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே
புகழுக்கு மயங்காத கர்மவீரர் மனதளவில் குழந்தை !
உனதாட்சி ஏழைகளின் கண்ணாடி மனசாட்சி
மறைந்தும் வாழ்கிறாய் அணையா விளக்காய் ...
படிக்கும் குழந்தையின் வாழ்க்கையில் ஒளிவிளக்காய்
பதவியைத் துறந்து வழிகாட்டுவதிலும் முதல்வர்
வறியோரின் மனதினைப் படித்த படிக்காத மேதை !
மீண்டும் பிறவாயோ நானிலமும் பயனுறவே...!
- முனைவர் ப. விக்னேஸ்வரி, கோயம்புத்தூர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.