கற்றுக் கொள்ள வேண்டும்!
எங்கள் வீட்டு முற்றத்தில்
தினமும் வருது ஒரு காகம்
எந்த உணவை வைத்தாலும்
அதன் உறவுகளை கரைந்து அழைத்து
பகிர்ந்து சாப்பிடும் குணத்தைக்
கற்றுக் கொள்ள வேண்டும் நீ...!
காலையில் சூரியன் எழும் முன்னே
எழுந்து கரையும் காகம்
தண்ணீர் கண்ட இடத்தில்
தவறாது குளிக்கும் குணத்தைக்
கற்றுக் கொள்ள வேண்டும் நீ...!
தான் கட்டிய கூட்டில்
தன் முட்டைகளோடு குயில் வைத்த
முட்டையையும் சேர்த்து அடைகாத்து
குயில் குஞ்சென்று தெரிந்த பின்பும்
தன் குஞ்சுகளோடு குயில் குஞ்சுகளுக்கும்
உணவளித்து வளர்க்கும் குணத்தைக்
கற்றுக் கொள்ள வேண்டும் நீ...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.