பார்போற்றும் பச்சையப்ப வள்ளல்!
(எழுத்துக்களைத் தொடுத்துப் புனைந்த பாமாலை)

அன்னை பூச்சியம்மாள் ஈன்றெடுத்த
ஆண் மகவாம் எம் வள்ளல்
இறவாப் புகழ் பெற்ற
ஈகைப் பெருந்தெய்வம்
உவப்பிலா இறைத் தொண்டை
ஊர்தோரும் புரிந்திட்டோன்
எண்ணிலடங்கா உதவிகளை
ஏழைகளுக்கே செய்திட்டோன்
ஐயமின்றி நம் மனதுள்
ஒப்பிலா உயர்வு பெற்றோன்
ஓதி உய்வு பெற முதற்
கல்லூரி ஈந்தோன்
காலத்திற்கும் அழியா
கிடைத்தற்கரும் பெருஞ்செல்வம்
கீழ்மனத்தார் நாடுபற்றி
குழப்பங்கள் பல செய்திடினும்
கூடிவாழும் தம் குணத்தால்
கெடுதியையும் நன்மையாக்கி
கேடில்லா உய்வு பெற்றோன்
கைப் பொருள்தனைச் சேர்த்து
கொடையெனக் கொடுத்தே
கோடிப் புகழ் பெற்றுவிட்டோன்
சங்கடங்கள் பல கடந்து
சாதனைகள் படைத்திட்டோன்
சிறிதும் தனக்கென கொள்ளா
சீலமிகு கொடையாளன்
சுதந்திரமற்ற இந்தியாவில்
சூதுகள் பல எதிர்கொண்டோன்
செல்வச் செருக்கு சிறிதுமற்று
சேவைகள் பல புரிந்திட்டோன்
சொல்லணாத் துயர் நடுவும்
சோர்விலாது உழைத்திட்டோன்
தந்தை விசுவநாதரை இழந்தான்
தாயின் கருவிலுள்ள போதே
திக்கற்று தன்னிரு பெண்களுடன்
தீயாய் வறுமை வாட்ட
துறந்தாள் தாயவள் காஞ்சியை
தூய மனிதர் ரெட்டி இராயரெனும்
தெரிந்த நண்பர் குடும்பம்
தேடி வந்து இடம் கொடுக்க
தையலாளும் சென்றாள் பெரியபாளையம்
தொடர்ந்த புதுவாழ்வில் மகவாய்த்
தோன்றினார் நம் வள்ளல்
நல்விதமாய்த் தொடங்கிய வாழ்வு
நாட்பட நிலையாது
நிலைதடுமாறிப் பெயர்ந்தது சென்னைக்கு
நீள்புகழ் செல்வரும் வணிக
நுட்பமும் மிகு நாராயணப் பிள்ளையால்
நூலறிவுடன் கற்றார் வணிகமும்
நெஞ்சில் உறுதியுடன் ஆங்கிலமும்
நேரிய முறையில் கணிதமும் பயின்று
நைந்து வாடி மொழி அறியாது
நொந்து வருந்திய வணிகரிடை
நோக்கத் தகும் மொழிபெயர்ப்பாளரானோன்
பழங்குடி மரபில் பிறந்து
பார் போற்றக் கல்விப் பணி செய்து
பிற மாந்தர் போற்ற வாழ்ந்து
பீடு பெற நின்ற வள்ளல்
புதுவாழ்வு வாழ தமக்கை மகள்
பூவை அய்யமாளை மணந்தார்
பெரும் ஏற்றுமதி வணிகர் நிக்கலசுவின்
பேராதரவால் ஈட்டிய செல்வத்தை
பைக்குள் இட்டு மறைக்காது
பொறுப்பு மிகு கொடையாளராய்
போற்றத்தகு பணிகள் பல செய்தோன்
மக்கள் வியக்க ஆலயந்தோறும்
மாபெரும் கட்டளைகளை ஆற்றியவர்
மிகுபுகழ் தஞ்சை மன்னனின்
மீளா நன்மதிப்பைப் பெற்றே
முகவராய் முதன்மை மொழிபெயர்ப்பாளராய்
மூத்த அதிகாரி யோசேப்பு சலிவன்
மெச்சிய அரசுப் பணியாளராய்
மேலும் பல பணிகளாற்றி நாட்டின்
மைந்தனாய் சேவைக்கெனவே ஈட்டிய
மொத்தப் பொருளின் மீதும்
மோகம் கொள்ளாது இறுதி வரை
மௌனமே உருவாய் அறப்பணியாற்றிய
வள்ளலின் வழியில் நாமும்
வாழ்வோம் நலம் பல செய்வோம்
விதவிதமாய் தொல்லை செய்த
வீணருடன் வாழினும்
வெற்றி இலக்கை நாற்பதிலே எட்டி பிறர்
வேதனைகொள மறைந்த நம் வள்ளல்புகழ்
வையம் உள்ள மட்டும்!
- பத்மா ஸ்ரீதர், சென்னை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.