இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

இல்லத்துப் பிள்ளைமார்

உ. தாமரைச்செல்வி


தமிழகத்தில் உள்ள அனைத்துச் சமுதாயத்திலும், ஒவ்வொரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் தந்தையை மையமாக வைத்து உறவுமுறைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் சமூகத்தின் முக்கிய நடைமுறைகளான குடிவழி, இருப்பிடம், குடும்ப நிர்வாகம், சொத்துரிமை போன்றவை தந்தை வழி முறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றிலிருந்து மாறுபட்டு ஒவ்வொரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் தாயை மையமாக வைத்து உறவுமுறைகள் உருவாக்கப்படும் தாய் வழிச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இதில் இல்லத்துப் பிள்ளைமார், கோட்டைப் பிள்ளைமார், செவலைப் பிள்ளைமார், நன்குடி வெள்ளாளர், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், அரும்புக்கட்டி வெள்ளாளர், ஆம்பநேரி மறவர், காரண மறவர், ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் என்று சில சமூகம் மட்டும் குறிப்பிடத் தக்கதாய் உள்ளது.

இந்தச் சமூங்களிலும் இருப்பிடம், குடும்ப நிர்வாகம் சொத்துரிமை போன்றவை தமிழகத்தின் பெரும்பான்மைச் சமுதாயங்களின் தந்தை வழி முறையிலான நடைமுறைகளில் இருப்பதைப் போல் மாறிப் போய் விட்டது. ஆனால் குடும்ப உறவு முறைகளான குடிவழி மட்டும் தாய் வழியிலேயே தொடர்ந்து வருகிறது. இதனால் தந்தை வழிச் சமூக மக்களிடமிருக்கும் அக்காள் மகளை மணந்து கொள்ளும் வழக்கம் இவர்களுக்கு நேரெதிராக இருக்கிறது. இதற்கு காரணமென்ன? இவர்கள் தங்களுக்குள் உறவுமுறைகளை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக தாய் வழிமுறையிலான உறவு முறையைக் கொண்ட சமுதாயத்தில் ஒன்றான இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம் தோன்றிய வரலாற்றுக் கதையையும் அவர்களது உறவு முறைகளையும் பார்ப்போமா?



இல்லத்துப் பிள்ளைமார் வரலாறு

சிவபெருமான்-கங்காதேவிக்கு மகனாகப் பிறந்தவர் வீரபத்திரர். இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவபெருமான், இந்திரனை அழைத்து வீரபத்திரருக்குத் தகுந்த பெண் பார்த்து வர கட்டளையிடுகிறார். இந்திரனும் தனது தேவதூதர்களை அனுப்பி பெண் தேடுகிறார்.

பூவுலகில் பெண் தேடி வந்த தேவதூதர்கள் ஈழநாட்டின் வீரைப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்நாட்டின் இயற்கை வளத்தையும் அழகையும் கண்டு வியந்த அவர்கள் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணிதேவியின் அழகைக் கண்டு திகைத்துப் போய் விட்டனர். வீரபத்திரருக்கு ஏற்ற மணமகளாக கயல்மணி தேவி தோன்றவே அவர்கள் விரைந்து வந்து இந்திரனிடம் சொல்ல, அவரும் ஈழ நாட்டுக்குச் சென்று மன்னர் இராமராசரிடம் சிவபெருமான் மகனான வீரபத்திரருக்கு கயல்மணிதேவியை மணமுடித்துக் கொடுக்க வேண்டினார்.

மன்னர் இராமராசரும் தனது மகள் கயல்மணிதேவியை சிவபெருமான் மகனான வீரபத்திரருக்கு மணமுடித்துக் கொடுக்கச் சம்மதித்தார். குறிக்கப்பட்ட நாளில் தேவலோகத்தவர், பூலோகத்தவர் என்று அனைவரது முன்னிலையிலும் வீரபத்திரர்-கயல்மணிதேவி திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்வாழக்கையின் பயனாக இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்குச் சிவருத்திரர் என்று பெயரிட்டனர். சிவருத்திரருக்கு ஒரு வயதான போது வீரபத்திரர் இல்வாழ்க்கையிலிருந்து துறவு வாழ்க்கைக்குச் செல்லத் தீர்மானித்தார்.

கயல்மணிதேவியை அழைத்த வீரபத்திரர் தான் துறவு செல்லப் போவதாகத் தெரிவித்தார். இதைக்கேட்ட கயல்மணிதேவி அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் கணவரின் எண்ணத்திற்கு தடை தெரிவிக்க விரும்பாமல் தானும் குழந்தையும் என்ன செய்வது என்று அவரிடமே கேட்டார்.

காஞ்சிபுரம் அருகே ஆப்பனூர் என்ற ஊரில் பூத்தொடுத்து வாழ்ந்து வரும் வயதான சிவகாமியிடம் சென்று அவளுடன் சேர்ந்து பூத்தொடுத்து வாழ்ந்து கொள். சிவருத்திரர் சில ஆண்டுகளில் அனைத்துக் கலைகளையும் கற்று சிறப்பாக வாழ்வதுடன் ஒரு புதிய குலம் தோன்ற காரணமாக வாழ்வார் என்றும் வாழ்த்தி விட்டு துறவு சென்றார்.

கயல்மணிதேவியும் தன் குமாரனை அழைத்துக் கொண்டு வீரபத்திரர் சொன்ன காஞ்சிபுரம் அருகிலுள்ள ஆப்பனூர் கிராமத்திற்குச் சென்றார். வயதான கிழவி சிவகாமியுடன் சேர்ந்து பூத்தொடுக்கும் பணியைச் செய்து வந்தார். முகள் கயல்மணிதேவியைக் காணாது ஈழ மன்னர் இராமராசர் கவலையடைந்து தனது மகனை மன்னராக்கினார். இந்நிலையில் கயல்மணிதேவி சிவபெருமானிடம் வேண்டி அவரிடமிருந்து தனது மகனுக்கு வெற்றிமணி வில்லும், வீரசக்தி வாளும் பெற்றதுடன் அவரை குருகுலக் கல்விக்கும் அனுப்பினார்.

அனைத்துக் கலைகளிலும் சிறுவயதிலேயே தேர்ச்சி பெற்ற சிவருத்திரர் தன் தாயிடம் வந்து பக்கத்து நாடுகளுக்கு திக்குவிஜயம் செய்யப் போவதாகத் தெரிவித்தார். சிறுவனான சிவருத்திரர் இப்படி சொல்லியது தாய் கயல்மணிதேவிக்கு வருத்தமாக இருந்தாலும் சிவருத்திரரிடம் சிவபெருமான் அளித்த வில்லும் வாளும் இருப்பதால் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.



சிவருத்திரர் காடு மலைகளைக் கடந்து நள்ளி மாநகருக்குள் நுழைந்தார். போர்க் கோலத்தில் சிறுவன் ஒருவன் வருவது அந்நகர மக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இந்தத் தகவல் அந்நாட்டு மன்னனுக்கும் சென்றது. மன்னனும் தனது படைவீரர்களை அனுப்பி சிவருத்திரரைக் கைது செய்து வரச் சொன்னார். கைது செய்ய வந்த படை வீரர்கள் சிவருத்திரரின் வில்லுக்கும் வாளுக்கும் பலியாயினர். இதையடுத்து அந்நாட்டு இளவரசர் உக்கிர குமாரன் சிறுபடையுடன் சிவருத்திரரைக் கைது செய்திட வந்தான். இளவரசருடன் வந்த சிறுபடையும் தோற்றுப் போக சிவருத்திரரிடம் இளவரசர் உக்கிர குமாரன் சரணடைந்தான். இந்நிலையில் இருவரும் நண்பர்களானார்கள். சிவருத்திரர் உக்கிர குமாராருடன் சேர்ந்து அரண்மனையிலேயே தங்கினார். அங்கு அரச குலத்தவர்களுக்கு போர்ப் பயிற்சியும் அளித்து வந்தார்.

நள்ளி வேந்தரின் மகளான பளிங்கு மாளிகையில் வசித்த இளவரசி தத்தைக்கு நடனம், சங்கீதப் பயிற்சி அளிக்க பிரபல இசைப் பயிற்சி வித்வான் பாணபண்டிதர் என்பவரது மகளான கண்டிகையை நியமித்தார். இவர்களுக்குத் துணையாக அந்த ஊரின் பிரபல வணிகர் தத்த செட்டியார் குமாரியான உமையாள் என்பவரையும் சேர்த்து மூன்று பேரும் அந்தப் பளிங்கு மாளிகையிலேயே தங்கியிருந்தனர்.

சிவருத்திரரும், உக்கிரகுமாரனும் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த மூன்று பேரழகிகளையும் மணக்க விரும்பிய பக்கத்து நாட்டு மன்னர் தனது நாட்டு பெண்படைகள் மூலமாக மூன்று பேர்களையும் கவர்ந்து சென்றார். இதனால் கவலையடைந்த நள்ளி மன்னர் காட்டிற்குள் சென்று சிவருத்திரரிடம் தனது மகளையும் அவளுடைய தோழிகள் இருவர் என்று மூன்று பேரையும் மீட்டு வரும்படி வேண்டினார்.

சிவருத்திரரும் தன்னுடைய வில்லையும் வாளையும் எடுத்துக் கொண்டு பக்கத்து நாட்டு மன்னரிடம் சென்று போரிட்டு மூன்று பேரழகிகளையும் மீட்டு வந்தார். தங்களை மீட்ட சிவருத்திரரின் அழகிலும் வீரத்திலும் மயக்கமுற்ற மூன்று பேரழகிகளும் சிவருத்திரரையே மணக்க விரும்பினர். மூன்று பேரழகிகளும் தங்களது தந்தைகளிடம் சிவருத்திரருக்கு தங்களை மணம் செய்து வைக்கும்படி வேண்டினர்.

இதன்படி முதலில் பண்டிதர் மகள் கண்டிகைதேவிக்கும் சிவருத்திரருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் கழித்து வணிகர் மகள் உமையாளுக்கும் சிவருத்திரருக்கும் திருமணம் நடந்தது. மூன்றாவதாக மன்னர் மகள் தத்தைக்கும் சிவருத்திரருக்கும் திருமணம் நடந்தது. மூன்று மனைவிகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த சிவருத்திரருக்குத் திடீரென்று தனது தாயின் ஞாபகம் வரவே மன்னரிடம் சென்று ஆப்பனூர் சென்று தன் தாயைப் பார்த்து அழைத்து வரவிருப்பதாகத் தெரிவித்தார்.


மன்னர் அனுமதியுடன் ஆப்பனூர் சென்று தன் தாயையும் தங்களுக்கு அடைக்கலம் அளித்து உதவிய சிவகாமியம்மாளையும் தன்னுடன் அழைத்து வந்தார். அரண்மனையில் அவர்கள் நல்ல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மன்னர் தனது மருமகனை மன்னராக்கிப் பார்க்க விரும்பினார்.

தனது அரசபகுதியில் ஒரு பகுதியான சிறுவைநகர்ப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு அரசை உருவாக்கி அதற்கு சிவருத்திரரை மன்னராக்கினார். சிவருத்திரரும் அந்நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஆனால் சிவருத்திரருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் குழந்தைகள் ஏதுமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் சிறுவைநகர்க் குடிகளில் ஒரு பகுதியினரான வேளாண்மைத் தொழில் செய்து வந்த சிலர் சிவருத்திரரை அணுகி தங்களது வேளாண்மைத் தொழில் செய்யும் குலத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினர். குழந்தையில்லாமல் இருந்ததால் மற்ற மூவரும் சிவருத்திரரை புதிதாக ஒரு திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினர். சிவருத்திரரும் இதற்குச் சம்மதித்து வேளாண்மைத் தொழில் செய்து வந்த அபிராமி அங்கசன் என்பவரது மகளான மதி என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.

சிவருத்திரர், மதிக்கும் இல்வாழ்க்கையின் மூலம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு இராவணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அதற்கடுத்து இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இலவன் என்று பெயரிட்டனர். இதையடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு இந்திரை என்று பெயரிட்டனர்.

இந்நிலையில் முதல் மூன்று மனைவிகளும் தங்களுக்கும் குழந்தைப் பேறு அளிக்க வேண்டி முருகப் பெருமானிடம் வேண்டினர். முருகப் பெருமானும் அவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்குமென்று வரமளித்தார். முருகப் பெருமானின் ஆசியுடன் அவர்களுக்கு குழந்தைப் பேறும் கிடைத்தது.

முதல் மனைவியான கண்டிகைதேவி முதலில் ஒரு ஆண் குழந்தையும், மறுமுறை ஒரு பெண் குழந்தையும் பெற்றாள். அக்குழந்தைகளுக்கு தருமக்கூத்தன், காந்திமதி என்று பெயரிடப்பட்டது. இவ்வாறே இரண்டாவது மனைவியான உமையம்மை பெற்ற ஆண் குழந்தைக்கு தருமன் என்றும், பெண் குழந்தைக்கு மந்திரை என்றும் பெயரிட்டனர். இது போலவே மூன்றாவது மனைவியான தத்தையும் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பெற்றாள். இக்குழந்தைகளுக்கு கலுழன், சுதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சிவருத்திரரின் ஐந்து ஆண் மக்களான இராவணன், இலவன், தருமக்கூத்தன், தருமன், கலுழன் ஆகியோருடன் காந்திமதி, இந்திரை, மந்திரை, சுதை எனும் பெண் மக்களும் சகல கல்விகளும் பெற்று திருமண வயதை அடைந்தனர்.



இந்நிலையில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்கள் சிவருத்திரரிடம் தங்கள் குலத்தில் பெண் எடுத்து இருப்பதால் தங்களுக்கு சிவருத்திரரிடம் பெண் கேட்டு வந்தனர். இதற்கு சிவருத்திரர் மறுத்தார். அவர்களிடம் தனது பெண்களை வெளியில் கொடுப்பதற்கில்லை என்றும் தமக்குள்ளாகவே ஒரு புதிய முறையுடன் திருமண உறவுமுறை செய்யவிருப்பதாகவும், இது புதிய குலத்தை தோற்றுவிப்பதாக அமையும் என்றும் சொல்லி திருப்பி அனுப்பினார்.

அவர்கள் நள்ளி மன்னரிடம் சென்று முறையிட்டு தங்கள் குலத்தவருக்குப் பெண் கொடுக்க வலியுறுத்தும்படி வேண்டினர். நள்ளி வேந்தரிடமும் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களிடம் சொன்ன கருத்தையே தெரிவித்த சிவருத்திரர் புதிய உறவுமுறைகளுடன் புதிய குலத்தைத் தோற்றுவிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

சிவருத்திரருக்கு முதலில் பிறந்த இராவணன் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி விட்டு அனைவரிடமும் விடைபெற்று காட்டுக்குச் சென்றார். சிவருத்திரர் தனது நான்கு மனைவியர்களையும் அழைத்து, தங்களுக்குப் பிறந்த என் குழந்தைகள் அனைத்தும் பொதுவானவை என்றாலும் அந்தக் குழந்தைகள் நான்கு விதமாக அவரவர் தாயின் தன்மையைப் பெறுகிறார்கள். இனி என் குழந்தைகள் அவரவர் தாயின் வழியைப் பின்பற்ற வேண்டும். அந்தந்த குழந்தைகளின் தாய்க்கும் அவர்கள் வந்த வழியில் புதிதாக இல்லம் எனும் புதிய பிரிவுகளை வழிமுறைகளாக அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

மூட்டில்லம்

தனது முதல் மனைவியான பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவியை அழைத்து, நீ இந்தக் குடும்பத்திற்கு ஆதி மூட்டானவள். முதலில் இல்லற இன்ப மூட்டியவள். துணி மூட்டும் தொழில் செய்யும் வகுப்பைச் சேர்ந்தவள், வீணை மீட்டும் வீட்டிலிருந்து வந்தவள் ( மீட்டுதல் மூட்டுதல் என மருவியது) என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டில்லத்தாள் என்று அழைத்து, இனி இவள் குழந்தைகள் "மூட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சிவருத்திரருக்கு கண்டிகைதேவி முதல் மனைவியானதால் அவளை முதலில் பெருமைப் படுத்துவது போல மூட்டில்லத்தவருக்கு எவ்விடத்திலும் முதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். (இன்றும் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாய விழாக்களில் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் மூட்டில்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.)

மஞ்சநாட்டில்லம்

எந்தவொரு சுப செயல்களுக்கும் முதலில் மஞ்சளை உபயோகித்து மளிகை வியாபாரம் செய்து வந்த தத்த செட்டியாரின் மகளான உமையாளைப் பார்த்து, "மஞ்சகுப்ப நாட்டில் பிறந்தவள், மேகங்கள் (மஞ்சு) வந்து தூங்கும் அளவிலான உயர்ந்த மாளிகையில் வளர்ந்தவள், மெத்தை (மஞ்சம்) விரித்த வீடுகளில் வசித்தவள் என்ற கருத்துகளுக்கேற்ப மஞ்சநாட்டில்லத்தாள்" என அழைத்து இனி உன் குழந்தைகள் "மஞ்ச நாட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

பளிங்கில்லம்

நள்ளி வேந்தர் குமாரியான தத்தையைப் பார்த்து, "அரண்மனைப் பெண், பளிங்கு மாளிகையில் வசித்தவள் என்று பொருள் விளங்க பளிங்கில்லத்தாள்" என்று அழைத்தார். இனி உன் குழந்தைகள் "பளிங்கில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

சோழிய இல்லம்

வேளாண்மைத் தொழில் செய்து வந்த அபிராமி அங்கசன் மகளான மதியை நோக்கி, "சோழி எனும் மண்வெட்டி முதலிய உழவுச் சாதனங்கள் உடைய வீட்டில் பிறந்தவள், பன்னாங்குழி எனும் சோழியாடியவள், சோழிய வகுப்பினள் எனும் பல கருத்துக்கள் வர சோழியில்லத்தாள்." என்று கூறினார். இனி உன் குழந்தைகள் "சோழிய இல்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

திருமண உறவு முறை

சில மாதங்கள் கழித்து சிவருத்திரர் தனது மக்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் ஏற்கனவே முடிவு செய்தபடி ஒரு இல்லத்து ஆணுக்கும் மற்றொரு இல்லத்துப் பெண்ணுக்குமாக திருமணம் செய்து கொள்ளும் புதிய வழிமுறையை உருவாக்கினர். இதன்படி,



முதல் மனைவி மகனான மூட்டில்லத்தைச் சேர்ந்த தருமகூத்தனுக்கு நான்காவது மனைவி மகளான சோழிய இல்லத்துப் பெண்ணான மந்திரையையும், இரண்டாவது மனைவி மகனான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த தருமனுக்கு முதல் மனைவி மகளான மூட்டில்லத்தைச் சேர்ந்த காந்திமதியையும், மூன்றாவது மனைவியின் மகனான பளிங்கில்லக் கலுழனுக்கு இரண்டாவது மனைவியின் மகளான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த மந்திரையையும், நான்காவது மனைவியின் மகனான சோழிய இல்ல இலவனுக்கு மூன்றாவது மனைவியின் மகளான பளிங்கில்ல சுதையையும் திருமணம் செய்து வைத்தார். இந்தத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தாய் எந்த இல்லத்தைச் சேர்ந்தவரோ அதையே இல்லமாகக் கொள்ள வேண்டும். ஒரு இல்லத்தைச் சேர்ந்தவர் அந்த இல்லத்தைத் தவிர பிற இல்லங்களில் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு புதிய திருமண உறவு முறையை வகுத்தார்.
இந்நிலையில் ஈழ நாட்டு மன்னன் காளகேது என்பவர் தனது மகள் மித்திர சேனைக்கு சுயம்வரம் நடத்துவதால் அதில் கலந்து கொள்ளும்படி அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த சுயம்வரத்திற்கான அழைப்பு சிவருத்திரருக்கும் வந்திருந்தது.

பலநாட்டு மன்னர்கள் கலந்து கொண்டிருந்த இந்த சுயம்வரத்தில் சிவருத்திரரும் கலந்து கொண்டார். ஒவ்வொரு நாட்டு மன்னர் வீரதீரங்களையும் குறிப்புகளாக ஈழநாட்டு இளவரசி மித்திரசேனையின் தோழிகள் எடுத்துச் சொல்ல அதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த மித்திரசேனை சிவருத்திரரின் கழுத்தில் மாலையிட்டார். சிவருத்திரர் ஐந்தாவதாக மித்திரசேனையை திருமணம் செய்து கொண்டார்.

மித்திரசேனையை மணந்து கொண்ட சில நாட்களுக்குப் பின்பு தனது நாட்டிற்கு திரும்பினார். அவருடன் மித்திரசேனையின் தந்தை காளகேதுவும் வந்தார். சிவருத்திரரின் தாயார் கயல்மணி தேவியை அடையாளம் கண்டு தனது தமக்கையார் என்பதை அறிந்து மகிழ்ந்தார். கயல்மணி தேவிக்கும் தனது மகன் சிவருத்திரர் சகோதரனின் மகளான மித்திரசேனையை மணமுடித்து வந்தது குறித்து மகிழ்ந்தார்.

சிவருத்திரர் மித்திரசேனையுடனான இல்வாழ்க்கை அவர்களுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையையும் பிறகு இன்னொரு ஆண் குழந்தையையும் அடுத்து ஒரு பெண் குழந்தையையும் தந்தது. இவர்களுக்கு முறையே புரந்தர சிங்கம், காரணச்சாமி, மதியம்மை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஈழமன்னர் காளகேதுவிற்கு குழந்தையில்லாததால் புரந்தர சிங்கம் ஈழமன்னருக்கு குழந்தையாக வழங்கப்பட்டார். சிவருத்திரர் தனது முதல் நான்கு மனைவிகளுக்கும் இல்லம் வகுத்தது போல ஐந்தாவது மனைவிக்கும் இல்லம் வகுத்திட விரும்பினார்.

தோரணத்தில்லம்.

"மித்திரசேனையின் சுயம்வர மண்டபம் முழுவதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதை மனதில் கொண்டும் சுயம்வரத்தின் போது மணமாலைத் தோரணம் கையில் கொண்டு வந்ததையும், அம்மான் (தாய்மாமன்)மகள் என்கிற தோரணையிலும் தோரணத்தில்லத்தாள்" என்று அழைத்தார். இனி உன் குழந்தைகள் "தோரணத்தில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.


இதன் பிறகு ஐந்து இல்லங்களைக் கொண்ட புதிய சமூகம் தோற்றுவிக்கப்பட்டது. ஐந்து இல்லங்களைக் கொண்ட இந்த சமுதாயம் தாய் வழியில் தங்களது குடிவழியைக் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த சமுதாயத்தில் தங்கள் இல்லம் தவிர்த்த பிற இல்லங்களில் தங்களுக்கான துணையைத் தேடிக் கொள்ளும் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

சிறப்புகள்

தற்போதைய இலங்கை (ஈழம்), கேரளா, தமிழ்நாடு என்று பரவலான இடத்தில் பெரும்பான்மையான சமுதாயமாக இருந்த இச்சமுதாயத்தில், தற்போதும் தாய் வழியிலான குடிவழி முறை பின்பற்றப்பட்டு வந்தாலும் நிலப்பகுதி, மொழி போன்றவற்றால் பிரிந்து போய் விட்டனர். தமிழகத்தில் மட்டும் இன்றும் தாய் வழியிலான இல்லம் என்கிற திருமண உறவுகளுக்கான ஆதாரமுறையும், இல்லம் வழியிலான திருமண உறவுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.



முதலில் "சிவருத்திரர் குலம்" என்று அழைக்கப்பட்ட இச் சமுதாயத்தினர் சிறுவைகுடியை ஆட்சி செய்து வந்ததால் சிறுவைகுடி வேளாளர் என்று அழைக்கப்பட்டு பின்பு "சிறுகுடி வேளாளர்" என்று மருவி அழைக்கப்பட்டனர். இதேபோல் சிவருத்திரர் துவக்கத்தில் ஈழத்திலிருந்து வந்ததால் "ஈழவர்" என்றும் , இல்லங்கள் வைத்து உறவு முறை வைத்துக் கொண்டதால் "இல்லத்தார்" என்றும் , எந்தக் கடினமானப் பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் திறனுடையவர்களாக இருந்ததாலும் போர்ப்பயிற்சி அளிப்பவர்களாகப் பணிபுரிந்ததாலும் "பணிக்கர்" என்றும் இடத்திற்கேற்ப அழைக்கப்பட்டனர்.

இப்படி தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இடத்திற்கேற்ப ஈழவர், பணிக்கர், சிறுகுடி வேளாளர், இல்லத்தார் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த சமுதாயத்தினர் இன்று "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற ஒரே பெயரால் அழைக்கப்படுகின்றனர். தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராக அறிவிக்கப்பட்டிருக்கும் இவர்கள் தமிழக அரசால் உயர் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமின்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் என்று அறிவிக்கப்பட்ட சமுதாயத்தினரால் கூட இன்றும் தமிழகத்தில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைப் போலவே இருந்து வருகின்றனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி வரும் இன்றைய நிலையில், துவக்கத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிவழியை தாயின் வழிக்குக் கொண்டு வந்த ஒரு சில சமுதாயத்தில் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயமும் ஒன்று என்று அறியும் போது நம்மை வியப்படைய வைக்கிறது.

நம்மாழ்வார் - இல்லத்துப் பிள்ளைமார்?

வைணவக் கொள்கையில் ஈடுபாடுடைய பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வார் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அவர் சிறுகுடி வேளாளர் என்று அழைக்கப்படும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் குலத்தில் பிறந்தவர் என்பதைக் கீழ்காணும் தகவல்கள் மூலம் அறியலாம்.

1. பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார் அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொல்கிறார்.((நன்றி:R P ராஜநாயஹம் வலைப்பூவில் வெளியான “உண்டிங்கு ஜாதி எனில்” தகவல்.)

2. தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் (இல்லத்துப்பிள்ளைமார்|ஈழவர்) குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினராவார்.(நன்றி: எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் எழுதிய “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” கட்டுரை.)

சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தவரா?

"கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திர கர்நாடக மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. என்கிறது சமூக வரலாற்றறிஞர் சீ.இராமச்சந்திரன், எழுதிய "வலங்கைமாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்" என்ற நூலின் சில வரிகள்.

சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனெனில் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் சோழிய வேளாளர் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒரு வேளை, சோழிய வேளாளர் சாதியினர் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினராக இருந்து அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறிக் கொண்ட ஒரு குழுவினராக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.

சமுதாயத்தின் இன்றைய நிலை

1. இந்தியாவில் தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராக அறிவிக்கப் பட்டிருக்கும் இவர்கள் தமிழக அரசால் உயர் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமின்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் என்று அறிவிக்கப்பட்ட சமுதாயத்தினரால் கூட இன்றும் தமிழகத்தில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைப் போலவே இருந்து வருகின்றனர்.

2. “கேரளாவில் புழுக்களைவிட மோசமாக கருதப்பட்ட ஈழவ மக்களைப் போலவே தமிழகத்தில் ‘இல்லத்து பிள்ளைமார்’ என்கிற கைத்தறி நெசவு செய்யும் சாதியினர் இருந்தனர். மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள், குடும்பம் குடும்பமாக வெளியூர்களுக்குக் கிளம்பிப் போவதைப் பார்த்திருக்கிறேன். சொந்த ஊரில் குறைந்தபட்ச மானத்தோடு வாழ வழியில்லாமல், வேறு ஊர்களில் அடைக்கலமாகப் போனார்கள். இது என்னைக் கடுமையாக பாதித்தது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

3. கேரளாவிலுள்ள ஈழவர் சமுதாயத்தினருடன் தொடர்புடைய இச்சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்களில் அதிக அளவிலும், விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர் பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர் பகுதிகளிலும், இதர மாவட்டங்களில் சில ஊர்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலும் வசித்து வரும் இவர்கள் பெரும்பான்மையாக நெசவு மற்றும் கூலி வேலைகளையே செய்து வந்துள்ளனர். தற்போது தொழில் நிமித்தம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இடம் பெயர்ந்து உள்ளனர்.

4. தமிழகத்தில் நெசவு மற்றும் கூலி வேலை செய்து வந்த இவர்கள் இன்னும் கல்வி, பொருளாதார நிலையில் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர். தமிழக அரசியலில் கூட இந்தச் சமூகத்தினர் பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விடவில்லை. மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், மறைந்த முன்னாள் மதுரை மாநகர மேயர் முத்து, ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ஆர்.சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.பி. சுடலையாண்டி என்று விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்தான் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் வந்திருக்கிறார்கள்.

5. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் ஒன்றிரண்டு பேர்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசு பதவிகளில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை நிலைதான்.

6. மொத்தத்தில் சமூக, பொருளாதார நிலைகளில் தாழ்ந்த நிலையிலுள்ள இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதுதான் எப்படி என்று தெரியவில்லை என்று புலம்புகின்றனர் இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p1.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License