திரு.வி.க. கால சமூகத்தில் பெண்ணுரிமைக் கோட்பாடுகள்
முனைவர் ஜெ.ரஞ்சனி

பெண்ணியம் என்பது சமூக அக்கறையின் வெளிப்பாடு. பெண்ணியக் கோட்பாட்டினைச் சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம். பெண்ணியம் என்பது பெண் விடுதலையை மையப்படுத்துவதா? அல்லது பெண் முன்னேற்றத்தை முன் வைப்பதா? அல்லது ஆண் சமூகத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துவதா? எனப் பல்வேறு நிலைகளில் இன்று பெண்ணியம் பேசப்படுகிறது.
அன்று பெண்ணைப் பெருந்தெய்வமாகப் பாவித்து வணங்கிய பரமஅம்சர், பெண் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அவருடைய சீடர் விவேகானந்தர், பெண் கல்வியை வலியுறுத்திப் பெண்ணிய நோக்கில் புதுமை கண்ட பாரதி, பெண்ணைப் பெரும் ஆளுமைத் திறனுடையவளாகக் கண்ட பெரியார் ஆகியோரின் கருத்துக்கள் பெண்மையைச் சமூகத்தில் உயர்த்தியது என்று சொன்னால், அது மிகையல்ல. தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்த திரு.வி.க அவர்களும் பெண்களின் பெருமையைப் போற்றியும் மறுமணத்தை எதிர்த்தும், விதவை மணத்தை ஆதரித்தும், வழுக்கி விழுந்த சகோதரிகளுக்குப் புதுவாழ்வை வற்புறுத்தியும், பெண்கல்வியை வலியுறுத்தியும் இவ்வாறு அனைத்து நிலைகளிலும் பெண் தலைமையைப் போற்றியவர் திரு.வி.க. இவரது காலத்தில் சமூகப் பெண்ணுரிமை கோட்பாடுகள் தழைத்தோங்கி வளர்ந்ததை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்ணின் பெருமை
‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என வள்ளுவப் பெருந்தகை பெண்ணின் பெருமையினை உலகிற்கு அறிவுறுத்தியுள்ளார். அன்றைய நாளில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமானவர்களாக வாழ்ந்து வந்திருப்பதைத் தமிழ் மக்கள் தம் வாழ்வியல் இலக்கண நூல் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
“பெண்ணுலகிற்கு இயல்பாய் அமைந்துள்ள குணம்
தொண்டு, கடமை முதலியவற்றை நோக்குழிப்
பெண்ணுலகு முதன்மை பெற்று விளங்குவது
நன்கு புலனாகும். ஆணுலகின் போற்றிற்கு;
மனவளத்துக்கும், நலத்துக்கும் பிற ஆக்கத்துக்கும்
நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகு என்பது
எவரும் அறிந்த ஒன்று. இவ்வெற்றி வாய்ந்த
பெண்ணுலகிற்கு முதன்மை வழங்குவதனால்
நேரும் இழுக்கு ஒன்றுமில்லை”
எனப் பெண்ணின் பெருமையைப் பற்றி திரு.வி.க குறிப்பிடுகின்றார்.
பெண் அடிமை களைதல்
காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஆணும் பெண்ணும் சம உரிமை கொண்டவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதற்கு சங்க நூல்களே சான்று பகரும். பின்னைய நாளில் அதாவது சுமிருதி காலத்தில் பெண்மக்கள் உரிமை நமது நாட்டில் கடியப்பட்டது. பெண்களுக்கு முதன்முதலில் கல்வி மறுக்கப்பட்டு அவர்களின் அறிவு வளர்ச்சி தடை செய்யப்பட்டது.
பெண்களைச் சமுதாயக் கட்டுப்பாடுகள் எனும் தவறான விலங்கிட்டுக் கொடுமைப்படுத்தியதால் பெண்ணினத்திற்கு விளைந்துள்ள தீமைகளுக்கு அளவே இல்லை என்பதை திரு.வி.க.
“பெண் உற்ற வயதடைந்து பகுத்தறிவு பெறா முன்னமே
ஒருவருக்கு மணம் செய்வித்தல், கைம்மை எய்தினால்
மொட்டையடித்து அவளை மான பங்கஞ் செய்தல்,
அவளைப் பசியால் மெலிவித்தல், பல பெண்கள்
ஒருவனை மணத்தல், பெண் விபச்சாரத்திற்குத்
தண்டனை விதித்தல், ஆடவன் எச்சிலைத்
தின்னுமாறு மகளிரை வலியுறுத்தல், இன்னோரன்ன
பிறகட்டுப்பாட்டுகள் பெண்ணுலகின் உயிர்நாடியைப்
போக்கிவிட்டன. இக்கட்டுப்பாடுகள் ஆணுலகிற்கு
உண்டோ? இல்லை”
எனக் குறிப்பிடுகிறார். மேலும் ஒரு பெண்ணை வீட்டில் சிறைப்படுத்தி வாழும் உரிமை ஆண்களுக்குக் கிடையாது கட்டுப்பாடு என்பது ஆண் பெண் இருசாரர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் திரு.வி.க.
சமூகத்தில் வழுக்கி விழுந்த பெண்கள்
சமூகத்தில் வழுக்கி விழுந்த பெண்களின் நிலைக்காக வருந்தியவர் திரு.வி.க. அவர்களின் இந்நிலைக்கு ஆண் விலங்குகளே காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். இவர்களின் வாழ்க்கை உய்வதற்கு இச்சமூகம் உடனடியாக ஏதேனும் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
“பெண்ணுலகில் வழுக்கி வீழ்தல் நேர்தலுக்கு
ஆணுலகிலுள்ள விலங்கு நீர்மையே மூலம்
என்று காந்தியடிகள் பேசுவர். அப்பேச்சும்
எழுத்தும் நாட்டில் நல் உணர்ச்சியை எழுப்பின
அவை எனது முயற்சிக்கு துணையாயின இச்
சகோதரிகள் ஏன்பொட்டு கட்டிப் பதியிலார்
என்னும் பெயர் தாங்குதல் வேண்டும்? பதியிலார்
என்னும் பெயரே இவர்களை பாழ்படுத்துகிறது.
இவர்கள் மணவாழ்க்கை ஏற்பது நலம். இவர்களை
மணக்க ஆடவர்க்கு அஞ்சா நெஞ்சம் வேண்டும்.
இவர்களை மணக்க வெளிவருவாரே சிறந்த
சீர்த்திருத்தக்காரராவார்”
என்று ஆடவருலகம் பெண்களின் இந்தநிலையைப் போக்க அவர்களை மணஞ்செய்தல் தக்கது என்று அறிவுறுத்துகிறார்.
பெண்கல்வி
பழந்தமிழ் நாட்டுப் பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக உரிமை மிக்கவர்களாகத் திகழ்ந்து வந்துள்ளனர். வெள்ளிவீதியார், ஔவையார், பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர், எயினி முதலியோர் அந்நாளில் தமிழ் வளர்த்த பெண்மணிகளாவர்.
பெண்களின் கல்வி வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்ட திரு.வி.க பெண்மக்கள் கல்வியறிவு இன்றியும் தொழில் ஞானமின்றியும் வளர்வது மரம் வளர்வது போலாகும் என்பர். மேலும்;
“கல்வியறிவில்லாத ஒருத்தி நாயகனின்
வருவாய் நிலையை கவனிப்பதில்லை. மூடப்
பெண்களால் குடும்பங்கள் வறுமையால்
பீடிக்கப்படுகின்றன. திருக்குறள் முதலிய
நூல்களைப்பெண்மக்கள் பயின்று அறிவு
வளம் பெறாமையால் நமது நாடே சிறுமையுற்று
நலிகிறது. பெண்மக்கள் போதிய பொருளாதார
அறிவு வாய்க்க பெறுவார்களாயின்
அவர்களும் தேசத் தொண்டில் தலைப்படுவார்கள்”
என்று திரு.வி.க அவர்கள் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
பெண்மக்கள் சங்கீதம், சித்திரம் எழுதுதல், தையல் வேலை, துணி நெய்தல் முதலான அறிவுக் கலையை வளர்த்துக் கொண்டால் அவர்களின் வாழ்வு நிலைக்கு அது பயன்படும் என்பதை,
“கல்வியறிவு பெறாமலும், கைத்தொழில் பயிலாமலும்,
வயதடைந்து வாழ்க்கைத் துணையாய் ஒருவனுக்கு
அமரும் பெண்மக்களின் வாழ்வு இறங்குவதற்குரியதே.
நாயகன் உத்தியோகத்தினின்றும் விலக்கப்படினும்
நோய்வாய் படினும், அல்லது மரணமடையினும்
நாயகி எவர் உதவியையும் நாடாது எவர்மாட்டும்
அணுகாது தன் கல்வியறிவால் கைத்தொழிலால்
தன் வயிற்றை வளர்த்துக் கொள்ளத்தக்க
நிலையில் இருத்தல் வேண்டும்”
என்று குறிப்பிடுகிறார்.
குழந்தை மணமறுப்பு
சிலகாலத்திற்கு முன்பு வரையில் நம்நாட்டில் சமுதாயத்தில் வேர்விட்டு வளர்ந்த ஒன்று குழந்தை மணம் என்னும் கொடுமை. குழந்தைப் பருவம் என்பது ஆண் - பெண் என்ற நினைவே உள்ளத்தில் தோன்றாத ஒரு பருவமாகும். அந்தப் பருவத்தில் திருமணம் செய்வது அவர்களது நல்வாழ்வை அழிக்கும் என்கிறார்.
விதவை மறுமணம்
இந்திய நாட்டில் இலட்சக்கணக்கான இளம் பெண்களும் சிறு குழந்தைகளும் கைம் பெண்களாக வாடுகின்றனர். அவர்களின் இந்நிலை உருவாவதற்கு முதன்மையான காரணம் குழந்தை மணமே ஆகும். மறுமணத்தை வலியுறுத்தி திரு.வி.க அவர்கள்
“உற்ற வயதடைந்து பலஆண்டு தலைவனுடன் கூடிக்
குலாவிப்-பிள்ளைப்பேறு பெற்ற ஒருத்தி கைம்பெண்
ஆவாளேல் அவள் மறுமணம் செய்யாமல் இருக்கலாம்.
விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம்.
அவள் விபசாரம் செய்து
கெட்டழிவதிலும் ஒருவனை மணந்து அவனுடன்
வாழ்தல் சிறப்பாகும்”
என்கிறார்.
புதுமைப்பெண்
திரு.வி.க அவர்கள் பெண்கள் பர்தா அணியும் மூடப்பழக்க வழக்கங்களை கண்டித்தார், பெண்கள் உரிமையுடன் வாழ்வதே புதுமைப் பெண்ணின் அடையாளம் என்பது அவர் கருத்தாகும். திரு.வி.க பெண்மக்கள் தொழில் புரிவதையும் வற்புறுத்திக் கூறுகிறார்.
“நம்பெண்மணிகள் கிராமத் தொழில்களை
பயில்வது நலந்தருவதாகும். பெண்மக்கள் உலகம்
மிகச்சுறுசுறுப்பாக இயங்குதல் வேண்டும். அவர்கள்
சுறுசுறுப்பு ஆண் உலகத்தையும் எழுப்பும் திருத்தும்”
என்று குறிப்பிடுகின்றார்.
முடிவுரை
இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் வலியுறுத்திய பெண்மை, இறைமைத் தத்துவம், திரு.வி.க.வின் எழுத்திலும், பேச்சிலும் செயலிலும் பெண்களின் சமுதாய விடுதலை இயக்கமாகப் பரிணாமம் பெற்றது என்று கூறவேண்டும். பெண்களின் பெருமையைப் போற்றியும் மறுமணத்தை எதிர்த்தும், விதவை மணத்தை ஆதரித்தும் வழுக்கி விழுந்த சகோதரிகளுக்குப் புதுவாழ்வை வற்புறுத்தியும், பெண் கல்விக்குப் புதுப்பாதையை வலியுறுத்தியும் அனைத்து நிலைகளிலும் பெண் தலைமையைப் பேணியும் இயக்கரீதியாகச் செயல்பட்டவர் திரு.வி.க. என்ற கூற்று இக்கட்டுரையின் மூலம் நிரூபணமாகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.