ஈழ மக்களின் போர்க்கால வாழ்வியல்
முனைவர் க. மகேஸ்வரி

சமுதாய அமைப்பில் மனிதன் பாதுகாப்புக் கருதி ஒருவருடன் ஒருவர் கூடி வாழத் தொடங்கினான். நாகரீக வளர்ச்சியும், மனிதர்களின் பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்ந்து வளரும் இக்காலகட்டத்தில், மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயத்தை இழந்து வருகின்றனர். எத்தகைய உயிருக்குப் பாதுகாப்புக் கருதி ஒன்றுபட்டு வாழத் தலைப்பட்டனரோ, அவ்வுயிர்களைக் கொன்றும், ஒரு சமூக அமைப்பை அழித்தும் இடத்திற்காகவும், மண்ணிற்காகவும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இச்சண்டை ஒரு பெரும் போராக உருவெடுக்கிறது.
ஒன்றுபட்டு வாழ்ந்து செழிப்புடன் வாழ வேண்டிய மண்ணில், புதைக்குழிகளும், குழிகளில் மிஞ்சிக்கிடக்கும் எலும்புக் கூடுகளுமே ஏராளமாக உள்ளன. சிறிய குழந்தைகள் முதல் வயதுமுதிர்ந்த முதியோர் வரை கை, கால்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.
“மனிதன் தொடக்கத்தில் தனித்து வாழும் இயல்பு கொண்டவனாகத் திகழ்ந்தான். பின்னர், பாதுகாப்புக் கருதி, மனிதர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, கூட்டம் கூட்டமாக வாழும் முறை தோன்றிய போதே சமூக அமைப்பு அல்லது சமுதாயம் என்ற ஒரு நிலை உருவானது. கட்டுப்பாடின்றித் திரிந்த நிலைமாறி, மக்கள் கூட்டம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய சமுதாயமாக மாறிய நிலையில், அது தனக்கென ஒரு சில வாழ்க்கைப் பண்புகளையும், நெறிகளையும் கொண்டதாகத் திகழத் தொடங்கியது. தொடக்கத்தில் உணர்வு நிலையில் வாழத் தொடங்கிய மக்கள் கூட்டம் பின்னர் பகுத்தறியும் ஆற்றலால் அறிவு நிலையில் வாழத் தலைபட்டபோது சமுதாயம் என்ற ஒரு முழு அமைப்பு உருவானது” என்று வரையறை தருகிறார் மு.கலைவேந்தன் அவர்கள்.
(திரு.வி.க. படைப்புகளில் வாழ்க்கை நெறி, ப.75)
போர் என்றாலே கொடிய தன்மையுடையது. பல உயிர்களைப் பறிக்கக் கூடியது. ஈழமண்ணில் அத்தகைய போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த பின்னும் ஓயாமல் நடைபெற்றது.
போரில் குழந்தைகள், பெண்கள், வீரர்கள் என ஏராளமானோர் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். போர்க்களம் சென்று போரிட்டு உயிர் நீத்தோர் பலர். இன்பம் மறந்தவர்களாய் இரவு வேளைகளில் கூட நிம்மதியின்றி, தூக்கம், பசி என அனைத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
“தாய் மண்ணின் கூரையிலே போர்
சேய்கூட மாய்கின்ற சோகமய கோலங்கள்” (வேதா கவிதைகள், ப.98)
என்ற வேதாவின் கவிதை வரிகளிலே புலப்பட்டுவிடும் போரின் அனைத்துத் தன்மைகளும், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு வீச்சு, ஷெல் மழை எனப் பலவகைகளில் மனித உயிர்கள் மலினப்படுத்தப்படுகின்றன. வீதிகள் தோறும் இரத்தமும் சதையுமாய், வீதிகள் தோறும் கை, கால்களை இழந்தவர்களுமாய் காட்சியளித்தது ஈழமண். உயிரைக் காத்துக் கொள்ள வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றனர்.
“துப்பாக்கி வெடிச்சத்தம்
தொடர்ந்து கேட்கின்றது
... ... ... ... ...
பதுங்கு குழிகளில்
மனிதர்கள் தவிக்க
தொடர்கிறது அந்த இரவு
மானிடத்தின் மரணத்திற்கு
இரத்தம் தோய்ந்த இந்த
தெரு சடலங்கள்
கற்பிழந்த பெண்கள்
கருகிக் காய்ந்த குழந்தை” (விலங்கிடப்பட்ட மானுடம், ப.15)
கவிஞர் சுல்பிகாவின் இக்கவிதை வரிகள், விடிகின்ற பொழுதுக்குள் மீளாத துன்பங்களைத் தருகின்ற போரின் கொடிய நடவடிக்கைகளை எடுத்தியம்புகிறது. இரவு விடிவதற்கு முன், கற்பை இழந்து உயிரைத் துறந்த பெண்கள், குண்டுகளின் தீப்பசிக்கு இரையான குழந்தைகள் ஆகியோரது மரணத்தை பறைசாட்டுகின்றது.
கொட்டும் குருதியுமாய், உடலில் உறுப்புகளை இழந்தவர்களாய் பலர் நடைபிணமாக மரணித்து வாழ்கின்ற துயரமான நிலையில் பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். விலை மதிப்பற்ற மனித உயிர்களைப் பறித்தெடுத்து செழிப்பான ஈழபூமியை வெற்றுடல்கள் கிடக்கின்ற பிணக்காடாக மாற்றிவிட்டது.
“எங்கள் பெண்களும் குழந்தைகளும்
அப்பாவி இளைஞரும்
துப்பாக்கிகள் மீதும்
அதிகாரங்கள் மீதும்
வெறிகொண்டவர்களால் மட்டுமே
சூழப்பட்டுள்ளனர்.
கிழக்கிலும் மேற்கிலும்
வடக்கிலும் தெற்கிலும்
தீவின் திசையெங்கும்
வெறிகொண்டவர் அலைகின்றனர்” (மை கவிதைத் தொகுதி, ப.81)
என்ற தர்மினியின் கவிதை, போரால் மக்கள் எத்திசையிலும், எங்கு சென்றாலும் நிம்மதியற்ற, சாத்தியமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் கூறுகின்றது.
போரில் பெண்களுக்கு ஏற்பட்டக் கொடூரச் செயல்கள்
போர் மேற்கொள்கின்ற சிங்கள இராணுவப்படையினர், இரவு வேளைகளில் தமிழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களின் ‘கற்பு’ சூறையாடப்படுகிறது. அவ்வரக்கர்களின் செயல் அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அப்பெண்களின் மேல் வெடி வைத்து அவர்களது உயிரையும் பறித்துவிடுகின்றனர்.
இவ்வகையில் உயிர் வாங்கப்பட்ட சில பெண்களின் கொடூர மரணத்தைக் கவிஞர்கள் தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். படையினரின் இக்கொடிய செயலால் மரணமடைந்தவர்களுள் முக்கியமானவர்கள் ‘மன்னம்பேரி’ மற்றும் ‘கோணேஸ்வரி’ ஆகியோர் ஆவர்.
“1971 ஜே. வி. பி. கிளர்ச்சியில் பங்கு கொண்டவர் மன்னம்பேரி (22). பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவர். 1971, ஏப்ரல் 16ல் படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.” (பெயல் மணக்கும் பொழுது, ப.44)
“கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ஆம் காலனியைச் சேர்ந்தவர். 1997, மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரெனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.” (மேலது, ப.44)
இத்தகைய மிகப் பெரிய கொடுமை, ஈழமண்ணில் தமிழ்ப் பெண்களுக்கு, யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு நடைபெற்றுள்ளது. இப்போர்க்காலச் சூழலில் இன்னும் பலர் பல கொடுமைகளைத் தாங்கியவர்களாய் இருப்பதை எல்லாம் கவிஞர்களின் கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.
“... ... ... ... ...
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று.
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று
அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்” (பெயல் மணக்கும் பொழுது, பக்.43-44)
எதிரிகளின் இக்கொடிய செயல்களால் மரணித்த கோணேஸ்வரியும் இவரைப் போன்ற பலரது மரணமும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு விடியலும் ஏதேனும் ஒரு வகையிலாயினும் வாழ்விற்கு இனிமை சேர்க்கக் கூடியதாக அமைதல் வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றைக் கொண்டாடி மகிழ்வுடன் வாழ வேண்டும். ’இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை’ என்பது வாழ்க்கையின் உண்மைக் கருத்தாகும். ஆனால் ஈழ மண்ணில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கைத் துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே அனுபவித்துக் கொண்டு இன்பம் கையில் எட்டாக் கனியாக மாறிவிட்டது.
தொடரும் மரணங்கள்
போரில் உறவுகளை இழந்து தான் மட்டும் தனித்து வாழும் வாழ்வை ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகின்றனர். இரத்தமும் சதைகளையும் பார்த்துக் கொண்டே வாழ்க்கை நகர்கிறது. துன்பம் நீங்கி விடியலை அடையும் என்று எத்தனை நாட்களுக்கு நம்பிக் கொண்டு இன்னும் வாழ்வது என்று வாழ்வு பற்றிய நம்பிக்கையற்ற நிலையை,
“இரத்த வாடைகளைச் சுவாசித்துக் கொண்டு
இயலாமைகளைச் சுமந்து கொண்டு
துரோகங்களைச் சகித்துக் கொண்டு
இரத்தக் கண்ணீர் வடித்தபடியே
இன்னும் எத்தனை நாட்களுக்கு
அப்பாவிப் பொதுமக்களாய்
புதிய பூமியை எதிர்பார்த்தபடியே
வாழ்வது?” (மை கவிதைத் தொகுப்பு, ப.113)
எனக் கூறும் கவிஞர் மரியாவின் இக்கவிதை மூலம் புலப்படுகிறது. இரவும் பகலும் சாவின் தடையங்களும் வன்மத்தின் நிழல்களுமே சூழ்ந்து கொண்டு நகரும் தருணங்களில் இனிய வாழ்வை உணர்வது கனவிலும் கூட சாத்தியமற்றது.
நிச்சயமற்ற வாழ்க்கை
“இரத்த சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும் போது
... ... ... ... ...” (பெயல் மணக்கும் பொழுது, ப.107)
எனக் கூறும் கவிஞர் சிவரமணியின் கவிதை வரிகளே மனிதாபிமானம் அற்ற மனிதனின் மிருகச் செயலால் இன்னொரு மனித உயிர் அழியக் கூடிய தன்மை, பிறக்கும் பொழுதே சிதறடிக்கப்படும் வாழ்க்கையைப் பறைசாட்டுகின்றது.
வாழ்க்கைப் போராட்டத்தில் உயிர் வாழ்வதே போராட்டமாக, ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான சாத்தியமற்ற தருணமாக நகர்ந்துள்ளது மக்களின் வாழ்வு. மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுவது உணவு, உடை, உறையுள். ஈழத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, புதைகுழிகளே இல்லங்களாக கொண்டு வாழ்ந்துள்ளனர். எந்த நேரமும் குண்டுகள் வீசப்படலாம், ஷெல் மழை பொழியப்படலாம் என்னுமோர் வாழ்க்கைப் புலத்தில் வாழ்ந்துள்ளனர். இப்படியான ஓர் வாழ்வினை வாழும் அவர்களது நிலையினைப் பற்றி எடுத்துரைக்கிறார் கவிஞர் உமையாள்.
“பதுங்கு குழியும் கூடப்
பாதுகாப்பற்றதே
எமது இன்றைய வாழ்வு.
அஸ்தமித்த சூரியன்
அரங்கிற்கு வருமுன்பே
குண்டு கொட்டிச்
செல்லும் கொலை விமானங்கள்
... ... ... ... ...
நாளைய இருப்பு பற்றிய
நம்பிக்கையற்ற நடமாடும்
உயிர்ப் பிணங்கள் நாம்.” (பெயல் மணக்கும் பொழுது, பக்.53-54)
இறந்தவர்களைத்தான் மண்ணைத் தோண்டிக் குழிக்குள் புதைப்பது மரபு. அக்குழிகள் பாதுகாக்கப்படும் விதத்தில் முள்வேலி அல்லது கல்லறை எழுப்பப்படுவது வழக்கம். ஆனால் புதைக்குழிகளுக்குள் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு மட்டுமே தப்பி உயிர் பிழைக்க இயலும். குண்டுகள் கொட்டும் பொழுது அவர்களது நிலை பாதுகாப்பற்றதே. ஈழ மண்ணில் தமிழவர்களின் வாழ்விடமே புதை குழிகளாகவும், அதில் உயிருடன் பதுங்கி இருப்பதனாலும் உயிர்வாழும் பிணங்கள் எனக் குறிப்பிடுகின்றார் கவிஞர்.
அகதிகளின் துயரம்
புலம்பெயர்ந்து அகதிகளாக செல்லும் மக்கள் அகதி முகாம்களில் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர். கிராமங்களில் கொட்டாய்களில் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போன்று, அனைவரும் ஒரே இடத்தில் கம்பிவேலிகளுக்கிடையில் பாதுகாப்பும் சுகாதாரமும் அற்ற நிலையில் கட்டுப்பாட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தையை இழந்த பெற்றோரும், பெற்றவர்களை இழந்த குழந்தைகளும் துன்பப்படும் வாழ்க்கை. உண்ண உணவும், உறங்க இடமுமின்றி, அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட வழியற்ற நிலையில் வாழ்கின்றனர்.
அகதி முகாமில் குழந்தையின் இருப்பைப் பதிவு செய்ய, அக்குழந்தையிடம் அம்மாவைப் பற்றிக் கேட்ட பொழுது அங்குள்ள அனைவரின் முகத்தையும் பார்த்து, தன் தாயைத் தேடும் குழந்தையின் பரிதாபமான நிலையினை கவிஞர் ஆதிலட்சுமி சுட்டிக்காட்டுகிறார்.
“அகதிமுகாம் வாசலிலே
அம்மாவைத் தேடு என்று
ஐ.நா. கூறியதாமே!
யாரைப் பார்த்தாலும்
அம்மாவாய்த் தெரிகிறதா? “ (பெயரிடாத நட்சத்திரங்கள், ப.55)
அகதிமுகாமில் பசித்த வயிறுகளுக்கு உமிழ்நீரையே உணவாக மாற்றிக்கொண்டு, உறவுகளுடன் கலக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பல்வேறு இடங்களிலிருந்து வந்து அகதி முகாம்களில் தஞ்சம் கொண்ட ஈழமக்கள் ஒவ்வொருவரும் தம் துயரங்களை மனதிற்குள் புதைத்து, இன்பங்களைப் பரிமாறியவர்களாய் வாழ்ந்து ஆறுதல் அடைந்து கொள்கின்றனர்.
“அன்பு, அரவணைப்பு, மனித நேயத்தைத் தேடும் தாகம், மனிதர்கள் அன்பு காட்டும்போதும், அன்பு பெறும்போதும் நிறைவு பெறுகிறார்கள். அந்த அன்பு அப்பழுக்கில்லாத எந்த சுயலாபத்தையும் எதிர்பாராத அன்பாக இருக்கும் போது தெய்வீகம் பெறுகிறது” என்று அன்பு, மனிதநேயம் குறித்து எம்.எஸ்.உதயமூர்த்தி குறிப்பிடுகிறார். (மனிதஉறவுகள், ப.134)
நம்பிக்கையின்றி வாழ்க்கையை வாழ்பவன் மரணத்தை வேண்டி தன் கல்லறை நோக்கி செல்பவன் ஆகிறான் எனக் கூறலாம். ஈழமக்கள் பல இன்னல்களைக் கடந்து நம்பிக்கையோடு போராடி வாழ்வை வெற்றிபெற வேண்டும் என்பதைக் கவிதைகள் எடுத்துரைக்கின்றன. மேலும் சிலர்மட்டும் விடுதலையை அனுபவித்து பலர் துன்பப்படும் நிலை ஒழித்து அனைவரும் விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையை,
“இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
... ... ... ... ...
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை” (சொல்லாத சேதிகள், பக்.8-9)
என வெளிப்படுத்தும் கவிஞர் சிவரமணியின் கவிதை. ஒன்றுபட்டு வாழ்ந்து செழிப்புடன் வாழ வேண்டிய மண்ணில், புதைகுழிகளும், குழிகளில் மிஞ்சிக்கிடக்கும் எலும்புக்கூடுகளுமே ஏராளமாக உள்ளது. சுற்றங்களையும் சொந்தங்களையும் இழந்து, நிச்சயமற்று வாழும் துயர் மிகுந்த தங்களது வாழ்வில் துன்பம் நீங்குவது எப்பொழுது என்ற ஏக்கம் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படுகிறது.
போர் ஏற்படுவதற்கு முன்பு இயல்பான மனித வாழ்வில் ஏற்படக் கூடிய இன்பங்களையும் சிற்சில துன்பங்களை மட்டுமே கலந்தொரு அழகான வாழ்வினையும், போருக்குப் பின்னரான வாழ்வு துன்பங்களை மட்டும் தருவதாய் பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டு ஆறுதல் அடையும் நிலையினை கவிதைகள் காட்டுகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.