பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் வாழ்வும் வரலாறும்
முனைவர் த. தியாகராஜன்
முன்னுரை
நாடோடிகளின் நாகரிகம், வரலாறு, வாழ்வு இவற்றைப் பற்றி அறிந்து கொள்வது இன்றளவில் கடினமானது எனினும், அதனை அறிந்து கொள்ள இரண்டு நிலைகள் உள்ளன. அதனை எழுதப்பட்ட நிலை, எழுதப்படாத வாய்மொழி நிலை என்று இரண்டு நிலைகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில், பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் வாழ்வும் வரலாறும் ஆராயப்பட்டுள்ளது.
நரிக்குறவர் இனத் தோற்றம்
நரிக்குறவர்களைப் பற்றி பல்வேறு வரலாறும் வாழ்வியல் உண்மைகளும் செவிவழிச் செய்தியாக வந்த வண்ணம் இருந்தாலும், அவை அனைத்தையும் மெய்ப்பிக்கும் கருத்தாக பேசப்படுவது ஒன்றுதான் இந்த நரிக்குறவர்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்டக் குறவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. தற்சமயம் நாடோடிகளாக இருக்கும் குறவர்கள் சங்ககாலக் குறவர்கள் அல்லர். இவ்வாறிருக்க, இன்று நாம் காணும் இவ்வின மக்கள் நகரங்களில் வாழ்ந்த ‘சத்ரபதி ’ என்று வீரத்துடன் அழைக்கப்படும் சிவாஜி மன்னனின் படையில் படைவீரர்களாகப் பணியாற்றியவர்கள் என்கின்றனர். சிவாஜி மன்னனுக்கும், முகலாய மன்னர்களுக்கும் இடையே ஏற்பட்டப் போரில் சிவாஜி தோற்கடிக்கப்பட்ட பின்பு, சிவாஜி ஆட்சி செய்த மராட்டியப் பகுதியில் முகலாயர்களுக்கு அடிமையாய் வாழ விரும்பாமல் நாட்டை விட்டு வெளியேறிக் காட்டை நோக்கிச் சென்றனர் என்றும், காடுகளில் மறைவிடமாக வாழ்ந்த இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாகத் தமிழகம் வந்து சேர்ந்தனர் என்றும், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தெரிகிறது.
இன அடையாளம்
* இவர்களைப் பார்த்ததும் தெரிந்துகொள்ள முடியும். இவர்களின் தோல், தலைமுடி, முகம், தலைப்பாகை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
* கையில், துப்பாக்கி, கவட்டை, வலை போன்றவைகளை எப்பொழுதும் வைத்திருப்பார்கள்.
* இவர்கள் முகத்தில் நீண்ட தாடியும், மீசையும் அடர்த்தியாக வைத்திருப்பார்கள். தலைப்பாகை கட்டியிருக்கும் இவர்களின் தோற்றமே அவர்களை நரிக்குறவர்கள் என்று காட்டுவதாக அமைந்திருக்கும்.
* இவர்கள் எங்கும் கையில் பாசியும், கம்பியும் வைத்து அதனை மாலையாக கட்டிக்கொண்டே இருப்பார்கள்.
* திருவிழாக் காலங்களில் விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பலூன், பச்சைக்குத்துதல் போன்ற பல வேலைகளைச் செய்கின்றனர்.
* பேருந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள் போன்ற பயணப் பொது இடங்களில் எப்போதும் இவர்களைப் பார்க்க முடியும்.
இவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இவர்கள் நாடோடிகளைப் போலவே தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பார்கள்.
நரிக்குறவர் பெயர் காரணம்
“தமிழகத்தில் ‘திருந்தாத நிலையில்’ நாகரிகம் அறியாமல் இருக்கும் பழங்குடி மக்களைப் பார்த்துத்தான் குறவர் என்று அழைத்தனர். அவ்வகையில் ஏறத்தாழ எழுபது வகையான குறவர்கள் இருக்கின்றனர். இருந்தாலும், இவர்களைத் தொழில் அடிப்படையில்,
* பூனை குத்தும் குறவர்
* உப்புக் குறவர்
* மலைக் குறவர்
என பல வகையினராகப் பிரித்திருக்கின்றனர்”
என்று இவர்கள் இனத்தைச் சேர்ந்த ‘துரைக்குட்டி’ என்பவர் கூறுகின்றார்.
அதிலும், நரியினை வேட்டையாடி அதன் இறைச்சியை உண்டு விட்டு, அதன் தோல் , பல், நகம், வால், கொம்பு போன்றவைகளைப் பதப்படுத்தி, அவற்றை ஊர் ஊராகக் கொண்டு சென்று விற்று வருவதால், இவர்களுக்கு நரிக்குறவர்கள் எனப்பெயர் வந்தது என்கின்றனர்.
நரிக்குறவர்களின் மொழி
நரிக்குறவர்கள் இனம் நாடு முழுவதும் பரவலாக இருந்து வருகின்றனர். இவர்களுடைய மொழியைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த வண்ணமே உள்ளனர். எனினும், இம்மொழி எழுத்து வடிவம் இல்லாத மொழியாக, பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மொழியாகவே இருக்கிறது. இவர்கள் ஓரிடத்தில் வாழாமல் வேட்டையாடுவதற்கும், பாசிமணிகளைக் கோர்த்து விற்பனைச் செய்வதற்கும் இடமிட்டு இடம், ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் என்று இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் இவர்கள் கலாச்சாரம், பண்பாடு, மொழி அனைத்திலும் இவர்கள் செல்லும் பகுதியில் பேசப்படும் பல்வேறு மொழிகள் கலந்த நிலையே இருக்கிறது. இவர்கள் மொழியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, உருது, குஜராத்தி என 24 மொழிகளின் கலப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும் ‘பத்மபாரதி’ என்பவர் தனது ஆய்வில் ‘தமிழ், தெலுங்கு, ஹிந்தி’ என்ற 3 மொழியின் கலப்பில் இவர்கள் மொழியினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றார்.
இதனடிப்படையில் பெரம்பலூர் வட்டார நரிக்குறவ மக்களிடம், அவர்கள் பயன்படுத்தும் மொழியைப் பற்றிக் கேட்ட போது அவர்களும் இதனையே கூறுகின்றனர்.
நரிகுறவர்கள் பேசும் மொழி ‘வாக்ரிபோலி’ என்றும், அவர்கள் பேசும் மொழி ஒரு கலப்பு மொழி என்றும் அறிய முடிகிறது. இந்த மொழி இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ் பேசும் மக்களுக்கு இம்மொழி இன்னும் புரியாத மொழியாகவே உள்ளது என்று ‘சீனுசர்மா’ என்பவர் கூறுகின்றார்.
பெரம்பலூர் வட்டார நரிக்குறவரின் வாழ்வு
பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்கள் தமது வாழ்விடங்களைச் சுற்று வட்டார பகுதி முழுவதும் அமைத்துள்ளனர். எனினும், இவர்கள் பெரம்பலூர் வட்டாரத்தில் காரை, எரையூர், சிறுவாச்சூர், பெரம்பலூர், மலையளப்பட்டி, மலையப்பாநகர், அல்லிநகரம் போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். காரை கிராமத்தில் இருக்கும் நரிக்குறவர்களை அவர்கள் வழிபடும் தெய்வங்கள் வழியாக;
* காளிதேவியை வழிபட்டு எருமையைக் காணிக்கையாக பலியிடுபவர்கள்.
* மீனாட்சி தேவியை வழிபட்டு ஆட்டைக் காணிக்கையாக பலியிடுபவர்கள்.
என்று இரண்டு பிரிவினராகப் பிரிக்கின்றனர் என்பதை இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ‘ஆதிமுலம்’ என்பவர் கூறுகிறார்.
இந்தக் கிராமத்தில் உள்ள ஆண்கள் வேட்டையாடுதலை விட்டுவிட்டனர். இவர்கள் பொதுவாகப் பாசிமணிகளைப் பின்னி வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து பொருளீட்டி வருகின்றனர். பெண்கள் பாசிமணிகளைப் பின்னுவதிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும் ஈடுபடுகின்றனர்.
பெரம்பலூர் வட்டாரத்தில் வசிக்கும் இம்மக்களின் குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்களும் விடுமுறை நாட்களில் பாசிமணிகள் பின்னுகின்றனர்.அதனை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாது படிப்பிலும் கவனம் செலுத்துவதைக் காணமுடிகின்றது. இங்கு இவர்கள் படிப்பதற்காக சிறுவாச்சூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிகழ்வுகளின் மூலம் இவர்களின் வாழ்வில் இன்று பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதைக் காணமுடிகின்றது.
முடிவுரை
பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் கூறுகள் பற்றியும், இம்மக்களின் தோற்றம், தொன்மை வரலாறு, இவர்களுக்கு நரிக்குறவர் என்று பெயர் தோன்ற காரணம், இவர்களின் தொழில், தொழில் சார்ந்த பழக்கமுறைகள், இன்றைய நிலையில் இவர்களின் கல்விச்சூழல் போன்றவற்றை மேலும் விரிவாக ஆராய முற்பட வேண்டும். மேலும் இம்மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான செயல் திட்டங்களை அரசு செய்து வருகிறது. அதனை, அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு திட்டமு, இவர்களுக்கு முழுமையாகச் சென்றடையாத நிலையை இவர்களை சந்தித்த போது, நம்மால் உணர முடிந்தது. இதனடிப்படையில் இவர்களின் வாழ்வியல் தரம் இன்றளவும் மேம்படாத நிலையில் பின் தங்கியே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பார்வை நூல்
1. நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர். பத்மபாரதி, புதுவை மொழியால் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, பதிப்பு - 1978
2. நரிக்குறவ பழங்குடி இன மக்கள் - சீனுவாசவர்மா.கோ, சிதம்பரம், அண்ணாமலை நகர், பதிப்பு - 2004
3. தமிழக நாட்டுப்புறவியல் - சற்குணவதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.