வரலாற்று நோக்கில் புறநானூற்று அறச்சமூகம்
முனைவர் சு. மாதவன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.
முன்னுரை
கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.1ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் படைக்கப்பட்டவை சங்க இலக்கியங்கள் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையாகும். இந்தக் காலகட்டம் என்பது சிற்றரசுகளை அழித்துப் பேரரசுகள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டமாகும். சமூகவியல் பார்வையில் சொல்வதானால், இனக்குழுச் சமூகம் அழிந்து நிலவுடைமைச் சமூகம் கட்டமைக்கப்பட்ட காலகட்டமாகும். சமூக வாழ்நிலையில், பரத்தையர் ஒழுக்கம் போன்றவற்றால் தனிமனித, குடும்ப நெறிச் சிதைவுகளும் போர், நிலையற்ற ஆட்சி போன்றவற்றால் அரசியல், சமூக நெறிப் பிறழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. இத்தகைய தனிமனித, அரச, சமூக நெறிச் சிதைவுகளிலிருந்து சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்ற முனைந்தனர் சங்கப் புலவர் பெருமக்கள். அவர்கள் தங்கள் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்திச் சொல்லாமல், அறிவுறுத்திச் சொல்லும் பாங்கைக் கைக்கொண்டனர். அறந்தலைப்பட்ட சமூகம் அமைய புறந்தலைப்பட்ட சமூகத்தின், குறிப்பாக அரச சமூகத்தின் போர்வெறியும் வேள்விநெறியும் குறைய வேண்டியது அவசியமாகிறது.
சமூக நிறுவனங்கள் அனைத்தும் அரச சமூகத்தின் கருத்தியலால் ஆளப்படும் சமூக அமைப்பில் சங்கச் சமூகக் கோட்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால்தான் தனிமனிதர்களின் நீரோடை போன்ற இயங்குதலைப் பெறும். இத்தகைய கண்ணோட்டத்தில், சங்ககாலப் புறநானூற்றுப் புலவர்கள் அறச் சமூக உருவாக்கத்துக்கு ஆற்றியுள்ள கருத்தியல் - கோட்பாட்டுக் கொடைகளை மறுபரிசீலனை செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க இலக்கியத் திணை, துறை மரபுகள்
சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுள் இலங்கும் சிந்தனைகள் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைத் தொகுத்தாரின் பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைத் தொகுத்தாரின் பொதுப்பார்வையில் அவை அகம், புறம் எனப்பட்டன. அக மாந்தர்கள்தான் புற மாந்தர்களாகவும் செயலாற்றியுள்ளனர் என்ற நோக்குநிலையில் பார்த்தால் ஒன்று மற்றொன்றின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்குரவுகளைப் புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில், சங்க இலக்கியத் திணை, துறை மரபுகளை எண்ணிப் பார்க்கலாம்.
சங்க இலக்கியங்களுகான திணை, துறை பாகுபாடுகள் முற்றிலும் புறப்பொருள் வெண்பா மாலையின் இலக்கப்படிச் செய்யப்பட்டுள்ளன. வேறுவகையில் சொன்னால், தொல்காப்பிய இலக்கண வரையறைகளுக்கு அப்பாற்பட்ட திணைகளும் துறைகளும் சங்க இலக்கியங்களுக்குள் உள்ளன. திணை என்பது ஒழுக்கம். ஆகலின், அகத்திணை, புறத்திணை என்பன அவ்வத்திணைக்களுக்கேயுரிய ஒழுக்கலாற்று வரையறைகளைக் குறிக்கின்றன.
பொருள் இலக்கணம் என்பதுள் உள்ள ‘பொருள்’ என்பது வாழ்க்கை என்னும் பொருளடையது. எனவே, வாழ்க்கையின் பொருளை, வாழ்க்கைக்கான பொருளை எடுத்துரைப்பதே அகம், புறம் என்பன. இவற்றோடு ‘திணை’ என்னும் வாழ்வியலொழுகலாறு - வாழ்வியல் ஒழுக்கம் இணையும் போது அகத்திணை, புறத்திணை எனப்படுகின்றன. இத்திணைகளின் உள் இயல்புகளைத் தனித்தனி அலகுகளாக விவரிப்பன துறைகள் எனப்படுகின்றன. இதை,
“பொருள், பொதுவான பாடுபொருள், அல்லது
நுவல்பொருள், திணை - பாட்டுச் சூழல், மற்றும்
துறை - பாட்டின் அடிக்கருத்து”
(கைலாசபதி., க.2006: 261)
எனப் பாகுபடுத்தி விளக்குகிறார். க. கைலாசபதி இந்தப் புரிதலோடு மேலும் நுட்பமாக நோக்குகையில், பொருள் என்பது வாழ்க்கை, திணைகள் என்பவை வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் துறைகள் என்பவை திணைகளின் பரிமாணக் கூறுகள் என்பதும் தெரிய வருகிறது.
உலகில் தமிழில் மட்டுமே பொருள் இலக்கணம் உள்ளது. தமிழில் மட்டுமே திணைகளை மலர்களின் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது; தமிழில் மட்டுமே மலர்சூடிப் போரிடும் வழக்கமும் உள்ளது. அகவாழ்க்கையில் திணை என்பது நிலத்தைக் குறிக்கிறது. புறவாழ்க்கையில் திணை என்பது உள்ளத்தை குறிக்கிறது. நிலம், நிலத்தில் விளையும் உற்பத்திப் பொருள்கள், இதனடிப்படையிலான உற்பத்தி உறவுகள் அனைத்தும் சேர்ந்து அந்தந்த நிலங்களுக்கேயுரிய வாழ்வியலால் கோட்பாடுகளை உருவாக்குகின்றன.
இவற்றில், நிலம் முதற்பொருள்; உற்பத்திப் பொருள்கள் கருப்பொருள்கள், வாழ்வியல் கோட்பாடு உரிப்பொருள் என்பது அகத்திணை வாழ்வியல். இதே முதற்பொருளில் ஆளும் மாந்தர் - அவர் சீறூர் மன்னரோ முதுகுடி மன்னரோ, குறுநில மன்னரோ, வேந்தரோ - யாராயினும் அவர் வாழும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளின் உற்பத்தி உறவுகளில் விளையும் வெட்சி முதலான அவ்வத் திணைகள் துறைகளின் நோக்குநிலைகளே புறவாழ்வியல்.
உலகியல் வாழ்க்கை பொருளியலை அடிப்படையாகக் கொண்டது. பொருளியல் வாழ்க்கை அரசியல் போக்கின் அடிப்படையில் உருவாவது. எனவே, அரசியல் போக்கை அறவியல் நோக்கு நிலையில் அமைத்தால்தான் சமூக வாழ்வியல் சுமூக வாழ்வியலாய் அமையும் என்பதைப் புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் அடிநாதமாக அமைத்துள்ளனர். போர் நிகழ்த்தும் நெறிகளை - போருக்கான படிநிலை வளர்ச்சிக் கூறுகளை - போரின் பரிணாம வளர்ச்சி நிலைகளை வெட்சி முதலான புறத்திணைகள் பாடுகின்றன. போரின் பரிமாணங்களை அவ்வத் திணைகள் சார்துறைகள் எடுத்துக் காட்டுகின்றன. இத்திணைகளைப் பாடுவதிலும், எந்தத் திணைகள் சமூக வாழ்நிலையைச் செம்மைப்படுத்துவனவோ அந்தத் திணைகளையே அதிகம் பாடியுள்ளனர் என்பது புறநானூற்றுப் புலவர்களின் சமூகநலச் சிந்தனைப் பார்வையைத் தெளிவுபடுத்துகின்றது.
புறநானூற்றுத் திணை, துறை மரபுகள்
புறம் என்றாலே போர், வீரம் என்ற ஒரு பொதுக்கருத்து மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுவிட்டது. போரையும் வீரத்தையும் தவிர்த்துப் புற இலக்கியங்களில் எவ்வளவோ சமூகச் சிந்தனைக் கூறுகள் உள்ளன என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. போர்ச்சிறப்பு, வெற்றிச் சிறப்பு, வீரச்சிறப்பு ஆகியவற்றைப் பாடியுள்ளதே புறநானூறு, மிஞ்சிப் போனால் கூடுதலாகக் கொடைச் சிறப்பும் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு பொது நோக்கு நிலை. ஆனால், இவ்வாறு சில அலகுகளுக்குள் அகப்படாத ஏராளமான சமூக அலகுகளின் எண்ணம், சிந்தனை, எதிர்பார்ப்பு, ஏக்கம், சோகம். அழுகை, கோபம், ஏமாற்றம், இலக்கு எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகப் புறநானூறு விளக்குகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பன்னிரு புறத்திணைகளுள் உழிஞைத் திணையைத் தவிர்த்த 11 திணைகளுக்கான பாடல்களைக் கொண்டுள்ளது புறநானூறு
வெட்சி - 5, வஞ்சி - 11, தும்பை - 27, வாகை - 77, காஞ்சி - 31, பாடாண் - 143, கரந்தை - 12, நொச்சி - 6, பொதுவியல் - 70, கைக்கிளை - 3, பெருந்திணை - 5 என ஆக மொத்தம் 398 பாடல்கள் புறநானூற்றில் அமைந்துள்ளன.
இவற்றுள் திணைகளில் பாடாண் திணையே மிகுதியாப் பாடப் பெற்றுள்ளது. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 65, துறைகளிலும் பாடாண் திணை சார்ந்த இயன்மொழித் துறை மட்டும் 51 பாடல்களில் இடம் பெற்றுள்ளது. இத்திணைகளும் துறைகளும் தொல்காப்பியர் காலத்துக்கு முந்திய இலக்கணவாதிகளால் வீரம், போர் குறித்தன மட்டுமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியரும் அவருக்குப் பின்வந்த புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் ஐயனாரிதனார் போன்றோரும் ஒவ்வொரு திணையினது புழங்கு தளங்களை மறப் பொருண்மைகளிலிருந்து அறப்பொருண்மைகளை நோக்கி நகர்த்தியுள்ளனர். புலவர்களும் தங்கள் பாடல்களில் இத்தகைய மாற்றங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் சமூக மாற்றத்தின் விளைவுகளாகும். இனக்குழுச் சமூகமாக இருந்த சங்கச் சமூகம் நிலவுடைமைச் சமூகமாக வளர்ந்து, அந்த நிலவடைமைச் சமூகம் வணிக சமூகம் வணிக சமூகத்தின் கருக்களைத் தன்னகத்தே வளர்த்துக் கொண்டிருந்தது. இத்தகையில் சமூக மாற்றப் படிநிலை வளர்ச்சிக் கூறுகளைத் தன்னகத்தேக் கொண்டிருந்த காலம் சங்க காலமாகும்.
ஒவ்வொரு சமூக அமைப்பின் பன்முக வளர்ச்சிக்கும், பங்களிப்புச் செல்வோரைப் பாராட்டுதல் இயல்பே. அவ்வாறு, பாராட்டப் பயன்பட்ட திணைதான் பாடாண் திணை. எனவேதான், இத்திணைப் பாடல் எல்லாப் பகுதியின் தலைவர்கள், வள்ளல்கள் மீதும் பாடப்பட்டனவாகத் திகழ்கின்றன. போர்ச்சிறப்பு, வெற்றிச் சிறப்புகளை மட்டுமே பாடப்பட்டுவந்த பாடாண் திணையின் துறைப்பாகுபாடுகளில் அன்பு, அருள், ஈகை போன்ற உயர்ந்த பண்பு நலன்களும் இடம் பெற்றிருப்பதை இத்தகைய கண்ணோட்டத்தில் காணலாம். அதிலும் - அதாவது துறைப்பாகுபாட்டிலும் இயன்மொழி அதிகமாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாடப்படும் ஒருவரின் சிறப்புக்கும் இயல்புக்கும் அவர்களது முன்னோர்களின் மரபணு - இயல்புத் தொடர்ச்சி என்பதை மனங்கொண்டு, முன்னோர்களின் மேதக்க செயல்களை வீரன் ஒருவன் மீது ஏற்றிப் புகழ்வதே இயன் மொழி அதிகமாக இடம் பெற்றிருப்பதற்கான காரணமாகும்.
இனக்குழு அறச்சமூகம்
சங்கச் சமூகத்தின் தலைமை மாந்தர்களாக அறியப்படும் சிற்றூர் மன்னன், குறுநில மன்னர், முதுகுடி மன்னர், வேந்தர் ஆகிய நால்வரில் முதலிருவரும் இனக்குழுச் சமூகத்தவராவர், இறுதி இருவரில் ஒருவர் நிலவுடைமைச் சமூக அமைப்பின் தொடக்ககாலத்தவர், அடுத்தவர் நிலவுடைமை சமூக அமைப்பின் முதிர்நிலைக் காலத்தவராவர். இவர்களுள், இனக்குழுச் சமூகத்தவர் பெரும்பான்மையோர் குறிஞ்சி, முல்லை நிலங்களிலும், சிறுபான்மையோர் மருதம், நெய்தல் நிலங்களிலும் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். நிலவுடைமைச் சமூகத்தவர் பலரும் மருத நிலத்தின் பரந்த பகுதிகளிலும் சிலர், பிற நிலங்களிலும் வாழ்ந்து வந்தனர். கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், புறநானூற்றின் 285 முதல் 335 வரையிலான பாடல்கள் சிற்றூர் மன்னர்களைப் பற்றியவை. இவர்கள் புன்செய் நிலப்பகுதியை ஆண்டவர்களாய்க் காணப்படுகின்றனர். 336 முதல் 335 வரையிலான பாடலக்ள் முதுகுடி மன்னர்களைப் பற்றியவை. இவர்கள் மருத நிலத்தை ஆண்டவராய் உள்ளனர். குறுநில மன்னர்கள் மலைக்குத் தலைவர்களாகவே உள்ளனர். வேந்தர்கள் பெரும்பான்மை மருத நிலப்பகுதிகளையும் சிறுபான்மை பிறநிலப் பகுதிகளையும் ஆண்டவர்களாகத் திகழ்கின்றனர். (மாதையன்., பெ.2004:14-23)
புறநானூற்றில் மிகச்சில பாடல்களே வெட்சி, கரந்தை, போர்களைப் பாடுவனவாய் உள்ளன. வெட்சிப் பாடல்கள் - 5, கரந்தைப் பாடல்கள் - 12, இவை அனைத்தும் பாடப்பட்டோர் பெயரில்லாப் பாடல்களாகவே உள்ளன. மூதின் முல்லை, வல்லாண் முல்லைப் பாடல்களும் பாடப்பட்டோர் பெயரில்லாப் பாடல்களாகவே உள்ளன. இவை அனைத்தும் சிற்றூர் மன்னர்கள் தமக்காக நிலங்கவர் போர்களில் ஈடுபட்டதாகச் சான்றொன்றும் இல்லை. ஆனால், வெட்சி, கரந்தைப் போர்களில் மிகுதியாக ஈடுபட்டுள்ளனர். போரிலும் ஈடுபடுவதிலும் வெட்சி, கரந்தைப் போர்களில் மட்டுமே ஈடுபடுவது என்ற அறத்தைப் பின்பற்றிய சமூகமாக இனக்குழுச் சமூகம் விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
இனக்குழுச் சமூகத் தொழில்கள்
இனக்குழுவாக இணைந்து ஓரிடத்தில் தங்கிக் கூடிப் பேசிப் பகிர்ந்து வாழ்வதற்கு முன்னர் மனித சமூகம் நாடோடி - வேட்டைச் சமூகமாக இருந்து வந்துள்ளது. வேட்டைச் சமூகத்தின் பண்புகளும் தொழில்களும் இனக்குழுச் சமூகத்திலும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. வாழ்வியலோடு வயிற்றியலோடு தொடர்புடைய தொழிலாக இருந்த வேட்டையாடுதலைப் புறநானூறு பரக்கப் பதிவு செய்துள்ளது.
மனித சமூகத்தின் முதற்கருவி கற்கருவி, முதற்கலங்கள் மட்கலங்களாகும். இவற்றைப் பயன்படுத்தி வேட்டைச் சமூகம் தன் வாழ்வியலைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. வேட்டுவர்களின் தலைவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலை வன்பரணார் புறநானூற்றில் 152வது பாடலில் பாடியுள்ளார். வேட்டுவச் சிறார்கள், விற்பயிற்சி செய்தமையை ஆவூர் கீழாரும் (புறநா.322) ஆலத்தூர் கிழாரும் (புற நா.324) ஆழகுறக் காட்டியுள்ளனர். வேட்டுவர்களின் குடியிருப்புகளுக்கருகே எயினப் பெண்கள் பறவைகளை வேட்டையாடி அவற்றைச் சுட்டுச் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பதை ஆலங்குடி வங்கனாரும் (புறநா.319), வீரை வெளியனாரும் (புறநா.320) பாடியுள்ளனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.