சங்க இலக்கியத்தில் சாதாரணர் - ஒரு சமுகவியல் வாசிப்பு
வாசுகி நடேசன்
மேனாள் ஆசிரியர்,
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.
(தற்போது வசிப்பு: இத்தாலி)
சாதரணர் பற்றிய வாசித்தல்
மனிதனால் உருவாக்கப்படும் எவையும் அவனைப் புறந்தள்ளிவிட்டு எழுவதில்லை. இலக்கியமும் இந்த விதிக்கு உட்பட்டதே. அரசரைப் பாடினாலும் கடவுளைப் பாடினாலும் அதில் மையப்புள்ளியாக இருப்பவன் மனிதனே. ஆனால், கடவுளும் அரசரும் சிலராக இருக்கச் சாதாரண மக்கள் பலராக இருக்கின்றனர். இச்சாதரணர் இலக்கியங்களில் முதன்மை பெற்றது 17 மற்றும்18ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆகும். அதற்கானச் சூழலும் அக்காலத்திலேயே கனிந்து வந்திருக்கிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் சாதாரணர் பற்றி வாசிப்பதற்கான இடம் கணிசமாக உள்ளமை இவ்வாய்வின் மூலம் தெரியவரும் உண்மையாகும்.
ஆடல், பாடல் முதலிய கலை வடிவங்கள் ஆரம்பத்தில் ஒரு சமூகக்குழுவின் தேவை அடிப்படையிலேயேத் தோற்றம் பெற்றன. வேட்டைச் சமூகத்தில் முதலில் சுவரில் வரையும் சித்திரங்களால் மிக அடிப்படையான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பின்பு வேட்டை வளத்தை அதிகரிக்கச் செய்தல் என்ற தொன்மத்தின் அடிப்படையில் ஆட்டமும் விலங்குகள் போன்று பல்வேறு ஒலி எழுப்புதலும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமது எண்ணங்கள் தேவைகள், உணர்வுகள் என்பவற்றை மொழிவாயிலாக வெளிப்படுத்தும் ஆற்றலை மனிதன் அடைந்த போது வெற்றொலிகள் கருத்துள்ள பாடல்களாக வடிவம் பெறுகின்றன. அப்பாடல்கள் மனித ஆற்றலுக்கப்பாற்பட்ட சக்தியை (கடவுளை) விவரிப்பனவாகவே முதலில் அமைந்தன. மனித நாகரிகம் வளரத் தேவை என்ற நிலைக்கு அப்பால் அகத்தூண்டல் அடிப்படையில் ஆடலும் பாடலும் தோற்றம் பெற்றன.
உள்ளப் பகுப்பாய்வின்(Psycho Analysis) கோட்பாட்டை உருவாக்கிய ஃபிராய்ட், "அகத் தூண்டுதல் மனிதனுடைய அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனித உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அமைகிறது" என்கிறார்.
இந்த வகையில் வாய்மொழி பாடல் மரபு தோற்றம் பெறுகிறது. இவ்வாய்மொழி மரபில் உள்ள பாடல்கள் சாதாரண மக்களின் வாழ்வியலையும் உள்ளடக்கி இருக்கும். எழுத்து வடிவம் வளர்ச்சியடைந்து செவ்வியல் இலக்கியங்கள் தோன்றும் போதும் அவ்விலக்கியங்களிலும் வாய்மொழிப் பண்புகள் பல நிலைத்து விடுகின்றன.
இயற்கையோடு மிக நெருங்கி வாழ்ந்த சங்ககாலத் தமிழர் சமூகத்தில் இப்பண்புகள் மிக அதிகம் இருப்பதில் வியப்பில்லை. அகவாழ்வையும் புறவாழ்வையும் விவரிக்கையில் இயல்பாகச் சதாரணரும் இலக்கியத்தின் கருவாகின்றனர். தமிழருக்கென சில பொதுப்பண்புகள் இருந்தாலும் கூட, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலங்களுக்கெனத் தனித்துவமான வாழ்வியலும் ஒழுக்கம் பற்றியக் கருத்தியலும் அமையக் காணலாம். சூழலியல் காரணமாக, வாழ்வியல் வேறுபடுவது மிக இயல்பானதேயாகும். ஆனால், ஒழுக்கம் சார்ந்த கருத்துக்கள் வேறுபடுவது மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டியதாகும். எடுத்துக்காட்டாக, பெண்ணுக்கு “முல்லை சான்ற கற்பு” வலியுறுத்தப்படுவதையும், மருத நிலத்து ஆணுக்கு பரத்தமை ஒழுக்கம் சமுகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாய் அமைவதையும் குறிப்பிடலாம். சங்க அக இலக்கியங்களாயினும், புற இலக்கியங்களாயினும் தற்கூற்று வெளிப்பாடுகளாகப் பெரும்பான்மையும் அமைவதும் இவற்றை வாய்மொழி மரபின் தொடர்ச்சியாகக் கொள்ள இடம் தருகிறது.
உலக மொழிகளில் ஆதி இலக்கியங்கள் பெரும்பாலும் தெய்வத்தையோ அல்லது தெய்வாம்சம் பொருந்தியவராய் அரசரையோ விவரிப்பனவாகவே உள்ளன. கிரேக்கக் காவியங்களான ஒடிசி, இலியது ஆகியனவும் வடமொழி இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் முதலியனவும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவ்விலக்கியங்கள் யாவும் கதை சொல்லும் மரபில் இருந்து கிளைத்தெழுந்தவை. உண்மைச் சம்பவங்களை ஒட்டிய தொன்மங்களின் அடிப்படையில் கற்பனையால் கட்டி எழுப்ப்பட்டவை. சங்க இலக்கியங்களும் வீரர், குறுநிலமன்னர், வள்ளல்கள், மூவேந்தர்கள் மற்றும் தெய்வங்களைப் பாடத் தவறவில்லை, வடவர் தொடர்பால் இராமர் கதை, பாரதக்கதை என்பவறில் சில கூறுகள் உருவகங்களாகவோ, உவமைகளாகவோ இவ்விலக்கியங்களில் வருவதும், தமிழருக்கே உரிய வேறு சில தொன்மங்கள் வருவதும் உண்மையே. ஆனால், இவற்றில் மேற்சுட்டிய இலக்கியங்கள் போல் அதீத கற்பனைகள் மலிந்து காணப்படவில்லை. சிலப்பதிகாரத்துக்கு முன்னால், சிறந்த மொழிவளம் உடைய தமிழில் இத்தகையத் தொன்மங்கள் சார்ந்த கதைகள், பேரிலக்கியமாகத் தோன்றாமைக்கான காரணம் யாது என்பது நோக்க வேண்டியுள்ளது. சமகால நிலைமைகளுக்கு அப்பாற்பட்டு அதீத கற்பனைகளைப் புகுத்தி பாடும் மரபு தமிழில் சங்க காலத்தில் எற்படவில்லை என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள தொல்லியற் பொருட்கள் சங்க இலக்கிய விபரிப்புக்களில் மிக நேர்த்தியாகப் பொருந்துகின்றன. இப்பொருத்தத்தினை, “தொல்லியலும் சங்க இலக்கியமும்” என்ற ஆய்வில் செ. இராசு நன்கு எடுத்துக் காட்டுகிறார். கீழடி அகழ்வாய்வுகள் இந்தப் பொருத்தப்பாட்டினை நிதர்சனமாக்கியுள்ளதுடன் சங்க இலக்கியங்களின் இயல்பான விவரிப்பை நிறுவுகின்றன. மேற்கூறிய அம்சங்கள் சாதரண மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளச் சாதகமானச் சூழலை ஏற்படுத்தித் தருகின்றன.
வாசிப்பில் கருத்தில் கொள்ள வேண்டியவை
சங்க இலக்கியங்கள் மேற்கூறியவாறு இயற்கை அமைவுக்கும் வாழ்வியலுக்குமான தொடர்புகளைக் கொண்டிருப்பது உண்மையெனினும், திட்டமிட்ட வகையில் இத்தகையப் பண்புகளை உள்வாங்கி எழுந்த இலக்கியங்களும் உள்ளன. ஐங்குறுநூற்றை இவ்வகையில் குறிப்பிடலாம். அகம், புறம், திணை என அமைந்த தமிழரின் பண்பாட்டின் தன்மையைச் சிறப்பாகக் கருதும் நிலை சங்ககாலத்தின் பிற்பகுதியிலேயே எற்பட்டுவிட்டதைப் பரிபாடலினாலும், குறிஞ்சிப்பாடலினாலும் அறிய முடிகிறது. பரிபாடலில் கற்பு நெறிப்பட்ட இல்வாழ்வுக்கு முன் காதல் நெறிப்பட்ட களவொழுக்கம் இடம் பெறுவதேச் சிறந்தது என்று ஆரியப் பிராமணருக்கு அறிவுறுத்துவதாக ஒரு பகுதி வருகிறது. (பரி9,12_ 25) குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது எனக் கூறப்படுவதும் இங்கு நோக்கத்தக்கது.
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத்தொகுக்கப்பட்ட இலக்கியங்களே. தொகுக்கப்பட்டதன் நோக்கம், தொகுத்த முறைமை ஆகியவற்றால் தொகுப்பில் இடம்பெறாது விடப்பட்ட இலக்கியங்கள் உண்டு என்பதும் பெறப்படுகிறது. 2381 பாடல்கள் கொண்ட இத்தொகுதியை 700 புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களில் 30 பெண்பாற் புலவர்களும், 25 அரசர்களும் அடங்குவர். 30 பெண்பாற் புலவர்கள் என்பது கணிசமான எண்ணிக்கை என்பதைத் தமிழ் வரலாற்றை நோக்கி அறிந்து கொள்ளலாம். இவ்விலக்கியங்கள் ஒரேகாலத்தில் எழுந்தவை அன்று. கி.மு 7ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தவைச் சேர்ந்தவை எனஅறிஞரால் கணிக்கப்படுகிறது. எனவே இந்த நீண்டகாலப் பகுதியில் சமூகத்திலும், அதனை ஒட்டிய மரபுகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் அரசர்களாகவே உள்ளனர். பிரசார ஊடகமாக இருந்தமையும் தொகுத்தக் காலத்தில் அரசர் தம்மை தொன்மையான மரபும் பாரம்பரியமும் கொண்டவராகக் காட்டுவதற்கு குழு நிலையிலிருந்து பேரரசர்களாக மாறும் காலத்துக்குரிய இப்பாடல்கள் அரசுருவாக்கத்துக்கான உதவியமையும் குறிப்பிடத்தக்கது. தொகுத்தவர்கள் திணை துறை வகுக்கையில் இலக்கண நூல்களின் வரையறைகளுக்குள் நின்று செயற்பட்டனர். இதனால் அவ்வரையறைக்குள் அடங்காத பாடல்கள் விடுபட்டிருக்கும் எனக் கருத இடமிருக்கிறது, இலக்கணக் கோட்பாடுகளும் உரையாசிரியரதும் விளக்கங்களும் இல்லாது சங்க இலக்கியங்களை விளங்கிக் கொள்ளவது மிகவும் கடினம் என்பது உண்மையே. கோட்பாடுகளை வகுத்தவர்களும், உரையாசிரியரும் தம் தம் காலச் சமூக நிலை நின்றும், தமது தனிப்பட்ட சமுகச் சார்பு நிலை நின்றும் விளக்கங்கள் அளித்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, மேற்கூறியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தனி வாசிப்பு முறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இலக்கியங்களுக்கு கருவானவர்கள்
1. சாதரண மக்கள் இலக்கியத் தலைவர், தலைவியராகக் கொண்ட பாடல்கள். இதில் போர் வீரரும் உள்ளடங்குவர்.
2. சமூகத்தில் தலைமைத்துவம் பெற்ற மக்களைத் தலைவர்களாகக் கொண்ட பாடல்கள்.
3. சிறுகுடிகளின் தலைவர்களை நேரடியாகத் தலைவர்களாகக் கொண்ட பாடல்கள்.
4. சிற்றரசர்கள் எனச் சொல்லத்தக்க வள்ளல்களைப் பாட்டுடைத் தலைவர்களாக் கொண்ட பாடல்கள்.
5. மூவேந்தர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட பாடல்கள்.
6. தெய்வத்தைப் பாடும் பாடல்கள்.
இலக்கிய கர்த்தாக்கள்
பாடப்பட்டோர் இவர்களாகப் பாடியவர்களைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1. அகப்பாடல்களில் பாத்திரம் தானாகவே தனது மனநிலையை வெளிப்படுத்திய பாடல்கள்.(ஆதிமந்தியார், வெள்ளிவீதியார் பாடல்கள்) இங்கு பாடியவரும் பாடப்பட்டவரும் ஒருவராகின்றனர். புறப்பாடல்களில் அரசருக்கும் தமக்கும் உள்ள தொடர்பையோ, வாழ்க்கை பற்றிய தமது கருத்து, உணர்வு நிலைகளையோத் தம் கூற்றாகப் வெளிப்படுத்தியப் பாடல்கள்.
ஆதிமந்தியார் பாடல் ஒன்று இங்கு நோக்கத்தக்கது. இது தன்னுணர்வுப் பாடலாக, சாதாரண ஆடுகளப்பெண்ணின் மன உணர்வை விளக்குகிறது.
“மள்ளர் குழஈய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனே
யானும் ஒரு ஆடுகள மகளே என்னைக்
கோடீர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குறிசிலுமோ ராடுகள மகனே” (குறுந் 31)
ஆட்டனந்தியை ஆதிமந்தியார் இழந்த இந்தச் செய்தியைப் பரணர் அகநாநூறுப் பாடல்கள் ஆறில் எடுத்துக் கூறியுள்ளார் (அகம் 135, 322, 226, 236, 376, 396) இதனால் சாதாரணப் பெண்ணுக்கு நிகழ்ந்த அவலம் பரவலாகச் சமூகத்தால் பேசப்பட்ட செய்தியாக இருந்தமை பெறப்படுகிறது.
2. பாத்திரம் பாடுவனவாகப் பாணர் பாடிய பாடல்கள். கலைஞர்களில் சிலர் பிறர் பாடலைப் பாடுபவர்களாக இல்லாமல், தமது புலமையால் தாமே சிறப்பான பாடல்களை இயற்ற வல்லவராய் இருந்தனர். ஔவையார் பாணர் மரபினர் என்பதற்குத் தகுந்த சான்றுகள் உண்டு. (புறம் 89), பெரும்பல்லியத்தனார் (குறுந் 203), பெரும்பல்லியத்தை(குறுந் 178), உறையூர் கூத்தனார் (குறுந்355) என்போரும் கலைகளோடு தொடர்புபட்ட பெயர்களாக உள்ளமையால் பாணர் மரபினர் எனக் கருத இடமுண்டு.
3. பாணரின் மரபு வழியைப் பின்பற்றி புலவர் பாடியமை. பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை என்பன. இவை புலவர் தம்மைப் பாணராக பாவனை செய்து பாடியவை.
சங்க அகப்பாடல்கள் பலவற்றை, திணை, துறை முதலிய இலக்கியக் குறிப்புக்களை விடுத்து, கவிதையாக மட்டும் நோக்கினால், அவை அழகான சொல்லோவியங்களாக மட்டுமன்றி எல்லா மக்களுக்கும் பொதுவான உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவே அமையும்.
“காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே”
காதலனோடு (தலைவன், தலைவி என்ற சொற்களை நீக்கிவிடவும்) கூடியிருந்த காலத்தில் மனம் திருவிழாக் கண்ட ஊர் போல நிறைவடைந்திருந்ததையும், அவன் பிரிந்த காலத்தில் அணில் ஓடிவிளையாடும் முற்றம் போல வெறுமையானதையும் காதலி எடுத்துரைக்கிறாள்.
“காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே”
காதலனோடு மகள் உடன் போனபின் அவர்களைத் தேடிச் சென்ற தாயின் மன நிலையை இக்கவிதை விளக்குகிறது. கால்கள் தடுமாறுகின்றன. பார்த்துப் பார்த்து கண்களும் ஒளி இழந்து விட்டன . அகண்ட ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களிலும் பலராக நான் பார்த்த (எனது மகளும் அவள் காதலனும் அல்லாத) பிறர் உள்ளனர். எந்தத் தாய்க்கும் உரிய ஏக்கமாகவே இது அமைகிறது. இந்த வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களை இனங்காட்டலாம்.
பொருளாதார் ஆதிக்கக் கட்டுமானமும், அதில் சாதாரணர் நிலையும்
ஒரு சமூகத்தில் யாரிடம் ஆதிக்கம் குவிந்துள்ளதோ, யாரிடம் பொருள்குவிந்துள்ளதோ அவர்களே சமூகத்தின் கட்டமைப்பை நிர்ணயிக்கிறார்கள்.
மருத நிலத்தில் கிடைத்த உபரிவருவாய், ஓய்வு நேரம் என்பன பரத்தமை ஒழுக்கத்துக்கு வித்திட்டது. இங்கு சமூக முரண்பாடு மிகுதியாய் மேற்கிளம்புகிறது. செல்வம் நிலவுடைமையாளனிடம் குவிகிறது. அவன் உற்பத்தியில் ஈடுபட்டது போக, அவனுக்காக உழவில் ஈடுபடும் ஒரு கூட்டம் (நற் 60) உருவாகிறது. இதனால் மருதநிலத் தலைவனால் காலையில் தனது தேரை எடுத்துக் கொண்டு பரத்தையிடம் செல்ல முடிந்தது. (குறுந்45). இது பொருள்வளம் ஒரு சமூகத்தின் ஒழுக்க நெறியை எப்படிக் கட்டமைக்கிறதென்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகிறது.
பொருளாதாரத்தில் மிகக் குறைந்த நிலையில் இருந்த சாதாரணன் பொருள் வளம் பெற்ற போது பரத்தையை நாடும் தலைவனாகின்றான்.
“உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீ இயும்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓரான் இல்லிற் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறமகள் வந்தென
இன்விழ வாயிற் றென்னு மூரே” (குறுந் 295)
செல்வம் மிகுந்த இன்றைய உனது சிறப்பு வாழ்க்கையெல்லாம் தலைவியை மணமுடித்ததன் பின்னரே உனக்குக் கிடைத்தன, முன் ஒரே பசுவினைக் கொண்ட குடும்பமாகவே உனது குடும்பம் இருந்தது. இன்று பசுக்கள் பலவாகப் பெருகிவிட்டன. இதனை மறந்து உனது செல்வத்தைப் பயன்படுத்திப் பரத்தையிடம் செல்லாதே, எனப் பரத்தையை நாடும் தலைவனுக்கு தோழி அறிவுறுத்துகிறாள்.
ஒரு சமூகம் இயங்க வேண்டுமாயின் அதில் பல்வேறு தொழில் முனைவோர் இருப்பர் என்பதில் ஐயமில்லை. சங்க நூல்களில் ஒன்றான புறநானூற்றில் வரும் தொழிற்பிரிவினரை இங்கு நோக்கலாம்.
“அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வாணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர், கிணையர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், தேர்ப்பாகர், சூடியர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொதுவிலை மகளிர், பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைப்பாகர், யானைவேட்டுவர், வடவடுகர், வண்ணாத்தி, வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர், வேடர்” (உ. வே .சா , “ஆய்வுரை” - புற நானூறு.பக் 73)
இவர்களில் ஆதிக்கத்தாலும், பொருளாதாரத்தாலும், சமூக மதிப்பாலும் உயர்ந்த நிலையில் இருந்த அரசர், அந்தணர் முதலிய சிலர் தவிர்த்த ஏனையோர் சாதாரணர்களே. எனினும் இச்சாதாரணர்களுக்கிடையில் கூட சிலர் மிகுந்த தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த ஏற்றத்தாழ்வு பொதுவுடைமை வாழ்வியலில் தொடர்ந்திருந்த சமுகங்களில் ஆரம்பத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. இதனைப் பின்வரும் பாடலால் உணரலாம்.
“... ... ... ... அடலருந் துப்பின் ... ... ... ...
... ... ... ... குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம் 335)
நெல் பரவி வழிபடும் கடவுள் அல்லாத இறந்த வீரனைக் கல் வைத்து வழிபடும் பழங்குடியினரிடம் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் மதிப்புக்குரிய குடிகளாக உள்ளனர்.
ஆனால் பிற்காலத்தில், துடியன் சமூகப் பொருளாதார வீழ்ச்சியால் புலையன் எனவும் இழிபிறப்பாளனாகவும் மாறிப்போகிறான்.
“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி” (புறம் 170)
“துடி எறியும் புலைய
எறிகோள் கொள்ளும் இழிசின” (புறம் 287)
பிறருக்குக் குற்றேவல் செய்வதாகிய சலவைத் தொழிலில் ஈடுபட்டு, சிறு வருவாயில் வாழும் நிலையினை அடைந்ததால் புலையனின் மனைவி புலத்தி என இழிக்கப்படுகிறாள்.
“வறன்இல் புலத்தி எல்லிற் றோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமோடு” (நற் 90 3-4)
குறிஞ்சி நிலத்தில் துடியன் வெறியாட்டின் போது உடுக்கை அடிப்பவன்.
“முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல” (புறம்259)
என்ற அடிகளால் துடியனின் மனைவி உருப்பெற்று ஆடுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். இவ்வாறு குறிஞ்சி நில வழிபாட்டில் பங்கு பெற்ற இவர்கள் ஏன் பொருளாதாரர நிலையில் தாழ்ந்து இழிவானவராய் ஆகினர் என்பது சரியாகப் புலப்படவில்லை.
விறலி, பாணன்
சமூகத்தில் மதிப்புக்குரிய நிலையிலிருந்து கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாகவே பாணன், விறலி ஆகியோர் காணப்படுகின்றனர். இனக்குழு நிலையில் ஆடல் பாடல்களில், பார்வையாளர் ஆற்றுகையாளர் என்ற பாகுபாடின்றி யாவருமே கலந்து கொண்டனர். இக்குழுவில் கலைத்தேர்ச்சி கொண்டோர் கலைஞராய்க் கருதப்பட்டனர். பாணர் விறலியர் என்பார் அவ்வாறு அமைந்தனர்.
இவர்களுக்கு அரச அவையில், கலைஞர் என்றவகையில் முதன்மை இடம் அளிக்கப்பட்து. அரசனது புகழைப் பாடி, அவனை ஆடல் பாடல்களால் மகிழ்வித்தனர் என்று தெரியவருகிறது, பாண்கடன் (புறம்201) என்ற வகையில் அரசன் அவர்களைப் பாதுகாக்க வேண்டியவனாக உள்ளான். ஔவையார் விறலி மரபினர் என்பது முன்பே கூறப்பட்டது. இவர் கலைஞர் என்பதற்கப்பால் இவரது புலமையே இவர் சிறப்பிடம் பெறக் காரணம் எனலாம். கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்தபடியாக இவரது பாடல்களே (69 பாடல்கள்) அதிகமாகச் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவருக்கும் அதியமானுக்கும் இடையேயான நட்பும், இவர் அவன் பொருட்டுத் தூதுவராகச் சென்றமையும் நினைவு கொள்ளத்தக்கது. ஆதிமந்தியாரும் விறலியர் மரபினரே.
பாணர் அவ்வப்போது அரசனிடம் இருந்து பரிசில்கள் பெற்றாலும், அவர்களது பொருளாதாரத் தேவையை அப்பரிசில்கள் முற்றாகத் தீர்த்துவிடவில்லை. இவர்கள் மிகவும் வறுமையடைந்தவர்களாக, பழமரம் நாடும் பறவைகள் போல் புரப்பவர்களை நாடி அலையும் நிலையை ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. சிறு பாணாறுப்படையில் விறலியின் கற்பு சிறப்பாகப் பேசப்படுகிறது.
“முல்லை சான்ற கற்பின் மெல்லியன்
மடமா நோக்கின் வாணுதல் விறலி”
(சிறுபாண் 30-31)
விறலி. தலைவனிற்கும் பரத்தைக்குமிடையே தூது செல்பவளாக நற்றிணையில் விவரிக்கப்படுகிறாள். அவ்விடங்களில் இவளைத் தலைவி, தோழி ஆகியோர் மிகவும் இழித்தே ஏசுகிறார்கள். (நற் 310,170). பாணனும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே வாயிலாக வருகின்றமையைக் காணமுடிகிறது. (நற் 260) கலைஞனான இவன் தனது வாழ்வுக்காக மீன் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். (அகம்!26,216) இவன் புலவுவாய் கொண்டவனாக இழித்துரைக்கப்படுகிறான்.
“பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால்கிளந்து திரியும்
புல்லென் யாக்கை புலவுவாய்ப் பாண”
(பெரு 20-23)
இவர்கள் இவ்வாறு சமூக நிலையில் பின்தள்ளப்பட்ட பின்வரும் காரணங்கள் பின்னணியில் செயற்பட்டதாகக் கருத இடமுண்டு.
1. அரசனின் பிரச்சாரத் தேவைகளைப் புலவர்கள் தீர்த்து வைக்கின்றனர். புலவர்களால் பாடப்படுவதே உயர்ந்தது என அரசர் கருதினர்.
“உலகமொடு நிலை இய பலர் புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைக என் நிலவரை”
(புறம் 72)
என்ற பாடலைச் சுட்டிக்காட்டிப் புலவரின் அறிவையும் (புலம்-அறிவு), அவர் தம் முக்கியத்துவத்தையும் விளக்குவர் பேராசிரியர் கைலாசபதி. புலவருக்கு அரசரிடம் தனி இடம் இருந்தது. ஔவையார் போன்றே கபிலரும் சங்க இலக்கியத்தில் மிக முக்கியமான புலவர். இவர் புலவர் என்பதுடன் அந்தணராக இருந்ததும்
(புறம்200 இவர் என் மகளிர்; அந்தணன் புலவன், கொண்டுவந் தனனே, 201) இவரது முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது. (இவரது பாடல்களாக எட்டுத்தொகையைச் சேர்ந்த நூல்களில் 95 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 4ஆவது பகுதியும், குறிஞ்சிப் பாட்டும், பதிற்றுப்பத்தில் ஏழாவது பத்தும், கலித்தொகையில் குறிஞ்சிக்கலியும் அமைகின்றன) சங்க இலக்கியங்களில் கணிசமான பாடல்களை இவரேப் பாடியுள்ளார். இவர் பாரியின் மிக நெருங்கிய நண்பர், இவரது குரல் பேகன் (கண்ணகிக்காகப் பேகனிடம் பேசுகிறார்
(புறம்144 145), காரி, (காரியிடம் புலவர்கள் தனித்துவமானர்கள் என அறிவுறுத்துகிறார்.
(புறம் 121) முதலியவரிடம் மட்டுமன்றி மூவேந்தரிடமும் முதன்மை பெறுகிறது, பாரி மகளிர் இவரது பொறுப்பில் இருந்தமையால் கொண்டி மகளிர் ஆகாமல் பாதுகாக்கப்படுகின்றனர். (பாரி மகளிரை மணமுடிக்குமாறு இருங்கோவேளிடம் வேண்டுகிறார்.
(புறம் 200,201))
புலவர்களில் கணிசமானவர்கள் அரசராகவோ, வணிகராகவோ, நிலக்கிழாராகவோ அமைகின்றனர். வாழ்வியல் தேவைக்காகப் பாணர் போன்று அரசர், வள்ளல்களைச் சார்ந்து நிற்காமையும், இவர் மதிப்புக் குன்றாமைக்குக் காரணமாகலாம்.
2. அந்தணர் செய்யும் வேள்வியும், அவரது நால்வருணக் கொள்கையும் தங்களது இருப்பை மேலும் உறுதிசெய்யும் என அரசர் நம்பத்தொடங்கினர்.
(புறம்183 )
இவ்வாறு தமது படிநிலையில் இறங்கிய, பாணர் விறலியரின் வாழ்வு துடியன் போல மிகக் கீழ்நிலைக்குப் போனமைக்குச் சான்று இல்லை. பேராசிரியர் சிவத்தம்பி, விறலியர் பரத்தையராக ஆகினர் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், ஒரு சிலர் தமது வாழ்கை அவலத்தால் மாறி இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்பது உண்மையே. ஆனால், அவ்வாறு மாறியமைக்கு அகச்சான்றுகளை உறுதியாகக் காட்ட முடியவில்லை. பாணர் பண் அமைத்துப் பாடும் இசைவாணர்களாக இருந்தமையால் பல்வேறு அவலங்களுக்குள்ளும் தம்மை பாதுகாத்துக் கொண்டமையைச் சிலப்பதிகாரத்தின் பின்வரும் அடிகளால் அறியமுடிகிறது.
“குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும்,
வழு இன்றி இசைத்து, வழித் திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்”
(சிலப்பதிகாரம் 5- 35 -37)
பொதுவிலை மகளிர் (கொண்டி மகளிர்)
கொண்டி மகளிர் போரில் வெற்றி பெற்ற அரசனால் பகைநாட்டில் இருந்து சிறைப் பிடிக்கப்பட்ட பெண்கள். இவர்கள் பெரும்பாலும் பகை நாட்டு அரசரின் மனைவி, மக்களாகவோ, நெருக்கமான உறவினராகவோ இருந்திருப்பர். செல்வச் செழிப்பில் இருந்த இவர்கள் சிறைப்பட்ட பின்னர் விலை மகளிராயினர், அவர்கள் இளைஞரைத் தம் வசப்படுத்தி அவரிடம் பொருள் கவருவதாக இழித்துரைக்கப்படுகின்றனர். (மதுரைக்காஞ்சி 569-583)
அரசர், அந்தணர்
மேலேச் சமுகத்தில் குறிப்பிடத்தக்க உயர்நிலையிலிருந்து, தம் நிலையில் தாழ்ந்தவர்கள் பற்றி நோக்கப்பட்டது. மாறாக, இங்கு தம் உயர் நிலையை மேலும் உயர்த்திக் கொண்டவர்களான அரசர், அந்தணர் பற்றி நோக்கப்படுகிறது.
அரசர், ” தம் இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப” (புறம்8) குறுநில மன்னர்களை வெற்றி கொண்டு வேந்தர் ஆனவர்கள். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறம்186) என ஆக்கிக் கொண்டவர்கள். பிற்காலத்தில் திருவுடை மன்னனைக் காணில் திருமாளைக் கண்டதாகக் கூறும் அளவுக்குக் கடவுள் நிலைக்குத் தம்மை உயர்த்திக் கொண்டார்கள்.
அந்தணரை சாதரணர் என்ற வரிசையில் வைத்து நோக்க முடியாதுள்ளது. அந்தணர் பற்றி சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணமுடிகிறது. அவ்விடங்களில் எல்லாம் மிக உயர்வாகவே அவர்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. உதாரணமாக பின்வரும் கலித்தொகைப் பாடலைக் காணலாம்.
“நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர”
கள் உண்ணக் கூடாது என விலக்கிக் கொண்டு வாழ்பவருக்கும், கள் உண்டு வாழ்பவருக்கும் அறச்செயல் இது என எடுத்துரைப்பவர் அந்தணர். அந்தணர் இரு வகைப்படுவர். வேதம் ஓதுபவர் ஒரு வகை. மக்களை வழிப்படுத்துபவர் மற்றொரு வகை. இவர்கள் இருவருமே மக்களுக்கு அறிவுரை வழங்கி நெறிப்படுத்துவர். நூல் நெறி பிழையாமல் வாழ்ந்து காட்டுவர். குழந்தையை வளர்க்கும் தாய் போல், மக்களுக்கு உதவுவர். இவர்களின் நன்னடத்தையால் உலகத்தில் மழை சுரந்து பொழியும். அதனால் உலகத்துக்கு நல்லூழி அமையும்.
இவ்வாறு இலக்கியங்களில் போற்றப்படும் அந்தணர் மெல்ல மெல்லச் சமூக மேலாண்மையைப் பெற்றுக் கொண்டனர்.
இலக்கணக் கோட்பாடுகளும் சமூக் கட்டமைப்பு உருவாக்கமும்
தொல்காப்பியம் தமிழில் எழுந்த சிறந்த இலக்கண நூல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும், இந்நூல் சமூக ஏற்றத் தாழ்வுகளை ஆவணப்படுத்துவதிலும், தன் பங்கை மிக அழுத்தமாகவேச் செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
“வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டாகலான தொல் மரபியல்”
இலக்கிய நிகழ்ச்சி உயர்ந்தவருக்கே உரியதாகக் கருதும் அவர் உயர்வல்லாதவர் இலக்கியத்தில் இடம்பெறுபவற்றை எடுத்துக் காட்டுகிறார்.
“அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இல புறத்து என்மனார் புலவர்”
(தொல் பொருள் அகத்திணை 25)
இதற்கு இளம்பூரணர் கூறும் விளக்கம் இலக்கண நூல்கள் எவ்வளவு தூரம் வர்க்க முரண்பாடுகளைப் போற்றின என்பதனைக் காட்டும்.
'புணர்தல் முதலான பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'வினை செய்வார்' என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க. இவர் அகத்திணைக்கு உரியரல்லரோ வெனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும். குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் எனபதனானும், இவர் புறப்பொருட்குரியராயினார் என்க.
பிறருக்கு குற்றேவல் செய்கின்ற அடியவர்களும் பிறர் ஏவத் தொழில் செய்பவருக்கும் கைக்கிளை, பெருந்திணை என்னும் அன்பினைந்திணைக்குப் புறமான சமூகம் அங்கீகரிக்காத இழிந்த ஒழுக்கங்களின் தலைவர்களாக வரவே இடம் அளிக்கப்பட்டது.
பிராமணரின் கொள்கையும், அவர்கள் தமிழ் சமூகத்தில் உயர்ந்த இடத்தை பெறுவதற்கு எடுத்த முயற்சியும் இணைந்து தமிழ் சமூகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. தொல்காப்பிய இலக்கண நூலில் மரபியலிலும் பார்ப்பனர் எல்லோரிலும் உயர்ந்தவராய்க் காட்டப்படுகின்றனர்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமும் உண்டே”
(தொல் பொருள் கற்பியல் 142)
இதற்கு இளம்பூரணர் தரும் பொருள் வருமாறு;
“மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்த்த கரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு”. பிராமணர் வருணப்பாகுபாட்டால் நிலஉடைமையாளரான வேளாண் மாந்தர் கூட கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“ஓதலும் தூதுமுயர்ந்தோர் மேன”
(தொல் .பொருள்.மரபு- சூத் 26 )
“நூலே கரகம் முக்கோன் மணையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய”
(தொல் பொருள் மரபு 615)
“அந்தணர்க் குரியவு மரசர்க்
கொன்றிய வரு உம் பொருளுமா ருளவே”
(தொல் பொருள் மரபு 617)
“வேளாண் மாந்தர்க்கு உழுதூ ணல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”
(தொல் பொருள் மரபு 625)
“அன்னர் ஆயினும், இழிந்தோர்க்கு இல்லை”
(தொல் பொருள் மரபு 629)
மேற்காட்டிய கட்டளைகள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்த எடுத்த முயற்சியே ஆகும்.
ஒரு சமூகத்தின் கல்வியறிவை முடக்கினால் அந்த சமூகத்தினைத் தமது போக்குக்கிணங்க கட்டமைத்துக் கோள்ளலாம் என்ற நோக்கும் இதனுள் ஒளிந்திருக்கக் காணலாம்.
ஆனாலும், பிராமணருக்கும், அரசருக்குமேக் கல்வி பெறுதலும், தூது செல்லுதலும் உரியன என்பது நடைமுறையில் வழக்காக இருக்கவில்லை. ஔவையார் தூது சென்றமை முன்னும் காட்டப்பட்டது. சங்க இலக்கியப் புலவர் பல்வேறு தொழில்களை மேற்கொண்டவர்களாக இருந்தனர். மேலும், இக்கருத்துக்கள் தொல்காப்பியத்துக்குச் சமகாலத்தவரால் வன்மையாக எதிர்க்கப்பட்டமை தெரிகிறது. திருவள்ளுவர்;
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்னென்ப வாழும் உயிர்க்கு”
(குறள்392)
என்றும்
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”
( குறள்410 )
என்றும் மிகப்பெரிய எதிர்ப்பை முன் வைக்கிறார்.
வணிகரைத் தொல்காப்பியம் உயர்வகுப்பினராக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியங்களில் வாணிகம் பற்றிய செய்திகள் பரவலாகக் கூறப்பட்டிருக்கின்றன. கூல வணிகன் சீத்தலைச் சாத்தனார், பொன் வணிகன் சாத்தன் கொற்றனார் வணிகன் இளங்கோட்டனார் என வணிகர் பலர் புலவர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாகப் புலமைத் தொழிலைக் கொள்ளவில்லை என்பதும், வணிகர் எனத் தம்மை முன்னிறுத்துவதில் ஆர்வம் கொண்டனர் என்பதும் தெரிகிறது. புறநானூற்றில் உமணர் உப்பை நெல்லுக்குப் பண்ட மாற்றாகப் பெற்றமை பற்றிக் கூறப்படுகிறது.
(புறம்343) பட்டினப்பாலையில் நகர் வணிகம் பற்றியும், வெளிநாட்டு வணிகம் பற்றியும் ஓரளவு விரிவாகப் பேசப்படுகிறது, வணிக நகரம் உருவாவதை இதனால் அறிய முடிகிறது.
(பட்டி 120-140 ) மதுரைக் காஞ்சியில் நாளங்காடியில் உணவு உட்படப் பல்வேறு பொருட்கள் விற்கப்படுவதும், முது பெண்டிர் விற்பனையில் ஈடுபடுவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
(மதுரை 375-405) . இவ்வாறான விவரிப்புக்கள் இடம் பெற்றாலும் தனிப்பட வணிகர் பற்றியும், அவர் மேலாண்மை பற்றியும் சங்க இலக்கியங்களில் எடுத்துச் சொல்லப்படவில்லை. சிலப்பதிகார காலத்திலேயே வணிகர் உயர்நிலை அடைகின்றனர்.
வேளாண் மாந்தரை இளம்பூரணர் வருணப்பகுபாட்டைக் கருத்தில் கொண்டு கீழோர் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், சங்க காலத்தில் நிலவுடைமையாளரான இவர்கள் பொருளாதார நிலையில் மிக உயர்வான இடத்திலேயே இருந்துள்ளனர். கோவூர்கிழார், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் எனப் பலர் சங்கப் பாடல்களைப் பாடியுள்ளனர். மருதநிலத் தலைவரின் ஏற்றத்தைத் தனித்து இங்கு விவரிக்க வேண்டியதில்லை. பிற்காலத்திலும் இவர் சமூகப் படிநிலையில் உயர்வான இடத்திலேயே இருந்து வந்திருக்கின்றமைக்கு இலக்கிய, சாசன ஆதாரங்கள் உண்டு.
மேலும், வேளாண் மாந்தர் மட்டுமன்றி குறிஞ்சிக்கிழவன், முல்லைநிலத் தலைவன் என வேறுநிலத் தலைவர்களும் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தனர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும். பாலை நிலத்தலைவன் பிறருக்கு ஈவதற்காகவும் தனது குடியை உயர்த்துவதற்காகவும் தலைவியைப் பிரிந்து செல்வதாக இலக்கியங்கள் பேசுகின்றன.
“அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என,
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி”
(கலி_11)
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே”
(தொல் மர்பு 627)
இதற்கு இளம்பூரணர் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.
அமாத்திய நிலையும், சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில வென்றவாறு. அஃதாவது, மந்திரி புரோகிதனாகிய வழிக் கொடியும் குடையும் கவரியும் தாரு முதலாயின அரசராற் பெற்று அவரோடு ஒருதன்மையராகியிருத்தல்.
முற்றுமுழுதாக வடநாட்டாரின் வருணப் பாகுபாட்டினடிப்படையில் எழுந்த கருத்துக்களாகவே இவை அமைகின்றன.
ஆக, தொல்காப்பிய விதிகளைக் கொண்டு (வர்ணச் சார்பான விதிகளைக் கொண்டு) சங்காலச் சமூக நிலையைக் கணிப்பிடுவது பொருந்துமோ என்பது நோக்க வேண்டியுள்ளது. இதனால் மட்டுமே அடியவரும் வினைவலரும் கைக்கிளை பெருந்திணை பாத்திரங்களாக வரவேண்டும் என்ற கருத்தும் கேள்விக்குரியதாகிறது.
வினைவலர்
வினைவலர் என்போர் சமூகத்தில் பல்வேறு தொழில்களில் வினைத்தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். துடியன், புலத்தி போன்று சமூகத்தால் அடிநிலைகுத் தள்ளப்பட்டவர்கள் அல்லர். பாணர், விறலியர் போல தம் வாழ்வியல் தேவைகளுக்காக கொடையாளியைத் தாங்கி இருந்தவர்களும் அல்லர். இவர்களது வினைத்திறத்தினைப் பொறுத்தும், சமூகத்தில் அவர்களது தொழிலுக்கான தேவையைப் பொறுத்தும் பொருள் வளம் பெற்றிருப்பர்.
“அள்ளற் றங்கிய பகடு விழும ம் கள்ளார் களமர் பெயற்குமா” (மதுரை,259 -260)
“தென்கடற்றிரை மிசைப் பாயுமந்து திண்டில் வன் பரதவர்” (புறம்24.25)
“கொடுவில்லெயினர்” (பட்டினப் 226)
“கல்லாக் கோவலர்” (அகம்74)
எனப் பலவிடங்களில் வினைவலர் பற்றிய விவரிப்புக்கள் வருகின்றன. இவர்கள் பற்றித் தனியாகவும் விரிவாகவும் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.
கலித்தொகைப் பாடல்களில், சாதாரணரான பொதுவர் தொடர்பான பாடல்கள் முல்லைத்திணையில் பரவலாக வருகின்றன. முல்லை (முல்லைக் கலி 101-117) கலித்தொகை நாடகத்தன்மை கொண்ட இலக்கியம். புலநெறி இலக்கியங்களாகாக அமைந்த அகத்திணை பாடல்களின் மிக முக்கியமான் ஒரு தன்மையை கா சிவத்தம்பி பின்வறுமாறு குறிப்பிடுகிறார்.
சங்க அகப்பாடல்கள் மரபில் நேரடியாகச் சொன்னதையும் பார்க்க, குறிப்பாக உணர்த்தப் பாடுவதே மரபு. அதனால் அகப்பாடல் மரபில் கோரிக்கைகள் அல்லது விருப்ப வெளிப்பாடுகள் வெட்ட வெளிச்சமாகவோ நேரடியாகவோ சொல்வதில்லை (சங்க இலக்கியக் கவிதையும் கருத்தும் - ப 80)
இந்த மரபின் பின்னால் இலக்கிய நாகரிகம் ஒன்று பேணப்படுகிறது. மேலும், குறிப்பாகப் பேசும் மரபு தோடர்களென்ற பழங்குடியினரிடம் இன்றும் உள்ளமையைச் சுட்டிக்காட்டி பழங்குடி மரபின் தொடர்ச்சியாகவே இப்பண்பு சங்க இலக்கியத்தில் இடம் பெறுவதாக கைலாசபதி கருதுவர்,
நாடக மரபு மிக வெளிப்படையாக பாத்திரங்களின் உணர்வு நிலைகளைப் பேசும் மரபைக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் காம உணர்வு வெளிப்படும் வகையில் பாத்திரங்கள் பேசுவதைக் கலிப் பாடல்களில் பரவலாகக் காணமுடிகிறது. இவ்வாறான பாடல்களையே இலக்கண நூல்கள் அகத்துக்கு புறமான இலக்கியங்களாக் கொண்டு வினைவலருக்கும் அடியவருக்கும் உரிய பாடல்களாகக் கொண்டுள்ளன.
சங்கக்காலத்தில் பொருளாதார வேறுபாட்டால் வர்க்க முரண்பாடுகள் இருந்தமை தெரிகிற்து. குழுநிலைச் சமூக நிலையிலிருந்து விடுபட்டுத் தனியுடைமை நிலைக்கு மாறிவரும் எந்த ஒரு சமூகத்திலும் வர்க்க முரண்பாடு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனாலும், சாதாரணர் இலக்கியத்தின் தலைவராகார் என்ற கருத்து இலக்கண நூல்களால் கட்டமைக்கப்பட்டதாகவே தெரிகிறது, அவரும் குறிப்பிடத்தக்களவில் அக இலக்கியங்களில் பாத்திரங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியவில்லை.
ஆய்வுக்கான துணை நூல்கள்
1. சிவத்தம்பி. கா., திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், ஆராய்ச்சி மலர் 2, இதழ் 3,
2. சிவத்தம்பி. கா., “சங்க இலக்கியத்தில் கவிதையும் கருத்தரங்கும்”
3. kailaasapathi. k,Tamil Heroic Poetry.
4. இராசு .செ, சங்க இலக்கிய ஆய்வுகள், “தொல்லியலும் சங்க இலக்கியங்களும்”
5. வாசுகி சொக்கலிங்கம், மருதத்திணை.
6. விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்.
7. புறநானூறு, சாமிநாதையர் உ.வே பதிப்பித்தது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.