சமூக அபிவிருத்தியும், சமூகவியலில் அபிவிருத்தியின் முக்கியத்துவமும்: ஒரு சமூகவியல் நோக்கு
செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா
தற்காலிக உதவி விரிவுரையாளர், சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
அறிமுகம்
தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அன்று தொட்டு இன்று வரை அனைத்துச் சமூகங்களும் ஏதாவதொரு வகையில் வளர்ச்சியடைந்ததாகவேக் காணப்படுகின்றது. இப்படிமலர்ச்சியானது நேர்நிலையானதாக அமைகின்ற அதே வேளை, சில சந்தர்ப்பங்களில் விளைவுகளைக் கூட ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். இவ்வாறான நேர், மறை மாற்றங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கண்டறிந்து தீர்வினை முன் வைக்கும் வகையில் பல துறைகள் காணப்பட்டாலும் சமூகவியலானது மிகவும் முக்கியமான துறையாகக் காணப்படுகின்றது.
அந்த வகையில் சமூகவியல் என்பது சமூகம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் பற்றிக் கலந்துரையாடுகின்ற ஒரு கற்கைப்புலமாகும். மனிதச் சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறையை அறியவும், சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகிய அறிவுத் தொகுதிகளை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும், பகுப்பாய்வு முறைகளையும் பயன்படுத்தும் ஒரு சமூக அறிவியலாகும்.
அபிவிருத்தியும், சமூக அபிவிருத்தியும்
அந்த வகையில் Social Development என்பது Social + Development என இரு சொற்பதங்களாக விளக்கப்படுகின்றது. Social என்பது சமூகம் மற்றும் அதனுள் அடங்கும் நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பு (relating to society or its organization) ஆகும்.
Development என்பது சமூகத்தையும், அதனது நிறுவனங்களையும் ஏதோவொரு வகையில் முன்னேற்றுவது. இதில் Develop என்பது ஒருவர் அல்லது ஒரு சமூகம் எவ்வாறு தம்மை வளர்த்துக் கொள்வது எனவும் ment என்பது அதற்கான வழிமுறைகளையும், கருவிகளையும் செயல்களையும் உள்ளடக்கியது. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது யாதெனில் அபிவிருத்தி என்பது பலவகையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரீதியிலும் அதற்கு அப்பாலும் உள்ள தளங்களில் பல்வேறு நிறுவனங்களால் முன்வைக்கப்படும் சமூக மாற்றத்தை நோக்கியதான செயற்பாடு ஆகும். எனவே ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது மட்டுமின்றி மக்களின் வாழ்க்கைத்தரம், கலாச்சார அம்சங்கள் போன்றவற்றில் ஏற்படும் முன்னேற்றம் என பொருள்படுகின்றது.
அந்த வகையில் இதிலிருந்து சமூக அபிவிருத்தி பற்றி நோக்கினால், சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு நபராலும் அனுபவிக்கப்பட்ட வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தில் ஏற்படும் முற்போக்கான முன்னேற்றம் ஆகும். இம்முன்னேற்றம் பொருளாதாரத்துடன் இணைந்த வகையில் அனைத்துச் சமூக ஒழுங்கிலும் நேர்நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும். அதே வேளை, விளைவுகளையும் ஏற்படுத்தும். இவ்வாறான நேரடி, மறைமுக விளைவுகளை அறிந்து சமூகத்தை மேம்படுத்துகின்ற கற்கின்ற புலமே சமூக அபிவிருத்தியாகும்.
அந்த வகையில் சமூக அபிவிருத்தி என்பது சமூகத்தின் குறிக்கோள்களையும், திறனையும் மேம்படுத்துவதற்காக, சமூகக் கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாற்றமே சமூக அபிவிருத்தி ஆகும். பொருளாதாரத்தில் ஏற்படும் முன்னேற்றம் மட்டுமின்றி, மக்களுக்கு முதன்மையளித்து சமூக நிறுவனங்களிலும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் சமூக அபிவிருத்தி ஆகும். எனவே, பொருளாதாரத்தில் மட்டுமின்றி சமூகத்தில் காணப்படும் ஏனையக் கூறுகளான சுகாதாரம், கல்வி, அரசியல், போக்குவரத்து, சமயம், கலை, திருமணம் போன்ற சமூக, கலாச்சார ரீதியில் ஏற்படும் முற்போக்கான மாற்றம் ஆகும். எனவே, சமூக அபிவிருத்தி என்பது, சமூக நிறுவனங்களில் ஏற்படும் மாற்றத்தைக் குறிப்பதோடு அபிவிருத்தி செயல்முறைகள் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதோடு குழுக்கள், சமூகங்களில் அவர்களின் தொடர்பு முறையை வளப்படுத்தல் போன்ற அம்சங்களில் முக்கியம் பெறுகின்றது.
சமூக நீதியை மேம்படுத்தல், வறுமையை ஒழித்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் பின்தங்கிய நபர்களுக்கான கல்வி, சுகாதார ஊட்டச்சத்து, வீட்டுவசதி, சமூக நலனுக்கான வசதிகளை விரிவுபடுத்தல், மேம்படுத்தல், சமமமான வளப்பங்கீடு, வருமான உயர்வு போன்ற அனைத்து அம்சங்களிலும் சமூகத்தை மேம்படுத்தல், சமூக அபிவிருத்தி ஆகும். இதனடிப்படையில் அண்மைக்காலத்தில் சமூக அபிவிருத்தியானது வருமானம், எழுத்தறிவு வீதம், ஆயுட்காலம், சுகாதாரம் போன்றவற்றில் மக்களுக்கு முதலிடம் வகித்து ஏற்படும் வளர்ச்சி என விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, இலங்கையில் சமூகத்தை முன்னேற்றும் வகையில் உர மானியங்களை வழங்குதல், வீதி அபிவிருத்தி திட்டங்கள், பெண்களின் ஆளுமையை வளர்க்க நுண்கடன்களை வழங்கி மேம்படுத்தல், கால்நடை வளர்ப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு போன்ற பல்வேறு சமூக அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறையில் காணப்படுகின்றன. இதிலிருந்து விளங்கிக் கொள்வது யாதெனில், சமூகத்திலுள்ள ஒவ்வொரு நபரையும் மேம்படுத்தும் நோக்கில், மேற்கூறிய இலக்குகளின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி வாழ்க்கை தரம், வாழ்க்கை நிலைமைகள் என்று சமூக, கலாச்சார ரீதியாக மேம்படுத்துவதாகும்.
எனவே, ஆரம்பகால சமூகவியலாளர்களின் சமூக அபிவிருத்தி தொடர்பான சிந்தனையானது, சமூகமானது எவ்வாறு பாரம்பரிய சமூகத்திலிருந்து நவீன சமூகமாக வளர்ச்சியடைந்துள்ளது எனவும், சமூக நிறுவனங்கள் (சமயம்) எவ்வாறு பொருளாதார ரீதியாக சமூகத்தை முதலாளித்துவ சமூகமாக விருத்தி செய்கின்றது எனவும் தெளிவுபடுத்த, அத்தகையச் சிந்தனையிலிருந்து அண்மைக்காலத்தில் சமூக அபிவிருத்தியானது வறுமை, வேலைவாய்ப்பின்மை, சூழல் மாசுபாடு, வன்முறை, யுத்தம், இடப்பெயர்வு, சமமற்ற வளப்பங்கீடு போன்ற பல சமூகப் பிரச்சனைகளிலிருந்து மக்களை மீட்டு பொருளாதார, சமூக, கலாசார ரீதியாக மேம்படுத்தி, ஒரு மட்டத்திலிருந்து இன்னோர் மட்டமாக மாற்றத்தை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது என விளங்கிக் கொள்ளலாம். எனவே, சமூக அபிவிருத்தியானது சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வை முன்னேற்றுவதனூடாக சமூகத்தின் முழுமைத்தன்மையையும் பிரதிபலிப்பதாகவும் அனைத்து மக்களும் நலமாக வாழ்வதற்கான யுத்திகளையும் வழங்குகின்றது.
இதனடிப்படையில். அபிவிருத்தி என்பது மனிதர்களின் பங்கு பற்றல்களையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும், சமூக நிறுவனங்களின் வளர்ச்சியினையும் குறித்து நிற்கின்றது. மேலும், உடல், உள, கல்வி, சமூக கலாச்சார மற்றும் ஆன்மீகத் துறைகளில் மனிதன் அடையும் வாழ்க்கைத் தரப்பண்புகளின் வளர்ச்சியே அபிவிருத்தி ஆகும். இவ்வாறு மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பல வகையிலும் முன்னேற்றும் அபிவிருத்தியானது சமூகவியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூகமானது நேர்நிலையான, உள்ளார்ந்த, நிலையான முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அபிவிருத்தி என்பது சமூகவியலில் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த வகையில், 1960-க்கு முன்னர் அபிவிருத்தி எனும் பதமானது பொருளாதார வளர்ச்சியை மாத்திரமே கருத்தில் கொண்டதாகக் காணப்பட்டது. அதற்குப் பின்னர், பொருளியலாளர்கள் பொருளாதார நலனில் மட்டும் அக்கறை காட்டுவதால் மக்களின் நலன், மேம்பாடு மறைக்கப்பட்டு சமூகத்தில் பிறழ்வு ஏற்படுவதை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டி, சமூக நலனில் அக்கறை காட்ட தொடங்கியதன் காரணமாக 1960-க்குப் பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அபிவிருத்தியானது சமூக முன்னேற்ற நலனுடன் இணைந்த வகையில் சமூகவியலில் முக்கியத்துவம் வாய்ந்த Sociology of Development கற்கையாக வளர்ச்சியடைந்தது. கைத்தொழில் புரட்சி, உலகப் போர்கள், காலணித்துவமாக்கல், பகுத்தறிவு ரீதியிலான சிந்தனைகள், விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றினூடாகத் தோன்றியதாக, இந்த அபிவிருத்தி எனும் எண்ணக்கரு சகல துறைகளிலும் பேசப்பட்டதாகக் காணப்படுகின்றது.
சமூகவியலில் அபிவிருத்தியின் முக்கியத்துவம்
முதலாம் உலகப் போரின் பின்னர் அபிவிருத்தியானது பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக இருக்க, இரண்டாம் உலகப்போரின் (1939-1945) பின்னர்தான் அபிவிருத்தி எனும் பதமானது பொருளாதாரத்துடன் மட்டுமின்றி, சமூகத்தை மையப்படுத்திய சமூகவியலில் முக்கியம் பெற ஆரம்பித்தது. உலகப் போரின் காரணத்தால் சமூகக் கட்டமைப்பில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகக் கட்டமைப்பிலுள்ள கூறுகள் சிதைவடைந்ததோடு, பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்ததாகக் காணப்பட்டது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், முற்றுகைகள், இன பாரபட்சம், நோய்த் தொற்றுகள், கலாச்சார மாற்றங்கள், சூழல் மாசடைவு போன்றன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தியது. குறிப்பாக, 60 மில்லியன் மக்கள் இறந்ததுடன் நகரங்கள், கிராமங்கள், குடும்பங்கள் என அனைத்தும் சிதறுண்டது. இவ்வாறான விளைவுகளிலிருந்து மக்களை மீட்டு, பிரச்சனைக்குத் தீர்வினை முன் வைத்து, சமூகத்தை மீட்க, உலக நாடுகள் மட்டுமின்றி சமூகவியலாளர்களின் அக்கறையும் அபிவிருத்தியானது சமூகவியலில் உள்ளடக்கப்பட காரணமாகியது.
எனவே, பொருளாதார வளர்ச்சியானது ஒரு சிலருக்கு சாதகமானதாகவும் ஏழைகளுக்கு பாதகமாகவும் சுரண்டல், வறுமை, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட நிலை, பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை, இன மத ரீதியான வன்முறைகள், இறப்பு போன்ற பல விளைவுகளையும் ஏற்படுத்தியது. இந்நிலைமை ஒருபுறம் பொருளாதாரச் செழிப்புக்குக் காரணமாக அமைந்த அதே வேளை, சமூக முன்னேற்றத்திற்கு இடையிலான முரண்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் தொழிலாளி, முதலாளி என்ற அந்நியமாதலை ஏற்படுத்தி, தற்கொலை நிகழ்வுகளுக்கும் காரணமாக இருந்தது. இவ்வாறான சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூக நலனில் அக்கறை காட்டுவதால் அபிவிருத்தியானது, சமூகவியலில் உள்ளடக்கப்படுவதற்கு காரணமாகியது. எனவே இவ்வாறான நிலைகளிலிருந்து, சமூகத்தை முன்னேற்றப் பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள், உலக வங்கி, சர்வதேச அமைப்புக்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும், சமூகநீதியை ஊக்குவித்தல், வறுமையை ஒழித்தல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை விரிவுபடுத்தல், பண்பாட்டு கூறுகளில் முன்னேற்றத்தை உருவாக்குதல் போன்றவற்றில் அபிவிருத்தியானது கவனம் கொண்டுள்ளதால் இத்துறைகளில் நேரடிப் பயனானாளர்களாக மக்கள் முதலிடம் வகிப்பதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியப்படுத்தப்படுகின்றது.
இரண்டாம் உலகப்போரின் விளைவாக இடப்பெயர்வும் ஏற்பட்டது. சிறுபான்மையினர் நாடு கடத்தப்பட்டனர். செக்கோஸ்லாவியாவில் மட்டும் 3,00,000 அநாதைக் குழந்தைகள் காணப்பட்டனர். இவ்வாறான நிலையில், சிறுவர்கள் களவு, கற்பழிப்பு, போதைப்பொளுக்கு அடிமையாதல் போன்ற சமூகப் பிறழ்வான நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் கலாசாரம் சீரழிவை எதிர் கொண்டது. ஏனெனில், குடும்பக் கட்டமைப்பு சிதைவுறுவது, நேரடியாகக் குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அபிவிருத்தியானது பொருளாதாரத்தை மட்டுமின்றி, சிறுவர்களது பாதுகாப்பிலும் அக்கறை காட்டி மனித உரிமை, சிறுவர் உரிமையினை நிலைநிறுத்தி கல்வி விருத்திக்கூடாக சமூகத்தையும், சிறுவர்களையும் பாதுகாத்து மேம்படுத்துவதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது.
மேலும் இரண்டாம் உலகப்போரால் ஐரோப்பாவில் பெண்கள் செம்படை வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஜெர்மனியில் மட்டும் 1945 - 1948 வரை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியன் பெண்கள் கருக்கலைப்பு செய்யப்பட்டனர். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். குறிப்பாக, பெண்ணடிமைத்துவமும் தோற்றம் பெற இந்த யுத்தங்கள் காரணமாக இருந்தது. எனவே ஓரங்கப்பட்ட குழுக்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், தங்கள் சொந்த வளர்ச்சியை மேற்கொள்வதற்கு, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களுக்குச் சரியான இடத்தைப் பெற்றுக் கொடுத்து வாழ்க்கைத்தரம், சுதந்திரம், கௌரவம் என்ற வகையில் சிறந்த தகுதியை பெற்றுக் கொடுக்கும் திறன் அபிவிருத்திக்கு இருப்பதால், சமூகவியலில் அபிவிருத்தி என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. (Bilance-1997) இதன் மூலம் பெண் அபிவிருத்தி மேம்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக இலங்கையில் கடந்த 30 வருடங்களில் நடைபெற்ற யுத்தம் 2009 இல் முடிவுற்ற நிலையில் பல போராளிகள் உடல், உள, மன ரீதியான ஆரோக்கியத்திற்காகப் மறுவாழ்வளிக்கப்பட்டு காணப்படுகின்றனர். யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள், சமூகக் கட்டமைப்பில் அசமத்துவத்தை எதிர்கொள்ளாமல் இருக்க, சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள் மூலம் தமது வாழ்வாதாரத்தை ஈட்டவும், சமூகத்தில் கௌரவத்துடன் வாழவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து சமத்துவம் கொண்டவர்களாக உருவாக்க, இலங்கை அரசாங்கத்தால் மானியங்களும், அபிவிருத்தி திட்டங்களும் வழங்கப்படுகின்றது. (நுண்கடன் வழங்கல், கால்நடை வளர்ப்பு, தோட்ட செய்கை, தையல் பயிற்சி போன்ற திட்டங்கள் வழங்குதல்) அது போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அபிவிருத்தி திட்டங்களும் சமூகத்தை முன்னேற்றும் செயற்பாடாகும்.
எனவே, சமத்துவமான சமூக வாய்ப்புக்களை ஒவ்வொரு நபருக்கும் பெற்றுக்கொடுக்கின்ற முழு ஆளுமையும் அபிவிருத்திக்கு இருப்பதால், சமூகவியலில் அபிவிருத்தியானது முக்கியம் பெறுவதாக அமைந்துள்ளது. எனவே, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல், சமூக நல்லிணக்கத்தை (Amartyasen-1995) உருவாக்குகின்ற தன்மையினடிப்படையில் சமூகத்தை மேம்படுத்துவதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒருநாட்டின் அபிவிருத்தியானது, மக்களது நலனில் குறிப்பாக, கல்வியறிவு, சுகாதாரம், எழுத்தறிவு வீதம், வேலைவாய்ப்பு போன்ற மனித குறிகாட்டிகளில் தங்கியுள்ளது. போர்களால் சமூகத்தில் இவை பின்தங்கியதாக இருக்கும். எனவே, உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை தேவைகள் மக்கள் நலன் தொடர்பாக éu;j;jp செய்யப்பட்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தித் திறனை அதிகரித்தல் இன்றியமையாததாகும். எனவே, இத்தகைய பன்முகத்தன்மை அபிவிருத்தி எனும் எண்ணக்கருவிற்கு இருப்பதால் அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றி சமூக முன்னேற்றம் தழைத்தோங்குவதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது.
கிராமப்புற சமூகங்களிலிருந்து நவீன சமூகத்திற்கு மாறுகின்ற போது, சமூகக் கட்டமைப்பிலும், கட்டொருமைப்பாட்டிலும் ஏற்படும் முன்னேற்றத்தையும், அதேசமயம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்து, பிரச்சனைகளுக்கு தீர்வினை நிலைநாட்டுவதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. இதனை ஆரம்பகால சமூகவியலாளர்களின் கருத்துக்கள் மூலம் அறியலாம். அதாவது சமூகமானது எவ்வாறு பரிணாமம் அடைந்து சென்றுள்ளது என்பதன் மூலம் விளக்கப்படுகின்றது. உதாரணமாக Durheim இன் கருத்துப்படி நகர்புற சமூகத்தில் (Organic Solidarity) தற்கொலை விகிதம் அதிகரிப்பதற்குக் காரணம், சமூக கட்டமைப்பில் ஏற்படும் மாற்றமாகும். இவ்வாறு மக்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையிலிருந்து விடுபட்டு, முற்போக்கான சிந்தனையை உருவாக்குகின்ற திறன் அபிவிருத்திக்கு இருப்பதால் சமூகவியலில் அபிவிருத்தியானது முக்கியம் பெறுகின்றது. (உ.ம்: உளவள விருத்தி, குடும்பநல ஆலோசனைகளை வழங்கி சமூகத்தை முன்னேற்றுதல்).
அபிவிருத்தி என்பது பொருளாதார முன்னேற்றத்தை அடித்தளமாகக் கொண்டிருந்தாலும், இது போதுமானதல்ல. இது மக்களின் வாழ்க்கையில் நிதி, பொருள் தேவைகளுக்கு அப்பால் மேலும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, ஒழுங்கமைப்புக்கள், மனப்பாங்குகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தல், முற்றாக வறுமையை இல்லாமற் செய்தல்,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்கள் அபிவிருத்திக்கு இருப்பதால், இதன் மூலம் மக்கள் நலன் முன்னேற்றமடைவதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, வறுமையை ஒழித்து, மனித ஆரோக்கியம் பேணப்படுவதால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியப்படுத்தப்படுகின்றது.
அபிவிருத்தியானது ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியுடன் மட்டுமின்றி உணவுப் போசாக்கும், சுகாதாரம், கல்வி, வீடு, சமூகப் பாதுகாப்பு, உற்பத்தித் திறன், உடை, பொழுதுபோக்கு, சுதந்தரம், உரிமை, சமமான வளப்பங்கீடு என்ற வகையில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு, வறுமை குறைந்து இன, மத, சாதி ரீதியாக நாடுகளுக்கிடையிலும், சமூகத்திற்கிடையிலான ஏற்றத்தாழ்வு இல்லாமல் போய் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கின்ற வகையில், சமூக முன்னேற்றத்திற்காகச் செயலாற்றுவதால், அபிவிருத்தியானது சமூகவியலில் உள்ளடக்கப்படுகின்றது.
அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைக் குறிக்கும் என ஒரு சாரரும், அது சமூகப் புரட்சியைக் குறிக்கும் என இன்னொரு சாரரும் கருதி வந்தனர். ஆனால், ஒரு நாடு பொருளாதாரத்துறையில் மட்டும் கொண்ட வளர்ச்சியைக் கொண்டு, அந்நாடு அபிவிருத்தி அடைந்த நாடு எனக் கூற முடியாது. பொருளாதார அபிவிருத்தியுடன் மக்களின் சமூக, பண்பாட்டு அரசியல் வாழ்க்கையையும் கருத்தில் கொள்வதால், இதுவரை இருந்த குறைபாடுகளை நீக்கி, பன்முகச் சிந்தனையை வளர்க்க, அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது. எனவே ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மாத்திரம் போதாது. அது நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களையும் சென்றடைந்து, மக்களது வாழ்க்கைத்தரங்களில் உயர்வினை ஏற்படுத்துவதால் அபிவிருத்தியானது சமூகவியலுக்கு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
மேலும் அபிவிருத்தியானது, சமூகத்தின் தேவைகளையும், விடுதலையையும் பூரணமாக நிறைவு செய்வதோடு வாழ்தலுக்கான வாழ்வாதாரம், சுயமரியாதை, சுதந்திரம் ஆகிய இலக்குகளின் அடிப்படையில் தங்கியிருப்பதால் சமூகவியலில் அபிவிருத்தியானது உள்ளடக்கப்படுகின்றது. உதாரணமாக இயற்கை அனர்த்தங்களாலும், யுத்தங்களாலும் பலவற்றையும் இழந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அதன் மூலம் தலைமைத்துவமுடைய பிரஜையாக உருவாக்குவதன் மூலம் சமூக நலன் மேம்படுத்தப்படுகின்றது. இம்மேம்பாடானது, சமூகத்திலுள்ள சமூக நிறுவனங்களில் ஏற்படும் மாற்றங்களின் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. அதாவது, அனர்த்தத்தாலோ, யுத்தத்தாலோ ஏற்படும் இழப்பானது நேரடியாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை நீக்கி, சமூக நிறுவனங்களின் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உதவுவதால், அபிவிருத்தியானது சமூகவியலில் அவசியமானதாகக் காணப்படுகின்றது.
எனவே, உலகில் ஏற்பட்ட உலகப்போர்களைத் தொடர்ந்து, மனித குலத்தின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைகளை உருவாக்கி, காலம் காலமாகப் பின்னடைவாகக் காணப்பட்ட மனிதர்களின் நிலை பேண் விருத்திக்கும், உற்பத்தித் திறனிற்கேற்ற வகையில் நுகர்வினை மேற்கொண்டு, தமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதால், அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது. எனவே அபிவிருத்தியானது, வெறுமனேப் பொருளாதாரத்தில் மட்டுமின்றி, கல்வி, சமூகம், அரசியல், போக்குவரத்து, சமயக் கலாசாரம் போன்ற பல துறைகளில் ஏற்படும் உள்ளார்ந்த நேர்நிலையான, நிலைபேறான விருத்தி நிலைகளின் திட்டமிடல் செயற்பாட்டின் மூலம் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் முன்னேற்றுவதால், அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது. உதாரணமாக, கல்வியில் ஏற்படும் மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றும்.
எனவே, எதிர்கால சந்ததியினரின் அடிப்படைத் தேவைகளை இழக்காது அல்லது நிகழ்கால சந்ததியினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, தமது தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் சமூக முன்னேற்றப் பாதையில் செல்கின்ற தன்மை நிலை பேண் அபிவிருத்திக்கு இருப்பதால், அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது. ஏனெனில், ஒட்டுமொத்த சமூக நலனிலும் அக்கறை காட்டுவதால், சமமான வளப்பங்கீடு என்பது அனைத்து மனிதருக்கும் அவசியமாகும்.
எனவே, சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் சிக்கலானது ஒட்டு மொத்தமாக, அனைத்துச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஏனையச் சமூக கூறுகளிலும், நிறுவனங்களின் சம நிலையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் சமூகத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அபிவிருத்தியானது காணப்படுவதால் சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது. உதாரணமாக, காரல்மார்க்ஸின் கருத்துப்படி, சமூகத்தின் அடிக்கட்டுமானப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றமானது, மேற்கட்டுமான சமயம், கல்வி, கலாசாரம், குடும்பம் போன்ற அனைத்துக் கூறுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார். இந்த வகையில் இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட இழப்பானது, அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி வறுமை உருவாகியதால், ஏனைய சமூக கட்டமைப்புக் கூறுகளும் சிதைவுற்றது. இவற்றைச் சீர்செய்யும் வகையில் சமூகவிலாளர்களும், ஏனைய சர்வதேச அமைப்புக்களும் சமூக நலனை மேம்படுத்த முன்வந்ததால் அபிவிருத்தியானது சமூகவியலில் முக்கியம் பெறுகின்றது.
முடிவுரை
ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, சமூக அபிவிருத்தி என்பது தனிநபர்கள், குழுக்களை செயல்திறன் உடையவர்களாக உருவாக்கி, சுயநிர்ணய உணர்வின் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு வறுமை, முரண்பாடு, வன்முறைகள், வேலையின்மை போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு இடையூறாக இருக்கும் அத்தனை அம்சங்களையும் இல்லாதொழித்து சுதந்திரம், சமத்துவம், கௌரவம் கொண்ட முன்னேற்றமான சமுதாயத்தை உருவாக்குதல் எனப் பொதுவாக விளங்கிக் கொள்ளலாம். இத்தகைய அனைத்து அம்சங்களும் அபிவிருத்தி எனும் எண்ணக்கருவிற்கு இருப்பதால், சமூகவியலில் இந்த அபிவிருத்தி எனும் எண்ணக்கருவானது முக்கியமானதாகவேக் காணப்படுகின்றது. ஆகவே, சமூக நிறுவனங்கள், சமூகக் கட்டமைப்பிலுள்ள கூறுகளுக்கிடையிலான முன்னேற்றம் சமூக அபிவிருத்தியாகும். எனவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சின்னாபின்னமான சமூகக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அபிவிருத்தியானது சமூகவியலில் உருவானாலும், இன்று சமூகத்தோடு இடையூடாடுகின்ற அத்தனை கூறுகளின் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
உசாத்துணைகள்
1. சண்முகலிங்கம். க (2010), 'அபிவிருத்தியின் சமூகவியல்', சேமமடு பதிப்பகம், கொழும்பு, பக்(43-56).
2. ஆலிப்.எஸ்.எம் , றிஸ்வான்.எம், 'அரசியல் சமூகவியல்', ஐடீர் வெளியீட்டகம், கொழும்பு, பக்(57-66).
3. https://www2.gnb.ca, “What is social Development” , 04/07/2022, 07.30pm.
4. https://www.slideshare.net, “Introduction to Socila Development”, 05/07/2022, 08.30pm.
5. http://ddceutkal.ac.in, “Sociology of Development: Meaning of Social Development, 03/07/2022, 06.30Am.
6. https://www.sociologyguide.com, “Sociology of development”, 03/07/2022, 07.30pm.
7. https://www.tandfonline.com, “What is Sociology? What is Development”, 03/07/2022, 08.00pm.
8. http://www.indsocdev.org, “What is Development”, 05/07/2022, 06.00Am.
9. https://www.slideshare.net, “concept and meaning of Social development”, 05/07/2022, 09.15pm.
10. https://www.encyclopedia.com, “Social Development”, 06/07/2022, 04.00pm.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|