பண்டைய மட்டக்களப்புத்தேசம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் வடக்கே வெருகலாறு தொடக்கம் தெற்கே கதிர்காமத்து மாணிக்கக் கங்கை வரையும் வியாபித்து இருந்ததைப் பல்வேறு சான்றுகள் சுட்டி நிற்கின்றன. கி.பி 1ம் நூற்றாண்டில் காணப்பட்ட மட்டக்களப்பின் தென்பிரிவுக் குறுநில அரசான உன்னரசுகிரியின் தெற்கெல்லையாக மாணிக்கக் கங்கை குறிப்பிடப்படுகின்றது. அப்போதிருந்த குறுநில மன்னர்கள் மாணிக்கக் கங்கையிலிருந்து வாய்க்கால் வெட்டி வயல் நிலங்களுக்குப் பாசனம் செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. சோழராட்சிக் காலத்தில் மட்டக்களப்பின் ஆட்சிப் பிரதிநிதிகளில் ஒருவன் கட்டகாமத்தில் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. கி.பி 13ம் நூற்றாண்டுக்கு உரியதான குளக்கோட்டன் கல்வெட்டு பாடலில் (கலிங்க மாகோன் காலம்) அவனால் மானியங்கள் வழங்கப்பட்ட பண்டைய மட்டக்களப்பு பிரதேச ஆலயங்களுள் மாணிக்கக் கங்கை என்று கதிர்காமம் குறிப்பிடப்படுகின்றது. மாகோன் வகுத்த மட்டக்களப்பின் ஏழு வன்னிமைப் பிரிவுகளின் ஒன்றான நாடுகாடுப் பற்றின் வடக்கு எல்லையாக நாதனையும் (வெல்லாவெளி) தெற்கெல்லையாக கதிரமலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரை பதவி வகித்த மட்டக்களப்பு வன்னியர்களின் தங்குமிடமாகவும் சுற்றுலா வாசஸ்தலமாகவும் கட்டகாமம் வன்னியர் வீடு விளங்கியமை அறியப்பட்டதாகும். 1824ல் மேற்கொள்ளப்பட்டு 1827ல் இலங்கை நிருவாக அறிக்கையில் வெளியிடப்பட்ட இலங்கையின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கட்டகாமம் மட்டக்களப்பின் வேகம் - விந்தனைப் பற்றில் இடம் பெற்றுள்ளது.
பொதுவாகப் பண்டைய மட்டக்களப்பின் எல்லைகளாக வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே மாணிக்கக் கங்கையினையும் கிழக்கே வங்காள விரிகுடாவினையும் மேற்கே ஊவா மலைத் தொடர் - வெல்லசைப் பிரிவினையும் கோடிடலாம். இப்பிரதேசமானது சுமார் 150 மைல் நீளத்தையும் சராசரியாக 48 மைல் அகலத்தையும் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுள் கொண்டிருந்தது. நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நானில அமைப்போடு கூடிய இயற்கை வளம் மிக்க பிரதேசமாக இது விளங்கியது.
இலங்கையின் தென்கிழக்காக ஒரு பரந்துபட்ட நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய பண்டைய மட்டக்களப்புத் தேசத்திற்கு மிகுந்த உணர்வுப்பூர்வமான மாந்தர்கள் வாழ்ந்து மடிந்த ஒரு அகண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. கி.மு 500 முதலே இதன் நாகரிகம் மிக்க வரலாற்றுக்காலம் தோற்றம் பெறுவதை அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தே கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்துள்ளமையை கதிரவெளி மற்றும் கதிர்காமப் பகுதிகளின் அகழ் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
மட்டக்களப்புத் தேசத்தினுடைய வரலாறு நம் முன்னோரால் கட்டமைக்கப்பட்ட விதம் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டது. பிரதேச ஒருமைப்பாடும் சமுதாய நல்லிணக்கமும் அவர்களது வரலாற்றுப் பாதையில் ஒரு தெளிவினை ஏற்படுத்தியிருந்தன. இனம், மொழி, மதம் என்பவற்றின் மத்தியில் ஒரு சமரசத் தன்மையை நிலைநிறுத்தும் கோட்பாட்டினையே நமது முன்னோர்களது வாழ்க்கை முறையும் நடவடிக்கைகளும் கொண்டிருந்தன. இத்தன்மையே நாடு சுதந்திரமடையும் வரை - பிற சக்திகளின் ஊடுருவல் இங்கு நிலைகொள்ளாவரை - மட்டக்களப்பின் சிறப்பியல்பாக நிலவியது.
நமது பண்பாட்டில் - நமது முன்னோர்கள் அவர்களது கடந்த காலத்தில் வலிமையுடனும் ஆற்றலுடனும் வாழ்ந்த காலம் குறித்துப் பெருமைப்பட்டிருக்கின்றார்கள். நாம் இன்று வாழுகின்ற அவர்களது எதிர்காலம் குறித்து அன்றே அவர்கள் கவலைப்பட்டிருக்கின்றார்கள். ஆபத்துமிக்க இக் காலத்தை அவர்கள் எதிர்த்திருக்கின்றார்கள். நமது பண்பாட்டின் இன்றைய நிகழ்காலப் போக்கால் இத்தேசத்தினுடய எதிர்காலம் சிதறிப்போய் மொத்தமாய் அழிந்துவிடும் ஆபத்தையெண்ணி அன்றேயவர்கள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் கட்டிக்காத்து வந்த தங்கள் உயிர்ப்புமிக்க தேசம் பிற சக்திகளினால் சேதமடைந்து போய்விடக்கூடாது என்பதற்காகத் தங்களது சொத்து சுகங்களை இழந்ததோடு தங்களது இன்னுயிரையும் அதற்காக காவு கொடுத்திருக்கின்றார்ர்கள். நமது தேடலில் பிரதிபலிக்கும் கடந்த காலம் அழிந்து போன கடந்த காலமல்ல. ஒரு அர்த்தத்தில் - நிகழ்காலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கடந்த காலமே இது.
பண்டைய மட்டக்களப்புத் தேசத்தே ஆதிச் சமூகங்களெனக் கண்டறியப்பட்ட இயக்கர் மற்றும் நாகரும் அவர்களது சமூகப் பிணைப்பின் எச்சங்களான வேடரும் தனித்துவத்தோடு வாழ்ந்த திமிலரும் தொடக்க சமூக நிலையை வெளிப்படுத்தும் தன்மையில் இரு இனக் குழுமங்கள் மொழிவழிப் பாரம்பரியத்தையொட்டி வெளிப்படுதலும் பின்னர் சமய நெறிமுறைகளின் வேறுபடுத்தலுக்கு உள்ளாக்கப்படுதலும் நிலைகொள்வதைக் காணமுடிகின்றது. இதுவே தமிழர், சிங்களவர் என இரு இனக் குழுமங்களின் வெளிப்பாடாகவும் தென்படுகின்றது. தமிழே இப்பிரதேசத்தின் முக்கியப் பேச்சு மெழியாக நிலவிய போதும் சிற்சில இடங்களில் இருமொழி பேச்சு வழக்கில் நிலவியுள்ளமையை அண்மைய கல்வெட்டாய்வுகள் வெளிப்படுத்தும் தன்மையில் அம்மொழிகளை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழும் எலுவும் என ஆய்வாளர்கள் கருதவும் செய்கின்றனர்.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளிலே மிகப் பெரியதாகவும் தனியான பண்புகளைக் கொண்ட உணர்வுப்பூர்வமான தேசமாகவும் மட்டக்களப்புத் தேசம் விளங்கியது. இங்கு வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கு மிகவும் புராதானமாது. தமிழ் நாட்டில் வழக்கற்றுப் போய்விட்ட பல சங்கத் தமிழ்ச் சொற்கள் இன்னும் இம்மக்களிடையே பயின்று வருகின்றமை இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
இலங்கையில் பொதுவாகக் கிறிஸ்துவுக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்மொழி பரவிவிட்டமையும் அது பெருங்கற்காலமான ஆதி இரும்புக் காலப் பண்பாடு பரவியமையோடு தொடர்புபட்டது என்பதுவும் இதுவரை கண்டறியப்பட்டதாகும். மட்டக்களப்புத் தேசத்துக்குரிய மிகவும் பழைமையான தொல்பொருட் சின்னங்களை ஆய்வாளர்கள் இருவகைப்படுத்துவர். அவை பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் மற்றும் பிராமிக் கல்வெட்டுக்கள் என்பனவாகும். அவற்றிடையே சில பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காலத்தால் முற்பட்டவையாகும். சோழ மண்டலக் கரையிலுள்ள காவிரிப்பூம் பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினங்கள் வழியாக ஏற்பட்ட கடல்வழிப் பிரயாணங்கள் மூலமாக ஆதி இரும்புக் காலத்துக்கு உரியதான பெருங்கற் பண்பாடு தென்னிந்தியாவில் இருந்து மட்டக்களப்புத் தேசத்துக்கும் பரவியதாகவே கருதப்படுகின்றது. எனினும் இங்கு இதுவரை முறையான தொல்லியல் ஆய்வுகளோ, அகழ்வாய்வுகளோ குறிப்பிடத்தக்க அளவிலே மேற்கொள்ளப்படவில்லை என்பது பெரும் குறையாகவே தென்படுகின்றது. இங்குள்ள மிக முக்கியமான ஆதி இரும்புக்காலத் தொல்லியல் தளம் கதிரைவெளியில் காணப்படுகின்றது. மகாவலி ஆற்றின் கழிமுகப் பகுதியில் குரங்கு படையெடுத்த வேம்பு எனும் இடத்தில் பாறைக் கற்களால் அமைக்கப்பட்ட கற்கிடை அடக்கங்கள் தென்படுவதை இதில் முக்கியப்படுத்த முடியும். பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதலே மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் மொழியைப் பேசிய மக்கள் வாழ்ந்துள்ளமையை இதில் நிச்சயப்படுத்தமுடியும்.
கிறிஸ்துவுக்கு பிற்பட்ட காலத்தே எலுமொழியானது தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை படிப்படியாக உள்வாங்கிய தன்மையில் சிங்கள மொழியின் தோற்றுவாயாக அது அமைகின்றது. கி.பி 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்திலேதான் இம்மொழியின் முழுமையைக் காணமுடிகின்றது. மிக நீண்ட காலமாக இந்துப் பாரம்பரியம் பேணப்பட்ட இலங்கையில் மகிந்த தேரரின் வருகையின் பின்னரான கி.மு 3ஆம் நூற்றாண்டில் பௌத்தமும் தலையெடுக்கலானது. ஆங்காங்கே பௌத்த வழிபாட்டுத் தலங்களும் உருவாகத் தொடங்கின. இதன் பின்னணியில் சிங்களவர் மாத்திரமன்றி இந்து சமய நெறிமுறைகளை அடித்தளமாகக் கொண்டிருந்த பௌத்தத்தை தமிழரிலும் ஒரு சாரார் பின்பற்றவே செய்தனர். இதனால் மட்டக்களப்புத் தேசத்திலும் கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை ஆங்காங்கே தமிழ்ப் பௌத்தம் நிலைபெற்றிருந்தமை உறுதியாகின்றது. இதன்படி ஒரு நீண்டகாலத்தே தமிழர், சிங்களவர் என்ற இரு மொழிவழிச் சமூகங்களை பண்டைய மட்டக்களப்புத் தேசம் கொண்டுள்ளமையை உணரமுடியும். எனினும் இதில் மிகப் பெரும்பான்மைச் சமூகமாக தமிழர் சமூகமே விளங்கியது. மட்டக்களப்புத் தமிழர் சமூகம், கிடைக்கின்ற வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் கி.மு 5ஆம் நுற்றாண்டுவாக்கில் உருவாக்கம் பெற்றிருக்கப் போதுமான காரணங்கள் உள்ளன.