முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டில் பௌத்த, சமணக் கலைச்சொற்கள்
முனைவர் சு. மாதவன்
முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டுக்களில் வரலாறு, சமுகம், சமயம், அரசியல் எனப் பல நோக்கு நிலைகளில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சமயம் குறித்த ஆராய்ச்சிகளில், அவற்றில் இடம் பெற்றுள்ள பெளத்த, சமணச் செய்திகளும் கலைச்சொற்களும்கூட ஓரளவுக்கு அடையாளங் காட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தக் கட்டுரை முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டில் காணலாகும் பௌத்த, சமணக் கலைச்சொற்கள் குறித்த தொகுப்புநிலை, பரிந்துரைநி,லை பகுப்புநிலை நோக்கை முன்வைக்கிறது.
பௌத்தக் கலைச்சொற்கள்
‘பாலி’ மொழிச்சொற்கள் பௌத்த வருகையால் கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழில் புகுந்து கலந்துவிட்டன. இன்று தமிழில் கலந்துள்ள பல மொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்கள் என்றே மயங்கும் நிலையைக் காணமுடிகிறது. சான்றாக, சமஸ்கிருதப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்கள்தாம் என்று பெரும்பான்மையான மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைக் கூறலாம். இவ்வளவு ஏன்? கடந்த 400 ஆண்டுகளுக்குள் தமிழில் கலந்துள்ள ஆங்கிலச் சொற்களையே தமிழ்ச்சொற்கள் என நம்பிக் கொண்டிருப்போரும் உண்டு. இன்றைய நிலையே இப்படி என்றால் ஈராயிரமாண்டுகளுக்கு முன்னர் தமிழில் கலந்த பாலி மொழிச் சொற்கள் இவைஇவை என அடையாளங் காணுதல் எவ்வளவு சிரமமானது? இத்தகைய புரிதலோடு அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி தொகுத்தளித்துள்ள சொற்களைக் கொண்டு அறியலாம்:
உய்யானம், ஆராமம் - பூந்தோட்டம்
சமணர் - ஸ்மரணர்
சைத்தியம் சேதியம் - பௌத்தர் வணங்குதற்குரிய கட்டிடங்கள்
தேரன், தேரி - பௌத்தத் துறவிகளின் ஆண்பால் பெண்பாற் பெயர்கள்
பிக்ஷு பிக்ஷுணி - ஆண், பெண் துறவிகள்
விகாரை விகாரம் - பௌத்தக் கோயிலுக்கும் பிக்ஷுக்கள் வாழும் இடத்துக்கும் பெயர்
வேதி, வேதிகை - திண்ணை என்பது பொருள்
போதி - அரசமரம்
பாடசாலை -பள்ளிக்கூடம்
சீலம் - ஒழுக்கம்
சேதியம் - கோவில்
சாகவர் - பௌத்தரில் இல்லறத்தார்
நாவா - கப்பல்
பக்கி - பறவை
பாடசாலை - பள்ளிக்கூடம்
நாவிகன் - கப்பலோட்டி
பாதகை - கொடி
நாயகன் - தலைவன்
தாம்பூலம் - (தாம்பூலம், வெற்றிலை)
பாலி |
தமிழ் |
சம்ஸ்கிருதம் |
தமிழ் |
அத்த (பொருள்) |
அத்தம் |
அர்த்த |
அருத்தம் |
காம(ஊர்) |
காமம் |
க்ராம |
கிராமம் |
தம்ம(அறம்) |
தன்மம் |
தர்ம |
தருமம் |
பக்க(நட்பு,புறம்) |
பக்கம் |
பக்ஷ் |
பட்சம் |
யக்க (கந்தருவன்) |
இயக்கன் |
யக்ஷ் |
இயட்சன் |
லக்கண (குறி) |
இலக்கணம் |
லக்ஷ்ண |
இலட்சணம் |
(வேங்கடசாமி., மயிலை, சீனி, 2007 :137-139)
சமணக் கலைச்சொற்கள்
பௌத்தப் பாலிமொழிச் சொற்களுக்கு எந்த நிலையோ அதே நிலைதான் சமணிப் பிராகிருத மொழிச் சொற்களுக்கும் எனக் கூறவேண்டியதில்லை. சமணக் கலைச் சொற்களையும் இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்:
பிராகிருதம் |
தமிழ் |
ஜீவன் |
உயிர் |
அஜீவன் |
உயிரல்லது |
புண்ணியம் |
நல்வினை |
பாவம் |
தீவினை |
ஆஸ்ரவம் |
ஊற்று |
சம்வரை |
செறிப்பு |
நிர்ஜரை |
உதிர்ப்பு |
பந்தம் |
கட்டு |
மோட்சம் |
வீடு |
ரத்னத்திரயம் |
மும்மணி |
ஸ்ரமணர் |
சமணர் (துறவிகள் என்பது பொருள்) |
ஜினர் |
ஜைனர் |
நிர்க்கந்தர் |
நிகண்டர் |
பிண்டி |
பிண்டியர் |
அகிம்சை |
இன்னா செய்யாமை |
திகம்பரம் |
நிர்வாணம் |
சாமாயிகம் |
தியானநிலை |
அன்னதானம் |
உணவுக்கொடை |
அபயதானம் |
அடைக்கலக்கொடை |
ஒளடததானம் |
மருத்துவக்கொடை |
சாத்திரதானம் |
கல்விக்கொடை |
பள்ளி |
சமணப் பள்ளி |
சல்லேகனை |
நோற்றுச் சாதல் (வடக்கிருத்தல்) | -
(தொகுப்பு: கட்டுரையாளரது)
தமிழ் பௌத்த, சமணக் கலைச் சொற்கள்
பாலி, பிராகிருதத்திலிருந்து தமிழில் கலந்த சொற்களன்றி, வந்த பௌத்த, சமணர்களாலும் இங்கிருந்த தமிழ் பௌத்த சமணர்களாலும் தமிழிலேயே பல கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. இதற்குக் காரணம், பௌத்தர்களும் சமணர்களும் எங்கு செல்கின்றனரோ அவரவர் தாய்மொழியிலேயே சமயக் கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்று நினைத்ததேயாகும். இவ்வாறு தமிழிலேயே தோன்றிய பௌத்த, சமணக் கலைச் சொற்கள் வருமாறு:
பள்ளி, பாழி, மும்மணி, முக்குடை போன்றன.
முதலாம் இராசேந்திர சோழன் கல்வெட்டு
இந்தக் கட்டுரைக்காக இங்கு ஒரே ஒரு கல்வெட்டு எடுத்தாளப் பெறுகிறது. இந்தக் கல்வெட்டு (S.I.I, Vol.I.No.67), வை.சுந்தரேச வாண்டையார் தொகுத்து விளக்கியுள்ள “முப்பது கல்வெட்டுக்கள்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
1. ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர விருநிலமடந்தையும் பொர்ச்சயப் பாவையுஞ் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
9. யுஞ் கிட்டருஞ் செ(றி)மிளை யொட்ட விஷையமும் பூசுரர் செர்நல் கொசலை நாடுந் தன பாலனை வெம்முனையழித்து வண்டுறை சொலைத் தண்டபுத்தியு மிரண -
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
11. வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி ஒன்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமு நித்தில நெடுங் கடலுத்தி (ர)லாடமும் எறி (ம) ணற்றிர்த்தத் தெறிபுனற் கங் கையுமா(ப்)
12. பொரு தண்டாற் கொண்ட கொப்பர கெசரிப்ன் மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சொழ தேவற்கு யாண்டு உய ஆவது (ஜ)யங் கொண்ட சோழமண்டலத்து பங்கள நாட்டு நடுவில்
13. வகை முகை நாட்டுப் பள்ளிச் சந்தம் வைகவூர்த்திருமலை ஸ்ரீ குந்தவை ஜிநா லயத்து தேவற்குப் பெரும்பாணப் பாடிக்கரை வழி மல்லியூர் இருக்கும் வியா
14. பாரி நந்நப்பயன் மணவாட்டி சாமுண்டப்பை வைத்த திருநந்தா விளக்கு ஒன்றி நுக்குக் காசு இருபதும் (திரு) வமுதுக்கு வைத்த காசு பத்தும்,
இருக்குமிடம் - போளூர்க்கு அருகில் திருமலைக் குன்றின் மீதுள்ள ஒரு துண்டுப் பாறையில்
கல்வெட்டில் எழுத்து - தமிழும் கிரந்தமும்.
கல்வெட்டுத் தோன்றிய காலம் - கி.பி.1024
(சுந்தரசேவாண்டையார்.வை., 2008 :81-82)
இந்தக் கல்வெட்டின் முழுவடிவமும் இந்நூலில் இல்லை போல் தோன்றுகிறது. “(திரு)வமுதுக்கு வைத்த காசு பத்தும்” என்பதோடு மட்டும் பதிவு செய்துள்ளார் வை. சுந்தரேச வாண்டையார். இந்தக் கல்வெட்டின் எஞ்சிய பகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்தக் கல்வெட்டு ‘மெய்க்கீத்தி’ எனும் வகையைச் சார்ந்தது. இந்த மெய்க்கீர்த்தி போலவே தொடங்கும் சில கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவையும் முதலாம் இராசேந்திர சோழனுடையவையே. அந்தச் சில கல்வெட்டுக்களும், இந்தக் கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தி போலவே தொடங்குகின்றன. ஆனால், இடையில் எங்கேனும் மாற்றம் பெறுகின்றன. அவை வெட்டப்பட்ட இடம், காலம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப அவை மாற்றம் பெற்றுள்ளன என்பதையும் உய்த்துணர முடிகிறது. இது ஆய்வுக்குரியது. இங்கு இது ஆய்வன்று.
இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள கல்வெட்டு மெய்க்கீர்த்திப் பகுதியில் 11ஆம் பத்தியின் நிறைவுவரை பொதுவான பகுதியாகவும் 12,13,14-ஆம் பத்திகள் உன்னித்து ஆராயத்தக்கனவாகவும் உள்ளன. இதிலும்கூட, 14-ஆம் பத்திக்குப் பிறகு இந்தக் கல்வெட்டு நீள்கிறதா, நின்று விட்டதா, கிடைத்ததே இதுவரைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆய்வுக்குரிய கல்வெட்டில் பௌத்த - சமணக் கலைச் சொல்
ஆய்வுக்குரிய கல்வெட்டு “குந்தவை ஜினாலயம்” என்று குறிப்பிடுவதால், இது சமண சமயத்திற்கான கொடை ஒன்பது தெளிவு. எனினும், “பள்ளிச் சந்தம்” என்னும் சொல் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் ஒருசேர உரிமையுடைய சொல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பௌத்தப் பள்ளிகளுக்கும் சமணப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்ட கொடைகளைக் குறிக்கும் கலைச்சொல்லாக இச்சொல் விளக்குகிறது. இக்கல்வெட்டு குறித்த விளக்கக் குறிப்புரையில்,
“பள்ளிச் சந்தம் - சைன கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தம்” (சுந்தரேச வாண்டையார்.வை., 2008 : 85)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கோவில்” என்று சமணர்கள் குறிப்பதில்லை. எனவே, கோவில் என்ற கலைச்சொல்லைச் சமணப் பள்ளிக்குச் சமமான சொல்லாகக் குறிப்பது வரலாற்றுப் பிழையாகும். ஆய்வாளர்கள் அந்தந்த நிலைக்குரிய கலைச்சொற்களை அப்படியே உள்ளது உள்ளவாறு கையாள்வதே பொருத்தமானதாகும். இன்றைய புரிதலுக்காக அன்றைக்கே உரிய கலைச்சொற்களை விட்டுவிடுதல் நன்றன்று.
ஆய்வுக்குரிய கல்வெட்டில் சமணக் கலைச்சொற்கள்
“குந்தவை ஜிநாலயம்” என்பதில் “ஜிநாலயம்” என்ற சொல் சமணக் கலைச்சொல்லாகும். இதற்கு விளக்கம் எழுதும் வை.சுந்தரேச வாண்டையார், “குந்தவை ஜிநாலயம்” இது முதலாம் இராசராச சோழனது தமக்கையாராகிய பெரிய குந்தவையின் பேரால், வைக்கப்பெற்ற கோயில்” (சுந்தரேச வாண்டையார்.வை., 2008:85) என்கிறார். (முன்னரே குறிப்பிட்ட “பள்ளி” என்பதும் சமணக் கலைச்சொல்லும் ஆகும்.)
“ஜிநாலயம்” என்ற சொல் ‘ஜிநர்+ஆலயம்’ எனப்பிரியும். ‘ஜினர்’ என்பதற்கு ‘வெற்றி வீரர்’ என்று பொருள். இச்சொல் பிராகிருதச் சொல்லாகும். இதற்கு விளக்கம்,
“புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலான் தீர்த்தாங்கரர்க்கு ஜீனர் என்னும் பெயர் உண்டு” (வேங்கடசாமி., மயிலை. சீனி. 2000:1)என்பதாகும்.
‘ஆலயம்’ என்பது ‘ஆ+லயம்’ எனப்பிரிந்து ‘உயிர் ஒன்றும் இடம்’ (ஆன்மா (எண்ணம்) ஒன்றும் இடம்) எனப் பொருள்படும். இதிலிருந்து, புலன்களை வென்றால்தான் உயிர் ஒன்றில் ஒன்றும். அவ்வாறு, ஒன்றில் ஒன்றினால்தான் வெற்றிபெற முடியும். எனவே, புலன்களை வென்றவரே உண்மையான வெற்றிவீரர் என்கிறது இந்தச் சமணக் கலைச்சொல்.
இந்த ஜிநாலயங்களில்தான், அன்னதானம், அபயதானம், ஒளிடதானம், சாத்திரதானம் ஆகியன முதன்முதலில் தொடங்கப்பட்டன. பின்னர், அவை வெவ்வேறு தளங்களிலும் களங்களிலும் புழக்கத்திற்கு வந்தன என்பது இங்கு நோக்கத்தக்க செய்தியாகும்.
இந்த குந்தவை ஜிநாலயத்தைக் குறித்த களஆய்வுச் செய்தியை மயிலை. சீனி.வேங்கிடசாமி நூலில் (2000:107,130) காணலாம். முதலாம் இராசேந்திர சோழனின் பள்ளி, கல்லூரி, அறச்சாலை, தானங்கள் குறித்த செய்திகளை ம. இராசசேகர தங்கமணி நூலில் (2011:235) காணலாம்.
ஆய்வுக்குரிய கல்வெட்டில் பௌத்தக் கலைச்சொல்
இந்தக் கல்வெட்டில் 9-ஆவது பத்தியில்,
“... ... ... ... ... தன பாலனை வெம்முனையழிது வண்டுறை சொலைத் தண்டபுத்தியு மிரண”
என்பதில் உள்ள ‘தன பாலனை’ ‘தன்ம பாலன்’ என கே.கே. பிள்ளை உள்ளிட்ட பலரும் பதிவு செய்துள்ளனர். வை. சுந்தரேச வாண்டையாரும் விளக்கம் எழுதுகையில், “தன்ம பாலன் - இவன் பாலா வம்சத்தைச் சேர்ந்த அரசன்” (2008:84) என்று குறிப்பிட்டுள்ளார். ‘தன்மபாலன்’ என்னும் பெயரில் இலங்கையிலும் ஒரு அரசன் இருந்துள்ளான் என்பதை மயிலை. சீனி. வேங்கடசாமி, அவரது சாசனச் செய்யுள் மஞ்சரியில் குறித்துள்ளார் (2006:120).
‘தம்மம்’ என்னும் பாலிமொழிக் கலைச்சொல் தமிழில் ‘தன்மம்’ என வழங்குகிறது. ‘தர்மம்’ என்று வைதீகம் குறிப்பதும் சமணம் குறிப்பதும் வேறுபேறு பொருள் சார்ந்தது. பௌத்தம் குறிப்பிடும், ‘தம்மம்-தன்மம்’ எனும் கலைச்சொல் ஒட்டுமொத்த பௌத்த மெய்யியலையும் குறிக்கும் சொல்லாகும். இங்கு ‘தன்மம்’ என்ற சொல்லைப் பிற எந்த சமயமும் கையாளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, ‘தன்ம பாலன்’ என்ற மன்னனின் பெயர் பௌத்தச் சார்புடைய எனலாம். பாலப் பேரரசில் (Pala Empire 8th Century - 12 century) ‘தர்மபாலா’ என்ற மன்னன் (781-821) இருந்துள்ளான் (Pala Empire, Wikipedia.org) எனினும், அவன் முதலாம் இராசேந்திர சோழனுக்கு முந்தியவனாக இருக்கிறான். இதிலிருந்து முதலாம் இராசேந்திர சோழனின் முன்னோர் பெற்ற வெற்றியையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முடிவுகளாகச் சில பரிந்துரைகள்
இந்தச் சிறிய கட்டுரையில், ஆராயப்பட்டுள்ளாவற்றிலிருந்து பெறப்படும் பரிந்துரைகள் வருமாறு :
1. கல்வெட்டுக்களில், செப்பேடுகளில், பிற ஆவணங்களில் இடம் பெற்றுள்ள பௌத்த சமணக் கலைச்சொற்களை மேலாய்வு செய்யலாம்.
2. ஒரு வரலாற்றுக் காலம், சமயம், சூழல் இவற்றுக்குரிய கலைச்சொல்லை, வேறொரு காலத்துக்குரியதாகவோ மயக்கம் விளைவிப்பதாகவோ பயன்படுத்துதல் கூடாது.
3. மூல ஆவணத்தில் எவ்வாறு உள்ளதோ அப்படியே கொடுத்த பின்தான் திருத்திய வடிவத்தைக் கொடுக்கவேண்டும். இத்தகைய முறைதான் வரலாற்று வரைவியலுக்கு உகந்த முறையாகும்.
4. ‘இராசேந்திர பெரும்பள்ளி’ என்ற பெயரில் உள்ள பள்ளிகள் எல்லாவற்றையும் தொகுத்துத் தனித்த ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
பயன்பட்ட நூல்கள்
1. இராசசேகர தங்கமணி., ம. முதலாம் இராசேந்திர சோழன், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை-5, 2011.
2. இராசமாணிக்கனார்.,மா. கல்வெட்டுக்களில் அரசியல், சமயம், சமுதாயம், சேகர் பதிப்பகம், சென்னை- 83, 1977
3. சுந்தரேச வாண்டையார்., வை.முப்பது கல்வெட்டுக்கள், அறிவுப் பதிப்பகம், சென்னை-14, 2008.
4. சேதுராமன். G. பௌத்தக் கலை வரலாறு, ஜெ.ஜெ. பப்ளிகேசன்ஸ், மதுரை-7, 2006.
5. பிள்ளை., கே.கே. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, 2013.
6. வேங்கடசாமி., மயிலை. சீனி. பௌத்தமும் தமிழும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, 2007.
7. வேங்கடசாமி., மயிலை. சீனி. சமணமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை- 18, 2000
8. வேங்கடசாமி., மயிலை. சீனி. சாசனச் செய்யுள் மஞ்சரி, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை-5, 2006.
9. Vellupillai., A. Epigraphical Evidences For Tamil Studies, International Institute of Tamil Studies, Chennai-20,1980.
* முதலாம் இராசேந்திர சோழன் - தேசியக் கருத்தரங்கம், வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், 20, 22 அக்டோபர், 2016.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|