உழைப்பாளர் தினம்
ஆல்பர்ட் பெர்னாண்டோ
இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு அல்லது 9 மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித் தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில்......"ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா", "பின் லேடன் உயிரோட இல்லையாமே".... சரிசரி..வாங்க கேண்ட்டீன் போய் டீ...சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என்ற அலசல் நேரம் உட்பட ) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.
மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.
8மணி நேரம் உழைப்பு (வேலை), 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு (உறக்கம்)என்ற குரல் அங்கிங்கெனாதபடி உலக நாடுகளில் ஒலித்தது. ஒலித்தவர்களில் எண்ணற்ற குரல் வளைகள் நெறிக்கப்பட்டது.
ஒலித்த குரல்களின் உயிர்களைக் குடித்த குண்டுகள் எத்தனை?
அடித்து நொறுக்கப்பட்டு முடமாக்கப்பட்ட உயிர்கள் எத்தனை?
தங்கள் இன்னுயிரை ஈந்து அவர்கள் தந்த வெப்பமான எட்டு மணி நேர உத்திரவாதத்தால் தான் இன்று உலகத் தொழிலாளர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது முலாம் பூசப்படாத 24 காரட் உண்மை.
நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களுக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம்.
உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிற சலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.
உழைப்பாளர்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. எட்டு மணி நேரம் வேலை; ஓவர் டைம்; போனஸ், உணவறை, ஓய்வுக் கூடம், தொழிற்கூடங்களில் பொழுது போக்கு மன்றம், ஓய்வூதியம், இன்ன பிற வசதிகள் இன்றைக்குத் தொழிலாளர்கள் பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்த் தியாகமும் அவர்கள் இட்ட புரட்சி வித்தும் தான் காரணம்.
உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுத்த முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிக் கொடியூன்றியது யார்? அதன் நெடிய வரலாறு கூறும் உண்மை என்ன என்று பார்ப்போமா?
1791ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் முதன் முதலாக மர வேலை செய்யும் தச்சர்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என தங்கள் குரலை உயர்த்தினர்.
1810ல் சமூகவியலாளர் ராபர்ட் ஓவென் இங்கிலாந்தில் பத்து மணி நேர வேலைக்கு குரல் கொடுத்தார்.
1848ம் ஆண்டு பிப்ரவரியில் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1835ல் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பொது வேலை நிறுத்தத்துக்கு அறை கூவல் விடுத்தனர்.
1836ல் இந்த இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக முதலாளி வர்க்கம் சிறிது அசைந்து கொடுத்தனர்.
ஆனாலும் பலன் கிட்டவில்லை.
ஆஸ்திரேலியா
18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலிருந்தும், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட கைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தினர். இவர்கள் இரவு பகல் பாராது கடுமையான வேலைகளைச் செய்யப் பலவந்தப்படுத்தப் பட்டனர்! பலர் சரியான உணவின்மையாலும், ஓய்வின்மையாலும் மரணத்தைத் தழுவினர்.
தங்களைப் பாதுகாக்க யூனியன் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்த முயல்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்தது. ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வந்தாலும் அவர்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை அல்லது மிகக் கடுமையான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர்.
இதே நேரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரிட்டன் 1823ம் ஆண்டு இயற்றிய சட்டத்தைப் போல 1845ல் இயற்றி முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
ஏப்ரல் 21, 1856ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு திடீரென்று கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் பேரணி ஒன்றை நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். இதுதான் ஆஸ்திரேலிய வரலாற்றில் உழைப்பாளர்கள் ஒன்று திரள வழி வகுத்ததோடு எட்டு மணி நேர வேலையை வென்றெடுக்க பின்னாளில் வழி வகுத்தது.
1866ல் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஜெனரல் காங்கிரஸ் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை எங்கள் லட்சியம் என்ற பொதுக் கோரிக்கையை முன் வைத்துப் போராட்டத்தைத் துவங்கினர்.
1871ல் கிரேட் பிரிட்டனில் டிரேட் யூனியன் ஆக்ட் என்ற சட்டத்தை கொண்டு வந்து தொழிலாளர்களை நசுக்க எத்தனித்தது.
1872ல் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எட்டு மணி நேர வேலைக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை பிரம்மாண்ட பேரணியின் இறுதியில் முடிவெடுத்தனர்.
1886 மே மாதம் 1ம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்களில் முறைப் படுத்தப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் ஒன்று பட்ட இயக்கமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அங்காங்கே நடத்தினர். நியூயார்க் யூனியன் சதுக்கத்திலும், கென்டக்கியில் லூயிஸ்வில்லியிலும் மற்றும் பால்டிமோரில் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாக அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் என்ற பேதமின்றி ஒருங்கிணைந்து புரட்சிக் குரல் எழுப்பினர். மெய்னி முதல் டெக்சாஸ் வரையிலும், நியூஜெர்சியிலிருந்து அலபாமா வரையிலும் ஒருங்கிணைந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
சிகாகோ கலகம்
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட் பகுதியில் 1886ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் "எட்டு மணி நேர வேலை" என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு "மே" மாதம் 4-ம் தேதி ஏற்பாடு செய்தது.
சிகாகோவின் அந் நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்து கொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக் கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை வீச... தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த ஆபத்தான வெடி குண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமுற, 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்தனர். எண்ணற்ற தொழிலாளர்கள் காயமுற்றனர்.
கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய் அன்றைய தினம் அமைந்தது. தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம் எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கண் கொண்டு பார்க்க இயலும். காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்கத் தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லி நாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற்சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு. தொழிலாளர்கள் தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.
பேரியக்கம்
சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர். உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர சிகாகோ கலகம் காரணமாகிப் போனது.
அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.
கனவும் நனவும்
தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் "எட்டு மணி நேர வேலை" என்ற அரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன. தொழிலாளர் வர்க்கத்தின் கனவு நனவானது 1888 ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது.
1889ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர். உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாக அந்தக் கூட்டம் அமைந்தது. அது மட்டுமல்ல. உழைப்பாளிகள் ஒன்று படவும் அவர் தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர்.
1891ம் ஆண்டு மே1ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் "மே" தினத்தைக் கொண்டாடினர். சைனாவில் 1920 லும், இந்தியாவில் 1927லும் (இந்தியாவில் கல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் மே தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905ம் வருடத்திலிருந்து வருடம் தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர் தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது.
கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையையே தொழிலாளர் தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில்
தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமை என்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்த சிங்காரவேலர் "மே" தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும் 1923ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின் இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்த வரலாறும் தொழிலாளர்கள் மறந்து விட முடியாத மாசற்ற உண்மையாகும்.
1889லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.