புதினப் படைப்பில் களத்தேர்வு என்பது படைப்பாக்கக் கட்டமைப்புக் கூறுகளில் சிறந்த இடத்தைப் பெறுவதாகும். புதினத்திற்குக் கதையும், கதை நிகழும் இடமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அவசியமான ஒன்றாகும். ஆகவே, புதினம் படைப்பவருக்குக் களத்தேர்வு பற்றிய சிரத்தை அதிகமாகவே இருக்கும். ஏனெனில், எந்தவொரு கதையையுமே ஓர் களப்பின்னணியில்தான் கூற இயலும். களமே மனித வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகும். மனிதவாழ்வை படைப்பில் கொண்டு வரும் படைப்பாளனுக்குக் களம் பற்றிய அறிமுகமும், புரிதலும் முக்கியமாகும்.
தமிழ்ப் புதினப் படைப்புச் சூழலில் எதார்த்த வகை எழுத்துக்களால் தனக்கென தனியிடம் பெற்றுத் திகழ்பவர் சு. தமிழ்ச்செல்வி. அவருடைய புதினங்களின் களத்தேர்வும் ஆடம்பரமற்ற எதார்த்தமான இடங்களாக அமைந்துள்ளன. சு. தமிழ்ச்செல்வியின் புதினங்கள் அவர் நேரில் கண்ட விளிம்பு நிலையில் வாழும் கிராமப்புற உழைக்கும் பெண்களின் வலி நிறைந்த போராட்ட வாழ்வை எடுத்துக் கூறுகிறது. ஆகவே, புதினக் களங்களையும் தான் வளர்ந்த, வாழ்கின்ற பகுதியாகவே அமைத்துக் கொண்டார்.
களம்தான் படைப்பாளியின் சிந்தனைக்கான வாயில். இக்கருத்தை எபோரா வெல்டி என்பவரின் கூற்றின் மூலம் விளக்க முடியும்.
"இடம் நாவல்களில் மிக மிக முக்கியம். களமே யார்? எவர்? என்ன நடந்தது? என்பதைப் புரிந்துகொள்ள உதவுவது” என்னும் சூர்யகாந்தனின் கருத்தின் மூலம் களம் என்பதின் இன்றியமையாமையை அறியலாம். களமே ஒரு புதினத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்றிவிடுகிறது. புதினங்களில் படைப்பாளி மையப்படுத்தும் களத்தின் ஊடாகவே புதினத்தின் வளர்ச்சி அமைந்துள்ளது. கிராமம் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே போதுமானது என்ற எண்ணத்தில் படைக்கப்படும் புதினங்களின் ஈர்ப்பு சற்றுக் குறைவானதே. களம் அதன் வர்ணணை, அக்களத்தில் வாழும் மனிதர்கள் அவர்களின் வாழ்வியல் என்று புதினம் விரிவடையும்போதுதான் படைப்பு சிறப்புப்பெறும். மேலும் களம் என்பது சில அடிப்படை நெறிமுறைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. களத்தேர்வு என்பது படைப்பாளரின் பன்முகத் தன்மையை வெளிக்கொணர உதவுகிறது. களங்களின் வாயிலாக அக்களத்தின் இடச்சூழலமைவுகள், இயற்கைச் சூழலமைவுகள், அக்களத்தின் வழி வெளிப்படும் வரலாற்று உண்மைகள், தொன்மங்கள், அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கைக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் வெளிப்படுகின்றன. அவ்வாறு சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகளில் இனங்காட்டப்படும் களம் அவரது படைப்பின் பிரதானமான அம்சமாக அமைகிறது.
மேலும் தன் களத்தேர்வு முறையைப் பற்றி,
"பின்தங்கிய கிராமப் பகுதிகளில் உழைக்கும் பெண்களுக்கு மத்தியில் புழங்கும் நான் எனது புனைவுகளில் அத்தகைய பெண்களின் உழைப்பையும் வியர்வையும் வலியையும் பாடுபொருளாகவும் அவர்களின் உழைப்பை வேண்டி நிற்கும் வயல்காடுகளைப் பாடுகளங்களாகவும் தேர்வு செய்கின்றேன்” என்கிறார்.
இக்கூற்றிலிருந்து சு. தமிழ்ச்செல்வியின் புதினக்களத் தேர்வுக்கான நோக்கம் வெளிப்படுகிறது.
அடித்தள மக்கள் பற்றியப் பதிவை இவ்வாசிரியர் அவர்களின் களம் , சமூகம் , திணை சார்ந்து படைத்திருக்கிறார். திணைசார் வாழ்வியலில் முல்லை, நெய்தல் நில வாழ்க்கையும் யதார்த்தத் தன்மையிலிருந்து மாறாமல் அதன் இருப்பை, உள்ளபடியே காட்டுகிறார். பொதுவாகப் பல படைப்பாளர்கள் களத்தைத் தனியாக வர்ணித்து அதை புதினத்தோடு இணைக்காமல் சொல்வதுண்டு. இங்கே களம் புதினத்தின் கதையோடு இணைந்து செல்வது குறிப்பிடத்தக்கது. நகர வாழ்வின் பாதிப்புக் குறைந்த கிராமிய வாழ்வியலே அதிகம் மையப்படுத்தப்பட்டுள்ளது. கிராமியச் சமூக அமைப்பில் உள்ள மக்களின் தொழில், சடங்குகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல் எனக் கிராமச் சித்திரமாகவே புதினங்கள் உருப்பெற்றுள்ளன.
சிலர் தான் சார்ந்த நிலப்பகுதியை விடுத்து வேறு நிலப்பகுதியை நாடிச் செல்கின்றனர். அதற்குத் தொழில், வறுமை, திருமணம் எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவ்வாறு நிலப்பகுதியின் ஒன்றின் வாழ்க்கை விவரணைகளோடு அடுத்த நிலப்பகுதிகள் இவரது படைப்புகளில் துணைமைக் கதைக்களங்களாக இடம்பெறுகின்றன. புதினத்தில் ஒரு நிலப்பகுதியின் வாழ்க்கையோடிணைந்தே இந்நிலப்பகுதி வாழ்வியலும் விளக்கப்படுகின்றது.
இக்களங்கள் வாயிலாகத் திணைசார் வாழ்வியலின் கோர முகங்கள் இவர் புதினங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. திணைசார் வாழ்வியலில் இம்மக்களின் தொழில், சடங்குகள், அக வாழ்க்கை, மொழிநடை என அத்திணைசார்ந்து பதிவு செய்திருக்கிறார். திணைசர் வாழ்வியலை ஆசிரியர்,
“யதார்த்தம் குரூரமாகவும் வக்கிரமாகவும் இருக்கிறபோது அதை மிகைப்படுத்தவோ சிதைக்கவோ நான் விரும்பவில்லை. மாறாக எனக்குக் கிட்டிய அனுபவங்களை அதற்குண்டான கச்சாத் தன்மையோடு அருகருகே அடுக்கிக்கொண்டு நாவலை உருவாக்குகிறேன்” என்று கூறுகிறார்.
இக்கூற்றுப் படியே புதினங்களிலும் திணைசார் வாழ்வு அமைந்துள்ளது.
வெறும் திணை சார் கதை சொல்லலாக மட்டுமல்லாது, கதைப்போக்கினூடாகச் சடங்குகள், விழாக்கள், வழிபாட்டுமுறைகள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள், நம்பிக்கைகள், இனத்தோற்றக் கதைகள், தொன்மங்கள் என இவையும் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றன. புவிசார்ந்த சூழலில் பொருள் சார் வாழ்க்கையை வாழும் அடித்தள மக்களை இதன் வழிக்காண முடிகிறது.
“ஆட்டுக்காரர்களுக்கேயுரிய கோழைத்தனம் அவரிடமும் இருக்கத்தான் செய்தது. ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்கும் இருந்தார்கள். ரோஷம் அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒருபோதும் நினைப்பதேயில்லை”
இங்கே முல்லை நில இடையர்களான ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை ஆசிரியர் முன்வைக்கிறார். இவர்கள் தங்கள் வாழ்க்கையின் துன்ப, துயரங்களை அதன் போக்கிலே எதிர்கொள்கின்றனர்.
“ராத்திரி பகல்னு பாக்காம வெக்கயிலயும் வேருவயிலயும் வேலசெஞ்சி, அள்ளி அள்ளி கொட்டி தட்டி மேட்டுல உப்பம்பாரமா போட்டுவச்சிகிட்டு கைச்செலவுக்கு காசில்லாம சின்னப்படணும் தெரியுமா? உப்பம்பாரம் நனஞ்சி காஞ்சிராம பனமட்டயளப் போட்டு மூடிக்கிட்டு கொட்டுற மழயில நம்ப நனயணும். ஒரு நாளு மழயில நனஞ்சி நாளுபட்ட பாடெல்லாம் பாத்தியிலே பாழாப்பெயிடும்”
மக்களை அவர்களின் வாழ்விடங்களின் நுணுக்கத்தோடு, துல்லியமாகப் படைக்கிறார். அவை முல்லை நில வாழ்வாயினும், நெய்தல், மருதம், என எந்நில வாழ்வாயினும் அந்நிலம் வாசகர்களது மனதில் படிமக் காட்சிகளாய் வந்து செல்கின்றன. புற உலக யதார்த்தத்தை அதன் துல்லியத்தோடு இணைத்து அடித்தள மக்களின் வாழ்வியல் வெளிக்காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கு களம் என்பதிலும் மனித உணர்வுகளே மேலோங்கி இருக்கின்றன. படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்டகளத்தில் ஒரு சமூகத்தைப் படைத்துக் காட்டும் போது இரண்டு காரணிகள் அடிப்படையானவை.
1. சமூக நிகழ்வுகளை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளுதல், அதைத்தன் படைப்பில் வெளிக் கொணர்தல்.
2. சமூகம், பொருளாதாரம், அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதோடு தகுந்த காரண காரியங்களோடு விவரித்தல்.
இதில் ஆசிரியர் இரண்டு தளங்களையும் தன் படைப்பில் சரியான விவரணைகளோடு கையாண்டுள்ளார். யதார்த்தத்தில் இருக்கும் ஓர் உலகை இதுவரை வாசகர் பலர் கண்டிராத உலகத்தை அளித்துப் பல்வேறு பரிமாணங்களுடன் அதைக் காட்டுகிறார். கதை நிகழிடம் உண்மையானது. அந்தக் களத்தில் தன் கற்பனை மாந்தர்களை உலவவிடுவதோடு பிறர் பார்வையில் தப்பிய, இழிவு என்று ஒதுக்கியதை இவர் விவரிப்பது கவனிக்கத்தக்கது. சமூகம் சார்ந்த சித்தரிப்பில் பின்தங்கிய வகுப்பில் உள்ள இதுவரை வெளிக்காட்டப்படாத முத்தரையர், வன்னியர், இடையர் போன்ற சமூகப் பிரிவினர் படும் துயரத்தை வெளிக்காட்டுகிறார். கி. ராஜநாராயணனின் இடையர் குறித்த சித்திரிப்புக்குப் பின் வெளிந்துள்ள கீதாரி, பொன்னாச்சரம் இரண்டும் முக்கியப் படைப்புகளாக அமைந்துள்ளன. இவரது படைப்பில் நகர வாழ்வு பற்றிய விவரணை அருகியே காணப்படுகிறது. நகரம் களமாகப் பெயரளவில் குறிக்கப்பட்டிருக்கிறதேயன்றி நகர வாழ்வியல் என்பதைத் தவிர்த்திருக்கிறார்.
முடிவாக,
சு. தமிழ்ச்செல்வி தன் புதினங்களுக்கான களத்தேர்வை தன் வாழ்விடத்திலிருந்தே தேர்ந்தெடுத்துள்ளார். கிராமப்பின்னணியை அடிப்படையாகக் கொண்ட , விவசாய நிலங்களை நம்பி வாழும் கீழ்த்தஞ்சை வட்டாரத்தைத் தன் படைப்புக் களங்களாகக்கொண்டு அப்படைப்பில் வெற்றியும் பெற்றுள்ளார்.
1. சூர்யகாந்தன், தமிழ் நாவல்களில் கிராமியச் சித்தரிப்புகள், ப.41
2. சு. தமிழ்ச்செல்வி, கீதாரி ப.111
3. சு. தமிழ்ச்செல்வி , அளம், 173