இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நாயகம் ஒரு காவியம் - காப்பியமாகுமா?

மு. சங்கர்
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.


தமிழகத்திற்கும் அரபு நாட்டிற்கும் நெடுங்காலந்தொட்டே வாணிகத் தொடர்பு இருந்தமையாலும், கி. பி.1300இல் மாலீக்கபூரின் படையெடுப்பினாலும் தமிழ் மக்கள் பலர் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றினர். இம்மதத்தைப் பின்பற்றிய கல்வி வல்லுநர்கள் இலக்கியப் பணிகளையும் செய்துள்ளனர். குறிப்பாகப் பெருங்காப்பியங்களைப் படைத்தல், சிற்றிலக்கியங்களைப் படைத்தல், சமய நூல்களை இயற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர, புதிய இலக்கிய வகைகளையும் இவர்கள் படைத்துள்ளனர். இது பற்றிச் சீனி. கிருட்டிணசாமி கூறுகையில், “இசுலாமியத் தமிழ் இலக்கிய வடிவங்களாகக் கிஸ்ஸா, நாமா, மசலா, முனாஜாத்து முதலிய இலக்கியப் பிரிவுகள் ஏனைய பிற சமய, இன இலக்கியங்களில் இல்லாத இலக்கிய வகைகள் என்றும், இந்த இலக்கிய வகைகள் இசுலாமியச் சமயத்திற்கே உரிய சிறப்பின” (1986: அணிந்துரை) என்கின்றார். இவருடைய கூற்று இஸ்லாமியர்களின் தமிழ்ப் பணியையும் அவர்கள் விருந்தாகப் படைத்த இலக்கிய வகைகளையும் எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

இப்பின்னணியில் தோன்றியதே மு. மேத்தாவால் இயற்றப்பட்ட ‘நாயகம் ஒரு காவியம்’. இஃது இருபதாம் நூற்றாண்டில் தோன்றியது என்பதால் மக்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் புதுக்கவிதை வடிவில் அமைத்துள்ளார் மு. மேத்தா.

இஸ்லாமியர்களின் படைப்புகளில் நபி நாயகம், சுலைமான் நபி, இபுராகிம் நபி, முஹ்யித்தீன் ஆண்டகை, நாகூர் ஆண்டகை போன்றோர் பாட்டுடைத் தலைவர்களாகத் திகழ்கின்றனர். மு. மேத்தாவால் இயற்றப்பட்ட நாயகம் ஒரு காவியத்திலும் பாட்டுடைத் தலைவராக, வரலாற்று நாயகராகத் திகழ்பவர் நபிகள் நாயகம் ஆவார். நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் குறிப்பிடும் இக்காவியம் தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பியத்திற்கான இலக்கணங்களைப் பெற்றுத் திகழ்கின்றனவா? என்னும் சிக்கலை மையமிட்டும், இஃது ஒரு சிறுகாப்பியமே ஆகும் என்னும் எளிய கருதுகோளை அடிப்படையாகக் கொண்டும் இக்கட்டுரை அமைகின்றது.

தண்டியலங்காரம் பொருள் தொடர்நிலையில் அமையக் கூடியவையாகப் பெருங்காப்பியங்களையும் காப்பியங்களையும் (தண்டி.7) குறிப்பிடக் காணலாம். பெருங்காப்பியம் என்பதற்குப் பின்வரும் வரையறையைத் தண்டியலங்காரம் தருகின்றது. அவற்றுள்,

“பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகட னாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம்
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” (தண்டி.8)

பெருங்காப்பியத்திற்கான இவ்வுறுப்புகளைத் தண்டியலங்காரம் கூறினாலும் இதற்கு அடுத்த நிலையில் உள்ள புறனடை சூத்திரமானது, நாற்பொருளும் குறையாமலும் வருணனைகளில் சில குறைந்துவரினும் பெருங்காப்பியமாகும் (தண்டி.9) என்கின்றது. மேலும் இந்நூல் சிறுகாப்பியத்திற்கான இலக்கணத்தைக் குறிப்பிடுகையில்,

“அறமுத னான்கினுங் குறைபா டுடையது
காப்பிய மென்று கருதப் படுமே” (தண்டி.10)

என்கின்றது.

இவ்விரு பொருள் தொடர்நிலைச் செய்யுட்களும் ஒரு வகைச் செய்யுளானும் பிறவகைச் செய்யுளானும் உரை விரவியும் பிறபாடை (வடமொழி, பா, பாவினம், துறை) விரவியும் (தண்டி.11) வரக் காணலாம்.

தண்டியலங்காரம் குறிப்பிடும் இவ்வரையறைகளைப் புரிந்து கொண்டு நாயகம் ஒரு காவியம் காப்பியமாகுமா? என்னும் சிக்கலைக் களைய முற்படலாம்.



காப்பியக் கட்டமைப்பு


அ. புறநிலைக் கட்டமைப்பு

1. வாழ்த்துக் கூறல்

ஒருவரை வாழ்த்திப் பாடுவது என்பது பண்டைய காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது இறைவனை வாழ்த்திப் பாடுகின்றோம். நாயகம் ஒரு காவியத்தில் மு. மேத்தா காவியத் தலைவனாகத் திகழும் நபி நாயகத்தை வணங்கியே தன்னுடைய காவியத்தைப் படைக்கின்றார். இதனை,

“வெள்ளை மனதில் நான்
விரித்து வைக்கும் சொற்பாயில்
வள்ளலே நீங்கள் கொஞ்சம்
வந்தமரக் கூடாதா…?
தமிழால் உமைப்பாடும்
தகுதிஎனக்கு இலையெனினும்
தமிழுக்கு அந்தத்
தகுதியின்றிப் போய்விடுமோ...?”

என்னும் அடிகளில் காணலாம்.

2. இறை வணக்கம் கூறல்

பூவுலகில் வாழ்ந்து தன் வாழ்க்கையைச் சாந்தி மார்க்கத்தில் கழித்த நபி நாயகத்தின் வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் பாடுகின்றேன் என்பதை இறை வணக்கத்தில் மு. மேத்தா குறிப்பிடுகையில்,

“அண்ணலாய் மானுடத்தின்
ஆருயிராய் வந்துதித்த
பொன்னொளியைப் பாடப்
புதுக்கவிதை கொண்டு வந்தேன்!
மாநபியை எங்கள்
மரகதத்தைப் பூவுலகின்
கோநபியைச் சான்றோர்
குலவிளக்கை என் தமிழில்
காவியமாய்ப் பாடுகிறேன்
காதலினால்
ஆதலினால்
மேவிய என் வார்த்தைகளில்
மேகமழை பொழிந்தருள்வாய்!”

என்கின்றார்.



3. வருபொருள் உரைத்தல்

தான் எக்காரணத்தினால் இக்காவியத்தைப் படைக்கின்றேன் என்னும் காரணத்தை மு. மேத்தா குறிப்பிடுகையில்,

“வள்ளல் நபி கதையை
வரைக்கின்றேன் - காவியத்தின்
உள்ளே நீ நிறைந்து
ஒளியேற்ற மாட்டாயா…?
தெரியாமல் நான் இந்த
தீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்
கருகாமல் சுடர்வீசக்
கருணையினைக் காட்டாயா?
எமக்காக இலையெனினும்
இறைத்தூதர் ஏந்தல் நபி
தமக்காக இங்கெனக்குத்
தமிழெடுத்து நீட்டாயா? ”

என்கின்றார்.

ஆ) காப்பியக் பொருள்

1. நாற்பொருள் பயத்தல்

அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே (நன்.எழுத்து.10) என்று பவணந்தி முனிவர் குறிப்பிடுவார். இக்கருத்து காப்பியங்களுக்கும் பொருந்தும். இவை நாயகம் ஒரு காவியத்தின் பாடுபொருளில் இடம் பெற்றுள்ளனவா? என்று காணுதல் வேண்டும்.

இக்காவியத்தில் நபி நாயகம் வீடுபேறு அடைந்தார் என்னும் குறிப்பு இடம் பெற வில்லை. ஏனெனில் மு. மேத்தா நபி நாயகத்தை இறைவனின் தூதராகவேக் கருதுகின்றார். எனவே, நபி நாயகத்திற்கு வீடுபேறு கிட்டியதாகக் கவிஞர் பாடவில்லை.

அறம் என்னும் பொருளைக் கவிஞர் பல இடங்களில் நபி நாயகத்தின் வாழ்க்கை மூலம் எடுத்துக்காட்டுகின்றார்.

* மன்னவனும் சின்னவனும் சமம்

* மனிதர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை

பொருள் என்னும் உறுதிப் பொருளை நபிநாயகத்தின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

நபி நாயகம் அடைக்கலமாய்த் தந்த பொருளைப் பாதுகாத்து வைத்து, அப்பொருளைத் தந்தவர்களிடமே நேர்மையாகக் தரும் இயல்புடையவர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும், ஏழை எளியவர்களின் இல்லம் தேடிச் செல்லும் தன்மையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவர். இத்தகைய இயல்புகளைக் கொண்ட இவரிடம் கதீஜா தனது வாணிகக் குழுவினை வழி நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார்.

பணயப்பொருள் பற்றிக் காவியத்தின் இறுதியில் மு.மேத்தா குறிப்பிடுகையில்,

“பணயமெனக் கைதிகளை வைத்தி ருப்போம்!
பணம்பெற்று விடுவித்தே அனுப்பி வைப்போம்!
விநயமுடன் அபூபக்கர் விண்ணப் பித்தார்
விழைந்தண்ணல் சம்மதித்தார் ஆமோதித்தார்!”

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரும் மேவற்றதாகும்(தொல்.பொருள்.219) என்கின்றது தொல்காப்பியம். இவ்வின்பத்திற்கு நபிநாயகத்தின் திருமண வாழ்க்கையைச் சான்று காட்டலாம். கதீஜா நாயகத்தின் மீதானக் காதலைத் தன் தங்கையிடம் தெரிவித்தாள். தங்கை தமக்கையின் ஆசையை நபியிடம் தெரிவிக்க நபீசாவைத் தூதாக அனுப்பினாள். அவள் சென்ற தூது வெற்றியில் முடிந்தது. நபி நாயகத்திற்கும் கதீஜாவிற்கும் திருமணம் நடைபெற்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இதனை மு. மேத்தா குறிப்பிடுகையில்,

“கதீஜா பெருமாட்டியும்
காவியத் தலைவரும்
வாழ்ந்த வாழ்க்கை
இலக்கியத்தின் இலக்கணம்
இலக்கணத்தின் இலக்கியம்”

என்கின்றார்.



இ) காப்பியத் தலைவன்

1. தன்னிகரில்லாத் தலைவனை உடையதாக அமைதல்

தன்னிகரில்லாத் தலைவன் என்பவன் ஒரு நாட்டின் தலைவனாக இருந்தால் மட்டும் போதாது. மக்களுக்கு உரிமையுடையவனாகவும் இருக்க வேண்டும். இவ்விலக்கணத்தைத் தண்டி பகன்றதன் நோக்கத்தை து. சீனிச்சாமி குறிப்பிடுகையில், “தன்னிகரில்லாத் தலைவனை உடைத்தாய் என்ற பொதுவான விளக்கமும் இவ்வாறே காப்பியத் தலைமைப் பாத்திரப் படைப்புப் பற்றிய பொதுவான விளக்கமேயாகும். ‘தன்னிகரில்லாத் தலைவன்’ என்ற கூற்று காவ்யதர்சத்திற்கு முரணானது என்பர். ஆயின் சமணத் தமிழ்க் காப்பியத் தலைவர்களின் படைப்பு அடிப்படையில் தண்டி இதனைக் கூறுகிறார் எனக் கொள்ளலாம். இவ்விளக்கத்திலும் பாத்திரப் படைப்புப் பற்றிய முழுமையான செய்தி இல்லை. பாத்திரப் படைப்பும் நாடகத் தன்மையும் இணைந்து செல்வதே காப்பியப் போக்காகும்” (1985:74) என்கின்றார்.

இக்காவியத்தின் தலைவராக முகமதுநபி காட்டப்படுகின்றார். இவற்றைக் காவியத்தின் பல இடங்களில் காணலாம்.

மு. மேத்தா நபிநாயகத்தின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

“நகர வீதிகளில்
நடந்து நீர் சென்றால்
அதோ போகிறார்
‘அல்அமீன்’ என்றனர்.
சந்தித்தவர் உம்மை
‘சாதிக்’ என்றனர்.
நம்பிக்கைக் குரியவர்
என்று நவின்றனர்
உண்மையின் உறைவிடம்
என்று புகன்றனர்”

என்கின்றார்.



II அகக் கட்டமைப்பு

ஈ) காப்பிய வருணனை

தண்டியலங்காரம் மலை, கடல், நாடு, நகr, சிறுபொழுது, பெரும் பொழுது, சூriயோதயம், சந்திரோதயம் ஆகியவற்றின் வருணனைகள் காப்பியத்தில் இடம்பெற வேண்டும் என்று குறிக்கக் காணலாம். இவ்வெல்லா வருணனைகளையும் நாயகம் ஒரு காவியத்தில் இடம் பெற்றுள்ளனவா? என்று காணுதல் வேண்டும்.

இக்காவியத்தில் நபி நாயகமும் அpuuபக்கரும் தௌரா மலையை அடைகின்றனr. இம்மலையைப் பற்றிய வருணனை இடம்பெறவில்லை. ஆனால், இம்மலையில் உள்ள ஒரு குகையின் தவிப்பை மு. மேத்தா குறிப்பிடுகையில்,

"காலெடுத்து நடந்துவரும்
கவிச்சந்தம் கேட்கிறது!
காலமெல்லாம் செய்த தவம்
கைகூடி வருகிறது!
வழியில் பல குகைகள்
வரவேற்று நிற்கையிலே
எளிய குகை என் மேல்
ஏந்தலவர் விழிபடுமா?
வேறுகுகை செல்வாரோ?
வேந்தர் இங்கு வருவாரோ?
நூறு வித யோசனையில்
நோகிறது தெளிரின் மனம்!”

என்கின்றார்.

இக்காவியத்தின் கதைக்களம் அரபு நாடு ஆகையால் கடல் பற்றிய வருணனை இடம்பெறவில்லை. ஆனால், அரபு நாடு பற்றிய வருணனையைக் காணலாம். அந்நாட்டின் நிலைமையைக் கவிஞர் மு. மேத்தா பின்வருமாறு வருணிக்கின்றார்.

“அரபு நாடு…
அங்கே
இருட்டின் ஏகாதிபத்தியம்
சண்டைகளின் சர்வாதிகாரம்”

அரபு நாட்டின் இரு முக்கியப் பகுதிகளாகத் திகழும் மக்கா நகர் பற்றியும், மதீனா நகர் பற்றியும் மு. மேத்தா பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார். நபி நாயகம் பிறப்பதற்கு முன்பு உள்ள மக்கா நகர் பற்றி அவர் கூறுகையில்,

“மக்காவில்
மண்ணையும் கல்லையும்
மதித்தார்கள் துதித்தார்கள்!
மனிதர்களை அவமதித்தார்கள்!”

என்கின்றார்.

சிறுபொழுது பற்றிய வருணனையில் சில இக்காவியத்தில் இடம்பெறக் காணலாம். நபி நாயகம் மதீனா நோக்கிச் சென்றால் அங்குள்ள நிலைமையைக் கவிஞர் சிறு பொழுதுகளை வைத்துக் குறிப்பிடும் திறம் அவரின் கவித்துவத்தைப் புலப்படுத்தக் காணலாம்.

“உலகத்தின் இருட்டையெலாம் விரட்ட வந்த
ஒளிக்கதிர்தான் இருள் நடுவே ஒளிந்து செல்லும்!
காலை பொழுது மக்காவில்
கதிரவன் மட்டும் அங்கில்லை!
கோலப் பொழுது மக்காவில்
கொள்கைப் பகலவன் அங்கில்லை!
வைகறை வந்தது வீதிகளில்
வாழ்வின் சூரியன் வரவில்லை
புலரும் வைகறைப் பொழுது ஒவ்வொன்றும்
புத்தாடை சூடியே புறப்பட்டு வருகிறது…”

சூரியன், சந்திரன் என்னும் இருசுடர்கள் பற்றி மு. மேத்தா பல்வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் முகமது நபியாக மாறும் நிலையை உருவகமாகச் சூரியோதயத்தை அடிப்படையாக வைத்துக் குறிப்பிடுகின்றார்.

“இருட்குகையில்
சுடர் விடுவதற்காகக்
காத்திருந்தது
ஒரு சூரியோதயம்”

உ) காப்பிய நிகழ்வுகள்

மணம் முடித்தல், முடிசூட்டுதல், பொழில் விளையாடுதல், புனல் விளையாடல், மக்கட்பேறு, புலவியற் புலத்தல், கலவியிற் களித்தல், மந்திராலோசனை, தூது செல்லல், படையெடுத்துச் செல்லல், போர் புரிதல், வெற்றி பெறுதல் ஆகியவை ஒரு காப்பியத்தில் இடம்பெற வேண்டும் என்று தண்டியலங்காரம் குறிப்பிடக் காணலாம். அரசக் காப்பியங்களுக்கு இந்நிகழ்ச்சிகள் ஏற்புடையனவே… என்றும் இந்நிகழ்ச்சி வரையறை, நிறைவு பெற்ற வரையறையன்று என்றும் குறிப்பிடுகின்றார் சோம. இளவரசு (2010:117). நாயகம் ஒரு காவியத்தல் இடம்பெறும் காப்பிய நிகழ்வுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

முகமது நபி கதீஜா அம்மையாரை மணம் முடித்த நிகழ்வை மு. மேத்தா பதிவு செய்கின்றார். அவர்களின் இல்லற வாழ்வைக் கூறுகையில்,

“கதீஜா பெருமாட்டியும்
காவியத் தலைவரும்
வாழ்ந்த வாழ்க்கை
இலக்கியத்தின் இலக்கணம்
இலக்கணத்தின் இலக்கியம்”

என்கின்றார்.

அதுமட்டுமின்றி கதீஜா அம்மையார் இறந்த பின் நபி நாயகத்திற்கு வேறொரு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். அதற்கான காரணத்தைக் காவியக் கதையில் காணலாம்.

கொள்கைப் பரப்புதலில் நபி நாயகத்திற்குத் தோல்வியே மிஞ்சியது. வீட்டிற்குள் நுழைந்தால் ஆறுதல் கூற அங்கு யாருமில்லை. பெற்றெடுத்த பாத்திமாவோ சிறுமி. வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அறியாதவள். தன் தந்தை படும் துன்பத்தைக் கண்டு வேதனை அடைந்தாள். அவளின் கண்ணீரைத் துடைக்க நபி நாயகத்திற்கு வழி தெரியவில்லை. இல்லாள் இல்லாத இல்லம் எப்படி இருக்குமோ? அது போல இருக்கின்றது நபி நாயகத்தின் இல்லம்.

நபி நாயகத்தின் மனநிலையை உணர்ந்து கொண்ட அபூபக்கர் அண்ணலிடம் இது பற்றி ஆலோசித்தார். நபி நாயகத்தைத் திருமணம் செய்து கொள்ள மக்கா நகரப் பெண்கள் ஆவல் கொண்டனர். அபூபக்கரின் ஆலோசனைப்படி அண்ணலார் சிறுமி ஆயிஷாவைத் திருமணம் செய்து கொண்டார்.

இக்காவியத்தில் முகமது நபி அரசு முடிசூட்டுதல் தொடர்பாக எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்றாலும் முகமது நபிநாயகமாக முடிசூட்டுதல் இடம்பெறக் காணலாம்.

ஹிரா மலைக்குகையில் இரமழான் மாதத்தில் அண்ணலின் தவம் தொடங்கியது. அப்போது முகமதுவை நோக்கி வானத்திலிருந்து ஒரு தூது வந்தது. வானத்திலிருந்து வந்த குரல் ஓதுவீராக! என்றது. மீண்டும் அக்குரல் ஓதுவீராக! என்றது அதற்கு முகமது, ‘ஓதியவன் அல்ல நான்’ என்றார். மீண்டும் அந்தக் குரல் முகமதுவை நோக்கி ‘ஓதுவீராக!’ என்றது. அதற்கு முகமது ‘நான் எதை ஓதுவது’ என்றார். அதற்கு அக்குரல் பின்வருமர்று பதிலளித்தது.

“ஓதுவீராக! உம்முடைய
இறைவனின் திருப்பெயரால்
ஓதுவீராக!
அனைத்தையும் படைத்த உம்
ஆண்டவனின் திருப்பெயரால்
ஓதுவீராக!”

என்றது.

இவ்வாசகம் ஒவ்வொன்றும் முகமதுவின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. அவ்வொலி உருவம் பெற்று,

“ஓ! முகம்மதவர்களே!
நீங்கள் ஆண்டவனின் தூதுவர்
நான் ஜிப்ரயில்….
அவனது அடிமை!”

என்றது.

இவ்வாறாக முகமது ‘நபி’யாக மாறினார். தன்னுடைய 40 - ஆவது வயதில்.

இக்காவியத்தில் நபி நாயகத்திற்குக் குழந்தைகள் உண்டு என்னும் செய்தியைச் சில இடங்களில் பதிவு செய்கின்றார் கவிஞர் மு. மேத்தா.

இக்காவியத்தின் ஓரிடத்தில் அண்ணலார் தன் பெண் குழந்தைகள் இருவரைத் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார் என்னும் செய்தியைக் கேட்ட குறைசியர்கள் அப்பெண்களுக்கு மணவிலக்கு அளிக்க முடிவெடுத்தனர். அதன் காரணமாக அப்பெண்கள் தாய் வீட்டிற்கே திரும்பி வந்தனர். இந்நிகழ்வு குறைசியர்களின் தீய செயல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

மற்றோரிடத்தில் மு. மேத்தா பாத்திமா என்று நபி நாயகத்தினுடைய ஒரு பெண் குழந்தையின் பெயரைக் குறிப்பிடுகின்றார். மக்கா நகரத்தில் கதீஜாவின் வீட்டு முற்றத்தில் அபூபக்கர், அலீ முதலியோர் துன்பமே வடிவமாகக் காட்சியளித்தனர். அண்ணலின் அருமைத் திருமகள் பாத்திமா முகத்தில் கண்ணீர் அரும்பி வடிந்த பாத்திகள் போல் காட்சியளித்தன என்னும் துயர நிகழ்வில் நபிநாயகத்தின் மகள் பாத்திமா என்னும் தகவல் கிடைக்கின்றது.

பிறிதோரிடத்தில் ஸைனப் என்னும் பெண் குழந்தையைக் குறிப்பிடுகின்றார் மு. மேத்தா. சிறைபிடிக்கப்பட்ட கைதிகளில் ஒருவராக நபி நாயகத்தின் மருமகனார் அபுல்ஆஸ் இருந்தார். இச்செய்தியைக் கவிஞர் குறிப்பிடுகையில்,

“மக்காவில் இருக்கின்ற மனைவி ஸைனப்
மனமறிய மருமகனார் மடல் விடுத்தார்!
அக்காலை பெருமானார் பெற்றெடுத்த
அழகுமயில் தம் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்!”

என்கின்றார்.



நாயகம் ஒரு காவியத்திலும் ஆலோசனை பகுதி இடம் பெறக் காணலாம். நபி நாயகம் அவர்கள் தன்னுடைய ஆலோசனையைத் தம் தோழர்களிடம் கேட்டு அதற்கேற்ப முடிபுகளை எடுக்கின்றார். இதற்குச் சான்றாகப் பின்வரும் காவியப் பகுதிகளைக் காட்டலாம்.

அபூஜகல் தலைமையிலானப் படையைப் பற்றி நபி நாயகம் ஒற்றர்கள் வழி அறிந்து கொண்டார். உடனே அவர் அபூபக்கர் உள்ளிட்ட தோழர்களை அழைத்து ஆலோசித்தார். அபூபக்கர் தன் கருத்தினை எடுத்துரைத்தார்.

பகைவர்கள் வரும் போது எங்கள் வாள் பேசும். நாங்கள் இன்று தீப்பந்தம் ஆனோம். எங்களுக்கு ஓர் உயிர் மட்டுமே உண்டு என்று யோசிக்கிறோம் என்று அபூபக்கர் கூறியதைக் கேட்டு அண்ணலார் புன்னகை பூத்தார். பின் நபிநாயகம் மதீனா ஆதரவாளர்களிடம் தன் கருத்தைக் கூறினார். ‘மக்காவிலிருந்து மார்க்கத்தைக் கொண்டு வந்தோம். அப்போது எங்களை ஆதரித்தீர்கள். நாங்கள் இந்நகரத்திற்குள் நுழைந்த பின்னர் இன்று போரினைக் கொண்டு வந்தோம். அதனை நீர் எதிர்கொள்வீரா?’ என்று கேட்டார் அண்ணலாரின் பேச்சைக் கேட்ட ஒருவன், ‘எங்கள் மீது இறை தூதருக்கு ஏன் ஐயம்?. எங்கள் உறையில் இருந்து வீர வாளை ஏந்துதல் உங்கள் விருப்பம். எங்கள் உயிரைக் கருதாது உம் திருவாய் மலர்ந்து கூறினாலே, எங்கள் உயிரைத் தருவோம். நபியைக் காத்து நிற்போம்’ என்றான். ஆதரவாளனின் வார்த்தையைக் கேட்டு, அண்ணலார் வீரமுரசு கொட்டும்படி கூறினார். ஆனால், ஊரின் உட்புறம் போர் நடத்த அவர் விரும்பவில்லை. எளிய மக்களை அழைத்துப் பேசிய பின்னரே, போருக்கு அனுமதித்தார். வீரர் படையும் அணிவகுத்துச் சென்றது.

போரில் பிடிபட்ட மக்கா வீரர்களை என்ன செய்வது? என்று நபி நாயகம் தம் தோழர்களை அழைத்துக் கேட்டார். அதற்கு உமர் ‘உயிர்ப் பிச்சை தரக் கூடாது’ என்றார். ஆனால், அதற்கு அபூபக்கர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘போரில் பிடிபட்ட வீரர்கள் யார்? நம் உறவினர்கள். அந்நாளில் உறவாடிய நண்பர்களாய் வாழ்ந்தவர்கள். எனவே, அவர்களைப் பணம் பெற்று விடுவிப்பதே நல்லது’ என்றார். இவ்வாலோசனையின் படியே அண்ணலார் நடந்து கொண்டார்.

நாயகம் ஒரு காவியத்தில் தூது செல்லல் இடம் பெறக் காணலாம். இக்காவியத்தில் இடம்பெறும் தூது அக வாழ்வில் இடம்பெறக் கூடியது.

கதீஜா அம்மையார் தான் முகமது மீது கொண்டுள்ள காதலைத் தன் தங்கையிடம் தெரிவிக்கின்றார். தன் தமக்கையின் ஆசையை முகமதுவிடம் தெரிவிக்க நபீசாவைத் தூது அனுப்பி வைக்கின்றனர். நபீசா சென்ற தூது வெற்றியில் முடிவடைகின்றது. முகமதுவும் கதீஜா அம்மையாரும் இல்லற வாழ்க்கையில் இணைகின்றனர். இதனை மு. மேத்தா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

”நபீசா தூது நலமாய் முடிந்தது…
கதீஜா மாளிகை கலகலப் பானது!
தேடி அழைத்த திருநாள் வந்தது
திருமணத் தாலே இருமனம் இணைந்தது!”

மு. மேத்தா தன்னுடைய காவியத்தில் நபி நாயகம் அவர்கள் தன்னுடைய சாந்தி மார்க்கத்தை நிலை நாட்டும் பொருட்டு எத்தகைய இன்னல்களை அனுபவித்துள்ளார். அத்தகைய இன்னல்களை வெற்றிப் பெற்று எங்ஙனம் வாகை சூடினார் என்பதைப் பதிவு செய்கின்றார்.

நபி நாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராகக் குறைசியர்கள் அனுப்பிய மக்கா படை மதீனா நகரத்தைச் சூழ்ந்து கொண்டது. மதீனா மக்களும் எதிர் நின்று போர் புரிகின்றனர். அப்போர் கலிங்கத்துப் பரணியை ஒத்துள்ளது. அப்போரில் மதீனாவைச் சேர்ந்த படைகள் வெற்றி பெறுகின்றன. அதாவது, முகமது நபி வெற்றி அடைகின்றார்.

“ஒட்டகம் குதிரைகள் ஓடினவே!
உலகினைப் புழுதியில் மூடினவே!
கட்டளை கர்ஜனை கேட்டனவே! - நீலக்
கடல்களும் அலைளை நீட்டினவே!”

என்று மு. மேத்தா போர்க்கள நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றார். மேலும், அவர் கூறுகையில்,

“வெற்றி வீரராய் மதீனா நோக்கி
விரைகின்றார் அண்ணல்
விண்ணிலும் மண்ணிலும் வீர ஓவியம்
வரைந்திடுதே மின்னல்!”

என்கின்றார்.



ஊ) காப்பியத்தின் ஆன்மா

தண்டியலங்காரம் பொருளணியியலில் பாவிகவணி பற்றிக் குறிப்பிடுகின்றது. அதாவது, ‘பாவிகம் என்பது காப்பியப் பண்பே’ (தண்டி.பொருள்.35) என்கின்றது. இப்பண்பு காப்பியங்களுக்கு உரியதாகும் என்று இதற்கு உரை வழங்குவர் உரைக்காரர்கள். காப்பியத்தின் அடிநாதமாக அல்லது மையக்கருவாகத் திகழும் ஒரு பண்பே பாவிகம் ஆகும். இது பற்றி சோம. இளவரசு, “காப்பியக் கருவினை நோக்கும் ஆய்வினைச் சிறந்த ஆய்வாகக் கருதுவர். மேனாட்டார் இவ்வாய்வில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். ஹோமர், ஐரோப்பிய நாட்டுக் கம்பர். போரும் வாழ்வுமே ஹோமரின் கருப்பொருள்களாகக் காணப்படுகின்றன” (2010:118) என்றும் “நாடி பார்ப்பது போலக் கருவினைப் பாh;க்க வேண்டும். பார்த்தால்தான் காப்பிய உருத்தெரியும். கவிஞனின் திருவும் வெளிப்படும்” (2010:118) என்றும் குறிப்பிடுகின்றார்.

இவ்வடிப்படையில் மு. மேத்தாவின் நாயகம் ஒரு காவியத்தை அணுகினால் சாந்தி மார்க்கத்தைப் பரப்புதல் என்னும் மையக்கருவே புலப்படக் காணலாம். இக்கருவை வளப்படுத்தும் பாத்திரமாக நபி நாயகம் படைக்கப்பட்டிருக்கின்றார். இதனை மு. மேத்தா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“இதுவரை
அன்னை கதீஜா ஆரம்பித்து வைத்த
சாந்த நபிகளின் சாந்தி மார்க்கத்தில்
சேர்ந்தவர் சிற்சிலர் தேர்ந்தவர் பற்பலர்
இன்று ... ... ... ... ...
சாந்தி மார்க்கத்தைத் தழுவிய வெற்றியை
ஏந்தி நடந்த இறைவனின் தூதுவர்”

எ) காப்பியத்தின் பிரிவுகள்

காப்பியமானது சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் போன்ற உட்பிரிவுகளைக் கொண்டிலங்க வேண்டும் என்று தண்டியலங்காரம் குறிக்கக் காணலாம். ஆனால், மு. மேத்தா இயற்றிய நாயகம் ஒரு காவியத்தில் இத்தகைய பகுப்பு எதுவும் காணப்படவில்லை. இது பற்றி எஸ். வையாபுரிப் பிள்ளையின் கூற்றை இவண் காணலாம். “பெருங்காப்பியங்களும் காப்பியங்களும் ஓர் இனத்தாரிடையேத் தோன்ற வேண்டுமாயின், அவை தோன்றுதற்குரிய சமுதாய நிலை ஆராயத்தக்கது. ஒரு சமுதாயம் ஒரு குறித்த காலத்தில் எவ்வகை இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்குமோ, எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ, அவ்வகை இலக்கியம் தான் அக்காலத்தில் உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு” (2010:25) என்கின்றார். இக்கருத்து நாயகம் ஒரு காவியத்திற்கும் பொருந்தும். ஏனெனில், தற்காலத்தில் புதுக்கவிதை வடிவில் நபி நாயகத்தின் புகழை அனைவரும் போற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில் இயற்றப்பட்டதால் இக்காவியத்தில் மேலே காட்டிய உட்பிரிவுகள் எதுவும் இடம் பெறவில்லை எனலாம்.
தொகுப்புரை

இதுகாறும் கண்டவற்றால் பின்வரும் முடிவுகளைப் பெறலாம்.

1. தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பியங்களின் பொதுவியல்புகள் ஒரு சிலவே தற்காலக் காப்பியங்களுக்குப் பொருந்தி வருகின்றன.

2. நாயகம் ஒரு காவியத்தின் ஆசிரியர் மு. மேத்தா முகமது நபியின் தன்மைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் கடினமான நடையைத் தவிர்த்து எளிய நடையைப் பின்பற்றி, அதற்கு ஏற்ற வடிவமாகப் புதுக்கவிதை வடிவமே உள்ளது என்பதை அறிந்து அவ்வடிவத்திலேயே தன் காவியத்தைப் படைத்துள்ளார்.

3. தண்டியலங்காரம் காப்பியங்களுக்குரிய பொது இலக்கணத்தைக் கூறினாலும், அவ்விலக்கணம் நாயகம் ஒரு காவியத்திற்கு முழுமையாகப் பொருந்தி வரவில்லை என்பதை மேலே காட்டிய விளக்கங்கள் வழி உய்த்துணரலாம்.

4. நாயகம் ஒரு காவியத்தில் புனல் விளையாட்டு, பொழில் விளையாட்டு, கலவியற் களித்தல், புலவியிற் புலத்தல் பற்றிய அகப்பொருள் நிகழ்வுகள் எதுவும் விரிவாகச் சுட்டப்படவில்லை.

5. இக்காவியத்தில் கவிஞர் சில உயர்வுநவிற்சி வருணனைகளைக் குறிப்பிடுகின்றார்.

6. இவரது நடையில் போல என்னும் உவம உருபையே அதிகமாகக் காணலாம். ஏனெனில் இன்றைய சமுதாயம் இவ்வுவம உருபையே அதிகமாக வழக்கில் பயன்படுத்துகின்றது. எனவே, இவருடைய நடையிலும் இது பிரதிபலிக்கின்றது.

7. நிறைவாக, இக்காவியத்தை மு. மேத்தா முகமது நபியின் வரலாற்றைக் (காவியம்) கூறும் ஒரு காவியமாவே படைத்துள்ளாரே ஒழிய, காப்பியக் கட்டமைப்போடோ அல்லது காப்பியக் கொள்கையோடோ படைக்கவில்லை என்பதை இவண் சுட்ட வேண்டும். முன்பே சுட்டிய படி தற்காலத்தில் அனைவரும் முகமது நபியின் வரலாற்றை எளிய முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் சீரிய நோக்கத்தோடு, புதுக்கவிதை வடிவில் படைத்தளித்தார் எனத் தெளியலாம்.

துணையன்கள்

1. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பகுதி), திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை, 1986 (9 ஆம் பதிப்பு).

2. இளவரசு, சோம. (உரை), நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004.

3. இளவரசு, சோம. காப்பியத் திறன், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 2010.

4. சீனிச்சாமி, து. தமிழில் காப்பியக் கொள்கை (முதற் பகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.

5. சுப்பிரமணிய தேசியர் (உரை), தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை, 2004 (21 ஆம் பதிப்பு).

6. முகம்மது உவைஸ், ம., பீ. மு. அஜ்மல்கான், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1986.

7. மேத்தா, மு. நாயகம் ஒரு காவியம், ரஹ்மத் பதிப்பகம் (பி).லிட்., சென்னை, 2011.

8. வையாபுரிப்பிள்ளை, எஸ். தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2010.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p115.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License