வான்சிறப்பால் விளைச்சல் பெருகக் காரணமானோர் நம் முன்னோர் நீத்தார். அம் முன்னோர் வகுத்தளித்த அறன் வலியுறுத்தலின்படி இல்வாழ்க்கைக்குத் தக்க வாழ்க்கை நாடி மக்கட்பேறுடன் அன்புடைமை பேணி விருந்தோம்பல் செய்து இனியவை கூறலும், செய்நன்றியறிதலும், நடுவுநிலைமையும் அடக்குமுடைமையால் வளர்த்து ஒழுக்கமுடைமையானாய் பிறனில் விழையாமையுடன் பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை ஆகியன அறிந்து தீவினை அச்சம் கொண்டு ஒப்புரவு அறிதலால் ஈகை பெருக்கிப் புகழ்பட வாழ்தலே இல்லறம்.
எவ்வுயிர் மாட்டும் அருள் உடைமையால் புலால் மறுத்தல் பின்பற்றித் தவம் மேம்படக் கூடாஒழுக்கம் கடிந்தாதுக்கு உள்ளத்தாலும் கள்ளாமையாகிய வாய்மை பேணி, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகியன பின்பற்றி நிலையாமை உணர்ந்து துறவுக்குரிய மெய்யுணர்தல் வளர்த்து அதற்குத் தடையான அவாஅறுத்தல் மேற்கொண்டு வாழ்வதலே துறவறம்.
இத்தகைய அறத்துப்பாலான இல்லறமும் துறவறமும் ஆகிய இரண்டும் இணைந்த ‘பொருள்’ எனும் வாழ்க்கையைச் சீரமைக்கும் அரசு, சமூகம், கல்வி, நட்பு ஆகியவற்றை முதன்மைப் பொருண்மைகளாகக் கொண்டது பொருட்பால். பொருள் இன்றேல் அறம் இல்லை; அறம் இன்றேல் இரண்டையும் இணைக்கும் இன்பம் இல்லை. எனவே, அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் ஊழால் விளைவன; ஊழ், இம்மூன்றால் விளைவது என்னும் புரிதலை மானுடத்திடம் ஏற்படுத்துவதற்காகவே அறத்துப்பாலின் இறுதி அதிகாரமாகவும் (38), பொருட்பாலுக்கு முன்னோடி அதிகாரமும் முறையான உண்மையாலே, வாழ்க்கை நிலைக்கும் என்னும் பொருள்தரும் ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தை அமைத்தார் வள்ளுவர்.
பொருளை ஒவ்வொரு மனிதனும் தனியாகவும் ஒவ்வொருவரும் இணைந்த கூட்டாகவும் படைக்கின்றனர். ஆனாலும், அரசனே இப் பொருள்கள் எல்லாவற்றையும் தொகுத்துப் பகுத்துக் காத்துவரும் ஆற்றலாகி விளங்குகிறான். எனவே, இறைமாட்சி சிறக்குமாறு கல்வி கற்று கல்லாமை அகற்ற கேள்வியாவது கேட்டு அறிவுடைமை பெற்றுக் குற்றம் கடிதலால் உயர்ந்துள்ள பெரியாரைத் துணைக்கோடல் பின்பற்றிச் சிற்றினம் சேராமை எனும் தெரிந்து செயல்வகையால் வலிஅறிதல், காலம் அறிதல், இடன்அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் ஆகியன உணர்ந்து செயலாற்றித் சுற்றந்தழாலால் பொச்சாவாமை மேற்கொண்டு செய்கோன்மையுடன் கொடுங்கோன்மை நீக்கி வெருவந்த செய்யாமை எனும் நல்லாட்சி செய்யக் கண்ணோட்டம், ஒற்றாடல் ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினைஉடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதே அரசியல் தகுதியாகும்.
அரசியல் என்பது அமைச்சு இன்றி அமையாது. சொல்வன்மையால் வினைத் தூய்மையாற்றி அவ்வினைத்திட்டமாய் வினைசெயல் வகையுடன் தூது சென்று இரு மன்னரைச் சேர்ந்தொழுகலோடு குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய பண்புகளில் வழியில் நாடு என்னும் அரண் அமைப்புக்குள் பொருள் செயல்வகை, படைமாட்சி, படைச்செருக்கு, நட்பு, நட்பு ஆராய்தல் பழைமை, தீநட்பு, கூடாநட்பு ஆகியவற்றை ஆராய்ந்து பேதைமையகற்றி புல்லறிவாண்மையுடன் இகல்வென்று பகைமாட்சியின், பகைத்திறம் தெரிதலால், உட்பகையைப் பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல் வழி அழித்து வரைவின் மகளிர், கள் உண்ணாமை, சூது ஆகியவற்றைப் பயன்படுத்தி மருந்துபோல் பணியாற்றுவதே அமைச்சியல் தகுதிகளாகும்.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றையும் இணைக்கும் ஊழ், அறத்துப்பாலின் இறுதிக்கும் பொருட்பாவின் தொடக்கத்துக்கும் இழையாய் அமைந்துள்ளதுபோல், பொருட்பாலின் இறுதிக்கும் காமத்துப்பாலின் தொடக்கத்துக்கும் இடையில் அமைந்து முப்பாலுக்கும் இயைபுடைய பண்புகளை வலியுறுத்தும் இயல் ஒழிபியல். குடிமையின்வழிப் பிறந்து மானத்தின்வழிப் பெருமைபெற்று சான்றாண்மை, பண்புடைமையால் சிறந்து நன்றியில் செல்வம் திரட்டாமல் நானுடைமையுடன் குடிசொல்வகை உழவு செய்து நல்குரவு ஒழித்து இரவு இல்லாமல் போக வேண்டும் என்ற நெஞ்சத்தால் இரவு அச்சம் அடைந்தால் கயமையற்ற பொருட்பால் நிறைவெய்தும். அறத்துப்பால், இன்பத்துப்பால், பொருட்பால் இயைபுறும்.
என்னதான் அறம் சொன்னாலும் அதன்வழிப் பொருள் எய்தினாலும் இன்ப வாழ்க்கை எய்துவதற்குள் கயமையே மிஞ்சி நிற்கிறது என்பதன் வள்ளுவ நுட்பம்தான் ‘கயமை’ யை அறப்பொருளின் இறுதி அதிகாரமாக அமைந்துள்ளதோ என எண்ண வேண்டியிருக்கிறது. அறத்துப்பாலின் இறுதி அதிகாரமாக ‘ஊழ்’ பொருட்பாலின் இறுதி அதிகாரமாக ‘கயமை’ என இரண்டும் அமைக்கப்பட்டிருப்பதற்குள் ஏதோ ஓர் வாழ்வியல் - கருத்தியல் இயைபு இருக்கவேண்டும். ‘ஊழ்’ எனும் இயற்கையை ‘அறம்’ எனும் இயற்கை வெல்ல வேண்டுமாயின் அறவழி இன்ப வாழ்க்கை அமைவதற்கு இன்றியமையாத பொருள் திரட்டலில் உள்ள ‘கயமை’ யைக் கொல்லவேண்டும் என்ற வள்ளுவரின் உயர்சிந்தனைக் கோட்பாடே அத்தகைய இயைபாக இருக்கிறது என்பது தெளிவுறுதி.
காமத்தால் பொருள் விரும்பலும் பொருளால் காமம் அடைதலும் உயிரியல் இயற்கை. இந்த இயற்கையை வென்று மனிதவியலைக் கட்டமைப்பதே வள்ளுவத்தின் இலக்கு. காமம் இன்றேல் பொருள் திரட்டலோ பொருள் திரட்டும் போக்குக்குள் அறநெறி நோக்கோ உருவாகா. பொருளும் அறமும் அறப்பொருளாய் இரண்டறக் கலக்கும் போது விளைவதே மானுடக்காமம். தகை அணங்க உறுத்தலால் தோன்றும் காமக் குறிப்பறிதல் புணர்ச்சி உரைத்தல், காதற் சிறப்புரைத்தல், நாணுத்துறவு உரைத்தல் ஆகியவற்றால் காமம் வளர்ந்து களவு வாழ்க்கையின் அலர் அறிவுறுத்தலால் புரிந்து காதல் வளர்த்த களவியல் படர் மெலிந்து இரங்கல், கண்விதுப்பு அழிதல், பசப்புறு பருவரல் ஆகியவற்றால் ஏற்படும் தனிப்படார் மிகுதியால் நினைந்தவர் புலம்பல், கனவ நிலை உரைத்தல், பொழுது கண்டு இரங்கல், உறுப்பு நலன் அழிதல் என எல்லாம் நிகழ்ந்ததன்பின் நெஞ்சொடு கிளத்தல், நிறையழிதல் தாங்கமாட்டாது அவர்வயின் விதும்பல், குறிப்பு அறிவுறுத்தல் புணர்ச்சி விதும்பல் மேற்கொண்ட பின்னும் நெஞ்சொடு புலத்தலால் புலவி தோன்றவும் புலவி நுணுக்கம் அறியவும் ஊடல் உவகையைக் கூடலில் கண்டு வாழ்ந்து இன்புறல் கற்பியல்.
‘அறம் பொருள் இன்பம் வீடடைதல் நற்பயனே’
என்றது பிற்கால நன்னூல்.
‘அறம்பொருள் இன்பம் வீட்டிலேயே அடைதல்
அரும்பொருள் வள்ளுவ நற்பயனே”
என்பது என்றைக்குமான இந்நூல்.
திருக்குறளின் உயர் சிந்தனை என்பது உயர்கல்வி பெற்றும் மானுடம் பேணாத உயர்திணைகள் உள்ளவரை உயிர்த்திணையாய் உலகை நல்வழியாம் செவ்வழிப்படுத்த நிலைத்திருக்கும். இந்த உலகத் தேவைக்காகவே திருக்குறள் கல்வெட்டுக்களாகப் பாறைகளில் செதுக்கப்படுவது இன்றியமையாதது.
இச்சேவைச் செயல் பாறைகளைப் பிளந்து முளைத்தெழும் விதைகளைப் போல் மானுட மனங்களில் திருக்குறளை விளைய வைக்கும்; மானுடம் தழைய வைக்கும்.