தந்தையர் தினம்
ஆல்பர்ட் பெர்னாண்டோ
அன்னையர் தினம் வரும், பின்னே... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்?
பசுவின் கன்றை மகன் தேரிலிட்டுக் கொன்று விட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் புகழ் நிலைக்கவோ இந்தத் தந்தையர் தினம். பற்று, பாசம், நேசம், உறவு இப்படி இல்லாமல் வயதுக்கு வந்து விட்டால் தாய் தந்தையைப் பிரிந்து தனித்து வாழுகிறதும், அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமான உலகத்தில் என்று வாழுகிறதாகப் பலர் கருதுகிற அமெரிக்கத் திருநாட்டில் தான் இந்தத் தந்தையர் தினம் தோன்றியது.
சான்றோன் ஆக்குதல்
வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862-ல் நடந்த போரில் கலந்து கொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனே (Spokane) வுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும் போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்து கொள்ள சிலர் முன்வந்த போது மறுத்து விட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி விடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல், சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே. பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார்.
அருமைக் கணவர் இருக்கும்போதே மனைவி இன்னொருவருடன் வாழ்வதும், வாழ்ந்தால் உன்னோடுதான் என்று கைப்பிடித்த மனைவி இருக்கும் போதே கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதும் அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் அசாதாரணமாக இருக்கிற போது தம் தந்தையின் வாழ்க்கையை மிகப் பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் - மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட்! (Sonora Smart Dodd ) திருமதி. டோட் அது மட்டுமல்ல, தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையைக் கெளரவிக்க வேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்று விடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.
சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19 ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1909 ம் ஆண்டு எழுப்பினார். அவரின் கோரிக்கை கரு மெல்ல உருப் பெற்று 5 வருடங்கள் கழித்து 1924ல் அதிகார வர்க்கத்தின் செவிகளில் விழுந்தது. அமெரிக்காவின் அன்றைய அதிபர் கால்வின், திருமதி.டோட்டின் யோசனையை நான் ஆதரிக்கிறேன் என்றார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டு தந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது.
அதன் பிறகும் அரசு அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்றுக் கிழமையை "தந்தையர் தினம்" என அறிவிக்கலாம் என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார். அதற்குப் பத்து வருடங்கள் கழித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் "தந்தையர் தினம்" அனுசரிக்க ஆணை பிறப்பித்தார். தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி.டோட், அவரின் கனவு நனவான போது அதைப் பார்த்து சந்தோஷப்பட அவர் உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் "தந்தையர் தினம்" என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
ரோஜா
தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும், பிள்ளைகள் சிவப்பு ரோஜாவை தங்கள் சட்டையில் அல்லது தலையில் செருகிக் கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்.
அப்பா இயற்கை எய்தி விட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக் கொள்வது வழக்கம்.
இவை எல்லாவற்றையும் விட அப்பா உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? ஏன் நேசிக்கிறேன் தெரியுமா? என்று சொல்லி ஆரத்தழுவுவது வழமையான பழக்கங்களுள் முக்கியமான ஒன்று.
எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள். இராத்தூக்கம் பகல் தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்.
தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் சேரன் மகன் தந்தைக்காற்றும் கடனை மிகச் சிறப்பாகச் சொல்லியிருப்பார்! கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன்னை ஆளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்கள் கண்களைக் கலங்க வைக்கும்.
நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை எண்ணிப் பாருங்கள்; நாளை இந்தச் சமுதாயம் உங்களைக் குறிப்பிடும் போது என்ன சொல்லும்? என்பதை அய்யன் வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெகு நேர்த்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,"இவன் தந்தை
என் நோற்றான் கொல்" எனும் சொல்!
இந் நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு அல்லவை மறந்து நல்லவை எண்ணி வாழ்த்துவோம்! வணங்குவோம். அவர் மனம் மகிழ அன்று மட்டுமாவது நேரம் ஒதுக்கி தந்தையோடு நேரத்தைச் செலவிடுவோம்.
உலகத் தந்தை
தந்தையர் தினம் கொண்டாடும் இந்த நாளில் மிக அதிகமான குழந்தைகளைப் பெற்ற தந்தையைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா? சிலி நாட்டைச் சேர்ந்தவர் ஜெரோடோ. இவருக்கு வயது 65. இவரது மனைவி ஜூடி. இவருக்கு வயது 60. இந்தத் தம்பதியருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கற்பனை உயரத்துக்கு எட்டாத குழந்தைகளைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற தம்பதிகள் இவர்கள். இவர்களூக்கு ஆணும் பெண்ணுமாகப் பிறந்தவர்கள் 64 பேர்கள்.
இதில் உயிரோடு இருந்து, "தந்தையர் தின" வாழ்த்துச் சொல்வோர் மட்டும் 61 பேர்கள்!அடேங்கப்பா!? என்கிறீர்களா? இதற்கே வாய் பிளந்தால் எப்படி? இன்னொரு விசயம் சொன்னா அடேங்கம்மா...! என்பீர்களே.
ஆம்! திருமணமான 12 வயதிலிருந்தே, எல்லாம் அவன் செயல் என்று பெற்றுத் தள்ள ஆரம்பித்த ஜூடி, இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதுதான் அது! பதினாறும் பெற்று பெருக வாழ வாழ்த்தியவர்களின் வாழ்த்து தவறாக "சிக்ஸ்டி" என்று இவர்கள் காதில் விழுந்து விட்டதோ என்னவோ?
வலையில் சிக்கிய புள்ளி விபரம்
கடந்த ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று 150 மில்லியன் வாழ்த்தட்டைகள் விற்பனையானது; தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த்தட்டைகள். அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன்! தந்தையர் தினத்தில் 140 மில்லியன்! அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசு பொருட்களாகவும், தந்தையர்க்கு பரிசுப் பொருளாக "டை" யையும் அளித்திருக்கின்றனர். அன்று விற்பனையான டைகள் எட்டு மில்லியன்! தந்தையர் தினத்தில் 23 விழுக்காடு தந்தையர்கள் உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளி விபரங்கள் புள்ளி போடுகின்றன.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.