அரபுத்தமிழின் காலமும் கருத்தும்
மு. அப்துல்காதர்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
முன்னுரை
‘அரபி’ உலகின் தொன்மையான மொழியாகும். ‘அரபி’ என்பதற்குப் ‘பண்பட்டது’ என்று பொருள் அரபி மொழியைப் ‘பண்பட்ட மொழி’ என்றும் கூறலாம். அரபு மூதாதையர் தமிழை ‘அரவம்’ என அழைத்துள்ளனர். முஸ்ஸீம் அறிஞர்கள், தாங்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய தமிழ் நூல்களில் தமிழ் மொழியை ‘அற்விய்யா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அறிவையும், அறத்தையும் பற்றிய இலக்கியங்கள் தமிழல் அதிகமாக இருந்தமையால் ‘அற்விய்யா’ என்ற சொல் கையாளப்பட்டிருக்கலாம். மேலும், சப்தமில்லாதது (ஒலியில்லாதது) என்பதற்கு ‘அரவமில்லாமல்’ என்று கூறுவர். அரபுத் தமிழை சோனகத்தமிழ், முஸ்ஸீம் தமிழ் என்றும் கூறுவர். தமிழ்மொழி பேசிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் அரபுத்தமிழ் என்ற புதுவகையான மொழியமைப்பு உருவாக ஆரம்பித்தது. (1)
அரபுத் தமிழின் காலம்
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்திற்கு வருகை புரிந்த அரேபியர்கள் தங்கள் கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கு மொழிமாற்றம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நூற்றாண்டிலேயே அரபுத்தமிழ் தோற்றம் பெற்றுள்ளது என்பதை சையது ஹஸன் கூறியிருப்பதிலிருந்து அறியலாம். (2) மேலும், மணவை முஸ்தபா, “… அண்ணல் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின்னர் தமிழகம் வந்த அராபியர்கள் இசுலாமியக் கருத்துக்களைத் தமிழ் மக்களிடையே எடுத்துக் சொல்லும் கட்டுப்பாடு உடையவர்களானார்கள் அப்போது இஸ்லாமியச் சிந்தனைகளை இங்குள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அரபிமொழி வரிவடிவத்திலிருந்து தமிழே அவர்களுக்குப் பெருந்துணையாக இருந்தது” (3) எனக் கூறியிருப்பதிலிருந்தும் அறியலாம். அதேபோல் செய்யிதுஅஹம “…ஒன்பதாம் நூற்றாண்டு முதலே…” அரபுத்தமிழ் வழக்கில் இருந்திருக்க முடியும் என்று கூறுகிறார். (4) தைக்காஸூகைபு கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றியது என்றும், இலங்கையில் 15 ம் நூற்றாண்டிலிருந்து அரபுத்தமிழ் புழக்கத்திலிருந்தது என்பதைப் போர்த்துக்கீசியத் தளபதி ‘ஒடரடோபார்பசா’ என்பவர் எழுதி வைத்திருப்பதாகவும் மேற்கோள் காட்டுகிறார் செ. பசுலுமுகியித்தீன் ஏழாம் நூற்றாண்டைத் தமது அரபுத்தமிழ் ஆய்வில் வெளிப்படுத்துகிறார். (5) ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் சுமார் கடைசி முப்பது ஆண்டுகளில் இஸ்லாம் தமிழகத்தில் மலர்ந்தது. அந்தக் காலகட்டத்திலேயே அரபுத்தமிழ் உருவாகியிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஏனெனில் முழுமைத்துவம் அடைந்த இஸ்லாம் மார்க்கம் தமிழகத்திற்குள் வரும் முன்னரே, தமிழகத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பதற்குத் தமிழிலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படுகின்றன. தமிழ் முஸ்லிம்கள் - தமிழர்கள் - அரபு முஸ்லிம்கள் ஒன்றினையும் பொழுது உருவாகிய சொல்லாடல்கள் அரபுத் தமிழின் வெளிப்பாடாக இருந்திருக்க வேண்டும்.
அரபுத்தமிழை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழகம் வந்த அரேபியர்களா? தமிழ் முஸ்ஸீம்களா?
தாய் மொழியின் ஒலியில் இஸ்லாமிய மார்க்க விளக்கம் தர இஸ்லாமிய மார்க்க ஞானப் பெரியார்கள் முன் வந்தனர். அதுவே அரபுத்தமிழ். அரபு எழுத்தில் எழுதப்படும் தமிழ்தான் அரபுத்தமிழ் என்பது பொதுவான கருத்து. ஆனால், பிற்காலத்தில் அரபுச் சொற்கள் கலந்த தமிழை அரபுத் தமிழ் எனக் கருதும் நிலை ஏற்பட்டது. (6) 1982 ஆம் ஆண்டில் கீழக்கரை மதராஸத்துல் மவாலிக்கில் நடைபெற்ற அரபித்தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த ‘தமிழும் அரபும் - ஒரு ஒப்பு நோக்கு’ எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் தமிழ் பேசும் முஸ்ஸீம்கள் தான் அரபியைத் தோற்றுவித்தனர் என்று அப்துல் கபூர் கூறியுள்ளார்.
தமிழை அரபியில் பிழை வராமல் எழுதுவதற்கு ஒரு வழியை 400 வருடங்களுக்கு முன்பு காயல்பட்டினம் அமீர்வலி என்ற இறைநேசச் செல்வர் அறிமுகம் செய்துள்ளார். அதனையே அரபுத்தமிழ் என்று அழைக்கின்றோம். (7) தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களால் எழுதினர். இதுவே அரபுத்தமிழ் என்று அழைக்கின்றோம். அரேபியர்கள் தான் அரபியைத் தோற்றவித்தனர் என்று சேக்உசேனும், சையது அகமதுவும் கூறுகின்றனர். (8) பசுலுமுகையத்தீன் அரபுத் தமிழை உருவாக்கியவர்கள் அரேபியர்களே என்று கூறுகின்றார். (9) அரபுத்தமிழை ஆய்வு செய்த அறிஞர்களுடைய கூற்றுக்களின் மூலம் தமிழகம் வந்த அரேபியர்களால் அரபுத்தமிழ் கிடைத்ததா? தமிழ் பேசும் முஸ்ஸீம்களால் அரபுத்தமிழ் கிடைத்ததா? என்ற வினா உருவாக்கம் பெறுகின்றது. அரபியிலுள்ள எழுத்துக்கள் அனைத்தும் அராபிய எழுத்து வடிவை அடிப்படையாகக் கொண்டவை. அதனை , நன்கு எழுதப்படிக்கத் தெரிந்த தமிழகம் வந்த அரேபியர்களே முதலில் அரபுத் தமிழை அறிமுகப்படுத்தினர். தமிழ் நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத்தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று. (10)
வரலாற்றுக் காரணிகள்
தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முடிவதற்குள் முழுமைத்துவம் அடைந்த இஸ்லாம் மார்க்கம் தோன்றியது என்பது ஆய்வாளர்களின் முடிந்த முடிவு. வணிக நோக்குடன் காலம் காலமாக வந்து கொண்டிருந்த அரேபியர்கள் இசுலாம் மார்க்கத்தைப் பரப்பும் நோக்குடனும் வருகை புரிய ஆரம்பித்தனர். நாளடைவில் தமிழ் மண்ணில் வாழ்வைத் துவங்கி, இரத்த உறவு கொண்டு தமிழ் மண்ணில் பூர்வீகக் குடிகளாக மாறினர். இவர்கள் நாளடைவில் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்குத் தமிழ் மொழியையும், அரபு மொழியையும் கலந்து பேசத் துவங்கினர். மேலும், இசுலாத்திற்கும், அரபுமொழிக்கும் இடையில் நிலவிய தொடர்பு காரணமாக அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரபுமொழியின் அறிவு அவசியமானதாக இருந்தது.
மதக் கோட்பாடுகள் கிரியைகளோடு தொடர்புடைய சில கருத்தைக் குறிக்கும் பதங்களைப் பொறுத்தளவில் அரபுப் பதங்களுக்குப் பதிலான தமிழ்ப் பதங்களைப் பெறுவதில் சில இடர்பாடுகள் இருந்தன. தமிழ்மொழியானது திராவிடக் கலாச்சாரத்தோடு இணைந்த ஒரு மொழியாகக் காணப்பட்டதால் இஸ்லாமியக் கோட்பாடுகளோடு இணைந்த கருத்துக்களை தமிழில் புலப்படுத்த முனையும் போது அதற்குப் பொருத்தமான இஸ்லாமியச் சிந்தனை மரபோடு இணைந்த சொற்கள் தமிழில் காணப்படாததை உணர்ந்தனர். அத்தகைய கருத்துக்களை புலப்படுத்த துணைபுரியும் தமிழ்ப்பதங்கள் சில சமங்களில் அரபியில் உணர்த்தப்படும் மூலக்கருத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்திருந்ததையும் அறிய முடிந்தது. (11)
இஸ்லாத்தைப் புகட்டுவதற்கு மிகப் பொருத்தமான மொழியாக விளங்குவது அரபு மொழி. குர்ஆன் விளக்கவுரைகள் கிரந்தங்கள் என்பன அரபு லிபியில் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற கொள்கையும் அப்போது நிலவியது. இஸ்லாம் தொடர்பான சொற்களை ஒலி, பொருள் சிதைவின்றி அரபு மொழியில்தான் எடுத்துக்கூற வேண்டும் என்ற எண்ணமும் திகழ்ந்த காலம். (12) அரபு எழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் தமிழ் எழுத்துக்களில் எமுதப்பட்ட தமிழ் நூல்களை விடப் புனிதத்தன்மை வாய்ந்தவை என எண்ணிய பாமர மக்களும் இஸ்லாமியரிடையே இருந்த காலம். (13) இசுலாத்திற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்து, புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டியது பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. திருக்குர் ஆனின் மொழியாகிய அரபு மொழியின் மீது அக்காலத் தமிழ் மக்களுக்கு ஒரு தெய்வீகப் பக்தி ஊட்டப்பட்டது. தெய்வத்தை யாராலும் கண்ணால் காணமுடியாதோ அதுபோல அரபி மொழியிலமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம். குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மெய்யான இஸ்லாத்தைத் தமிழ்மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளுகின்ற வாய்ப்பு பின்னுக்குத்தள்ளப்பட்டது. (14) அதன் விளைவு அரபுத்தமிழ் உருவாக்கத்திற்கான சூழலை ஏற்படுத்தியது.
அரபு மொழியின் தோற்றத்திற்கு தைக்காஜூகைபு நல்லதொரு காரணத்தைக் கூறுகிறார். “தமிழ் முஸ்லீம்கள் தமிழன் என்ற அடிப்படையான அடையாளத்தை இழந்து விடாமல் அதே சமயம் தங்கள். சமயம் பண்பாட்டுக் காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள். அவர்களின் சமயம் பண்பாட்டைக் காத்துக் கொள்ளும் கேடயமாக அரபுத்தமிழ் விளங்கியது. தங்கள் சமயத்துடன் ஒத்துவராத சமய இலக்கியங்களைப் படிப்பதிலிருந்து தமிழ் முஸ்லிம்களை அரபுத்தமிழ் காப்பாற்றியது என்பர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர் தம் சொல்லாலும் எழுத்தாலும் மார்க்கப் பிரச்சாரம் செய்யும் முன்பே இந்த மண்ணில் உள்ள மக்களிடம் அரபுத்தமிழ் வழக்கு நிலவி வந்திருக்க வேண்டும். மக்கள் மொழியாக அது இருந்ததால் தான் மார்க்கத்தைக் கூறும் மொழியாகவும் அதைத் தேர்ந்தெடுத்தனர். அக்காலத்தில் தமிழகம் வந்த அரபுக்கள் தமிழ் மொழியை அறிந்து கொள்ள அதிக அளவிலான வாய்ப்புண்டு. தங்களின் வணிகச் சரக்குகளைப் பெற்றுக் கொள்ளவும், இங்குள்ள வணிகர்களிடம் வந்த அரபு வணிகர்கள் அரைகுறைத் தமிழில் பேசி, காலப்போக்கில் இங்கேயே சணிகத்தின் பொருட்டு தங்கிவிடும் நிலை சிலருக்கு ஏற்படும் போது படிப்படியாக நல்லதமிழில் பேசவும் பழகியிருப்பர். இப்படித் தங்கியவர்களில் நிரந்தரமாகவே தங்கி இங்குள்ளவர்களோடு இரண்டறக் கலந்து விட்டவர்களும் உண்டு. இவர்களுக்குத் தமிழ் பேச மட்டுமே தெரியும் எழுதத் தெரியாது. ஏதோ ஒரு நிலையில் எழுதித்தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும் போது, ஓர் அன்னிய மொழியைப் பேசத் தெரிந்தவன் அதை எழுதிக் கொள்ளத் தன் தாய்மொழியையேத் துணைக் கொண்டு அதன் வரிவடிவையேப் பயன்படுத்துவது இயல்பு. அப்படியே தான் அரபு வரிவடிவில் அராபியர்கள் தமக்கென்று தமிழை எழதி வைத்துக் கொண்டனர். இவ்வாறு அரபு நாட்டிலிருந்து வந்து குடியேறி தமிழினத்தோடு இரண்டறக் கலந்ததோடு தமிழ் மொழியைப் பேசியும், அதனை அரபு எழுத்தில் எழுதியும் பழகிய மக்கள் இப்போது அரபியர்களல்லர் ‘அரபுத்தமிழர்’ என்ற நிலைக்கு வந்து விட்டனர். (15)
தமிழ் கற்ற அரபிகள் அல்லது அரபு கற்ற தமிழ் முஸ்லிம்கள் அரபுத்தமிழைத் தோற்றுவித்தனர். தமிழைப் பேச மட்டுமே பழகிக் கொண்ட அரபிகளேத் தங்களுக்கு அரபி எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். அதுவே அரபித் தமிழாக வளர்ச்சியடைந்திருக்கும் என அ. மா. சாமி கூறுகிறார். (16) எழுத வாசிக்க தெரிந்திருந்த அரபி எழுத்துக்களில் புதிதாகப் பேசப் பழகிக் கொண்ட தமிழை எழுதியது அரபுத்தமிழின் தொடக்க நிலை என்று கூறுகிறார் ஏ. எம். ஏ அஸிஸூ. (17) குடியமர்ந்த அரபிகள் தமிழர்களுடன் திருமண உறவு கொண்டு ஒரு கலப்பினத்தை உருவாக்கியதாகவும், இக்கலப்பினமக்கள் தமிழ் மொழியையேத் தாய்மொழியாகக் கொண்டதாகவும் இவர்கள் மூலமாகவேத் தமிழை அரபு வரிவடிவத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது கொச்சையாக இருந்து பின்பு திருந்தி அரபுத்தமிழ் எனப் பெயர் பெற்றதாகவும் அறிகிறோம் என எம். கே. செய்யிது அகமது கூறுகிறார். (18) ஆரம்ப காலத்தில் தமிழ் பேசமட்டும் அறிந்து குர்ஆனை அரபியில் படித்ததன் மூலம் அரபி வாசிக்க அறிந்தவஎகளுக்கு மார்க்கத்தை விளக்க அரபுத்தமிழ் என்ற ஒரு புதிய மொழி வடிவம் இசுலாமியத் தமிழர்களிடையே தோன்றியது. நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் தொட்டு தமிழர்களுக்கும் அரேபியர்களுக்குமிடையில் வணிகத் தொடர்பு இருந்து வந்தால் அரபி - தமிழ் இரண்டிற்கும் பொதுவான உச்சரிப்பும் பொருளும் கொண்ட பல வார்த்தைகள் உருவாயின. (19)
ஒரு மொழி பேசும் மக்கள், இன்னொரு மொழி பேசும் மக்களோடு கலக்க நேர்ந்தால், ஒருவர் பேசும் மொழியில் மற்றவர் மொழிச் சொற்கள் சென்று தங்கி கலத்தல் இயல்பு. தமிழ் மொழி பேசிய மக்கள் பிற நாடுகளிற் சென்று வாணிகம் நடத்தினமையாலும் அரசரின் கீழ்ப் பல தொழில்கள் அமர்ந்தமையாலும் பிற மொழிச்சொற்கள் தமிழிலும், தமிழ் சொற்கள் பிற மொழிகளிலும் புகுந்தன. (20) இவ்வாறான சூழல்களில் அரபுத்தமிழ் உருவாகுவதற்கான வரலாற்றுக் காரணிகள் இருந்திருப்பதை அறிய முடிகின்றது.
அரபுத் தமிழின் வளர்ச்சி
அரபுத்தமிழின் விரிவான வளர்ச்சி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே வெளிக்காட்டப்பட்ட போதும் கூட அதற்கான வித்துக்கள் அரபுகளால்தான் இடப்பட்டது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அரபுத்தமிழின் எழுச்சி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே உருவானது என்ற கருத்தில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்கின்றன. பெரும்பாலான அறிஞர்களது கருத்துப்படி அரபுத்தமிழ் அரேபியர்களின் வருகையுடனேயே தமிழக, இலங்கை முஸ்லீம்களிடையே ஆரம்பமாகி விட்டதாகவும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு அதிலொரு திருப்புமுனை அமைந்து விட்டதாகவும் குறிப்பிடுவர். இதற்கு ஆதாரமாக இலண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்தில் 1878ல் எழுதப்பட்ட ‘சீறா நாடகம்’ என்ற அரபுத்தமிழ் நூல் இருப்பது எடுத்துக்காட்டப்படுகிறது. அக்காலத்தில் இஸ்லாமியக் கலைகளை முஸ்லீம்களுக்குப் போதிக்கும் ஊடகமாக அரபுத்தமிழ் மாத்திரமே காணப்பட்டது. ஆகவே, இஸ்லாமியக் கலைகளான மருத்துவம், சமயம், வரலாறு, தத்துவம், மெய்யியல் சீரா போன்றவற்றை இம்மொழி மூலமாகவே முஸ்லீம்கள் அறிந்து கொண்டனர். அரபுத்தமிழின் துரித வளர்ச்சிக்கு அக்கால அல்குர்ஆனிய மொழிபெயர்ப்பு பற்றி இருந்த சட்டங்களும் ஒரு காரணமாகும். அன்றைய மார்க்க அறிஞர்கள் திருக்குர்ஆனை நேரடியாகத் தமிழ் மொழியில் விளக்குவதும், மொழி பெயர்ப்புகளைத் தமிழில் செய்வதும் தடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். இதற்குத் திருமறை விளக்கங்களைத் தமிழில் தரும் போது கருத்து விளக்கம் ஒலிக்குறைபாட்டினால் மாறுபடும் என்று அச்சம் கூறப்பட்டது. எனவே இச்சட்டத்துக்கு கட்டுப்பட்ட அக்கால அறிஞர்கள் அரபுத்தமிழிலேயே தமது எழுத்துப்பணிகளை தொடரலாயினர். மேலும், தமிழ்மொழியிலுள்ள கருத்துக்களுக்கு நிறைவு செய்யும் வகையில் அரபுத் தமிழ் மேம்படுத்திக் கையாளப்பட்டது.
தமிழ் எழுத்தறிவு அதிகமில்லாத முஸ்லீம் பாமர மக்கள் மார்க்க சம்பந்தமான அனைத்துத் தேவைகளுக்கும் அரபுத் தமிழையே நம்பியிருந்தனர். அரபுமொழியை வாசிக்கத் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்தமையால் அரபு வடிவம் வாயிலாகத் தமிழ் மொழியைக் கையாண்டு தமது அறிவியல் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினர். இக்கால கட்டத்தில் அரபுத்தமிழ் நூல்கள் மட்டுமின்றி சஞ்சிகைகளும், வார ஏடுகளும், பத்திரிகைகளும் கூட வெளியிடப்பட்டன. தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் இதன் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. அறிஞர் சித்திலெபை அரபுத்தமிழில் பத்திரிகை வெளியிட்டமை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரபுத்தமிழ் பெற்றிருந்த செல்வாக்குக்கு ஒர் உதாரணமாகும்.
அரபுத்தமிழின் தேக்கநிலை
அச்சியந்திரமுறை அறிமுகமானதால் அதிகமானதால் தமிழ், அரபு நூல் வெளிவரலாயின. கொச்சைத் தமிழுடன் சேர்ந்த அரபுத்தமிழாக அம்மொழிக் காணப்பட்மையாலும் பிற்கால முஸ்லிம் அறிஞர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்றமையினாலும் தமிழ் கலந்த அரபை ஒதுக்கிய தூய அரபுமொழியை விரும்பியமையாலும் அரபுத் தமிழை புறக்கணித்தனர். அரபு. தமிழ் மொழியிலான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பன அச்சுப் பிரதிகளாக வெளியீடு கண்டமையால் அரபுத்தமிழில் வெளிவந்த கையேடுகள் மக்களிடம் செல்வாக்கிழந்தன. இலங்கை அரசு பாடசாலைகளில் தமிழ்மொழி மூலக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதாலும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட மதரஸாக்களில் அரபுமொழி ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டமையாலும் அரபுத்தமிழ் முஸ்லிம் மாணவர் மத்தியில் அறிமுகம் செய்யப்படவிலை. பிற்காலத்தில் எகிப்து, மதினா, சவூதிஅரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்று பட்டம் பெற்று வந்த உலமாக்கள் அரபுத்தமிழில் கருத்துப் பிழைகள் இருப்பதாகவும் தெளிவான மொழிகளிலேயே இஸ்ஸாமிய போதனைகள் நடத்தப்படவேண்டும் என்றும் கூறித் தமிழ் மொழியில் புத்தகங்கள் எழுத ஆரம்பித்தமையாலும் அரசுப் பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடநூல் தமிழில் அறிமுகமாகியதாலும் அரபுத்தமிழ் செல்வாக்கு இழந்து விட்டது.
துணைநூற்பட்டியல்
1. உவைஸ், இசுலாமிய இலக்கியத்தின் திருச்சி திருப்பம், பக்.66-77.
2. சேமுமு முகமதலி போன்றோர்,(பதி.ஆ.), செய்யித் ஹஸன் மௌலானா,(கட்.ஆ.), அறபுத்தமிழ் இலக்கியம் (கட்.த.), ஆய்வரங்கக் கோவை, பக்.292-293.
3. மணவை முஸ்தபா, (கட்.ஆ.), தமிழர்களின் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம்,(கட்.த.), தாள்மஹல் - கருத்தரங்கச் சிறப்பு மலர், ப.21.
4. செய்யிது அஹமது, எம்.கே., (கட்.ஆ.), அரபுத்தமிழ்-ஓர்ஆய்வு, (கட்.த.), இராமநாதபுர மாவட்ட இசுலாமியத் தமிழிலக்கிய மாநாட்டுச் சிறப்பு மலர் 1982, பக்.54-57.
5. பசுலுமுகையிதீன், செ., அரபுத்தமிழ், பக்.17-35.
6. நஹியா, ஏ.எம்., அஸீஸும் தமிழும், ப.37.
7. செய்யிதுஅஹமது,எம்.கே.,(கட்.ஆ.), அரபுத்தமிழ்-ஓர்ஆய்வு,(கட்.த.), இராமநாதபுர மாவட்ட இசுலாமியத் தமிழிலக்கிய மாநாட்டுச் சிறப்பு மலர் 1982, பக்.54-57.
8. செய்யிது அஹமது,எம்.கே., (கட்.ஆ.), அரபுத்தமிழ்-ஓர்ஆய்வு,(கட்.த.), இராமநாதபுர மாவட்ட இசுலாமியத் தமிழிலக்கிய மாநாட்டுச் சிறப்புமலர் 1982,
9. பசுலுமுகைதீன், தற்கால தமிழ் முஸ்லிம் களின் உரைநடை, பக்.8-46.
10. அப்துர்ரஹீம் எம்.ஆர்.எம்., இசுலாமியக் கலைக்களஞ்சியம்,பாகம் 1, பக்.232-235.
11. சேமுமு.முகமதலி-போன்றோர்,(பதி.ஆ.),செய்யித்ஹஸன்மௌலானா,(கட்.ஆ.), அரபுத் தமிழ் இலக்கியம் (கட்.த.), ஆய்வரங்கக் கோவை, பக். 292-293.
12. நஹியா, ஏ.எம்.,அஸீஸும் தமிழும்,பக். 37-53.
13. உவைசு, எம்.எம்., இசுலாமிய இலக்கியத்தின் திருச்சி திருப்பம், பக்.66-77
14. ஹஸ்ஸான், இசுலாத்தை மறந்த இலக்கிங்கள், பக்.23-24.,
15. பசுலுமுகியித்தீன், செ., அரபுத்தமிழ், பக்.17-35.
16. சாமி, அ. மா., தாவுத்ஷா இலக்கியம், பக்.18-22.
17. நஹியா, ஏ.எம்., அஸீஸும் தமிழும், பக். 37-53.
18. செய்யிது அஹமது,எம்.கே.,(கட்.ஆ.), அரபுத்தமிழ்-ஓர்ஆய்வு,(கட்.த.), இராமநாதபுர மாவட்ட இசுலாமியத் தமிழிலக்கிய மாநாட்டுச் சிறப்பு மலர் 1982,
19. ஆபுபைஸ், தமிழ் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம், பக்.119-144.
20. கந்தையாபிள்ளை, ந.சி., தமிழகம், ப.144.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.