தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் பல ஊடகங்கள் பெருகி மனித வாழ்வின் ஒரு பகுதியாக மாறி மனிதனையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வூடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் பெண்களை ஒரு காட்சிப் பொருளாகவே சித்தரிக்கின்றன. அன்றைய மனுதர்மசாஸ்திரம் முதல் இன்றைய ஊடகங்கள் வரை பெண்களை நுகர்வதற்குரிய ஒரு போகப் பொருளாகவேச் சித்தரிக்கின்றன. காட்சி ஊடகமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் பெண் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறாள் என்பதை விளக்க முயல்கிறது இக்கட்டுரை.
இன்றைய தொழில் வாணிப உலகின் உயிர் மூச்சாகவும் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய இரத்த ஓட்டமாகவும் விளம்பரங்கள் விளங்குகின்றன. விளம்பரம் என்பது குறைந்த செலவில் நிறைய பேருக்குப் பொருட்களைப் வாங்கத் தூண்டும் வகையில் கவர்ச்சியாகச் சொல்கின்ற ஒரு முறையாகும். புதிதாகச் சந்தைக்கு வரும் பொருட்களை அறிமுகப்படுத்துவதும் வாங்குபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதும் விளம்பரங்களின் அடிப்படை நோக்கமாகும். புதிதாகச் சந்தைக்கு வரும் மகிழ்வுந்து முதல் ஆண்கள் பயன்படுத்தும் சவரப்பொருட்கள் வரை பெண்களே அறிமுகப்படுத்துகின்றனர். ஆணாதிக்க உலகில் பெண் இரண்டாம் குடிமகளாகத்தான் கவனிக்கப்படுகிறாள் என்பது கசப்பான உண்மை.
விளம்பரங்களில் பெண் போகப்பொருளாகத்தான் பதிவு செய்யப்படுகிறாள். இன்றைய ஊடகங்கள் மறுபடியும் மறுபடியும் பெண்களை ஒரு வட்டத்திற்குள்ளே வலம் வரச் செய்வதையே தங்களின் நோக்கமாகக் கொண்டுள்ளன. கல்யாணம், கணவன், குழந்தை, வீடு என்று பெண்ணை அந்த வட்டத்திற்குள்ளேயேத் தள்ளிவிடுகிறது. அதாவது ஒரு பெண் இளம்பிராயத்தில் தந்தையையும், திருமணமான பின் கணவனையும் அடுத்த கட்டத்தில் பிள்ளையையும் சார்ந்திருத்தலை வலியுறுத்துகிறது. நகை , ஆடை விளம்பரங்களில் பெண்ணின் திருமணத்தையும் ஹார்லிக்ஸ், காம்பிளன், பீடியாசுவர், பெப்ஸிடன்ட் போன்ற விளம்பரங்களில் குழந்தை பராமரிப்பையும் காம்பிளன் நியூட்ரி கிரையின், சன்ஃபளவர் ஆயில் போன்ற விளம்பரங்களில் கணவன் , குடும்பப் பராமரிப்பு என்ற நிலைகளிலும் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை விடவும் கல்வியை விடவும் அழகு தொடர்பான செயல்களில் தான் அக்கறை செலுத்துவர் என்று சொல்லாமல் சொல்வது போன்ற விளம்பரங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. சில வகையான முகப்பூச்சையும் வாசனை திரவத்தையும் பயன்படுத்தினால் ஆண்களை மயக்கலாம் என்னும் கருத்தில் சில விளம்பரங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு ஊடகங்கள் பெண்களைக் காட்சிப் படுத்துவதற்குக் காரணம் யாது? என்று பார்க்கும்போது மனுசாஸ்திரம் முதற்கொண்டு காலாகாலமாகப் பெண்களை ஒரு நுகர் பொருளாகவே கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. காம சூத்திரம், ரதி ரகஸ்யம் போன்ற நூல்கள் பெண்களின் உடல் தோற்றத்தை மையமாகக் கொண்டு குரங்கு சத்துவப் பெண், பிசாசு சத்துவப் பெண், தெய்வ சத்துவப் பெண் என்று வரையறுக்கின்றன. அதாவது கழுதை போன்ற வெடித்துச் சிதறிய குரல் உடையவளாக இருப்பின் அவள் கர்த்த சத்துவப் பெண். பார்வை பயமுறுத்தும் பாவத்தில் அமைந்திருப்பின் அவள் குரங்கு சத்துவப் பெண். தாமரை மலர் போன்று மணம் பொருந்திய மிகப் பரிசுத்தமன உடம்பும், சந்தோஷக் குறிப்பினையுடைய முகப்பொலிவும் உடையவளாய் இருப்பின் அவள் தெய்வ சத்துவப் பெண் என்று வரையறுக்கின்றன. மேற்கூறிய வகைப்பாடுகளில் தெய்வசத்துவப் பெண்ணே சிறந்தவளாகக் கருதப்படுகிறாள். தெய்வ சத்துவப் பெண்ணின் தோற்றப் பொலிவைப் பெறுவதற்குரிய வழிமுறைகளை விளம்பரங்கள் காட்சிப்படுத்துகின்றன. அதாவது ரெக்ஸோனா சோப்பு உபயோகித்தால் பட்டுபோன்ற மேனியைப் பெறலாம் என்றும், கோகுல் சான்டல் பெளடர் உபயோகித்தால் நாள் முழுதும் பளிச் என்ற தோற்றப் பொலிவைப் பெறலாம் என்றும் விளம்புகின்றன. அன்று சாஸ்திரங்கள் கூறிச் சென்ற பணியை இன்று விளம்பரங்கள் மற்றொரு முறையில் எடுத்தியம்புகின்றன எனலாம்.
ஒரு பெண் எப்படிப்பட்ட உடலமைப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்து சாஸ்திரம் சாமுத்திரிகா லட்சணம் என்ற தலைப்பில் வரையறுத்துச் சொல்கிறது. பெண்களின் இடைச் சிறுத்திருத்தல் வேண்டும் என்பது சாமுத்திரிகம் கூறும் ஒரு நிலை (2009:48). இதை எடுத்துக்காட்டும் விதத்தில் பெண்களுக்கு ஒட்டியாணம் அணிவிக்கப்படுகின்றது. மேலும் ’துண்டுத் துண்டாய் உண்டு வாழ்கிறேன் என்ற ஓட்ஸ் விளம்பரம் பெண் தன் உடல் பருமனை அதிகப்படுத்தாமல் இருப்பதற்காகத் துண்டுத்துண்டாக உண்டு வாழ்வதாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் நியூட்ரி ஸ்லிம் பெண்களின் உடல் பருமனைக் குறைத்து அழகாக வைப்பதற்கு என்று விளம்பரப்படுத்துகிறது. இவ்விளம்பரங்களைப் பார்க்கும் பெண் தன் உடல் இடையைக் குறைப்பதிலும் இடையைச் சிறுக்க வைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்துகிறது.
வணிகப் போட்டி பெருகிவிட்ட நிலையில் பெண் உடலை மையமிட்டே அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் வந்து குவிகின்றன. ஒரு பெண் தானே நான் ஒரு போகப் பொருள் நான் வெறும் உடம்பு மட்டுமே உடல் அழகைப் பேணுவது இன்றியமையானது எனக் கூறும் விதத்தில் விளம்பரங்கள் வெளியிடப் பெறுகின்றன. மகளிரும் அத்தகைய பொருட்களைத் தேடிப் பிடித்து வாங்குகின்றனர்.
காலகாலமாகப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுகளை மற்றொரு வடிவத்தில் எடுத்துரைக்கிறது விளம்பரங்கள். வீட்டுவேலை முதல் குடும்பப் பராமரிப்பு வரையிலுமான அனைத்துப் பணிகளையும் பெண்களே செய்யவேண்டும் என்று விளம்பரங்கள் விளக்குகின்றன. ஒரு சில விளம்பரங்கள் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுகளை மீறியும் செயல்படுகின்றன.
’பெண்ணுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல்’
’ஊமையான மனைவி அடிபடுவதே இல்லை”
போன்ற பழமொழிகள் பெண்கள் பேசா மடந்தையாக இருத்தல் அழகு என்று எடுத்துரைக்கின்றன. தமிழ் மொழியில் முதல் இலக்கணமான தொல்காப்பியமும் ‘மொழி எதிர்மொழிதல் பாங்கற்குரித்தே’ (தொல்.180) என தலைவன் முன் எதிர் மொழியும் உரிமை பாங்கனுக்கு உண்டு என்று கூறுகிறதே ஒழிய பெண்ணுக்கு (தலைவிக்கு) அவ்வுரிமை கொடுக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது.
ஹெலன்ம் சீக்ஸிஸ் ( Helen Cixous) பெண்ணியத்தின் கொள்கைச் சாசனம் என்று புகழப்படும் தன்னுடைய மேடுசாவின் புன்னகை என்னும் கட்டுரையில் ‘இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடலை உருவாக்க வழியில்லை” என்று கூறுகிறார். அதாவது மரபு எனப் போற்றப்படும் அனைத்தின் மேலும் போர் தொடுக்க வேண்டும். அடையாளம் தெரியாமல் உடைத்து நொறுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் (1999:71).
மரபுகளை உடைத்தெறிந்த விளம்பரமாகக் காணப்படுவது ஹமாம் சோப்பு விளம்பரம் .
”அம்மா நம்ம வீட்டுல ராஷஸ் problem இருக்கா
நம்ம வீட்டுல பத்து skin problem நோ டென்ஷன்
நாய் குட்டியை வீட்டிற்குக் கொண்டுவர அது வீட்டினுள் மலஜலம் கழிக்கிறது.
‘இப்போ இதை யாரு சுத்தம் பாண்ணுவது நீங்க ’
என்று ஒரு பெண் தன் கணவனிடம் கட்டளை இடுகிறாள். இவ்விளம்பரத்தில் பெண்ணுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்னும் மரபு உடைத்தெறியப்படுகிறது.
இன்றைய மின்னணு காலத்தின் மாபெரும் சக்தியாகத் திகழ்பவை விளம்பரங்களே. இவ்விளம்பரங்கள் பழைய கருத்தாக்கங்களைப் பரப்புவதற்கே முயலுகின்றன. பெண்களைச் சிந்திக்க ஒட்டாமல் தடுத்து நிறுத்தி வெறும் கவர்ச்சிப் பொருளாக மாற்றுகின்றன. மகளிரைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமையும் விளம்பரங்களால் பெண்களின் வாழ்வு மலரும்.
1. கமலா பொ. நா - தொல்காப்பியர் முதல் தெரிதாவரை, காவ்யா, சென்னை, 2007
2. சந்திரபாபு, இல, திலகவதி - பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும், பாரதி புத்தகாலயம், சென்னை, 2011
3. நிர்மாலா ஆ.ஏ. - தமிழ்ப்பண்பாட்டில் பால் வேற்றுமைப் பதிவுகள், பல்கலைப் பதிப்பகம் சென்னை - 2009
4. பஞ்சாங்கம் - பெண்- மொழி- புனைவு, காவ்யா, சென்னை, 1999.