உலக மொழிகளிலே ‘உயர்திணை’போல் சொல்லுமுண்டோ?
முனைவர் சு. மாதவன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.
தமிழர் வாழ்வியல் திணை வாழ்வியல்; திணை என்பது நிலம் மனிதர், ஒழுக்கம் ஆகிய முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டது.
நிலம் - ஐந்திணை
மனிதர் - உயர்திணை
ஒழுக்கம் - அகத்திணை, புறத்திணை
எனவே, நிலம் சார்ந்த மனிதரது ஒழுக்கத்தைத் திணை என்றனர் தமிழர். திணை என்ற ஒற்றைச்சொல் முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டதாக விளங்குகிறது. இந்த அடிப்படையில்தான் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வாழ்வியல் இயங்குதளங்களும் மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இயங்குகின்றன.
தமிழர் வாழ்வியலை அகம், புறம் என இருவகையாகப் பகுத்து அவ்வவற்றுக்குரிய வரையறைகளை வகுத்து ஒருசீராய்த் தொகுத்து அகவாழ்வியல், புற வாழ்வியல் எனக் கட்டமைத்துள்ளனர். அவ்வவற்றுக்குரிய வரையறைகளின்படி ஒழுகுதலை ‘ஒழுக்கநெறி’ என்றனர். இதனடிப்படையில், அகவாழ்வியல் ஒழுக்கநெறி, புறவாழ்க்கை ஒழுக்கநெறி எனப் பின்பற்றி வந்துள்ளனர். இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டு வரையறைகள் சங்க இலக்கியங்களிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்டன. எனவே, வாழ்வியலிலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து வாழ்வியல் ஒழுக்கநெறியும் (அறநெறி) உருப்பெற்றுள்ளன எனலாம். இந்த நோக்கு நிலையிலிருந்து, தமிழர் வாழ்வியலின் செம்மாந்த ஒழுக்கநெறிப் பின்னணியை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தும் ஒளிர்மிகு உயர்கலைச் சொல்தான் “திணை”.
தமிழர் வாழ்வியல் அகமும் புறமும்
உலகத்தின் பிற உயிர்களிலிருந்தும் மனிதனைத் தனித்துவப்படுத்துவது அவனது படைப்பாற்றலேயாகும். பிற உயிர்கள் எல்லாம் இருக்கிற உலகில் கிடைக்கிற உணவில் உயிர் வாழ்ந்து விட்டுப் போகின்றன. சில தகவமைப்புகளை மட்டுமே உருவாக்கிக் கொள்கின்றன. ஆனால், மனிதனோ, உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்கும் அப்பாற்பட்டு இந்த உலகை இயற்கை நிலையிலிருந்து தன் படைப்பாற்றலால் அன்றாடம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறான். இதை விட எல்லாம் ஒரே ஒரு செம்மாந்த பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். அந்தப் பண்புதான் அகம் என்ற அறநெறி. இரு அகங்களின் ஈர்ப்புக் கலப்பால் ஓர் அகத்திற்குள் இரு அகங்கள் மட்டுமே உணர்ந்து பகிரும் பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். இரு உள்ளங்களால் மட்டுமே உணரும் தன்மையது ‘அகம்’. மனிதகுலம் எல்லோரும் அறியும் தன்மையது ‘புறம்’. இத்தகைய வாழ்வியல் நெறியை உலகில் உள்ள எல்லா நாட்டு மானிடரும் வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வரையறையை முதன்முதலில், பதிவு ஆவணமாகக் கொண்டுள்ள ஒரே இனம் தமிழினம் என்பதை அறிஞர்கள் பல்லாற்றானும் நிறுவியுள்ளனர்.
தமிழர் வாழ்வியல் அடிப்படைகள் - அகம், புறம்
அநேகமாக, ஒற்றைச் சொல்லால் நிலம், மக்கள், வாழ்வியல் என்ற மூன்றையும் குறிக்கும். ஒரே மொழி தமிழ்மொழியே ஆதல் கூடும். ’திணை’ என அழைக்கப்படும் அச்சொல்லுக்குள்தான் எத்துணை நுட்பம் செறிந்து ஒளிர்கிறது பாருங்கள்!
‘திணை’ என்ற சொல்லுக்கு ‘ஒழுக்கம்’ என்றும் ஒரு பொருள் உண்டு. ‘பொருள்’ சொல்லுக்கு ‘வாழ்க்கை’ என்றும் பொருள் உண்டு. பொருள்களில் ஆனது வாழ்க்கை; ஒழுக்கத்தால் ஆனது வாழ்க்கை என்னும் பொருளியைபு - தருக்க இயைபு கொண்ட சொல் ‘திணை’
நிலமும் பொழுதும் முதற்பொருள். ‘நிலம்’ என்பது உற்பத்திக் களம்; ‘பொழுது’ என்பது உற்பத்திக் காலம். அதாவது உற்பத்திக்கான பணியைத் தொடங்கும் காலம் ‘சிறுபொழுது’; உற்பத்தியை வளர்த்து அறுவடை செய்யும் காலம் ‘பெரும்பொழுது’ என்ற வகையில் தமிழர்களால் பகுக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சித்திணைக்குரிய சிறுபொழுதான ‘யாமம்’ அந்நிலத்தில் வேட்டைப்பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கூதிர், முன்பனிக்காலங்கள்’, வேட்டையாடுதல், தினை விதைத்தல், தேனடுத்தல், கிழங்கு அகழ்தல் போன்ற தொழில்களுக்குரிய காலங்களாகும்.
முல்லைத் திணைக்குரிய சிறுபொழுதான மாலை, அந்நிலத்துத் தொழிலான ஆநிரை மேய்த்துத் திரும்பும் காலமாகும். பெரும்பொழுதான ‘கார்காலம்’ ஆநிரை மேய்க்கச் செல்ல இயலாத சூழலால் வீட்டிலிருக்கும் காலமாகும். சாமை, வரகு விதைத்தல் உள்ளிட்ட பயிர்செய்தலுக்கு உகந்த காலமாகவும் கார்காலம் விளங்குகிறது.
மருதத்திணைக்குரிய சிறுபொழுதான ‘வைகறை’, அந்நிலத்துத் தொழிலான வேளாண்மைப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் வேளாண்மையை வளர்ப்பதிலிருந்து அறுவடை செய்யும் காலம் வரையிலான பரந்த காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் முப்போகம், நாற்போகம் என விளைந்ததால் மருதத்திணைக்குரிய பெரும்பொழுதுக்காலம் என்பது ஆண்டின் முழுமையும் நிறைந்திருந்திக்கிறது எனலாம்.
நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதான ‘எற்பாடு’, அந்நிலத்துத் தொழிலான மீன்பிடிப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் மீன்பிடித் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளும் காலங்களாகும். உப்பெடுத்தல், மீனுணக்கல் போன்ற தொழில்களையும் இப் பெரும்பொழுதுக்-காலங்களுக்குள்ளேயே செய்தாக வேண்டிய சூழல் நெய்தல் திணையில் உள்ளது.
பாலைத்திணைக்குரிய சிறுபொழுதுதான ‘நண்பகல்’, அந்நிலத்துத் தொழிலான ஆறலைத்தலுக்குரிய காலமாகும். பெரும்பொழுதுகளான பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியனவும் ஆறலைத்தலுக்குரிய காலங்களேயாகும்
(தொல். பொருள். அகத். 949 - 958).
நிலம் உற்பவிக்கும் அகமும் புறமும் - திணைவாழ்வியல்
தமிழரின் திணைவாழ்வியலானது முதற்பொருள்கள் விளைவிக்கும் கருப்பொருள்கள்; கருப்பொருள்களால் விளைவிக்கப்படும் உரிப்பொருள்கள் என மூன்றாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடும் ஆடவரும் தினைப்புனம் காக்கும் மகளிரும் இயற்கையால் ‘புணர்தல்’ - குறிஞ்சித் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான மலைச் சூழலும் (நிலம்) வேட்டையாடவும் தினைப்புனம் காக்கவும் வரும் காலச் சூழலும் இணைந்து கருப்பொருளால் ‘புணர்தலை’ உரித்தாக்கும்.
ஆநிரை மேய்க்கும் ஆடவர் வருகைக்காக இல்லிலிருந்து ஆப்பொருள்கள் விற்கும் ஆய்ச்சியர் காத்து ‘இருத்தல்’ - முல்லைத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான காட்டுச்சூழலும் ஆடவர் ஆநிரை மேய்க்கச் செல்வதால் அவரவர் வரும்வரை ஆய்ச்சியர் காத்திருக்கும் நீண்ட காலஅளவும் இணைந்து கருப்பொருள்களால் ‘இருத்தலை’ உரித்தாக்கும்.
உழவுத் தொழில் செய்யும் ஆடவரும் மகளிரும் ஒருசேர இல்லத்திலும் வயலிலும் எல்லா நேரமும் இணைந்தே இருப்பதால் வரும் இயற்கையால் எழும் சலிப்புணர்வும் உற்பத்தி மிகுதியால் வரும் பரத்தமைத் தொடர்பும் விளைவிக்கும் உளவியல் உணர்வான ‘ஊடல்’ - மருதத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான விளைநிலச்சூழலும் விளைபொருள் உற்பத்திக்கான வேளாண்தொழில் காலமும் இணைந்து கருப்பொருள்களால் ‘ஊடலை’ உரித்தாக்கும்.
கடலுக்குள் மீன்பிடிக்கவும் முத்தெடுக்கவும் செல்லும் ஆடவரை மீன் உணக்கவும் முத்துக்கோர்க்கவும் கடற்கரைக் குடியிருப்பிலிருக்கும் பரத்தியர் மீண்டும் உயிரோடு சந்திக்க இயலுமோ என வேதனையுடன் காத்திருக்கும் உளவியல் உணர்வான ‘இரங்கல்’ - நெய்தல் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான கடற்சூழலும் மீன்பிடிக்கச் சென்றுதிரும்பும் காலச்சூழலும் இணைந்து கருப்பொருள்களால் ‘இரங்கலை’ உரித்தாக்கும்.
‘அகனைந்திணை’ என அழைக்கப்பெறும் இவை மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொழிலுறவை அடிப்படையாகக் கொண்டவை; மனித வாழ்வியல் தேவைகளை நிறைவுசெய்யும் உற்பத்தியோடு தொடர்புடையவை. ஆனால், புறத்திணையோ பெரும்பாலும் உற்பத்தியையும் உற்பத்திக்கான ஐந்திணை நிலங்களையும் ஆளுகை செய்வதோடு தொடர்புடையவை. அதாவது, உற்பத்திப்பொருள் நுகர்வில் இசைவும் முரணும் தோன்றும் களங்களாக அல்லது இசைவாலும் முரணாலும் தோன்றும் களங்களாகப் புறத்திணைகள் இயல்கின்றன. புறத்திணைகளின் துறைசார் தொன்மைப் போக்குகளைக் கூர்ந்து நோக்கினால் அவற்றுக்குள் போரின் பரிணாம வளர்ச்சிக் கூறுகளைக் கண்டறியலாம். ஆநிரை கவர்தலும் மீட்டலும் ‘வெட்சி’. இது போருக்குச் சீண்டுதலாகும். ஒரு நாட்டின் செல்வமான மாடுகளைக் கவர்தல் என்பது ஒருவிதமான பொருளாதார இடைஞ்சலாகும். இடைஞ்சல் செய்யவும் இடைஞ்சலைத் தடுக்கவும் போரிடுதல் ‘வஞ்சி’. ஊருக்குள் தெருவுக்குள் எனப் போரிட்டு முன்னேறி அரண்மனைக் கோட்டையைக் கைப்பற்றவும் காப்பாற்றவும் போரிடுதல் ‘உழிஞை’. அரண்மனை புகுந்த எதிர்நாட்டரசனொடு அந்நாட்டரசன் போரிடுதல் ‘தும்பை’. அரசரும் படையும் வென்றால் அது ‘வாகை’ இத்தகைய நான்குகட்டப் போரில் உயிர்நீத்தால் ‘காஞ்சி’ (நிலையாமை). வென்ற ஆண்மகனின் வீரப்போர்ப் புகழ் பாடினால் ‘பாடாண்’. (தொல். பொருள். புறத். 1002 - 1028).
அகத்திணை + புறத்திணை = உயர்திணை
திணைகளின் முதற்பொருள்களான நிலம், பொழுது ஆகியவற்றால் விளையும் கருப்பொருள்களை நுகர்வதன் அடிப்படையில் உரிப்பொருள்கள் அமைகின்றன. நுகர்வில் இசைவு ஏற்பட்டால் அது அகத்திணை வாழ்வியலைக் கட்டமைக்கிறது. நுகர்வில் முரண் ஏற்பட்டால் அது புறத்திணை வாழ்வியலை விளைவிக்கிறது.
திணைமக்களின் தொழில்கள் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டவை. கருப்பொருள்களில் ஒன்றுதான் தொழில் எனக் குறிப்பிடப் பெற்றிருந்தாலும்,
“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”
(தொல்.பொருள்.964)
என்பதில், எல்லாக் கருப்பொருள்களையும் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தி தெய்வம், உணவு, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை என வரிசைப்படுத்தி இவற்றிற்கு இயைபுடைய தொழில் என்பதால் தொழிலை (செய்தி) இறுதியாய் வைத்தார் எனப் பொருள்கொள்ள இடமிருக்கிறது. எனவே, வாழ்வியலைத் தகவமைக்கும் தொழில் தொழிற்படும் பொருள்களே கருப்பொருள்களாகும் என்பது தெளிவாகும்.
இத்தகைய கருப்பொருள்கள்;
உயிருள்ளன : மா, மரம், புள்
உயிரல்லன : தெய்வம், உணவு
உருவாக்கப்படுவன : உணவு, பறை, யாழ்
என்ற வகைப்படும் பகுப்பின்படி, எல்லாக் கருப்பொருள்களோடும் தொழில் இயைபுப்படுகிறது. மானுட வாழ்க்கையை வடிவமைக்கும் கடமை தொழிலுக்குரியது. இந்த அடிப்படையில்தான், கருப்பொருள்களுக்குள் தொழிற்படும் தொழிலின் அடிப்படையில் உரிப்பொருள் விளைகிறது.
குறிஞ்சியில் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை விதைத்தல், கிழங்கு அகழ்தல் ஆகியன தொழில்கள். இவற்றிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை - மிகுபொருள் சேர்க்கை இல்லை. இத்தொழில்கள் யாவும் ஆணும் பெண்ணும் இணைந்தும் வேலைப்பிரிவினை செய்தும் மேற்கொள்வன. எனவே, குறிஞ்சியின் திணைப் பின்னணி ‘புணர்தல்’ உரிப்பொருளுக்கு உரியதாகிறது.
முல்லையில் ஆநிரை மேய்த்தல், சாமை - வரகு விதைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, முல்லைத் திணைப்பின்னணி ‘இருத்தல்’ எனும் உருப்பொருளுக்கு உரியதாகிறது.
நெய்தலின் மீன்பிடித்தல், உப்பு எடுத்தல், மீன் உணக்கல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, நெய்தல் திணைப்பின்னணி ‘இரங்கல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது.
மருதத்தின் நெல்விளைத்தல், இதர தானியங்கள் விளைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை மிகுகிறது. மிகுபொருள் சேர்க்கை எனும் உபரி உற்பத்தி, பரத்தமை ஒழுக்கத்தை விளைவிக்கிறது. எனவே, மருதத்திணையின் பின்னணி ‘ஊடல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது.
பிற திணைகளில் தொழிலடிப்படையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்ட வாழ்வியல் தேவைகளை இவற்றுக்குட்பட்டுத் தலைவனும் தலைவியும் ஈடுசெய்து கொண்டு வாழ்ந்துவருகின்றனர். எனவே, பிற திணைகளில் ஓரிடத்திலேனும் பரத்தையர் ஒழுக்கம் எனும் பதிவுச் சுவடே இல்லை.
பிற திணைகளில் துளியும் இல்லாத பரத்தையர் மருதத்திணையில் மட்டும் நிறைந்திருப்பதன் பொருளாயதப் பின்னணியை அறிஞர் பலர் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாறிருக்க, மருதத்திணைக்குரிய உரிப்பொருளாக ஊடலை முன்வைத்தது ஏன்? ஊடலைப் பின்பற்றுமாறு மருதநிலப் பெண்ணுக்கு அறிவுறுத்தியது ஏன்?... பரத்தையர் ஒழுக்கத்துக்குச் சமூக ஏற்புநிலை கொடுத்தது ஏன்? என்றவாறு வினாக்கள் பல முளைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்தான். பிற திணைகளில் உடைமையும் ஆணாதிக்கமும் இல்லை. மருதத் திணையில் நிலவுடைமையும் ஆணாதிக்கமும் தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பும் கெட்டிபட்டுப் போயிருக்கிறது என்பதுதான் பதில்.
இவ்வாறெல்லாம் இருந்தபோதிலும், அக்காலப் புலவர் சான்றோர் வரையறுத்த அகத்தணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் புறத்திணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் வாழ்பவனே ‘உயர்திணை’ என்பதே தமிழர் வாழ்வியல்.
உயர்திணை என்னும் வினைச்சொல்,
எனப் பிரிந்து பொருள்தரும். எனவே, தானும் உயர்ந்து தன் சமூகத்தையும் உயர்த்தும் பண்பு கொண்டவன் எவனோ அவ்னெல்லாம் ‘உயர்திணை’. இத்தகைய பண்பு, இல்லாததெல்லாம் அஃறிணை (அல்திணை). ஆக, ‘உயர் ஒழுக்கம்’ நிரம்பியவனே ‘உயர்திணை’. இங்கு ‘உயர் ஒழுக்கம்’ என்பதும் வினைத்தொகைச் சொல் என்பது கூர்ந்து அறியத்தக்கது. அநேகமாக, உலகின் வேறெந்த மொழியிலும் இத்தகைய ‘பண்பாட்டுச் செம்மைநிறை கலைச்சொல்’ மூலம் மனிதனை சுட்டும் பாங்கு இருத்தல் ஐயமே. இந்த வகையில், உயர்திணை எனும் கலைச்சொல்லைப் பெற்ற உயர்பண்பாட்டு மரபு தமிழர் வாழ்வியலுக்குரியது எனில் அது மிகையில்லை.
இந்தக் கட்டுரையின் கருத்தை நிறுவ உலகச் செம்மொழிகள் சிலவற்றில் மனிதனைக் குறிப்பிடும் சொற்களைத் தொகுத்துப் பார்க்கலாம்...
1. கிரேக்க மொழியில் Andhras என்ற சொல் Man என்ற பொருளுடையதாக உள்ளது.
2. இலத்தீன் மொழியில் Homine என்ற சொல் Human என்ற ஆங்கிலச் சொல்லின் மூலச் சொல்லாக விளங்குகிறது.
3. ஹீப்ரு மொழியில் உள்ள சொல் ஆங்கிலத்தில் Humanity என்ற பொருளுடைய சொல்லாக இருந்துள்ளது.
4. அரபி மொழியில் Rajul - Man என்ற சொல் ஆங்கிலத்தில் Creature என்ற பொருளுடைய சொல்லாக விளங்குகிறது.
5. சீன மொழியில் L_ren - Personality என்ற பொருளுடைய சொல் வழக்கில் உள்ளது.
6. சமஸ்க்ருத மொழியில் Manyate -To think என்ற பொருளுடைய சொல்லாக உள்ளது.
மேலே சொற்பொருள் காணப்பட்டுள்ள ஆறு செம்மொழிகளிலும் பழந்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள "உயர்திணை" என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாக ஒன்றுகூட இல்லை. அரபி, சீனம், சம்ஸ்க்ருதம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் 'படைப்பாளுமை உடையவன்' என்ற பொருள் உள்ளது. பிற மூன்று மொழிகளில் 'மனிதன்' என்ற சொல்லுக்கு இணையான பொருள் உள்ளது. பொதுப் பொருளில் 'மனிதன்' என்ற சொல்லுக்கு இணையான சொற்களாகவே உள்ளன.எனினும், பழந் தமிழ்ச் சொல்லான "உயர்திணை" என்ற சொல்லின் உறைபொருளான-மானுட வாழ்வியலை மலர்த்தும் இருநிலைப் பட்டகப் பொருள் தருவதாக எந்த மொழியிலும் சொல் இல்லை என்பது உறுதியாகிறது .அதாவது, அக(த்திணை) வாழ்விலும் புற(த்திணை) வாழ்விலும் தானும் உயர்ந்து பிறரையும்/சமூகத்தையும் உயர்த்துபவன் எவனோ அவனெல்லாம் "உயர்திணை" என்ற சிறப்புப் பொருள் கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி என்னும் இந்தக் கட்டுரையின் கருத்து உறுதியாகிறது.
இப்பொழுது உரக்கச் சொல்லலாம் / கேட்கலாம் :
"உலக மொழிகளிலே 'உயர்திணை'போல் சொல்லுமுண்டோ ...?!”
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.