மணிமேகலை வெண்பா
முனைவர் ம. தேவகி
தமிழ்த்துறைத் தலைவர்,
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.
முன்னுரை
பாரதிதாசனின் ‘மணிமேகலை வெண்பா’ 288 பாக்களை உள்ளடக்கியது. நளவெண்பாவிற்குப் பிறகு வெண்பாவால் படைக்கப்பட்ட குறுங்காவியம். இந்நூலிற்கு முன்னுரையில் “பழைய மணிமேகலை என்பதில் அடிமரத்தை மட்டும் நான் கூறிக் கிளைகளைக் கூறாது விடுத்ததன் நோக்கம் அந்தப் பழைய மணிமேகலை காப்பியத்தையும் மக்கள் மறக்காமல் அடிக்கடி படிக்க வேண்டும் என்பதற்காகவே” (1) என்று கூறியுள்ளார். ஆகவே இவருடைய நோக்கம் வெண்பாவால் காப்பியத்தை இயற்ற வேண்டும் என்பதாகும்.
மணிமேகலை வெண்பா
பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவின் நோக்கம் சுருங்கச்சொல்லல் - 30 காதைகளில் சீத்தலைச்சாத்தனார் கூறிய செய்தியை 288 பாக்களில் கூற முயன்றுள்ளார். ஆனால் காப்பியத்தின் மையக்கருத்தை விளக்கும் இடங்களில் ஒரு கருத்தை விளக்க 2 வெண்பாக்களை இயற்றியுள்ளார்.
“உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை” என்ற கவிமணியின் வாக்கிற்கேற்ப தமிழ்மொழியின் மீது தான் கொண்ட பற்றினை விளக்க மணிமேகலை கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
கடவுள் மறுப்பு சிந்தனை உடையவராதலால் பௌத்த சமயக்கருத்துகளை விளக்காமல் வாழ்வியல் அறநூலான திருக்குறளின் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். இச்செய்திகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
வெண்பா யாப்பு - விரித்துக்காட்டல்
தேசியக்கவிஞர் சுப்ரமணிய பாரதியார் கவிதைக்கு விரித்துச்சொல்லும் மரபு சிறப்பு என்கிறார். “கிழக்குத்திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான் தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய்விடுதல் நல்லது அன்று” (2) இக்கருத்தை பாரதிதாசன் தன் மணிமேகலை வெண்பாவில் ஓரிடத்தில் செம்மையாக இயற்றியுள்ளார்.
மணிமேகலை காப்பியம் படைக்கப்பட்ட நோக்கம் ‘உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’. இதனைத் தெளிவாக விளக்கும் காதை ‘ஆதிரை பிச்சையிட்ட காதை’ இக்காதையில் மணிமேகலை ஆதிரையிடம் பிச்சை பெறும் முறையை,
“தொழுது வலங்கொண்டு துயரறு கிளவியோடு
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென” (3)
என்கிறார் சீத்தலைச் சாத்தனார். இதே வெண்பா ஆதிரை தானம் செய்த விதத்தை 2 நேரிசை வெண்பாக்களாக படைத்தளித்துள்ளார் பாரதிதாசன்,
“தேவர் உலகம் சிறப்பென்னும் ஆரியர் சொல்
ஈவார் உலகம் இழிவாக்கப் - பாவை
கலமே நிறையக் கறியோடு சோறிட்டாள்
இலமே இலம்என்னு மாறு” (4)
மணிமேகலை தொண்டால் அவள் புகழ் நிலைக்க வேண்டும் என்று ஆதிரை வாழ்த்துவதாகவும் இப்பாடலை இயற்றியுள்ளார்.
“அழகும் இளமையும் எண்ணாய் துறவே
பழகும் இளையாய் பசுநெய் - ஒழுகக்
கலத்திலிட் டேனிரு கையாலும் சோறு
நிலத்து நிலைக்கநின் சீர்” (5)
பாரதிதாசன் மணிமேகலை வெண்பாவை சுருங்கச் சொல்லும் முயற்சியாக இயற்றிருப்பினும் காப்பிய மையக் கருத்தை விளக்குவதற்காக இப்பகுதியை விரித்துக் கூறியிருக்கலாம்.
வள்ளுவர் சொல் ஓர்ந்தவன்
மணிமேகலை காப்பியத்தின் ஒவ்வொரு காதையிலும் பௌத்த சமயக் கருத்துக்களைத் தொகுத்து கூறியுள்ளார் சீத்தலை சாத்தனார். ஆனால் பாரதிதாசன் நீரோட்டயமக அந்தாதியில் அமைந்த ஒரு குறளைத் தம் பாடலின் வரிகளாக்கிப் பின்வரும் நேரிசை வெண்பாவைப் படைத்துள்ளார்.
“யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்றே - ஓதினார்
வள்ளுவர் அன்னாரின் வாய்மை யதனையோ
எள்ளுவர் எய்தார் நலம்” (6)
பற்று நீக்கி வாழ வேண்டும் என்ற வள்ளுவரின் கொள்கையைப் பின்பற்றினால் மட்டுமே நலம் பெற இயலும் என்கிறார்.
“கல்வியே ஒரு மனிதனைச் செம்மையாக்கி உயர்த்தும்” என்ற கருத்தை எடுத்துரைப்பதிலும் வள்ளுவர் வாய்மொழியாகத் திருக்குறளைக் கையாண்டு பின்வரும் வெண்பாவை இயற்றியுள்ளார்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து
வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை
எள்ளுவர் இல்லாதார் என்று” (7)
பாரதிதாசன் கடவுள் மறுப்புக் கொள்கையை உடையவர். ஆகவே பௌத்த சமயக் கருத்துக்களைக் கூறாது திருவள்ளுவரின் மொழிகளை எடுத்தாண்டுள்ளார்.
தமிழே மணிமேகலை
சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை அறச்செல்வியாகப் போற்றியுள்ளார். ஆனால் பாரதிதாசனோ மணிமேகலையைத் தமிழோடு ஒப்பிட்டுள்ளார்.
“நீர்க்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார்
யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார்” (8)
மணிமேகலையின் மூலம் தமிழின் மேன்மையை எடுத்துரைக்க முயன்றுள்ளார். தமிழைக் கற்று அறியாதவர் அறிவில்லார் என்னும் பொருளில் இப்பாடலை இயற்றியுள்ளார்.
“அந்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குக்
குந்தக் குடிசை குடிக்கக்கூழ் - கந்தை
அடைய விடாரே அறிவின் இடையார்
அடையவிப்பார் முற்றுணர்ந் தார்” (9)
தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும். ஆகவே அம்மொழியை எவ்விதமான தடையுமின்றி கற்று உணருங்கள் என்னும் பொருளில்,
“- தடையின்றி
வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க்
குள்ளத் துணர்வு வரும்” (10)
இப்பாடலை இயற்றியுள்ளார். ஆகவே மக்கள் தமிழ்கற்று அறிவுநெறியோடு புகழப்படுதல் வேண்டும் என்று தமிழ்மொழியின் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதாகவும் படைத்துள்ளார்.
முடிவுரை
பாவுக்கு வேண்டுவன பொருட்சுவையும்,சொற்சுவையுமாகும். இத்தகையப் பொருட்சுவை,சொற்சுவையோடு கவிதையை இயற்றியது மட்டுமின்றி தன்கருத்தை உணர்வோடு எடுத்துரைக்கும் களமாகவும் பாரதிதாசன் தன் மணிமேலை வெண்பாவைப் படைத்துள்ளார். மேலும் 19ஆம் நூற்றாண்டில் மூல மணிமேகலையை அடியொற்றி இந்நூல் படைக்கப்பட்டிருப்பினும் எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய நடையில் இந்நூலின் பாக்களை யாத்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு இலக்கியத்தை ஆசிரியர் விரும்பினால் எந்த பா வடிவிலும் எழுதலாம் என்ற கருத்தினை இக்காப்பியம் மூலம் அறியலாம்.
அடிக்குறிப்புகள்
1. பாரதிதாசன், மணிமேகலை வெண்பா முன்னுரை ப.2
2. அ.கி.பரந்தாமனார், கவிஞராக ப.44
3. சீத்தலைசாத்தனார், மணிமேகலை
4. பாரதிதாசன், மணிமேகலை வெண்பா 131 ப.72
5. மேலது 132 ப.73
6. மேலது 169 ப.91
7. மேலது 267 ப.143
8. மேலது 204 ப.141
9. மேலது 265 ப.142
10. மேலது 266 ப.143
(குறிப்பு: இக்கட்டுரையினைச் சிறப்பாக்க கட்டுரையாசிரியர் ‘துணை நூல் பட்டியல்’ அளிக்கலாம். ஆசிரியர்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.