வ. சுப. மாணிக்கனார் பதிவில் ‘திருக்குறள்’ தெளிவு
முனைவர் ப. சு. மூவேந்தன்
உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
முன்னுரை
இலக்கியத்தின் இயல்பு இன்புறுத்தலும், அறமுரைத்தலும்; ஆகும். தமிழில் தோன்;றிய செவ்வியல் இலக்கியங்கள் யாவும் இவ்விரு பணிகளையும் இயல்பாய்ச் செய்துள்ளன. சங்க இலக்கியங்கள் கொண்டிருந்த அக, புற இயல்புகளை, அவை எடுத்துரைக்கும் வாழ்வியல் மெய்ம்மைகளை மறுதலித்து, அறத்திற்கே முதன்மை தந்து படைக்கப் பெற்றவை அறநூல்கள் ஆகும். அற இலக்கியங்கள் வெற்றென நீதி புகட்டும் போக்கில் அமைந்தன. ஒருவகையில் அவை தாம் பின்பற்றி ஒழுகிய சமயநெறி பரப்புவனவாக அமைந்தன. இதனால் அற இலக்கியங்கள் இலக்கிய இன்பம் நல்கும் பனுவல்களாக அமையாது, அற இலக்கண வரையறைகளாகக் கருதப்பட்டன. இவற்றில் இலக்கிய இன்பத்தையும், அவற்றிற்கிடையே அறக்கருத்துரைகளையும் வலியுறுத்திப் பேசிய நூல் திருக்குறள் மட்டுமே ஆகும். இதன்பொருட்டே இன்றைக்கும் நமக்குத் திருக்குறள் இன்பம் பயக்கும் நூலாக அமைந்திருக்கின்றது. இவற்றோடு மட்டுமல்லாது திருக்குறள் ஏனைய அறநூல்கள் யாவற்றுக்கும் தலைமைசான்ற நூலாகத் திகழ்கின்றது. கற்கக் கற்க கல்லாமை அகலும் என்பதனைப் போல, திருக்குறள் பயிலும்தொறும் நூல்நயம் நல்கும் இலக்கியமாகத் திகழ்கின்றது. ஆகையால் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் துறைபோகிய பேராசிரியர்களை அது வெகுவாக ஈர்த்தது. புதுப்புது விளக்கங்களைக் காணவைத்தது. அச்சிறப்பினைக் கருதியே தமிழ்ப்பேராசிரியர்கள் பலரும் திருக்குறள் கருத்துக்களுக்கு உரை வகுத்த முனைந்தனர். அவ்வகையில் அமைந்ததே வ.சுப. மாணிக்கனார் திருக்குறள் தெளிவுரை ஆகும்.
திருக்குறள் உரைகள்
மூலநூலாசிரியனுக்கும் கற்போனுக்கும் இடையே காலஇடைவெளி ஏற்படும்போது மூலநூலாசிரியனின் கருத்தைத் தெளிவுபடுத்த எழுந்தனவே உரைகள் ஆகும். திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நன்னூல் போன்ற இலக்கண, இலக்கியங்கள் உரைநூல்களால் சிறப்புப் பெற்றுள்ளன. இன்றைய நிலையில் உரையில்லாத செய்யுள் நூல்களே இல்லை என்று கூறுமளவிற்கு உரைநூல்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு வளர்ச்சி பெற்ற உரைநூல்களை இயற்றிய அறிஞர்கள் பலராவர். இடத்தாலும் காலத்தாலும் வேறுபட்ட இவ் உரையாசிரியர்கள் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வுக்குத் துணைபுரிபவராய் அமைந்துள்ளனர்.
திருக்குறள் முதல் பதிப்பு உரை
திருக்குறள் முதன்முதலில் அச்சேறிய ஆண்டு 1812 ஆகும். திருக்குறள் மூலபாடமாக இது இருந்திருக்கின்றது. இதை ஞானப்பிரகாசம் என்பவர் வெளியிட்டிருக்கிறார். இதே ஆண்டில் எல்லீஸ் துரையும் ஆங்கில விளக்கத்துடன் திருக்குறளை வெளியிட்டுள்ளார். பின்னர், 1838இல் திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயர் என்பவர் பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறள் உரைப்பதிப்பினை முதன்முதலில் வெளியிட்டுள்ளார். இதுவே திருக்குறளின் முதல் உரைப் பதிப்பாகும். அன்று தொடங்கிய திருக்குறட் பதிப்புப் பணி இன்றுவரை தொடர்ந்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
திருக்குறள் கருத்துச் செறிவுடையது எளிமையானது; கற்பதற்கு இனிமை பயப்பது; படிக்குந்தொறும் புதுமையான கருத்துக்கு வழிவகுப்பது. இத்தகு நிலைகருதியே திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். திருவள்ளுவமாலையின்,
“மணற்கிறைக்க நீருறும்; மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால்-பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு” (திருவள்ளுவமாலை)
என்னும் பாடலுக்கு ஏற்ப, பயிலுந்தொறும் பல நுட்பமான கருத்துகளைத் தரவல்லது திருக்குறள். அத்தகு சிறப்புமிக்க திருக்குறளின் நுட்பத்தைத் துய்த்துப் பலர் பல்வேறு உரைகள் கண்டனர்.
திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் தோன்றியமைக்கான காரணங்களை வ.சுப. மாணிக்கனார்,
1. பாடவேற்றுமையால் சில உரை வேற்றுமைகள் காணப்படும்.
2. பாடம் கற்பித்துக் கொண்டு ஓரிருவர் புதுப்பொருள் காட்டியுள்ளனர்.
3. முன்னோர் எழுதிய உரைப்பொருளைப் பெரிதும் தழுவக்கூடாது; தாம் ஓரு தனியுரை எழுத வேண்டும் என்ற தன்முனைப்பும் எங்ஙனமேனும் பல குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்புமே திருக்குறள் உரை பலவற்றின் தோற்றத்துக்குக் காரணம் எனச் சுருங்கச் சொல்லலாம்” (வள்ளுவம். ப. 160)
என்று கூறுகின்றார். இத்தகு நிலையிலேயே வ.சுப. மாணிக்கனார் திருக்குறள் தெளிவுரை எழுந்துள்ளது என்று அறியமுடிகின்றது.
திருக்குறள் தெளிவுரைகள்
1893இல் திரு.வி.க. வெளியிட்ட ‘திருக்குறள் மூலமும் கருத்துரையும்’ என்ற நூலே கையடக்கப் பதிப்பாக முதன்முதலில் வெளிவந்த நூலாகும். இதன் பின்னர் கி. வீரராகவன் வெளியிட்ட கையடக்கப் பதிப்பு ஓன்றும், 1928இல் இராமஸ்வாமி சாஸ்த்ருலு வெளியிட்ட கையடக்கப் பதிப்பு ஒன்றும் உள்ளது.
இதே ஆண்டில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கா. சுப்பிரமணிய பிள்ளை பொழிப்புரையோடு கையடக்கப் பதிப்பினை வெளியிட்டது. கையடக்கப் பதிப்பு விற்பனையில் சாதனை படைத்தது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட மு.வரதராசனாரின் உரைப்பதிப்பு ஆகும். ஆகஸ்டு 2000 வரை இந்நூல் 156 பதிப்புகள் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1960இல் ‘திருக்குறள் செய்யுளும் தெளிபொருளும்’ என்னும் தலைப்பில் மீ.கந்தசாமிப் புலவரும், இதே ஆண்டில் ‘திருக்குறள் இனிய எளிய உரை’ என்னும் தலைப்பில் மயிலை சிவமுத்துவும், 1966இல் ‘திருக்குறள் தெளிவு’ என்னும் தலைப்பில் சுந்தர சண்முகனாரும், 1967இல் ‘திருக்குறள் தெளிவான உரை’ என்னும் தலைப்பில் செந்துறை முத்துவும், இதே ஆண்டில் ‘திருக்குறள் மாணவர் பதிப்பு’ என்னும் தலைப்பில் இரா.வே. ருத்தரப்பசாமியும், 1971இல் ‘திருக்குறள் தெளிவான உரை’ என்னும் தலைப்பில் ஞா. மாணிக்கவாசகனும், 1973இல் ‘கோனார் பொன்னுரை’ என்னும் தலைப்பில் ஐயன்பெருமாள் கோனாரும், 1977இல் ‘திருக்குறள் காமத்துப்பால்’ என்னும் தலைப்பில் கவிஞர் கண்ணதாசனும், 1983இல் ‘திருக்குறள் புதியஉரை’ என்னும் தலைப்பில் புலியூர்க்கேசிகனும், 1984இல் ‘திருக்குறள் தெளிபொருள் உரை’ என்னும் தலைப்பில் இரத்தினநாயக்கர் சன்ஸ் நிறுவனமும், 1985இல் ‘திருக்குறள் எளிமை உரை’ என்னும் தலைப்பில் லேனா. தமிழ்வாணனும், 1987இல் ‘திருக்குறள் இனியஉரை’ என்னும் தலைப்பில் புலவர் நாராயணசாமியும், 1991இல் ‘திருக்குறள் மிகமிகஎளிய உரை’ எனும் தலைப்பில் மு.பெரி.மு. இராமசாமியும், 1994இல் ‘திருக்குறள் மக்கள் உரை’ என்னும் தலைப்பில் கு. மோகனராசுவும், 2000த்தில் ‘திருக்குறள் எளிய உரை’ என்னும் தலைப்பில் கருமலைத் தமிழாழனும் கையடக்கப் பதிப்புரைகள் வெளியிட்டுள்ளனர்.
வ.சுப. மாணிக்கனார் திருக்குறள் தெளிவுரை
திருக்குறள் பல்கலைக்கழகங்களிலும், பள்ளி-கல்லூரிகளிலும் பாடநூலாக்கம் பெற்ற பின்னர் பள்ளி கல்லூரி ஆசிரியர்களிடையே திருக்குறள் பற்றிய கருத்தாக்கங்கள் பரவலாக்கம் பெற்றன. மாணவர்களுக்குப் பாடம் நடத்துங்கால் ஏற்பட்ட ஐயங்களைக் களைவதன் பொருட்டு ஆசிரியர்கள் மனத்தில் எழுந்த சிந்தனைப் போக்குகளே அவர்களது தெளிவுரைகளாக, கருத்துரைகளாக, மதிப்புரைகளாக, பொழிப்புரைகளாக வெளிவந்தன. அவ்வகையில் வெளியான ஒன்றாகவே வ.சுப. மாணிக்கனாரின் ‘திருக்குறள் தெளிவுரை’ அமைந்துள்ளது. கருத்துரை மட்டுமே கொண்ட கையடக்கப் பதிப்பாக சென்னை மணிவாசகர் பதிப்பகத்தாரால் 1991இல் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
திருக்குறளின்பால் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் கொண்டிருந்த ஆய்வுத்திறனும் போக்கும் ‘வள்ளுவம்’ என்னும் நூலின்வழி வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் அனைத்துக் குறட்பாக்களுக்கும் எளிமையான தெளிவான உரை வழங்கவேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் எழுந்த ஒன்றாகவே ‘திருக்குறள் தெளிவுரை’ அமைந்துள்ளது.
திருக்குறளில் அறம், பொருள், இன்பம்
சங்க இலக்கியக் காலத்துக்கு முன்பாகவே தமிழ் இலக்கியங்களில் அகம், புறம் என்னும் கோட்பாடும், அறம், பொருள், இன்பம் என்னும் கோட்பாடும் இலக்கிய வழக்கில் இருந்து வந்துள்ளன. இவற்றுள் அகத்துள் இன்பமும், புறத்தில் அறமும் பொருளும் அடங்கும் என்று குறிப்பிடுவர்.
தொல்காப்பியக் காலத்துக்கு முன்பாகவே அறம், பொருள், இன்பம் என்னும் பாகுபாடு நிலவியதனை,
“அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப” (தொல். சூ. 1363)
என்னும் நூற்பா புலப்படுத்துகின்றது. இவ்வைப்பு முறையினை,
“ஆற்றல்சால் கேள்வி யறம்பொரு ளின்பம்” (குறிஞ்சிக்கலி, பா. 1)
“அறனும் பொருளு மின்பமும் மூன்றும்” (புறநானூறு, பா. 28:1)
“அறம் பொருள் இன்பம் உயிரச்சம்” (குறள். 501)
என்னும் இலக்கிய அடிகளும் தெளிவுறுத்துகின்றன. சங்க இலக்கியத்தில் இன்பம், பொருள், அறம் என்னும் வைப்பு முறையும் வழக்கிலிருந்து வந்ததை,
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை” (தொல். சூ. 1038)
என்னும் நூற்பா தெளிவுறுத்துகின்றது. இம்முறையின் அடிப்படையிலும் திருக்குறள் முறைவைப்பினைச் சில உரையாசிரியர்கள் அமைத்திருக்கின்றனர்.
பொதுவாக அறம், பொருள், இன்பம் என்பது முப்பொருள் கோட்பாட்டின் ஆக்கநிலை ஆகும். அறநூல்கள் கொள்ளும் வைப்புமுறையும் இதுவே என்பதனால், அறம் பொருள் இன்பம் என்னும் வைப்புமுறையிலேயே இந்நூலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அறம்
தனிமனிதன் பின்பற்றி நடக்கத்தக்க அறத்தைப் பற்றிப் பேசுவது திருக்குறளின் அறத்துப்பால் ஆகும். அது தனிமனிதன் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்குத் துணைநிற்கின்றது. சமூக வாழ்வியலின் சிறப்புக்குத் தனிமனிதர்களின் ஒழுக்கநெறிகளே தலைமைப் பண்புடையதாக விளங்குவதனால் திருவள்ளுவர் அறத்துக்கு வலிமை தரும் விதத்தில் அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தை வகுத்துள்ளார். இதற்கு உரைவிளக்கம் தந்துள்ள வ.சுப. மாணிக்கனாரின் உரைத்திறன் அறியத்தக்கதாகும்.
ஒருவனுக்குச் சிறப்பினையும், செல்வத்தையும் தரத்தக்கது அவன் பின்பற்றி நடக்கும் அறமே என்பதனை,
“சிறப்புஈனும் செல்வம் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு” (குறள். 31)
என்னும் குறட்பா வலியுறுத்துகின்றது. இதற்கு, “அறம் மதிப்பும் செல்வமும் தரும். ஆதலின் அறத்தினும் வாழ்வுக்கு நல்லது வேறில்லை” என்கிறார் வ.சுப. மாணிக்கனார்.
மேலும் திருவள்ளுவர் அறம் என்பதனைப் பல குறட்பாக்களின்வழியும் தெளிவுறுத்துவதனைக் காணலாம். அறன்வலியுறுத்தல் அதிகாரத்தில் அறன் இத்தன்மைத்தானது என்பதனை,
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்” (குறள்: 34)
என்று குறிப்பிடுவார். இதற்குரிய தெளிவுரையினை வ.சுப. மாணிக்கனார், “மனப்பிழை இன்றி நடத்தலே அறம். மற்றவை எல்லாம் வெளிப்பகட்டு” என்று தெளிவுறுத்துகின்றார். தன் மனத்திற்குப் பிழை என்று கருதிய ஒன்றைச் செய்யாதிருத்தலே அறம் என்று தெளிவுபடுத்துவது சமூக நலன் நோக்கிய சிந்தனையின் வெளிப்பாடாகும்.
திருவள்ளுவர் கல்வி, அறம் ஆகியனவற்றிப் பேசும் இடங்களில் காலத்தை முன்னிறுத்திக் கூறுவது சிறப்பு. ஒருவன் அறத்தைச் செய்வதற்குக் காலம் ஒரு தடையாக நிற்பதில்லை. அதனை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் இன்றைக்கே செய்திட முனைய வேண்டும் என்று கூறுவதனை,
“அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை” (குறள். 36)
என்னும் குறள்வழி தெளிவுறுத்துவார். இக்குறள் வலியுறுத்தும் கருத்தினை, “சாகும்போது பார்த்துக் கொளவோம் என்னாது நாளும் அறஞ்செய்க; அதுவே உயிர்த்துணை” என்று விளக்கம் தருகின்றார் வ.சுப. மாணிக்கனார்.
ஒருவன் செய்யத்தக்கது அறமே. செய்யத்தகாதது பழிவரும் செயல்களே என்பதனை,
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி” (குறள். 40)
என்னும் குறட்பா தெளிவுறுத்துகின்றது. இக்கருத்தினை, “யாரும் செய்ய வேண்டியது அறமே; யாரும் விடவேண்டியது பழியே” என்கிறார் வ.சுப. மாணிக்கனார்.
பொருள்
திருக்குறள் தனிமனிதனின் சமூகம் சார்ந்த உலகவாழ்வியலைக் கூறும் பகுதி பொருட்பால் ஆகும். அது நாடு, அரசு, அமைச்சு, படை, குடி, செல்வம், உணவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இதனுள் மனிதசமுதாயம் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் தெளிவுறுத்தப் பெறுகின்றன. அதனுள் பொதுநிலையான் அறியப்படும் செல்வப்பொருள் பற்றிப் ‘பொருள் செயல் வகை’ என்னும் அதிகாரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வதிகாரத்திற்கு வ.சுப. மாணிக்கனார் தெளிவுறுத்தியுள்ள விளக்கம் நுட்பமும் செறிவும் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
இவ்உலகில் பொருள் பெற்றுள்ள மதிப்பினை,
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” (குறள். 751)
என்னும் குறட்பா தெளிவுறுத்துகின்றது. இதற்கு, “மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையவராகச் செய்யும் செல்வமே சிறந்த செல்வம்” என்று விளக்கம் தந்துள்ளார் வ.சுப. மாணிக்கனார். இதில் ‘பொருள்’ என்பதற்கு ‘மதிப்பு’ என்று குறித்துள்ள பொருள்நுட்பம் அறியத்தக்கதாகும். பொருள் என்பது மனிதனை மதிப்பிடும் அளவுகோலாக அமைந்துள்ளமையால் அது தனிமனித மதிப்பு, சமூக மதிப்பு, பயன்மதிப்பு என எல்லாநிலைகளிலும் மதிப்பினைத் தரும் கருவியாக அமைவதன் பொருட்டு இவ்வாறு குறித்தார் என அறியமுடிகின்றது. இதன்விளக்கத்தினை இதற்கு அடுத்து இடம்பெறும் குறளுக்கு (குறள். 752), “செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்; உடையவரை எல்லோரும் சிறப்புச் செய்வர்” என்று விளக்கம் தந்துள்ளார்.
பொருளை அறத்தின்வழிநின்று ஈட்டுதல் வேண்டும் என்பதில் திருவள்ளுவர் மிகுந்த கருத்துடையவராகத் திகழ்கிறார். இதன்பொருட்டே அவர்,
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்று வந்த பொருள்” (குறள். 754)
என்னும் குறளினைப் படைத்தளித்தார். இக்குறள் உணர்த்தும் பொருளை, “நெறியொடு குற்றமின்றி ஈட்டிய பொருள் அறமும் தரும், இன்பமும் தரும்” என்று விளக்குகின்றார் வ.சுப. மாணிக்கனார். இதேபோன்று,
“ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு” (குறள்: 760)
என்னும் குறள் விளக்கத்திலும், “சிறந்த பொருளைத் திரளாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் எளிதிற் கிடைக்கும்” என்று குறித்துள்ளார் வ.சுப. மாணிக்கனார்.
திருக்குறளில் கூறப்படும் அறம் யாவர்க்கும் உரியது. வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டியது என்பதே திருவள்ளுவரின் கருத்தாக்கமாகும். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுப்புடைய இந்நூலில் முதலாவதான அறத்துப்பாலில் சிறப்பாகத் தனிமனித நிலை, குடும்ப உறவுசார்ந்த நிலை, உறவுகள் சார்ந்த அடிப்படைப் பண்புகள், கடமைகள் எனப் பேசப்பட்டுள்ளன. இரண்டாவதான பொருட்பாலில் சமூகப் பொதுவாழ்வின் செயல்முறைகள், பொருளியல், குடிமக்கட் பண்பு என்பன முதன்மையிடம் பெறுகின்றன. இறுதி இயலான காமத்துப்பால் குடும்ப வாழ்வின் ஒரு கூறாகிய ஆண், பெண் உறவுநிலை திருமணத்துக்கு முன்னும் பின்னுமான காதல்நிலை பற்றிப் பேசுவது தெளிவாகின்றது.
இன்பம்
உயிரினங்கள் அனைத்தும் இன்பத்தை நாடுவதனையே தம் வழக்காறாகக் கொண்டுள்ளன. எல்லா நிலைகளிலும் இன்பமே உயர்ந்த ஒன்றாக அமைந்திருக்கின்றது. திருக்குறள் இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் என்னும் வழக்காறும் உண்டு. திருக்குறள் உரையாசிரியர்களில் சிலர் காமத்துப்பால் என்றே குறிப்பிடுவது காணத்தக்கது. இன்பங்கள் எல்லாவற்றிலும் தலையாயதாகக் கருதப்படுவது காதலர் தம்முள் பெறுகின்ற இன்பமே ஆகும். காதலர் திருமணத்துக்கு முன்னும் பின்னும் பெறும் இன்பமே இதில் கூறப்படுகிறது. காதலர் தம்முள் கூடிப்பெறுகின்ற இன்பமும் அதனோடு தொடர்புடைய பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் முதலாயினவும் இன்பத்துப்பாலில் பேசப்படுகின்றன. இதன்பொருட்டே இன்பத்துப்பால் திருக்குறளின் சிறப்புமிகு பால்பகுதிகளில் ஒன்றாக அமைகின்றது.
இன்பத்துப்பால் உயிரினங்களின் உள்ளப்புணர்ச்சி, உடற்புணர்ச்சி ஆகியவற்றின் படிநிலைகளை எடுத்துரைக்கின்றது. அதனை விளக்கும் அதிகாரமாக ‘புணர்ச்சி மகிழ்தல்’ அமைந்துள்ளது. இவ்அதிகாரத்திற்கு வ.சுப. மாணிக்கனார் தெளிவுறுத்தியுள்ள விளக்கம் பண்டைத் தமிழ்க்காதலின் நயத்தினை விளக்குவதாக அமைந்துள்ளது.
ஐம்பொறிகளால் நுகரப்படும் இடமாகவும், ஐம்புலன் உணர்வும் ஒரேஇடத்தில் கிடைக்கப்பெறும் இடமாகத் தலைவியின் உடல் திகழ்வதனைத் திருவள்ளுவர்,
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள” (குறள். 1101)
என்னும் குறட்பாவில் கூறுகின்றார். இதற்குரிய பொருளை, “கண்டு கேட்டு உண்டு முகர்ந்து தொடும் ஐம்புல இன்பமும் இவளிடமே உண்டு” என்று தெளிவுறுத்துகின்றார்.
இவ்வுலகின் மேன்மைபெற்ற இன்பங்களெல்லாம் தாமரைக்கண்ணான் ஆகிய திருமாலின் உலகில் பெறலாம் என்பது சமயநெறி. அதனைப் பிறவிப்பேற்றினால்தான் பெறமுடியும். இதிலிருந்து மாறுபட்டு, இவ்வுலகில் நமது செயல்களுக்கேற்ற இன்பங்களையும், நாம் செய்யும் கெடுதல்களுக்கேற்ற பயன்களாகிய துன்பங்களையும் இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதனைத் திருவள்ளுவர் ஒப்புகிறார். அதனால் தான் அவர் இன்பத்தையும் துன்பத்தையும் பயனின் விளைவுகளாக எண்ணிப் பார்க்கிறார். இதன்பொருட்டே இன்பத்துப்பாலிலும்,
“தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு” (குறள். 1103)
என்று குறித்தார். இக்குறள் உணர்த்தும் பொருளை, “தன் காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத் திருமாலின் மேலுலகம் இனிதாமோ?” என்று விளக்குகின்றார் வ.சுப. மாணிக்கனார்.
இவ்வாறு திருக்குறளில் இடம்பெறும் சொற்களுக்கும், சொற்தொடர்களுக்கும் எளிமையான, புதுமையான வகையில் விளக்கம் தந்துள்ளார் வ.சுப. மாணிக்கனார். திருக்குறளின் இலக்கியச் சுவையைப் போன்ற தொடர்களைக் கையாண்டு விளக்கம் தர முனைந்திருப்பது சிறப்பிலும் சிறப்பு.
முடிவுரை
தமிழர்கள் போற்றிப் பேண வேண்டிய நூல்களில் திருக்குறள் தலையாயது ஒன்றாகும். அது எந்தவொரு நிலத்துக்கும், இடத்துக்கும், காலத்துக்குமாகக் கட்டுப்படாமல் எல்லாக் காலத்திற்கும் பொருந்தவரும் தனித்தன்மையதாக விளங்குகின்றது. திருக்குறள் எளிமையான சொற்களால் அமைந்து வலிமையான கருத்துக்களைத் தரவல்லது. இரண்டடியில் அமைந்த அதன் கருத்துக்கோவையைப் பல்லாயிரம் பக்கங்களுக்குச் சொல்லலாம். தமிழில் மிகுதியான உரைகளைப் பெற்ற நூலாகத் திருக்குறள் திகழ்கின்றது. ‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்பதற்கேற்ப திருக்குறளின் கருத்துவளம் இன்றைக்கும் புதுப்புது விளக்கங்களைத் தந்துகொண்டே இருக்கின்றது. திருக்குறளின் கருத்துவளத்தில் கருத்தைச் செலுத்திய அறிஞர்கள் தான் உணர்ந்த கருத்தினைப் பிறருக்குத் தெளிவுறுத்த எழுந்தனவே உரைகள் ஆகும். அறிஞர் வ.சுப. மாணிக்கனார் திருக்குறளின்பால் கொண்ட ஈடுபாட்டினை வெளிப்படுத்துவதாக அவரது திருக்குறள் தெளிவுரை அமைந்துள்ளது. மிக எளிமையாக அமையப் பெற்ற இந்நூலின் கருத்துரைகளில் அறம், பொருள், இன்பம் ஆகியன தமிழ் மரபின் விளக்கமாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.
கருவி நூல்
1. திருக்குறள் தெளிவுரை, வ.சுப. மாணிக்கம், (உரை), மணிவாசகர் பதிப்பகம், சென்னை. (1991)
2. அ. சிவசூரியன், திருக்குறள் உரை வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. (2004)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.