ஒரு படைப்பாளியின் மனம் கதையை நோக்கியப் பயணமாக இல்லாமல் அதாவது கதையை எப்படி வெளியிட வேண்டும்? கதாப்பாத்திரத்தின் இயல்புகளை எப்படிக் கட்ட வேண்டும்? கதைக்காளம் எப்படி வார்க்க வேண்டும்? என்றெல்லாம் முன் கூட்டியேத் திட்டமிடாமல் எழுதத் தொடங்கும் போது மனதில் தோன்றும் அனுபவங்களைப் போகிறப் போக்கிலேயே அள்ளித் தெளிக்கிற அனுபவப் பதிவுகள் நாஞ்சில் நாடன் கதைகளில் மிக ஏராளம். இந்தக் கதைக்கு இது தேவை, அது தேவையில்லை என்கிற பாரபட்சமின்றி அனுபவங்களையும், தனது வாசிப்பு வழி கிடைத்த அல்லது பெற்றிட்ட சிந்தனைகளை கதைகளில் வெளியிட முன் வருவதென்பது ஒரு படைப்பாளனின் மிகப்பெரியத் துணிச்சல் என கருத இடமுள்ளது.
தமிழில் சங்ககாலம் முதல் நவீன இலக்கியங்கள் வரை வாசித்த அனுபவங்களைக் கதைகளில் பகிர்ந்தளிக்கிறார். கதைக்கு ஏற்ற பொருண்மைகளில் அவரது வாசிப்பு அனுபவத்தையும் தன் மனதுள் சேமித்து வைக்கப்பட்டச் சிந்தனைகளையும் பதிவு செய்வதைப் பெரும்பான்மையான கதைகளில் அறியமுடிகிறது. இடையிடையேத் தனது சுய அனுபவங்களையும் பதிவு செய்கிறார்.
சுய அனுபவங்கள் பலமாக, பலவீனமாக என்ற கேள்விகளை ஒருபோதும் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இது போன்ற அனுபவங்களைத்தான் கதைகளில் பயன்படுத்தப் போகிறோம் என்ற எந்த முன்னேற்பாடும் செய்து கொண்டதாகக் கருதமுடியவில்லை.
கதையோட்டத்தோடு மனதில் தோன்றும் அனைத்தும் தணிக்கையில்லாமல் வெளியிடும் துணிச்சல் மிகுந்தவராகவேத் தன்னை காட்டிக் கொள்கிறார் என்று அறியமுடிகிறது. கதைகளின் இடுக்குகளில் வரும் தகவல்கள் அறிவிப்பா? அறிவுறுத்தலா? தத்துவமா? என்று ஆராயாமல் கால்போன போக்கில் செல்வது போல், கதை போகிற போக்கில் பல சிந்தனைகளைக் கதைகள் தோறும் தெளிக்கிறார்.
ஒருவேளை அந்தச் சிந்தனைக்கள் அவரது மனக் குமுறலாக இருக்கலாம். சமூகத்திற்குக் சொல்ல வந்தப் பிழிவாக இருக்கலாம் அல்லது எதிர்காலச் சமூகத்தைத் தட்டி எழுப்பும் தூண்டலாக இருக்கலாம். ஆனால் தூண்டல்களைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வருகிறார்.
பொதுவாகப் படைப்பாளன் என்பவன், சமூகத்தைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருப்பவன். படைப்பாளனின் தூண்டல் இருந்தால்தான் சமூகம் ஒரு நிலையானப் பண்பாட்டுக் கலாச்சார உறவு நிலைகளோடு இயங்கிக் கொண்டிருக்கும். இல்லையெனில், தனது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் நட்டாற்றில் விட்டுப் புதுமைக்குப் புலம்பெயர்ந்து தறிகெட்டு ஓடிவிடும் என்ற பொறுப்புணர்வு எல்லாப் படைப்பாளனுக்கும் உண்டு.
புதுமைகளைப் புறந்தள்ள முடியாதெனினும் பழமைகளை புறந்தள்ள நினைத்தால் ஒரு சமூகம் தடம் தெரியாமல் தரைமட்டமாகும் என்ற சிந்தனை படைப்பாளன் மனதுள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும். அதன் அடிப்படையில்தான் படைப்பாளனின் எழுத்துப்போக்கும் இருக்கும் எனக் கருத இடமுள்ளதாகக் கருதப்படுகிறது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், தொன்மையையும் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டியக் கட்டாயம் நமக்குரியது என்ற உயரிய நோக்கோடு நாஞ்சில்நாடன் கதைகள் வழித்தடம் செய்திருக்கிறார் என்று ஆராய முடிகிறது.
பொதுவாக இலக்கியம், அறிவித்தல், அறிவுறுத்தல், மகிழ்வித்தல் ஆகியப் பணிகளைச் செய்வதாகச் குறிப்பிடுவர். நாஞ்சில் நாடனும் மிகுதியான இடங்களில் கதையுடன் தொடர்பில்லாதச் சமூக விழிப்புணர்வை எற்படுத்தக் கூடிய இலக்கியம் சார்ந்த அல்லது சாராத பாமர மக்களும் புரிந்துக் கொள்ளக்கூடியச் சிந்தனைகளைப் படைப்பின் இடையே கையாண்டுள்ளார்.
கதைகளின் ஊடே அறிவுறத்தும் பெருபாலானத் துணுக்குகள் வலிந்து வந்து சேர்க்கப்படாமல் உரிய இடங்களில் இயல்பாகச் சேர்த்துள்ளமை படைப்பாளனின் கைதேர்ந்த நேர்த்தியைச் சுட்டுகிறார்.
படைப்பு ஒரு குறிக்கோளினை நோக்கிச் செல்கையில் படைப்பாளியின் அறிவுறுத்தல் பண்பு, மற்றொரு துணைமை குறிக்கோளை நோக்கிப் பயணப்படுவதை மிகத்தெளிவாகக் காணமுடிகிறது. அது சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தியை நினைவூட்டுவதாக அமைகிறது.
‘பேய் கொட்டி’ கதையில்
“தானாக தவறு செய்தால் மனம் பொறுக்கும். பிறரால் வலிந்து தவறு செய்யும்போது மனம் சஞ்சலப்படும். திட்டமிட்ட தவறை ஒருவன் ஏற்க முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையால், செய்த தவறுக்கு தவறை செவித்ததே காரணம்” (1)
எனும் கருத்து வழி, தவறுகள் பிறர் தூண்டுதலால் பெரும்பாலும் நடப்பதை அறிவுறுத்துகிறார்.
சுத்தமான உணவுகளை உண்டு உடற்பயிற்சி செய்து, நோயில்லாமல் வாழ வேண்டும். ஒரு வேளை நோய்க்கு ஆளாகிவிட்டால் கவலைபடக் கூடாது என்றக் கருத்தை ‘வந்தான் வருவான் வாரா நின்றான்’ என்ற கதையின் வழியில் கூறுகையில்,
“இந்த நோயினால் செத்துப் போகத்தான் வேண்டும் என்றால் கவலைப்பட்டுப் பயனில்லை. காசுப்போவதில்லை என்றால் எதற்காகக் கவலைப்படவேண்டும்” (2)
என்று நோயைப் பற்றிய நோக்கு நிலையை அறிவுறுத்துகிறார்.
மனித மனம் இக்காலத்தில் சுயநலம் கொண்ட வக்ர நிலையில் இருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். மனதில் உறவுகள் ஒற்றுமையுடன் விட்டு கொடுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை,
“மனமிருந்தால் புளியிலையில் கூட
புரண்டு படுக்கலாம்” (3)
என்று குறிப்பிடுகிறார்.
‘படுவப்பத்து’ கதையில் சாதிய அறிவுறுத்தல்களையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும் குறிப்பிடும் போது விளிம்புநிலை மாந்தர்கள் நற்பண்பு உள்ளவராகச் சுட்டிக்காட்டுகிறார். சான்றாக,
“எந்தசாதி தெய்வமானாலும் தெய்வம் தெய்வம்தான்” (4)
என்று தெய்வத்தில் வட சாதி பார்ப்பதையும்,
“பிறர் பொருளை ஏழைகள் வஞ்சிப்பதில்லை” (5)
என்ற சிந்தனை வழி அடித்தட்டு மக்களின் பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
சாதி மத பேதம் பார்க்காத தலைவர்களைப் பிற்காலத்தில் அந்தந்த சாதியினர் சாதியத் தலைவர்களாக மாற்றி தலைவர்களின் பெருமைக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள் என்ற கருத்தை அறிவுறுத்துகிறார். இதனை,
“சாதிமத பேதமற்ற தலைவர்கள் சுட்ட அரசியலில் பகடைக் காய்” (6)
எனும் கருத்து வழி சுட்டுகிறார்.
இந்திய நாட்டில் பெரும்பாலானப் பகுதிகளில் வசிக்கும் நேபாளிகள் குடும்ப உறவுகளைப் பிரிந்து நாள் முழுவதும், மாதம் முழுவதும் வேலை, சிறிய அறை எனும் சிறை என்றெல்லாம் சுட்டிக் காட்டும் கதையாசிரியர் அவர்களின் நிலையை
“உடல் தேவைகள் மறுக்கப்படுவது நோபாளிகளின் வாழ்க்கைச் சூழல்” (7)
என்று விளக்குகிறார்.
சமூகத்தில் எவ்விதத்திலேயோ நாம் கட்டுப்பட்டு விடுகிறோம், அது மாறாது காலகாலமாக மேலதிகாரிகளின் நற்பெயர் பெறப் பழக்கப்பட்ட நம் கொத்தடிதைத்தனம் மாறாது என்பதை
“உதவியாளன் போற்றியே போற்றி என அடியெடுத்து உலா, கலம்பகம், அந்தாதி, பரணி பிள்ளைத்தமிழ் ஆகியவை பாடியிருப்பான்” (8)
என்று அறிவுறுத்துகிறார்.
மொழியை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அவல நிலையை
“மொழி முக்கித் கொண்டும் முனங்கிக்கொண்டும் பெருமூச்சு விட்டபடி ஆட்சியாளர் பிடியில் சிக்கிக் கொண்ட முனகலுடன்” (9)
என்று ‘செம் பொருள் அங்கதம்’ கதை வழி அறிவுறுத்துகிறார்.
வாழ்க்கையில், அழகு என்பது அகமா? புறமா? எனும் போது அகமே அழகு என்பதை,
“வாழ்க்கை ஆடையிலும் அணிகலனிலும் உண்பதிலுமில்லை… … ... அகம் பிரகாசமாக இருந்தால் போதும்” (10)
என்று ‘கோம்பை’ கதை வழி அறிவுறுத்துகிறார்.
தூயக்காற்று களவாடப்பட்டுவிட்டது. இருக்கிற மரத்தையாவது பாதுகாப்பது சிறப்பு. ஆனால், உதிர்கிற இலைகளைப் பெருக்க உடல் வளையாததால் மரங்களை நகரவாசிகள் வெட்டுகிறார்கள் என்பதை,
“முடி உதிருகிறது என்பதற்காக தலையை வெட்டும் அறிவாளிகள்” (11)
என்ற சிந்தனை வழி மரம் தலைமையானது என்ற கருத்தினை வலியுறுத்துகிறார்.
பண்பாடு என்பது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது . இதனை நாஞ்சில் நாடன் தனது அனுபவத்தில் கூறுகையில்,
“பண்பாடு நகர்ந்து, ஊர்ந்து, நடந்து இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது தலைதெறிக்க” (12)
என்ற ‘ஐயம் இட்டு உண்’ சிறுகதை வழியாக அறிவுறுத்துகிறார்.
‘பெருமை’ என்பது பொருளாதர, சாதிய அடிப்படையில் உருவாவது அல்ல அது அவரவர் மனவோட்டத்திற்கு ஏற்ப ஆழ்மணத்தின் உணர்வாகும். அந்த உணர்வுக்கு. உயர்வு. தாழ்வு. சாதி மத பேதம், ஆண்டான் அடிமை போன்ற சிக்கல்களுக்கு அப்பாற்ப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதனைப் புலப்படுத்த
“அனாதை என்பதால் எந்நேரத்திலும் சாப்பிடுவார் என்பதல்ல பொருள், “கஞ்சியானாலும் உரிய நேரத்தில் உண்பது ஊசி போனதை கிடைக்கும் போதல்லாம் உண்பதல்ல” (13)
என்று அறிவுறுத்துகிறார்.
அடிப்படைச் சுதந்திரத்தைப் பற்றி பேசும் நாம்
“கருத்துச் சுதந்திரம் என்று பேசினால் ஊரில் நடமாட முடியாது” (14)
என்று ‘ஐயமிட்டு உண்’ கதைவழி புலப்படுத்துகிறார்.
இதே கதையில் நதிகள் வறண்டு போனதற்கு, நாம்தான் காரணம்,
“குடிநீர் சாக்கடையாகும் பஞ்சமா பாதம்” (15)
நடந்தேறி வருகிறது, அது சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
1. நாஞ்சில் நாடன் சிறுகதைகள், ப.387
2. மேலது, 402
3. சூடிய பூ சூடற்க, ப.11
4. மேலது, 61
5. மேலது, 58
6. மேலது, 80
7. மேலது, 85
8. மேலது, 102
9. மேலது, 103
10. கான் சாகிப், ப.42
11. மேலது, 118
12. சூடிய பூ சூடற்க, 42
13. கான் சாகிப், ப.47
14. மேலது, 44
15. மேலது, 72
(குறிப்பு: சான்றெண் விளக்கத்தில் குறிப்பிடப்படும் நூல், ஆசிரியர் பெயருடன் வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பாண்டு போன்றவைகளையும் சேர்த்துத் தந்தால் கட்டுரை மேலும் சிறப்பாக அமையும் - ஆசிரியர்)