தோல் புதினத்தில் சாதிய விதிகள்
பி. வித்யா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்.
முன்னுரை
மனிதர்கள் யாவரும் சமம் என்று பெரியோர்கள் பலர் கூறினாலும், அவை நடைமுறையில் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது. அனைத்து மனிதரும் ஒரே இனம்தான் என்ற கொள்கையை விடுத்து,தொழிலால் அமைந்த சாதிய வேறுபாடுகளுக்குள் சிக்கி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் குறைவாக எண்ணும் மனப்போக்குக்கு உத்வேகம் அளிப்பது இந்தச் சாதி முறையே ஆகும். இத்தகைய சாதி முறைகள் தொழிற்முறைப் பிரிவினைகளாகத் தோன்றி, தனது உருவத்தை மாற்றியது இந்தியாவில் தான் என்று மானுடவியலாளர்கள் தம் கருத்தை வெளியிட்டுள்ளனர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோல் புதினத்தில் காட்டப்பெறும் சாதிய விதிகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
சாதிய விதிமுறைகள்
சாதிய முறைகள் காலங்காலமாக பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தாலும், அவை சிற்சில மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறதே தவிர, அவற்றின் வேர் அழியவில்லை. சமூகத்தால் தாழ்ந்தவர் என்று கருதப்பட்டோருக்கு கடைகளில் தேங்காய் கூடுகளான மட்டைகளில் நீர், ஆகாரம் போன்றவை வழங்கப்பட்டு வந்துள்ளது. அவை கண்டிப்புக்கு உள்ளானதும், இரு குவளை முறை உருவானது, இவை கண்டிப்புக்கு ஆட்பட்டதால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் குவளைகள் அறிமுகமானது. இவ்வாறாக சாதிய எதிர்ப்பு வலுக்கும் இடங்களில் அவை மாற்றம் பெறுகிறதே அல்லாமல் தீர்வுகள் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவ்வகையான சாதி குறித்து பக்தவத்சல பாரதி, “சாதி என்பது சமுதாய அமைப்பில் இயங்கும் ஒரு தனிப்பட்ட குழுவைக் குறிக்கும். இக்குழுவில் இடம்பெறும் தகுதி பிறப்பால் அமைகிறது. அதனால் ஒரு சாதியில் பிறந்தவர் வேறு சாதிக்கு மாற இயலாது” (1) என்று பண்பாட்டு மானுடவியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேலும் சாதிய முறைகள் வலுவான விதம் குறித்து நா. வானமாமலை, “கிராம வாழ்க்கையில் பன்னெடுங்காலமாக வேலைப்பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது” (2) என்று தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற நூலில் குறிப்பிடுகிறார். சாதிய ஏற்றத்தாழ்வு ஆகிய இத்தகைய பிரிவினைகள் மக்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அவர்களைக் கூறுபோட்டு விடுகிறது. இத்தகைய பாகுபாடுகள் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும் தூண்டுகோலாக அமைகிறது. இம்முறை பல்வேறு விதமான விதிமுறைகளையும் வகுத்து மக்களுக்கு இடையில் உத்தப்புரத்தில் அமைக்கப்பட்டது போன்ற சுவரினை உருவாக்கிவிடுகிறது. இவற்றில் சில மாற்றத்திற்கு உள்ளானாலும், சில வடிவங்களை மாற்றி உலவிக் கொண்டுதான் இருக்கின்றது. இவற்றில் தோல் புதினம் காட்டும் விதிமுறைகள் பின்வருமாறு:
1. மேல் வகுப்பினருக்கு மாpயாதை
2. தெருவுக்குள் அனுமதியின்மை
3. கோயிலுக்குள் அனுமதியின்மை
4. தாழ்வுக்குள் தாழ்மை
5. தீண்டத் தகுதியின்மை
என்று இவை தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான விதிமுறைகளாகக் காணப்படுகின்றன.
1.மேல் வகுப்பினருக்கான மரியாதை
மேல் வகுப்பினரை எங்காவது பார்க்க நேர்ந்தால் தனது தலைத்துண்டை அவிழ்த்து விட வேண்டும் என்பது நெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவந்த எழுதப்படாத விதியாகும். இதனை நூலாசிரியர் தமது தோல் புதினத்தில்,“சேரி வாலிபன் தனது தலைத்துண்டை அவிழ்த்துக் கக்கத்தில் இடுக்கிய வண்ணம் தொண்டனிடப் போனான்” (3) என்று காட்டுகிறார்.
இவ்வாறாக மேல் வகுப்பினருக்கு மரியாதை செலுத்த வேண்டியது கீழ் வகுப்பினரின் கடமை என்றானது. அதோடு கூட மேல் வகுப்பினர், தன்னைவிட வயதில் குறைவானவராய் இருந்தாலும் காலில் விழும் வழக்கத்தை கண்டிக்கும் இடத்து டி.செல்வராஜ், “பெரியவரே ஒம்ம வயசு என்ன. எம் வயது என்ன, மனிசனை மனிசன் வணங்கப்படாதுய்யா” (4) என்று அவ்வழக்கத்தைச் சாடி நிற்கிறார்.
2. தெருவுக்குள் அனுமதியின்மை
மேல் வகுப்பினர் வசிக்கும் தெருவில் கீழ்வகுப்பினர் நடமாடக்கூடாது. அப்படி அவர்கள் நடந்து விட்டால் தெருவே தீட்டுப்பட்டு விடும் என்பதும், கீழ்வகுப்பினர் காலணி கூட அணியக்கூடாது என்பதும் போன்ற விதிமுறைகள் கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையைச் சாடும் நூலாசிரியர், “ஊரணியிலே தண்ணி நெம்பிக் கிடக்குது. இடுகாட்டுக்குப் பெணத்தை எடுத்துட்டுப் போக வழி தெரியலை. மேல் சாதிக்காரவுக பொணத்தை மேலக்குடிக தெருவழியா கொண்டு போவப்படாதுண்டு மரிக்காவ ஒண்ணும் தோணாம சணமே கையப் பெசஞ்சிக்கிட்டு நிக்குவு மாஞ்சி போவுது” (5) என்று காட்டுகிறார்.
தெருவுக்குள் கீழ்வகுப்பினருக்கு அனுமதி கொடுக்காதவர்கள் இறந்து போன கீழ்ச்சாதிப் பெண்ணின் உடலுக்கு வழி விடுவார்களா? அதற்குத் தெய்வகுத்தம் என்றொரு போர்வையை ஏற்கனவே தயார் செய்திருந்தனர். இதனைக் குறித்து டி.செல்வராஜ், “பொணம் இந்த வழியாப் போனா, ஊரே தீட்டுப்பட்டுப் போகும். நாங்க கும்பிடுத சாமி எல்லாம் ஊரைவிட்டு ஓடிப் போயிரும் ஆத்தா எங்களையெல்லாம் பழிவாங்கிப் போடும்” (6) என்று ஏதேதோ காரணங்களைக் காட்டி கீழ்ப்பிரிவினரை ஒதுக்கி வைத்தனர்.
3. கோயிலுக்குள் அனுமதியின்மை
மேற்சொன்னவை மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவானவர் என்று பலரும் போற்றிய இறைவன் இருப்பதாகக் கூறப் பெறும் கோயில்களிலும் இவ்வகையான முறையினை எதிர்த்துப் பல்வேறு தலைவர்கள் போராடியதும் அனைவரும் அறிந்ததே. ஆயினும் இவ்வகையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதைத் தோல் புதினத்தில் நூலாசிரியர், “அபயம் நாடி பெரிய மூக்கனும், ராமாத்தாளும் அரங்கநாதர் கோயிலுக்குள் போக முடியாது. பஞ்சம ஜனங்களை எப்படிக் கோவிலுக்குள் அனுமதிக்க முடியும். கோவிலே தீட்டுப்பட்டுப் போகும்” (7) என்று மேல்வகுப்பினர் கூறுவதை ஆசிரியர் பதிவு செய்கிறார். இவ்வகையாக தீட்டு என்றும் புனிதமாக்குதல் என்றும் சாதிய விதிகளை வலுப்படுத்திய இடம் பெரும்பாலும் கோயிலாகவே இருந்துள்ளது.
5. தாழ்வுக்குள் தாழ்மை
சாதிப்பிரிவுகளில் தாழ்ந்தவர்களாய் கருதப்படுவோரும் தங்களுக்குக் கீழ் சிலர் என்று நினைத்துக் கொண்டு அதே விதிகளை அவர்கள் மேல் பயன்படுத்துதல் உண்டு. இவை இப்படியிருக்க ஒரே பிரிவுக்குள்ளும் தாழ்வு கொண்ட நிலையினை நூலாசிரியர், “அவன் பாண்டிச்சேரித் தங்கப் பறையன். அவளோ செத்த மாட்டைத் தின்னும் ஊருக்கெல்லாம் துட்டி சொல்லிப் போய், சுடலையைக் காக்கும் உள்லூர் சேரிப் பறைப்பெண். பாண்டிச்சேரிப் பறை ஜனங்களைப் பொறுத்தமட்டில், உள்ளூர் பறை ஜனங்கள் தீண்டப்படாதவர்கள்” (8) என்று காட்டும் போது ஒரே இனத்துக்குள்ளும் பிரிவினைகள் இருந்ததை உணர முடிகிறது.
மேலும் ஒரு இனத்தவர் இன்னொருவரைக் கீழாகப் பார்த்தலை, “சக்கிலிய முண்டைக்குப் பறத்தெருவுக்குள்ளே என்ன வேலை. எம்புட்டுத் தகிரியம் இருந்தா அம்ம பயவளை மொறை சொல்லிக் கூப்பிடுவா? அவளை அங்ஙனயே நிக்கச் சொல்லுங்கப்பா” (9) என்று தாழ்ந்ததாகக் கருதப்படும் இனத்துக்குள்ளும் காணும் பிரிவினைகளைக் காட்டிவிடுகிறார் நூலாசிரியர்.
மேலும் இத்தகைய விதிமுறைகள் கீழ்சாதியினராக கருதப்படுபவா;கள் மத்தியிலும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுகிறது. இதனையும் நூலாசிரியர், “வண்டியைவிட்டு இறங்கிய சங்கரன் பாதையில் அனாதையாகக் கிடக்கும் பிணத்தைப் பார்க்க வந்தபோது “அய்யோ சாமி வராதீங்க. தீட்டுப் பட்டிருக்கும்” யாரோ சேரிக் கிழவன், தனது குரலின் உச்சத்தில் சங்கரனைப் பார்த்து ஓலம் வைத்தான்” (10) என்று காட்டுவதை நோக்க காலங்காலமாக மற்றவர்களிலிருந்துதள்ளி இருந்து அவர்களும் தங்களை அவ்வாறே எண்ணிக் கொள்ளப் பழகிவிட்டதை, “வாணாம் அம்பி அவங்க ஒன்னண்டை வரமாட்டாங்க. அய்யரண்டை எப்படி தீட்டுப்பட்ட சனங்க வரமுடியும் வழக்கத்தை எப்பிடி ஒடைக்க முடியும்” (11) என்னும் போது பிராமண இனத்தவர் அருகில் போய் நிற்பதே தவறு என விதி இருப்பதாக அவர்களே கருதிக் கொள்ளுதலும் புலனாகிறது.
6. தீண்டத் தகுதியின்மை
தீண்டத்தகாதவர்களாகக் கருதி மற்றுமொரு இனத்தாரின் வாழிடத்தையும் கூட ஒதுக்கி வைக்கும் அமைப்பு முறை இன்றும் பல கிராமங்களில் காணப்படுகிறது. இந்த அமைப்பு முறையினைக் கண்டிக்கும் விதமாக நூலாசிரியர், “எல்லா ஊர்களிலும் இருப்பது போலவே அந்த நகரத்திலும் சக்கிலியக்குடி, அதாவது முனிசிப்பல் ஸ்காவஞ்சர்கள் காலனி, நகரத்துக்கு வெளியே கிழக்குத் திக்கில் ஒரு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. அதாவது வடக்கே இருந்து வரும் வாடைக்காற்றும், தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்றும் ஊருக்குள் வரும் போது தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்கிற முன் கருதலோடு சக்கிலியக்குடி ஒதுக்கப்பட்டிருக்கிறது” (12) என்று பதிவு செய்கிறார்.
இவற்றோடு தீண்டாமையை எதிர்த்து முன்னேறுபவர்களையும் தண்டிப்பதற்குச் சமூகம் தயாராய் இருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. இதனை நூலாசிரியர்,“பரிகாரம் என்ன பரிகாரம். இந்த அக்ரஹாரத்தையே தீட்டுப்படுத்திய குடும்பம் சுந்தரேச அய்யர் குடும்பம் இந்த அக்ரஹாரத்தில் இருக்கப்படாது. தீட்டுப்பட்டுப்போன இந்த பூமியை நாங்கள் பரிகாரம் செய்து சுத்தப்படுத்திக்கிறோம்” (13) என்று அவர்களுக்கும் எதிர்ப்பு வலுப்பதைக் காட்டுகிறார்.
இவ்வாறாகத் தீண்டாமை என்னும் விதியின் கீழ் சில பிரிவினரை அடக்கி வைத்திருக்க எல்லாவகை முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
முடிவுரை
இவ்வாறாக மேல் வகுப்பினருக்கு மரியாதை கொடுத்தல், தெருவுக்குள் அனுமதிக்கப்படாதிருத்தல், கோயிலுக்குள் நுழையவிடாதிருத்தல், தாழ்வுக்குள் தாழ்மை, தீண்டத் தகுதியின்மை என்று இம்மாதிரியான விதிகள் மேல் வகுப்பினரின் செல்வாக்கைத் தொடர்ந்து காப்பதற்கும், தன் அதிகாரத்தைத் தொடர்ந்து காட்டுவதற்கு அரணாகவும் பயன்பட்டு வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இவற்றை வேரோடு அகற்றுதல் அவசியமாகும். ஆகவே இம்மாதிரியான விதிகள் அகற்றப்படுதலும் அதனை எதிர்த்து மக்கள் வீறு கொண்டு எழுதலும் அவசியமாகும். மக்கள் அனைவரின் ஒத்துழைப்பே இதற்கான தீர்வாகும். அதிலும் முக்கியமாக இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். இவற்றோடு மக்களின் கட்டப்பட்டுள்ள சுவர்கள் உடைபட வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானுடவியல், ப 314
2. வானமாமலை.நா., தமிழக வரலாறும் பண்பாடும், ப.120
3. செல்வராஜ்.டி,தோல், ப.96
4. மேலது,ப.105
5. மேலது, ப.97
6. மேலது,ப.108
7. மேலது, ப.325
8. மேலது, ப.21
9. மேலது, ப.181
10. மேலது,ப.104
11. மேலது,
12. மேலது, ப.185
13. மேலது, ப.120.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.