நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் கவிதைக் கூறுகள்
ம. இராமநாதன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர் - 636121.

பொதுவாக மனதிலுள்ள கருத்துக்கள் யாவும் சொற்களில் அடங்காது, அப்படி அடங்கா தன்மை கொண்ட சொற்கள் பொருட்செறிவுடன் கவிதையாக பிறப்பெடுப்பதாக கவிஞர்கள் கருதுவதுண்டு. “அனைவராலும் பயன்படுத்தப்படும் சொற்கள் கவிதைகளில் இடம் பெறுவது இல்லை” என்ற அரிஸ்டாடில் கூறுவதாக அ.ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுவார். ஆனால், நாஞ்சில் நாடன் பல இடங்களில் மிக எளிய, புழகத்திலுள்ள சொற்களைச் சிறுகதைக்கு இடையே புதுக்கவிதைகளாகப் படைத்தத்துள்ளமை, அவருக்கான கவிதை ஈடுபாட்டையும், புலமையையும் வெளிக்காட்டுவதாவே கருதுகிறேன். ஒரு கவிஞனாக இருந்தாலும், சிறுகதை படைப்பின் இடையில் தோன்றுகிறப் புதுக்கவிதைத் துணுக்குகளை வெளியிடுவதில் விலக்களிக்கவில்லை, அது கதையின் இடையில் அழகு சேர்ப்பதாக நினைத்திருக்கலாம். அதனால்தான், பல இடங்களில் கவிதைத் துணுக்குகளைக் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றபடி கையாண்டிருக்கிறார்.
‘ஐந்தில் நான்கு’ எனும் சிறுகதையில் விடியலைக் கூறும்போது:
“காலை மொட்டவிழிந்து
பகல்
பூக்க ஆரம்மபித்தது” (1)
எனவும்,
‘வேலையில் போவது’ எனும் சிறுகதையில் படைப்பு என்பதை,
“மழை தழுவிய நிலத்தில்
முதல் கொழு முனை,
ஓடிக் களைத்த எருதின்
இளைப்பாறல்
தாய்ப்பசுவின் பாச நக்கல்
மூத்திரம் குடித்திளிக்கம்
காளைக் கன்று” (2)
என்று மனதில் தோன்றுவதை வெளிப்படையாக இயம்பும் துணிவு கொண்டதுடன் ‘கதை எழுதுவதன் கதை’ எனும் கதையில்;
“பசியும் காமமும்
சர்வ கால சர்வதேச
சர்வ ஜனப் பிரச்சனை” (3)
எனும் கவிதை வழி ஒன்றுபிறப்பு முதல் இறப்பு வரை வருவது மற்றொன்று இடையில் வந்து முடிவது என்று உலக இயல்பையும், “கடவுளின் கால்” எனும் சிறுகதையில்;
“சட்டத்துக்கு ஒற்றைக்
கண் எனில்
ஓட்டைகளுக்கு
ஓராயிரம் கண்கள்” (4)
என்றும்,
“சட்டத்தின் பாதுகாப்பில்
ஓட்டைகளில் உயிர் வாழும்
தேசம் நமது” (5)
என்றும் நம் சட்டங்களும் நீதிகளும் நிலை குலைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் துறவு நிலை எப்படி, இருக்கவேண்டும் என்பதை ‘பின்பனிக்காலம்’ எனும் சிறுகதை வழி
“துறவைக் கனவு காண்பவன்
எப்பொழுது துறவியாவான்
தூக்கி எறிந்து விட்டுப்
போவதுதானே துறவு” (6)
என்று குறிப்பிடுகிறார்.
எண்ணப்படம் என்ற தலைப்பில் துறவியானவனை மனைவி தேடி வந்து பணிவிடை செய்கிறாள். அவனது காலடியில் அமர்கிறாள். பழகிய உடல் மணம் தடுமாற்றத்தை ஏற்படுத்தியதாக,
“திருவிளையாட்டில் திருவுடல்
திருபுளகம் கொண்டு
திகைத்துத் தளர்ந்து” (7)
என்ற கவிதை வழி காமம் புணர்ந்தாதை பிரிய மறுப்பது எனக் குறிப்பிடுகிறார்.
‘ஒழுகும் பாரம்’ தலைப்பில் நோயாளிகளின் நிலையை,
“மருத்துவ நடைபாதையில்
நின்றும் இருந்தும்
கிடந்தும் - சாவின்
திருமுகம் காணக்
காத்துக் கிடந்தவர்” (8)
என்றும் மேலும் அதே தலைப்பில் கன மழை பொழிவை,
“ஊழி முதல்வன்
உருவம் போல்
மெய் கருத்த மழை
சாரங்கம் உதைக்க
சரமழையாய் கொட்டியது” (9)
என்றும் நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்.
மேலும் ‘தெரிவை’ எனும் கதையில் முதிர்கன்னிகள் ஒப்பனை செய்யத்தான் தான் திருமணமாகதவள் என்று நிருபிக்க வேண்டிய நிலையுள்ளதை,
“ஒப்பனைகள் சில காலம்
முகத்தில் பொய் எழுதும்
முதுமையை மறைக்க” (10)
என்ற கவிதை வழியாகவும், அதே கதையில் ஆண்கள் எக்காலத்திலும் வக்கிரப்புத்தி கொண்டவர்கள் என்பதை,
“ஆண் மனத் தோலைச்
சுரண்டினால் அரிப்பெடுக்கும்
சேனைக் கிழங்கின்
சிவப்புத் தெரியும்” (11)
என்ற கவிதை வாயிலாக நாஞ்சில் நாடன் சுட்டுகிறார்.
புதுக்கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது, “வாக்கியத்தை நாலாமடக்கி எழுதினால் போச்சு, பலபேர் புத்தகத்தை நீட்டி அடிச்சா 16 பக்கம் தேறாது” (13) என ஏளனம் செய்யவும் நாஞ்சில் நாடன் எவ்வகை இலக்கியத்தை படைக்கிறார் என்பதை விட, தோன்றுகிற அனைத்துச் சிந்தனைகளையும் எப்படி வெளியிடுகிறார் என்பதே வெற்றி அவ்விதத்தில் நாஞ்சில் நாடன் கைதேர்ந்தவர் என்பது புலனாகிறது.
சான்றெண் விளக்கம்
1. நாஞ்சில் நாடன் சிறுகதைகள்,ப.64, யுனெடெட் ரைட்டர்ஸ், சென்னை, பதிப்பு,2001
2. நாஞ்சில் நாடன் சிறுகதைகள், 548
3. நாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, ப.41, தமிழினிப்பதிப்பகம், சென்னை, மூன்றாம்பதிப்பு, 2010
4. நாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க ப.8
5. நாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க,ப.48
6. நாஞ்சில் நாடன், கான்சாகிப், ப.16, தமிழினிப்பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2011
7. நாஞ்சில் நாடன், கான்சாகிப்,57
8. நாஞ்சில் நாடன், கான்சாகிப்,115
9. நாஞ்சில் நாடன், கான்சாகிப்,120
10. நாஞ்சில் நாடன், கான்சாகிப்,126
11. நாஞ்சில் நாடன், கான்சாகிப்,127
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.